காட்டில் அமர்ந்திருந்த அந்த முனிவரின் முன்பு சிலர் அமர்ந்திருந்தனர். முனிவர் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.
அன்று காலை, அங்கே அந்த முனிவர் கண்களை மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்த ஒருவன், முனிவர் கண் திறந்ததும் அவர் கூறுவதைக் கேட்டு அறிவு பெறலாம் என்று எண்ணி அவர் முன் அமர்ந்தான். அதற்குப் பிறகு அங்கே வந்த மேலும் சிலரும் அங்கே அமர்ந்து கொண்டனர்.
ஆயினும், பல மணி நேரங்கள் ஆகியும் முனிவர் தன் கண்களைத் திறக்கவில்லை.
மேலும் காத்திருக்க விரும்பாமல் ஒவ்வொருவராக எழுந்து செல்ல ஆரம்பித்தனர்.
மாலையில் முனிவர் தன் கண்களைத் திறந்தபோது, அங்கே நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த முனிவர், "காலையிலிருந்து காத்திருக்கிறீர்கள். உங்கள் பொறுமையைப் பாராட்டுகிறேன். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார்.
"முனிவரே! நான் தவம் செய்ய வேண்டும் என்று இந்தக் காட்டுக்கு வந்தேன். தாங்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்" என்றான் ஒருவன்.
முனிவர் மற்ற மூவரையும் பார்க்க, அவர்கள் தாங்களும் அதே நோக்கத்துடன்தான் இருப்பதாகச் சொல்வது போல் தலையாட்டினர்.
"எதற்காகத் தவம் செய்யப் போகிறீர்கள்?" என்றார் முனிவர்.
"மீண்டும் பிறவி ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான்" என்றான் இன்னொருவன்.
"மீண்டும் பிறவி வேண்டாம் என்றால், அதற்கு நீங்கள் மெய்ப்பொருளை உணர வேண்டும். கற்க வேண்டியவற்றைக் கற்றால்தான் மெய்ப்பொருளை உணர முடியும்" என்றார் முனிவர்.
"அப்படியானால், நான் உடனேபோய் கற்க வேண்டியவற்றைக் கற்கிறேன். தங்கள் அறிவுரைக்கு நன்றி, முனிவரே!" என்று சொல்லி விட்டு ஒருவன் எழுந்து, முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு, அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.
அவனைத் தொடர்ந்து, இன்னும் இருவரும் அவ்வாறே அவரை வணங்கி விட்டுக் கிளம்பினர்.
ஒருவன் மட்டும் அமர்ந்திருந்தான்.
"ஏனப்பா? நீ கிளம்பவில்லையா?" என்றார் முனிவர்.
அவன் எழுந்து நின்று, "முனிவரே! கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தால்தான் பிறவியிலிருந்து விடுதலை பெற முடியும் என்று கூறினீர்கள். கற்க வேண்டியவற்றைக் கற்பிக்க, முற்றும் உணர்ந்த முனிவராக வாழும் தங்களை விடப் பொருத்தமானவர்கள் வேறு யார் இருக்க முடியும்? தங்களுக்குப் பணிவிடை செய்து, தங்களிடமே கல்வி பெற்று, மெய்ப்பொருளை உணரும் நிலையை அடைய விரும்புகிறேன். தாங்கள் என்னைச் சீடனாக ஏற்று எனக்கு அருள் புரிய வேண்டும்!' என்று கூறி முனிவரின் கால்களில் விழுந்து வணங்கினான் அவன்.
அவனை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, முனிவர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்.
அறத்துப்பால்
குறள் 356 துறவறவியல்
அதிகாரம் 36
மெய்யுணர்தல்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
கற்க வேண்டியவற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
No comments:
Post a Comment