![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6rmAn-c-6b_PdGQWu60gjwcS6GZrTJkhCGI0N8usa9I9VPlgDpNJundnKxt1czPesFcrYGmcAThN0ukfzwK5MdkNs_DoI_Vt4R9bTfFnpwpYxWu6r6dyjHzPxPnZCGebaHs4Gc4nQ644/s0/363.jpg)
"அமெரிக்காவிலேந்து திரும்பி வரச்சே நமக்கெல்லாம் என்ன வாங்கிக்கிட்டு வரணும்னு எழில் கேட்டிருக்கா. எனக்கு வேணுங்கறதை நான் சொல்லிட்டேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க" என்றாள் யாமினி.
"எனக்கு எதுவுமே வேண்டாம்" என்று சிரித்தபடியே கூறிய கார்த்திகேயனைச் சற்று வியப்புடன் பார்த்தாள் யாமினி.
யாமினியைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் கார்த்திகேயன் விதித்த ஒரே நிபந்தனை திருமணத்துக்குப் பின் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான்.
"எதுக்கு நான் வேலைக்குப் போகணும்னு சொன்னீங்க?" என்று திருமணத்துக்குப் பிறகு யாமினி கேட்டபோது, "எனக்கு நிறைய ஆசை உண்டு. அதையெல்லாம் நிறைவேத்திக்க நிறையப் பணம் வேணும். அதனாலதான், நீயும் சம்பாதிச்சாதான் உதவியா இருக்கும்னு நினைச்சேன்" என்றான் கார்த்திகேயன்.
வசதியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புவது இயற்கைதானே என்று நினைத்தாள் யாமினி.
ஆனால் கார்த்திகேயனின் மனநிலை, 'அத்தனைக்கும் ஆசைப்படு' என்பது போல் இருந்தது. அவர்கள் வசதிக்கு மீறிப் பொருட்களை வாங்குவது, பிறகு அதனால் ஏற்படும் பொருளாதாரச் சுமையைச் சமாளிப்பது என்பது அவர்கள் இருபத்தைந்து ஆண்டுக் குடும்ப வாழ்க்கையில் ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகி விட்டது.
அவனைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர் கார் வாங்குவதும், பராமரிப்பதும் தங்கள் சக்திக்கு மீறிய வாழ்க்கை முறை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், அவன் ஒரு பழைய காரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி விட்டான்.
பிறகு, சில ஆண்டுகளில் அதை விற்று விட்டுப் புதிய கார், பிறகு பெரிய கார், வீடு, வீட்டு உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் இவை தவிர கேளிக்கைகள், உல்லாசப் பயணங்கள் என்று அவன் ஆசைகள் பெருகிக் கொண்டே போக, பொருளாதார நிர்வாகம் அவர்களுக்கு எப்போதுமே திணறலாகவே இருந்து வந்தது.
யாமினி எவ்வளவோ சொல்லியும் கார்த்திகேயன் கேட்கவில்லை.
"அனுபவிக்கறதுக்குத்தானே வாழ்க்கை? நாம ஆசைப்படறதை செய்யக் கூடாதுன்னா, அப்புறம் அது என்ன வாழ்க்கை?" என்றான் அவன்.
"அது சரி. ஆனா, இந்தக் கடன் சுமைக்காகக் கவலைப்பட்டுக்கிட்டே, நாம ஆசைப்பட்டு வாங்கின பொருட்களையும் வசதிகளையும் எப்படி அனுபவிக்க முடியும்?"
"நான் கவலைப்படல. என்னால இதையெல்லாம் சமாளிக்க முடியும். நீ ஏன் கவலைப்படற? நாம ஆசைப்படற விஷயங்களை அனுபவிக்கறதைப் பத்தி சந்தோஷமா இரு!" என்று புதிய கீதோபதேசம் செய்தான் கார்த்திகேயன்.
ஆனால், கடந்த சில மாதங்களாக கார்த்திகேயனிடம் ஒரு மாறுதலை கவனித்தாள் யாமினி.
பொருட்களை வாங்கும் ஆசைகளைக் குறைத்துக் கொண்டான். இத்தனைக்கும் அவர்கள் பெண் எழில் படித்து முடித்து விட்டு வேலைக்குப் போகத் தொடங்கியதும், அவர்கள் பொருளாதார நிலை முன்பை விட வசதியாகவே இருந்தது.
முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தால், அவர்களிடம் ஏதாவது பொருட்கள் வாங்கி வரச் சொல்லி, அவற்றுக்கான விலையை அவர்களிடம் கொடுத்து அந்தப் பொருட்களை வாங்கிக் கொள்வான் கார்த்திகேயன். ஆனால் இப்போது, அவர்கள் பெண் அலுவலக வேலையாக அமெரிக்கா போயிருக்கும்போது, தனக்கு எதுவும் வாங்கி வர வேண்டாம் என்கிறான்!
"என்ன ஆச்சு உங்களுக்கு? முன்னெல்லாம் நிறையப் பொருட்களை வாங்கணும், அங்கே போகணும், இங்கே போகணும்னெல்லாம் ஆசைப்படுவீங்க. இப்ப கொஞ்ச நாளா எதுவுமே வேண்டாம்னு இருக்கீங்களே! ஆசைகளையெல்லாம் விட்டுட்டீங்களா?" என்றாள் யாமினி.
"விடல. சின்னச் சின்ன ஆசைகளை விட்டுட்டு, ஒரு பெரிய ஆசையை எடுத்துக்கிட்டிருக்கேன்."
யாமினிக்கு பகீரென்றது. "பெரிய ஆசையா? அது என்ன? உங்க சின்ன ஆசைகளையே நம்மால சமாளிக்க முடியலியே!"
"கவலைப்படாதே! சின்ன ஆசைகளைச் சமாளிக்கத்தான் பெரிய ஆசையே! அதுக்கு முன்னால, இந்தப் பெரிய ஆசை எனக்கு எப்படி வந்ததுன்னு சொல்றேன். ஒரு கதை படிச்சேன். ஒத்தன் நிறையத் திருடிக்கிட்டே இருக்கான். இந்தத் திருட்டையெல்லாம் விட்டுடணும்னு திடீர்னு ஒருநாள் அவனுக்குத் தோணுது. பெரிசா ஒரு திருட்டைப் பண்ணிட்டா அப்புறம் திருடறதையே விட்டுடலாம்னு நினைச்சு, ஒரு பாங்க்கைக் கொள்ளையடிக்கத் திட்டம் போடறான். என் ஆசைகளை விடணும்னா, அவனை மாதிரி என்ன செய்யலாம்னு நினைச்சுதான், இந்தப் பெரிய ஆசையை வளத்துக்கிட்டா மத்த ஆசைகள் எல்லாம் போயிடும்னு நினைச்சு முயற்சி செஞ்சு, மத்த ஆசைகளை விட்டுட்டேன்" என்றான் கார்த்திகேயன்.
"கேக்க நல்லாத்தான் இருக்கு. நீங்க ஆசைகளை விட்டுட்டதை நான்தான் கவனிச்சு சொன்னேனே! ஆனா, அந்தப் பெரிய ஆசை என்ன? அது நம்மை என்ன பாடு படுத்தப் போகுதோ?" என்றாள் யாமினி.
"அதைப் பத்தி ஏன் கவலைப்படற? அந்த ஆசைதான் ஏற்கெனவே நிறைவேறிடுச்சே!"
"நிறைவேறிடுச்சா? என்ன ஆசை அது?" என்றாள் யாமினி, வியப்புடன்.
"எந்த ஆசையுமே வரக் கூடாதுங்கற பெரிய ஆசைதான் அது!" என்றான் கார்த்திகேயன், சிரித்தபடி.
குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
No comments:
Post a Comment