About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, November 24, 2017

109. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

உமாபதிக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனுக்கு இருந்தது இரண்டு உறவுகள்தான். ஒன்று அவன் அம்மா வடிவு. மற்றொன்று அவன் மாமா காசிலிங்கம். மாமனுக்கு ஒரு மகள் இருந்தாள்.

வடிவுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடத்தில் அவள் அப்பா இறந்து விட்டார். அடுத்த வருடம் அவள் கணவன் சுந்தரமும் இறந்து விட்டான். அப்போது உமாபதி ஆறு மாதக் குழந்தை. அதற்குப் பிறகு அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் அவள் அண்ணன் காசிலிங்கம்தான்.

சுந்தரத்துக்கு ஊரில் ஒரு வீடும் கொஞ்சம் நிலமும் இருந்தது. வடிவு பிறந்த ஊரும், அவள் கணவனின் ஊரும் அருகருகே அமைந்திருந்ததால் அவள் அண்ணன் காசிலிங்கத்தால் அவளை அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ள முடிந்தது. அவர்களுடைய நிலங்களையும் அவன்தான் பார்த்துக் கொண்டான்.

அவளுடைய குடும்பச் செலவுக்கு மாதாமாதம் பணம் கொடுத்ததுடன், உமாபதியின் படிப்புச் செலவுக்கும் அவன்தான் பணம் கொடுத்தான். எப்போதாவது அவள் கூடுதலாகப் பணம் கேட்டாலும் கொடுப்பான். நிலத்திலிருந்து எவ்வளவு வருமானம் வருகிறது, அவன் கொடுக்கும் பணம் வருமானத்தை விடக் குறைவா அதிகமா என்று அவள் அவனைக் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

உமாபதி பள்ளிப் படிப்பை முடித்ததும், கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான். காசிலிங்கத்திடம் தன் விருப்பத்தை அவன் தெரிவித்தபோது, "உனக்கு எதுக்குடா படிப்பெல்லாம்? எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு. அவளைக் கட்டிக்கிட்டு, உங்க அப்பா விட்டுட்டுப் போன சொத்து, என்னோட சொத்து ரெண்டையும் பாத்துக்கிட்டு ஹாயா இருக்க வேண்டியதுதானே?" என்றான் காசிலிங்கம்.

அப்போதுதான் காசிலிங்கத்துக்கு இப்படி ஒரு எண்ணம் இருப்பது வடிவுக்கே தெரிந்தது. அவளுக்கு இதில் விருப்பம்தான். ஆனால் உமாபதி பட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தான். கல்யாணத்தைப் பற்றி அவனுக்கு அப்போது எந்தக் கருத்தும் இல்லை.

உமாபதியின் விருப்பப்படி அவன் பக்கத்து ஊரில் இருந்த கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர காசிலிங்கம் ஒப்புக் கொண்டான். படிப்புக்குத் தேவையான பணமும் கொடுத்தான்.

உமாபதியின் படிப்பு முடியும் சமயம், டில்லிக்கு அருகில் உள்ள காஸியாபாத்தில் ஒரு நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருந்த அவன் ஊரைச் சேர்ந்த ஒருவர் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். உமாபதிக்கு அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவனை அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

"படிப்பு முடிஞ்சதும் காஸியாபாத்துக்கு வந்துடு. எங்க கம்பெனியில வேலை வாங்கித் தரேன். தங்க இடமும் ஏற்பாடு பண்ணித் தரேன். நம்மூர் ஆட்கள் புத்திசாலிங்க, நல்லா வேலை செய்வாங்கன்னு வட இந்தியர்களுக்கு நம்ம மேல நல்ல அபிப்பிராயம் உண்டு. நல்லா வேலை செஞ்சா சீக்கிரமே முன்னுக்கு வரலாம். நான் எஸ் எஸ் எல் சி கூடப் படிக்கல. நானே இப்ப எங்க கம்பெனியில நல்ல பதவியில் இருக்கேன். சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு. நீ படிச்சவன். அதனால சீக்கிரமே முன்னுக்கு வந்துடுவே! ரெண்டு மூணு வருஷத்திலே உங்க அம்மாவையும் அழைச்சுக்கிட்டு வந்து வச்சுக்கலாம். அங்கேயே செட்டில் ஆயிடலாம்" என்றார்.

உமாபதி தன் மாமாவிடம் கேட்டான். "இதுக்குத்தான் படிப்பெல்லாம் வேணாம்னு அப்பவே சொன்னேன். இங்கியே வசதியா இருக்கறதை விட்டுட்டு எதுக்கு அவ்வளவு தூரம் டில்லிக்குப் பக்கத்தில போயி வேலை செய்யணும்?" என்றான் காசிலிங்கம்.

ஆயினும் உமாபதி திரும்பத் திரும்பக் காசிலிங்கத்திடம் பேசி அவன் அனுமதியைப் பெற்று விட்டான். அவன் அம்மாவுக்கு இதில் எந்த அபிப்பிராயமும் இல்லை. அண்ணன் ஏற்றுக் கொண்டால் அவளுக்கும் சரிதான். பிள்ளையைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற வருத்தம் மட்டும் இருந்தது.

"ரெண்டு வருஷத்திலே உன்னையும் அங்கே கூட்டிக்கிட்டுப் போயிடுறேன். அதுவரையிலும், ஆறு மாசத்துக்கு ஒரு தடவை  லீவுல வந்து போய்க்கிட்டிருப்பேன்" என்று அவளை சமாதானப்படுத்தி விட்டுக் கிளம்பினான் உமாபதி.

ரண்டு வருடங்கள் கழித்து விடுமுறையில் வந்த உமாபதி, தன் மாமாவிடம் "மாமா! இன்னும் ரெண்டு மாசத்துல கம்பெனியில எனக்கு குவார்ட்டர்ஸ் கொடுத்துடுவாங்க. குவார்ட்டர்ஸ் கிடைச்சதும், வந்து அம்மாவை என்னோட அழைச்சுக்கிட்டுப் போலாம்னு இருக்கேன்" என்றான்.

"என் பொண்ணைக் கட்டிக்கிட்டு அவளையும் அழைச்சுக்கிட்டுப் போயேன்" என்றான் காசிலிங்கம்.

உமாபதி தயக்கத்துடன், "மன்னிச்சுக்கங்க மாமா! என்னோட வேலை பாக்கற ஒரு பொண்ணை விரும்பறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றான்.

"என்னை நம்ப வச்சுக் கழுத்தை அறுத்துட்டியேடா! வேற யாருக்காவது அவளைக் கட்டி வச்சிருப்பேன் இல்ல?" என்று கோபமாகக் கத்தினான் காசிலிங்கம்.

"மாமா! வள்ளிக்கு 18 வயசுதான் ஆகுது. அவளுக்கும் என்னைக் கட்டிக்கிறதுல விருப்பம் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஒரு நல்ல பையனாப் பாத்து அவளுக்குக் கட்டி வையுங்க" என்றான் உமாபதி.

"சரி. நீயும் போயிட்ட, உங்கம்மாவும் போயிட்டான்னா, உங்க வீடு, நிலத்தையெல்லாம் யாரு பாத்துப்பாங்க?"

"அதையெல்லாம் விக்கறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க மாமா. நான் அம்மாவை அழைச்சுக்கிட்டுப் போறதுக்குள்ளயே ரிஜிஸ்டிரேஷன் முடிஞ்சா நல்லா இருக்கும்."

"நிலத்தையெல்லாம் அவ்வளவு சுலபமா வித்துட முடியாது. யாராவது வாங்கற மாதிரி இருந்தா கடுதாசி போடறேன். அப்ப, நீயும் உங்கம்மாவும் வந்து பதிவு பண்ணிக் கொடுத்துட்டுப் பணத்தை வாங்கிட்டுப் போங்க" என்றான் காசிலிங்கம்.

ம்மாவை அழைத்துக் கொண்டு காஸியாபாத் போய் ஆறு மாதம் ஆகியும் காசிலிங்கத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. உமாபதி தன் மாமாவுக்குக் கடிதம் எழுதிக் கேட்டான்.

ஒரு வாரத்தில் காசிலிங்கத்திடமிருந்து பதில் வந்தது. "உன் அப்பா காலமான பிறகு, உன்னையும், உன் அம்மாவையும் காப்பாற்றியது, உன் படிப்புக்குச் செலவு செய்தது என்று ஏகமாகச் செலவு செய்திருக்கிறேன். உங்கள் நிலத்திலிருந்து வந்த வருமானம் உங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூடப் போதாது. அதனால் கணக்குப் பார்த்து உங்களுக்குச் செலவழித்த பணத்துக்கு ஈடாக உங்கள் வீட்டையும், நிலங்களையும் எனக்குக் கிரயம் செய்து கொடுத்திருக்கிறாள் உன் அம்மா. பதிவும் செய்தாகி விட்டது. எல்லாம் போக உங்களுக்கு நான் தொள்ளாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி இருந்தது. அதை ஆயிரம் ரூபாயாக உன் அம்மாவிடம் அவள் ஊருக்குக்  கிளம்பியபோது கொடுத்திருக்கிறேன்" என்று எழுதியிருந்தான் காசிலிங்கம்.

உமாபதி அதிர்ச்சியுடன் தன் அம்மாவிடம், "ஏம்மா, மாமாவோட ரிஜிஸ்டர் ஆஃபீசுக்குப் போய் ஏதாவது கையெழுத்துப் போட்டு விட்டு வந்தியா?" என்றான்.

"ஆமாம். நிலத்தையும், வீட்டையும் விக்கணும்னா அதையெல்லாம் என் பேர்ல முறையா எழுதிப் பதிவு பண்ணனும்னு சொன்னார் மாமா. உங்கப்பா காலமானபோது, உன் மாமா ஊர் கணக்குப் பிள்ளை மூலமா பட்டாவை மட்டும் என் மேல மாத்திட்டாராம். ஆனா ரிஜிஸ்டர் பண்ணினாத்தான் அதை விக்க முடியும்னு சொல்லி அழைச்சுக்கிட்டுப் போனார். அதுக்கு என்ன இப்ப?" என்றாள் வடிவு.

"ஒண்ணுமில்லை" என்றான் உமாபதி.

யோசித்துப் பார்த்தபோது அவனுக்கு எல்லாம் புரிந்தது. அவர்கள் நிலத்தில் எவ்வளவு விளையும் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கா விட்டாலும், எவ்வளவு நிலம் இருக்கிறது (இருந்தது!) அவற்றின் மதிப்பு என்ன என்பதெல்லாம் அவனுக்கு ஓரளவுக்குத் தெரியும்.

தன் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் மாமா அவனை வஞ்சம் தீர்த்துக் கொண்டிருக்கிறார். இது தன் தங்கைக்கு அவர் செய்த பெரிய துரோகம்தான். கோர்ட்டுக்குப் போனால் ஒருவேளை அவனால் நிலங்களை மீட்க முடியலாம்.

ஆனால் இன்னொரு நினைவு வந்தது. அவன் தந்தை இறந்தபோது, அவன் அம்மா ஒரு விவரம் அறியாத கிராமத்துப் பெண். அவனோ கைக்குழந்தை. தங்கள் இருவரையும் பாதுகாத்து, தன்னைப் படிக்க வைத்து.  தன்  விருப்பங்களையெல்லாம் மாமா நிறைவேற்றியது எவ்வளவு பெரிய விஷயம்!

அவர் செய்த மாபெரும் உதவியை நினைத்து அவருடைய துரோகத்தை மறந்து விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான் உமாபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

பொருள்:  
ஒருவர் நம்மைக் கொலை செய்வதைப் போன்ற கொடுமையான செயலைச் செய்தாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்தால், அவர் செய்த தீமையை மறந்து விட  முடியும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'When Expectations Were Belied...the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்















No comments:

Post a Comment