"ஏம்ப்பா ரெண்டு நாளா என் பின்னாலேயே வந்துக்கிட்டிருக்க?" என்றார், கசங்கிய ஆடையும், பரட்டைத் தலையும், புதர் போல் தாடி மீசை படர்ந்திருந்த முகமும் கொண்ட அந்த மனிதர்.
"சாமி! உங்களைப் பாத்தா ஒரு யோகி மாதிரி தெரியுது" என்றான் பரமு.
"நீ புத்திசாலிதான்! என்றார் அவர்.
"அப்படின்னா, நான் நினைச்ச மாதிரி நீங்க ஒரு யோகிதானா?"
"யோகின்னு சொல்லாம, யோகி மாதிரி தெரியுதுன்னு சொன்னியே, அதுக்குத்தான் உன்னை புத்திசாலின்னு சொன்னேன்!" என்றார் அவர், சிரித்தபடி.
"மன்னிச்சுக்கங்க, சாமி. உங்க மேல நம்பிக்கை இல்லாம நான் அப்படிச் சொல்லல."
"நீ சொன்னதுதாம்ப்பா சரி. வெளித் தோற்றத்தை வச்சு எதையும், யாரையும் எடை போடக் கூடாது."
"நீங்க சொல்றது சரிதான், சாமி! எனக்கு ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உண்டு. ஒரு சாமியாரோட பேச்சால கவரப்பட்டு, அவர் மடத்தில சேர்ந்து சேவை செய்யலாம்னு போனேன். ஆனா அங்கே சேந்தப்பறம்தான், அவரைப் பத்திப் புரிஞ்சுது. புலன்களை அடக்கறதைப் பத்தியும், எளிமையான வாழ்க்கை வாழறதைப் பத்தியும் வெளியில அற்புதமாப் பேசற அவர், தன் ஆசிரமத்துக்குள்ள ஒரு அரசர் மாதிரி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காரு! அறுசுவை உணவு என்ன, ஆடம்பரமான ஓய்வறைகள் என்ன! ஒரு நிமிஷம் கூட ஏசி இல்லாம இருக்கக் கூடாதுங்கறதுக்காக மின்சாரம் நின்னு போனா, உடனே இயங்கற வசதியோட ஜெனரேட்டர் என்ன! மதுபானமும், அந்தப்புரப் பெண்களும்தான் இல்லேன்னு நினைக்கறேன். அதெல்லாம் கூட எனக்குத் தெரியாம இருந்திருக்கலாம்! கொஞ்ச நாளைக்கப்புறம், சொல்லாம கொள்ளாம ஓடி வந்துட்டேன். ஆன்மீகத்தின் மேலேயே வெறுப்பு வந்துடுச்சு."
"சரி. இப்ப என்ன?"
"உங்களைப் பாத்தப்ப முதல்ல ஒரு சாதாரண..." என்று தயங்கினான் பரமு
.
"பண்டாரம்னு நினைச்சிருப்ப!" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.
"உண்மையைச் சொல்லணும்னா, அப்படித்தான், சாமி. ஆனா உங்க கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதால, ரெண்டு நாளா உங்களை கவனிச்சுக்கிட்டிருக்கேன்."
"இப்ப என்ன நினைக்கறே?"
"நீங்க பாக்கறதுக்கு சாதாரணமானவரா இருந்தாலும், மனசை அடக்கி வாழற துறவின்னு நினைக்கறேன். உங்ககிட்ட ஆசிரமம் இல்லை, சிஷ்யர்கள் இல்லை. ஆனாலும், நீங்க ஒரு பெரிய யோகின்னு நான் நம்பறேன். உங்களோட இருந்து உங்களுக்கு சேவை செஞ்சுக்கிட்டிருந்தா, எனக்கும் துறவு மனப்பான்மை வரும்னு நினைக்கறேன்."
"எதையுமே வெளித் தோற்றத்தைப் பாத்து அப்படியே ஏத்துக்கக் கூடாது, அதோட உண்மைத்தன்மையை ஆராய்ஞ்சப்பறம்தான், அதைப் பத்தி முடிவு செய்யணும்னு உன் அனுபவத்திலேந்து நீ புரிஞ்சுக்கிட்டிருக்கிறது நல்ல விஷயம்தான். அதனால என்னோட இருக்கறதைப் பத்தி நீ முடிவு பண்றதுக்கு முன்னால, என்னைப் பத்தி இன்னும் நல்லா தெரிஞ்சுக்க. நீ எதிர்பாக்கற மாதிரி நான் இல்லேன்னா, எப்ப வேணும்னாலும் என்னை விட்டுட்டுப் போகலாம். எங்கிட்ட சொல்லிட்டே போகலாம். நான் உன்னைப் பத்தி தப்பா நினைச்சுக்கவும் மாட்டேன், உன்னைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்யவும் மாட்டேன்!" என்றார் அவர், சிரித்தபடி.
அறத்துப்பால்
குறள் 355 துறவறவியல்
அதிகாரம் 36
மெய்யுணர்தல்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
ஒரு பொருள் வெளித் தோற்றத்துக்கு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அதன் உண்மையான தன்மையை அறிந்து கொள்வதுதான் அறிவுடைமை.
குறள் 356
No comments:
Post a Comment