About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, November 11, 2017

107. திருமண அழைப்பு

தபாலில் வந்திருந்த அந்தத் திருமண அழைப்பிதழின் உறையில் அச்சிடப்பட்டிருந்த மணமக்களின் பெயரைப் பார்த்தான் ரங்கராஜன். ஆனந்தி- ரமேஷ்.

உறையைப் பிரிக்குமுன் யாராக இருக்கும் என்ற யூக சிந்தனையில் மனம் ஒரு நிமிடம் ஈடுபட்டது. பத்திரிகையை வெளியே எடுத்துப் படித்தால்  விவரம் தெரிந்து விடும். ஆயினும் முழு விவரங்களும்  தெரியும் முன்பே அவற்றை ஊகிக்க முயலும் மனதின் இயல்பான முயற்சி!

உறையைப் பிரித்துப் பத்திரிகையின் ஆங்கில வடிவத்தைப் படித்த பிறகும் யாரென்று நினைவுக்கு வரவில்லை. ஆனந்தி என்ற பெயர் மட்டும் எப்போதோ அறிந்த பெயராகத் தோன்றியது. இந்தப் பத்து வருட மருத்துவத் தொழிலில் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறான். அவர்களில் யாரோ ஒருவராக இருக்கக்கூடும்.

தமிழ் வடிவத்தில், கரகக்கும்பம்  ராமமூர்த்தியின் மகள் ஆனந்தி என்று படித்த பிறகு அவனுக்கு எல்லாம் நினைவு வந்து விட்டது. ஆனந்தி என்ற பெயரைத் தன்னால் எப்படி மறக்க முடிந்தது என்று ஒருகணம் தன்னையே  நொந்து கொண்டான்.

து 1965ஆம் வருடம். அவன் மருத்துவப் படிப்பை முடித்து அரசு வேலையில் சேர்ந்தபின் முதல் பணி வழங்கப்பட்டது தஞ்சை மாவட்டம் நன்னிலத்துக்கு அருகில் இருந்த நத்தம்பாக்கம் என்ற கிராமத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் (இப்போது அந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கலாம்.)

சுற்றுப்புறத்தில் இருந்த பல கிராமங்களுக்கும் அதுதான் ஒரே மருத்துவமனை என்பதால் மருத்துவமனையில் தினமும் கூட்டமாக இருக்கும். மருத்துவமனைக்கு அருகிலேயே அவனுக்கு அரசாங்க வீடு அளிக்கப்பட்டிருந்ததால், சில சமயம் இரவிலும் சிலர் அவன் வீட்டுக் கதவைத் தட்டுவார்கள்.

அப்படி ஒருமுறை தட்டியவள்தான் ஆனந்தி. மருத்துவமனையிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த கரகக்கும்பம்  கிராமத்திலிருந்து வந்ததாகச் சொன்னாள் அந்தப் பதினைந்து வயதுச் சிறுமி. அருகில் இன்னொரு ஆள். வாசலில் சைக்கிள். அந்த ஆளுடன் சைக்கிளில் வந்திருப்பாள் என்று தோன்றியது.

"டாக்டர்! அப்பா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. கண்முழிச்சப்ப ஒரு கையும் ஒரு காலும் மரத்துப்போய் இருக்கு" என்று பயத்துடனும் அழுகையுடனும் சொன்னாள் ஆனந்தி.

அவர்களுடன் பின்னாலேயே தன் சைக்கிளில் போனான் ரங்கராஜன். ஆனந்தியின் தந்தை ராமமூர்த்திக்குப் பக்கவாதம் வந்திருந்தது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக்  கையில் இருந்த சில மாத்திரைகளைக் கொடுத்து விட்டு ரங்கராஜன் ஆனந்தியுடன் வந்த ஆளிடம் கேட்டான். "வீட்டில வேற யாராவது பெரியவங்க இருக்காங்களா?"

"அம்மா இருக்காங்க. நானும் என் தம்பியும்தான். நீங்க என்கிட்டயே சொல்லுங்க சார். நான் எஸ் எஸ் எல் சி படிக்கிறேன்" என்றாள் ஆனந்தி.

அந்தக் கடினமான சூழ்நிலையிலும் மன உறுதியுடன் இருந்த ஆனந்தியை மனதில் வியந்தபடியே ரங்கராஜன் சொன்னான் "ரத்த அழுத்தம் அதிகமானதால இந்தப் பக்கவாதம் வந்திருக்கு. பி பியைக் குறைச்சா பக்கவாதம் சரியாகலாம். தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கிட்டுப் போய் வைத்தியம் பாக்கறது நல்லது. ஆனா இப்ப இவரு இருக்கிற நிலைமையில இவரை டாக்சியில தூக்கி வச்சு அழைச்சுக்கிட்டுப் போறது ரிஸ்க். நான் சில மாத்திரைகளை எழுதித் தரேன். நாளைக்குத் திருவாரூருக்குப் போய் அதையெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுக்க ஆரம்பிங்க.

"நான்  மெட்ராஸ்ல எனக்குத் தெரிஞ்ச ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கேக்கறேன். எங்க ஆஸ்பத்திரியில ஃபோன் கிடையாது. போஸ்ட் ஆஃபீஸுக்குப் போய் டிரங்க் கால் போட்டுத்தான் பேசணும். ஆஸ்பத்திரி நேரத்தில நான் போக முடியாது. ராத்திரி போனா போஸ்ட் ஆஃபீஸ்   திறந்திருக்காது. அதனால அவருக்கு  விவரமா லெட்டர் போடறேன். ரெண்டு நாள்ள பதில் வந்திடும். நான் நாளைக்கு வந்து பாக்கறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.

"சார்! ஒரு நிமிஷம்" என்று உள்ளே ஓடிய ஆனந்தி ஒரு ஐந்து ரூபாய்த் தாளுடன் வந்தாள். "சார்! ஒங்க ஃபீஸ்" என்று தயங்கினாள்.

ரங்கராஜன் சிரித்துக்கொண்டே "வேண்டாம்மா. நான் கவர்ன்மென்ட் டாக்டர். ஃபீஸ் வாங்கக்கூடாது" என்றான் அவள் தோளில் தட்டியபடியே.

"ராத்திரி நேரத்தில வீட்டில வந்து பாத்திருக்கீங்களே.." என்றாள் ஆனந்தி.

"நான் ஆஸ்பத்திரிக்கு வர நோயாளிகளை மட்டும்தான் பாக்கணும். வீட்டில போய்ப் பாக்கக் கூடாது. அப்படிப் பாத்தா பிரைவேட் பிராக்டீஸ் பண்றேன்னு என் மேல புகார் கூட வரலாம். ஆனா ஒங்கப்பா இருந்த நிலைமையில அவரை வந்து பாக்க மாட்டேன்னு சொல்றது சரியா இருக்காது. அதனாலதான் வந்தேன். உங்கப்பாவுக்கு குணமாகிறவரை அடிக்கடி வந்து பாக்கறேன். அவருக்குக்  கொஞ்சம் சரியானதும் தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்கு லெட்டர் தரேன். அங்கே போய்ப் பாருங்க. சரியாயிடும், கவலைப்படாதே." என்று சொல்லி விட்டுப் போனான் .

அதற்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு முதலில் சில நாட்களுக்கு தினமும், பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையும் வந்து பார்த்து விட்டுப் போனான். சென்னையிலிருந்த ஸ்பெஷலிஸ்டின் ஆலோசனையின் பேரில் வேறு சில மருந்துகளையும் கொடுத்தான்.

மூன்று மாதங்களில் ராமமூர்த்தியிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

அதற்குப் பிறகு அவரைத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு டாக்சியில் அழைத்துச் சென்று காட்டினார்கள். அங்கிருந்த டாக்டர்கள் ரங்கராஜனின்  சிகிச்சையை அங்கீகரித்து அவன் கொடுத்த மருந்துகளையே தொடரச் சொன்னார்கள்.

இனி எழுந்து நடமாட மாட்டார், அநேகமாகப் பிழைக்கக் கூட மாட்டார் என்று அந்த கிராமத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக முடிவு செய்து விட்டிருந்த நிலையில், அப்போதுதான் படித்து முடித்திருந்த, அனுபவமில்லாத டாக்டரான ரங்கராஜன் தன்  சிகிச்சையினால் ராமமூர்த்தியைக் காப்பாற்றி அவரை எழுந்து நடமாடச் செய்ததை அந்த ஊரே ஒரு நம்ப முடியாத ஆச்சரியமாகப் பார்த்தது.

ஆனந்திதான் பெரிய மனுஷி போல் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும்  தந்தைக்கு மருந்துகள் வாங்கி வருவது முதல் அவ்வப்போது  மருத்துவ மனைக்கு வந்து ரங்கராஜனைப் பார்த்து ஆலோசனைகள் கேட்பது வரை எல்லாவற்றையும் செய்து வந்தாள். இத்தனைக்கும் நடுவில், படிப்பிலும் கவனம் செலுத்தி, எஸ் எஸ் எல் சியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேறியும் விட்டாள்.

ரங்கராஜன் அங்கே வேலைக்கு வந்து ஒரு வருடத்தில் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்ததால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்னைக்குப் போக முடிவு செய்து விட்டான்.

ராமமூர்த்தி அதற்குள் நன்கு குணமடைந்தவராக, ஆனந்தியுடன் மருத்துவமனைக்கு வந்து ரங்கராஜனுக்கு நன்றி தெரிவித்து அவனுக்கு விடை கொடுத்தார்.

"நீங்கதான் சார் தெய்வம் மாதிரி வந்து எங்கப்பாவைக் காப்பாத்தினீங்க" என்றாள்  ஆனந்தி.

"ஒங்க ஊர் டூரிங் டாக்கீஸ்ல நிறைய சினிமா பாப்ப போலிருக்கே!" என்றான் ரங்கராஜன் சிரித்துக்கொண்டே.

ப்போது பத்து வருடம் கழித்து ஆனந்தியின் திருமணத்துக்கு அவனுக்குப் பத்திரிகை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தன் சென்னை விலாசத்தை ராமமூர்த்தி தன்னிடம் கேட்டுப்பெற்றுக்கொண்டது அவனுக்கு நினைவு வந்தது.

அவன் மருத்துவமனையில் இருந்தபோது, தொலைபேசி அடித்தது."சார் உங்களுக்கு டிரங்க் கால்" என்றாள் ஆபரேட்டர்.

'ஹலோ!"

"சார்! நான் கரகக்கும்பத்திலேந்து ஆனந்தி பேசறேன்."

"ஹலோ! கல்யாணப் பொண்ணே!  கங்கிராசுலேஷன்ஸ்! அப்பா எப்படி இருக்காரு?" என்றான் ரங்கராஜன்.

"ஞாபகம் வச்சுக்கிட்டு உடனே கண்டுபிடிச்சுட்டீங்களே! ஆச்சரியமா இருக்கு சார். அப்பா பக்கத்துலதான் இருக்காரு. அவரு கிட்டயே கொடுக்கறேன்...ஹலோ டாக்டர்! நான் ராமமூர்த்தி பேசறேன்."

"எப்படி சார் இருக்கீங்க?" என்றான் ரங்கராஜன். கை கால் முடங்கிப்  படுத்திருந்த  ஒருவர், தான் அளித்த சிகிச்சையினால் நன்கு குணமடைந்து பத்து வருடங்களுக்குப் பிறகுத் தன்னைத் தொலைபேசியில் அழைத்துப்  பேசுவது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

"நான் நல்லா இருக்கேன். மார்க்கண்டேயனை எமன்கிட்டேயிருந்து சிவபெருமான் காப்பாத்தின மாதிரி நீங்களும் என்னை எமன்கிட்டேயிருந்து காப்பாத்திட்டீங்கன்னுதான் எங்க ஊர்ல எல்லாரும் உங்களைப்பத்திப்  பேசிக்கிறாங்க."

"சார்! ஒரு டாக்டர் செய்ய வேண்டியதைத்தான் நான் செஞ்சேன்."

"இல்லை சார்! அந்த சமயத்தில உங்களோட கடமையையெல்லாம் தாண்டி என் வீட்டுக்கு தினமும் வந்து பார்த்து, மருந்து கொடுத்து என்னைக் காப்பாத்தினது சாதாரண உதவி இல்லை சார். நான் எடுத்தது மறு ஜென்மம்தான். இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நானும் என் குடும்பமும் உங்களை மறக்க மாட்டோம்."

அவர் குரல் நெகிழ்ந்தது. "கல்யாணத்துக்கு உங்களை நேர்ல வந்து கூப்பிட முடியல. அதான் ஃபோன்லயாவது கூப்பிடலாம்னு.."

"கண்டிப்பா வரேன் சார்" என்று ரங்கராஜன் பதில் சொன்னபோது ராமமூர்த்தியின் குரலில் இருந்த நெகிழ்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டது. இவ்வளவு அன்பு காட்டும் இவர்கள் வீட்டுத் திருமணத்துக்குக் கண்டிப்பாகப் போக வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டான் ரங்கராஜன்.
அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு

பொருள்:  
தங்கள் துயரைத் துடைத்தவர்களின் நட்பை ஏழு பிறவிகளிலும் நினைத்துப் போற்றுவர் பண்புடையார்.


"


No comments:

Post a Comment