காலையில் ஆரம்பித்த மழை பிற்பகலில் வலுத்து மாலையில் கொட்டத் தொடங்கியது. தெருவில் தண்ணீர் ஓடத் தொடங்கியது. தண்ணீர் மட்டம் வேகமாக உயர்ந்து வீட்டின் படிகளில் ஏறி இறங்கி விளையாட்டுக் காட்டியது. ஐந்து மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
'மழை நின்ற பிறகுதான் மீண்டும் மின்சாரம் வரும்' என்று நினைத்துக் கொண்டான் சந்துரு.
அந்தத் தெருவில் இருந்த பலரும் தங்கள் உறவினர் வீடுகளுக்குக் கிளம்பி விட்டனர். அவன் இருந்த இடம் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படக் கூடிய இடம். ஆனால் சந்துருவால் எங்கும் போக முடியாது.
அவன் அம்மா படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் எழுந்து நிற்க முடியாது. அவரை அழைத்துக் கொண்டு எங்கும் போவது இயலாத செயல். அவன் அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் மழையினால் அன்று வேலைக்கு வரவில்லை.
பக்கத்து வீட்டிலிருந்த குடும்பமும் உறவினர் வீட்டில் தஞ்சம் புகக் கிளம்பியது. ஆனால் அந்தக் குடும்பத் தலைவர் பத்ரி மட்டும் கிளம்பவில்லை. எங்கு போக வேண்டுமானாலும், சற்று தூரம் நடந்து ரயில் நிலையம் சென்று மின்சார ரயிலில்தான் போக வேண்டும். பஸ்கள் ஓடுகின்றனவா என்று தெரியவில்லை.
வாசலில் இறங்கும்போது பத்ரியின் மனைவி அவரிடம் ஏதோ கோபமாகப் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக இறங்கிப் போகும்போது, "ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது!" என்று இரைந்து சொல்லி விட்டுப் போனாள்.
சற்று நேரம் கழித்து பத்ரி வாசலுக்கு வந்தபோது சந்துருவைப் பார்த்துச் சிரித்தார்.
"ஏன் சார், நீங்க போகலியா?" என்றான் சந்துரு.
"எல்லாரும் போயிட்டா, இருக்கறவங்களை யாரு பாத்துக்கறது?" என்றார் பத்ரி.
"வேற யாராவது இருக்காங்களா உங்க வீட்டில?"
"என் வீட்டில இல்ல. உங்க வீட்டில இருக்காங்களே!"
"எங்கம்மாவைச் சொல்றீங்களா? அதான் நான் இருக்கேனே?"
"இந்த மாதிரி சமயத்தில நீங்க மட்டும் எப்படித் தனியா உங்க அம்மாவைப் பாத்துக்க முடியும்? தெருவே காலி. நீங்களும் நானும்தான் இருக்கோம். நானும் போயிட்டா எப்படி?"
"எனக்காகவா நீங்க போகாம தங்கிட்டீங்க?" என்றான் சந்துரு, நம்ப முடியாத வியப்புடனும், நெகிழ்ச்சியுடனும். "நான் மேனேஜ் பண்ணிப்பேன் சார். நீங்க உங்க குடும்பத்தோட போய் இருங்க சார்!"
"குடும்பம் எங்கே போகுது? மழை நின்னதும் ரெண்டு நாள்ள திரும்பி வந்துடப் போறாங்க. அம்மா எங்கே படுத்துக்கிட்டிருக்காங்க?"
"ரூம்லதான். கட்டில்ல."
"வீட்டுக்குள்ள தண்ணி வந்துட்டா என்ன பண்ணுவீங்க?"
"மாடிக்குத்தான் போகணும்."
"உங்கம்மாவை எப்படி மாடிக்குத் தூக்கிக்கிட்டுப் போவீங்க?"
"கஷ்டம்தான்."
"நான் ஹெல்ப் பண்றேன். கவலைப்படாதீங்க"
அரை மணி நேரம் கழித்து அவன் வீட்டுக் கதவைத் தட்டினார் பத்ரி. திறந்தான்.
"தண்ணி லெவல் ஏறிக்கிட்டே இருக்கு. கொஞ்ச நேரத்தில வீட்டுக்குள்ள தண்ணி வந்துடும். அதனால இப்பவே உங்கம்மாவை மாடிக்குத் தூக்கிக்கிட்டுப் போயிடலாம்" என்றார் பத்ரி.
இருவரும் சேர்ந்து அவன் அம்மாவை மெல்லத் தூக்கி மாடியறைக்குக் கொண்டு சென்றார்கள். இருவரும் சேர்ந்து தூக்கிச் செல்வதே சிரமமாகத்தான் இருந்தது.
"நல்லவேளை சார்! நீங்க இல்லேன்னா நான் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பேன். நான் மட்டும் தனியா அம்மாவை மேல தூக்கிட்டுப் போயிருக்க முடியுமாங்கறதே சந்தேகம்தான்!"
"ஒரு ஆளா தூக்கிட்டுப் போறது கஷ்டம்தான். அதுவும் வயசானவங்க, உடம்பு சரியில்லாதவங்களை ஜாக்கிரதையாத் தூக்கணும் இல்ல?"
"கரெக்ட்தான் சார். இப்ப கூட நீங்க கிளம்பலாம் சார். அம்மாவைதான் மேல கொண்டு போய் வச்சாச்சே! இனிமே தண்ணி உள்ள வந்தாலும் பயமில்லையே!"
"இல்லை சந்துரு. இப்பவும் உங்களைத் தனியா விட்டுட்டுப் போக நான் விரும்பல. இந்த மாதிரி சமயத்தில எப்ப எந்த உதவி தேவைப்படும்னு சொல்ல முடியாது... அப்புறம், எனக்காக எங்க வீட்டில இட்லி, சப்பாத்தி, நொறுக்குத் தீனின்னு ஏகப்பட்டது பண்ணி வச்சிருக்காங்க. உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் கொஞ்சம் இட்லியும் சப்பாத்தியும் எடுத்துட்டு வரேன்."
"வேணாம் சார். நான் பிரட், பிஸ்கட் எல்லாம் கொஞ்சம் வாங்கி வச்சுருக்கேன். எனக்கு காலையில செஞ்ச சாப்பாடே மீதி இருக்கு. அம்மாவுக்குக் கஞ்சி போட்டு வச்சுட்டேன். தாங்க்ஸ் சார்" என்றான் சந்துரு.
அப்படியும், சற்று நேரம் கழித்து, ஒரு பொட்டலத்தில் நாலு இட்லியையும், இரண்டு சப்பாத்திகளையம் கட்டிக் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனார் பத்ரி.
இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால் சந்துருவின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டின் கீழ்ப்பகுதி முழுவதிலும் இரண்டு அடி உயரத்துக்கு நீர் தேங்கி இருந்தது.
மறுநாள் முழுவதும் நான்கைந்து முறை சந்துருவின் வீட்டுக்குத் தண்ணீரில் நடந்து வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார் பத்ரி.
அன்று மாலை மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியது. அன்று இரவு மின்சாரம் வந்தது.
அதற்கு அடுத்த நாள் இயல்பு நிலை திரும்பி விட்டது. அன்று மாலை பத்ரியின் குடும்பத்தினரும் வீட்டுக்குத் திரும்பி விட்டனர்.
சந்துரு பத்ரியின் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியிடம் "இந்த ரெண்டு நாளா உங்க வீட்டுக்காரர் எனக்கும் என் அம்மாவுக்கும் செஞ்ச உதவி சாதாரணமானது இல்லை. அதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு கூட எனக்குத் தெரியலை" என்று சொல்லி விட்டு பத்ரியைப் பார்த்தான்.
'இன்னும் ஐம்பது வருடம் நான் உயிர் வாழ்ந்து என் கடைசிக் காலத்தில் என்னுடைய நினைவுகள் எல்லாம் தப்பிப் போனாலும் உங்களை மட்டும் நான் மறக்க மாட்டேன்' என்று தன் பார்வை மூலம் அவன் அவரிடம் சொன்னது அவருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை!
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 11
செய்ந்நன்றி அறிதல்
குறள் 106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.
பொருள்:
குற்றமற்றவர்களின் நட்பை எப்போதும் மறக்கக் கூடாது. துன்பம் வந்தபோது துணை நின்றவர்களின் உறவை எப்போதும் விடக் கூடாது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment