"நான் கேட்டிருந்தா வாங்கிக் கொடுத்திருப்பாரு. ஆனா எனக்கு நகை போட்டுக்கறதில எல்லாம் ஆசை இல்லையே!" என்றாள் சாரதா, சிரித்துக் கொண்டே.
"உனக்கு எதிலதான் ஆசை இருந்திருக்கு?" என்று மீனா சொல்லிக் கொண்டிருந்தபோதே, உள்ளிருந்து சாரதாவின் கணவன் சிவகுரு வந்தான்.
'தங்கையின் கணவர் வீட்டில் இருப்பது தெரியாமல், தங்கையிடம் அவள் கணவன் நகை வாங்கிக் கொடுக்காததைப் பற்றிப் பேசி விட்டோமே!' என்று மனதுக்குள் சிறிது சங்கடப்பட்ட மீனா, சமாளித்துக் கொண்டு, சற்று நேரம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி விட்டுப் போய் விட்டாள்..
மீனா சென்றதும்," உன் அக்கா சொன்ன மாதிரி, உனக்கு நான் நகை எதுவும் வாங்கிக் கொடுத்ததில்ல. அதில உனக்கு வருத்தமா?" என்றான் சிவகுரு.
"நீங்க வேற! அவளுக்கு வேற வேலை இல்ல. எனக்கு இதிலெல்லாம் ஆசை இல்லைன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றாள் சாரதா.
"உனக்கு எதிலதான் ஆசை இருந்திருக்குன்னு உன் அக்கா கேட்டது சரிதான் போலருக்கு!" என்றான் சிவகுரு, சிரித்தபடி.
"அது உண்மைதான். சின்ன வயசிலேயே, மீனா என் அப்பா அம்மாகிட்ட தனக்கு இது வேணும் அது வேணும்னு அடிக்கடி கேட்டுக்கிட்டிருப்பா. அவங்க கூட, 'உன் தங்கையைப் பாரு, அவ ஏதாவது கேக்கறாளா?'ன்னு அவகிட்ட சொல்லுவாங்க. இயல்பாகவே இது வேணும், அது வேணும்கற எண்ணங்கள் எனக்கு ஏற்படல்ல."
"இப்படிப்பட்ட மனநிலை அமையறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும், இல்ல, நான்தான் கொடுத்து வச்சிருக்கணும்!" என்றான் சிவகுரு.
"என்னடி, இப்படி ஆயிடுச்சு உன் வாழ்க்கை?" என்றாள் மீனா.
"என்ன ஆயிடுச்சு இப்ப?" என்றாள் சாரதா, அமைதியாக.
"ஏண்டி, உன் புருஷனுக்குத் தொழில்ல நஷ்டம் ஏற்பட்டு, இப்ப அவர் ஏதோ ஒரு வேலைக்குப் போய்க் குடும்பத்தைக் காப்பத்தற நிலைமை வந்திருக்கு. நீங்க உங்க பெரிய வீட்டை வித்துட்டு, சின்னதா ஒரு வாடகை வீட்டில குடி இருக்கற நிலைமை வந்திருக்கு. என்ன ஆயிடுச்சுன்னு கேக்கற! உனக்கு வருத்தம் இல்லையா?"
"வருத்தம்தான். அவர் தொழில்ல நஷ்டம் வந்து, அவர் வேலைக்குப் போக வேண்டிய நிலைமை வந்தது பத்தி வருத்தம்தான். அவருக்கு இப்படி ஒரு பொருளாதாரப் பிரச்னை வந்தது பத்தி வருத்தம்தான். என்ன செய்யறது? ஆனாலும், நாங்க சமாளிச்சு வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கோம்?" என்றாள் சாரதா.
"பழையபடி வசதியா வாழணும்னு உனக்கு ஆசை இல்லையா?"
"பழையபடி உயர்ந்த நிலைமைக்கு வரணும்னு அவர் முயற்சி பண்ணிக்கிட்டிருக்காரு. அவரோட முயற்சிக்கு என்னால முடிஞ்ச உதவிகளைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். அது சீக்கிரம் நடக்குமா, நாள் ஆகுமான்னு எனக்குத் தெரியாது. ஆனா, நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னெல்லாம் எனக்கு ஆசை கிடையாது" என்றாள் சாரதா, சிரித்த முகத்துடன்.
அவளைச் சற்று வியப்புடன் பார்த்த மீனா, "நீ அதிர்ஷ்டக்காரியா, உன் கணவர் அதிர்ஷ்டக்காரரான்னு தெரியல!" என்றாள், உண்மையான உணர்வுடன்.
அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த சிவகுரு, "எனக்கும் ரொம்ப நாளா இந்த சந்தேகம்தான்!" என்றான், மீனாவைப் பார்த்துச் சிரித்தபடி.
குறள் 363
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
No comments:
Post a Comment