About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Monday, December 4, 2017

110. இன்டர்வியூ

இன்டர்வியூ அறையிலிருந்து வெளியே வந்தவனை நிறுத்தி வர்மா கேட்டான்: "எப்படி இருந்தது இன்டர்வியூ?"

"ஈஸியாத்தான் இருந்தது. என் அனுபவத்தைப் பத்தித்தான் கேட்டாங்க."

"நீங்க பண்ணின தப்பையெல்லாம் சொன்னீங்களா?"

"அவங்ககிட்ட எதையும் மறைக்க முடியாது. அவங்ககிட்ட நம்மளைப் பத்தின எல்லா விவரங்களும் இருக்கு. என் அம்மா வயத்துல இருந்தபோது எடுத்த ஸ்கேனைக் கூட வச்சிருப்பாங்க போலருக்கு!"

"எப்படி?"

"அங்கே குப்தான்னு ஒத்தரு இருக்காரு. நம்ம டோஸியே முழுசும் அவர் லேப்டாப்பில் இருக்கும் போலருக்கு. நான் சொல்லாம மறைச்ச விஷயத்தையெல்லாம் லேப்டாப்பைப் பாத்துப் புட்டுப் புட்டு வச்சுட்டாரு!"

"அப்படியா?" என்றான் வர்மா, ஆச்சரியத்துடன்.

"ஆமாம். 'நீ போலி டிகிரி சர்ட்டிஃபிகேட் கொடுத்துத்தானே வேலையில சேர்ந்தே?'ன்னு கேட்டாங்க! நான் அசந்துட்டேன். அது எப்படி அவங்களுக்குத் தெரிஞ்சதுன்னே தெரியல. இதுவரைக்கும் அது யாருக்கும் தெரியாது. என்னோட முப்பது வருஷ கேரியர்ல இதை யாருமே கண்டு பிடிக்கல!"

"உங்களுக்குப் போலி சர்ட்டிஃபிகேட்  தயாரிச்சுக் கொடுத்த ஆளே போட்டுக் கொடுத்திருக்கலாமே!"

"அவன் எத்தனையோ பேருக்குப் போலி சர்ட்டிஃபிகேட் தயாரிச்சுக் கொடுத்திருக்கான். அவனோட ஆயிரம் கஸ்டமர்கள்ள நானும் ஒருத்தன். என்னைப் பத்தி அவன் ஏன் சொல்லணும் - அதுவும் இவங்ககிட்ட? எனக்குப் புரியல."

"சரி. அதுக்கு என்ன சொன்னாங்க? அதுக்காக உங்களை தண்டிக்கப் போறாங்களாமா?"

"தெரியல. நான் நிறைய சாதனைகள், நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கேனே! அதையும் அவங்க சொன்னாங்க. நான் மறந்து போன சில நல்ல காரியங்களைக் கூட அவங்க லேப்டாப்பிலேருந்து பார்த்துச் சொல்லி என்னைப் பாராட்டினாங்களே!"

"ஓ!" என்றான் வர்மா, ஆச்சரியத்துடன்.

அப்போது ஒரு இளம் பெண் அங்கே வந்து "மிஸ்டர் காசி! இப்படி வாங்க!" என்று சொல்லி அவனை அருகிலிருந்த ஒரு அறைக்குள் அழைத்துப் போனாள். 

அந்த அறைக்கதவு சில வினாடிகள் திறந்து மூடியபோது அந்த அறையின் பளபளப்பான தரையும், பளிச்சென்று துலங்கிய சுவர்களும் அதை ஒரு உயர்தரமான ஹோட்டல் சுவீட் போலத் தோற்றமளிக்கச் செய்தன. அறையிலிருந்து வெளிப்பட்ட குளிர்ந்த காற்றின் அற்புதமான மணமும், குளிர்ச்சியும் பல வினாடிகள் நீடித்தன. அறைக்கு வெளியே பாரடைஸ்-103 என்ற எழுத்துக்கள் வாயில் நிலைமீது எழுதப் பட்டிருந்ததை வர்மா கவனித்தான். 

'எங்கே அழைத்துப் போகிறார்கள் இவனை?'

சற்று நேரம் கழித்து வர்மா உள்ளே அழைக்கப்பட்டான்.

ரைமணி நேரத்துக்குப் பிறகும் இன்டர்வியூ முடியவில்லை. வர்மாவின் முகம் வியர்த்திருந்தது. 'இது என்ன இன்டர்வியூவா, போலீஸ் விசாரணையா?' என்று சில சமயம் அவனுக்குத் தோன்றியது.

"மிஸ்டர் வர்மா, ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் மறைத்து விட்டீர்கள்" என்றார் இன்டர்வியூ செய்தவர்.

"எதைச் சொல்கிறீர்கள்?" என்றான் வர்மா. சொல்லும்போதே அவன் வியர்வைப் பெருக்கு அதிகரித்தது.

"ஒரு சமயம் உங்களுக்கு வேலை போய் விட்டது. அதற்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்கள் வேலை கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டீர்கள். நடுத்தெருவுக்கு வர வேண்டிய நிலைமை. அப்போது அர்த்தநாரி என்ற ஒருவர் உங்கள் மீது இரக்கப்பட்டு உங்களுக்கு வேலை கொடுத்தார். குறுகிய காலத்திலேயே உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களிடம் நிறையப் பொறுப்புகளை ஒப்படைத்தார். ஆனால் நீங்கள் அவர் தொழில் ரகசியங்களைத் தெரிந்து கொண்டபின் அவருடைய போட்டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய வாடிக்கையாளர்களை உங்கள் புதிய நிறுவனத்துக்கு இழுத்து அவர் தொழிலையே அழித்து விட்டீர்கள். சிறிது காலத்தில் அவர் தன் தொழிலையே மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உங்களுக்கு உதவி செய்ததற்கு அவரிடம் நன்றி காட்ட வேண்டிய நீங்கள் அவருக்கு துரோகம் செய்து விட்டீர்கள்."

"சார்! தொழில், வியாபாரம் இவற்றில் இதெல்லாம் சகஜம்தான்..." என்று இழுத்தான் வர்மா.

"நன்றி மறப்பது மன்னிக்க முடியாத குற்றம். உதவி செய்தவருக்கு துரோகம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்" என்று சொல்லி அவர் பஸ்ஸரை அழுத்தினார். ஒரு ஆள் உள்ளே வந்தான். அவர் தலையசைத்ததும், அவன் வர்மாவின் கையைப் பிடித்து இழுத்தான்.

"சார்! விடுங்க. என்ன இது? நான் உங்கள் பின்னால் வருகிறேன். கையைப் பிடித்து இழுத்துப் போவது என்பது என்ன வழக்கம்?" என்று முரண்டினான் வர்மா.

அவன் வர்மாவை இழுத்த வேகத்தில் வர்மா தரையில் விழ அவனைத் தரையிலேயே இழுத்துக் கொண்டு போனான் அந்த ஆள். வர்மா எழுந்து நிற்பதற்குக் கூட அவன் வாய்ப்புக் கொடுக்கவில்லை.

ஒரு அறையின் கதவைத் திறந்து வர்மாவை உள்ளே தள்ளினான் அவன். வர்மா தடுமாறி எழுந்து நின்றான். அறை வெளிச்சமில்லாமல் அரை இருட்டாக இருந்தது. தரை கரடு முரடாகக் காலில் குத்தியது. தான் இழுத்து வரப்பட்டபோது, தன் ஷூ நழுவி விழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தான் வர்மா. 'இரண்டு காலிலிருந்துமா ஷூ கழன்று விழுந்திருக்கும்?'

அவனை யோசிக்க விடாமல் குப்பென்று ஒரு துர்நாற்றம் வீசியது.

"என்ன அறை இது? என்னை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்?"

"இதுதான் நீ இருக்கப் போகும் இடம்" என்றான் அந்த ஆள்.

"ஏன்?" என்றான் வர்மா, கோபத்துடன்.

அப்போது அங்கிருந்த ஒரு ஃபோன் அடித்தது. அந்த ஆள் அதை எடுத்துப் பேசி விட்டு, "சாரிடமே உன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள்" என்றான்.

வர்மா ஃபோனை வாங்கிக் கொண்டு, "சார்! ஏன் என்னை இங்கே அடைத்து வைக்கிறீர்கள்?" என்றான்.

"அதுதான் சொன்னேனே! நீ நன்றி மறந்த குற்றத்துக்கான தண்டனை இது."

"நான் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறேனே, அதற்கெல்லாம் மதிப்பில்லையா?"

"வேறு குற்றமாக இருந்தால் நீ செய்த நல்லவற்றைக் கணக்கில் கொள்ள முடியும். ஆனால் நன்றி மறந்த செயலுக்கு நீ செய்த நல்லவற்றைப் பரிகாரமாகக் கொள்ள முடியாது."

போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்தவன் ஒரு சொகுசான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது வர்மாவின் நினைவுக்கு வந்தது. அந்த அறையின் வாசலில் பாரடைஸ்-103 என்று எழுதப்பட்டிருந்ததே! அப்படியானால் இது..?

"இது என்ன இடம் சார்?" என்றான் வர்மா, கலவரத்துடன்.

"நீ நினைப்பது சரிதான். நரகம்தான் அது!" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

"என்னை இங்கே தள்ள நீங்கள் யார்? உங்கள் பெயர்?"

"தர்மராஜன்."

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

பொருள்:  
எந்த அறத்தை மீறினாலும் அதன் விளைவிலிருந்து மீள வழி உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு மீட்சியே இல்லை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:



பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






















.


9 comments:

  1. மிக மிக அருமையான கதை. வித்தியாசமாகக் குறளில் இருந்து கதை பிறந்து அதன் அர்த்தத்தைக் கதை மூலம் சொன்ன விதம் வெகு சிறப்பு...தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.

      Delete
  2. வித்தியாசமான முறையில் திருக்குறள் கதை. சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி.

      Delete
  3. PR, wonderful as always. इस there any special significance of No. 103 as in Paradise 103?

    ReplyDelete
    Replies
    1. Thanks RR. It is like a room number in paradise. Since the name 'paradise' will give a hint to the storyline, I gave a number to make it intriguing. In fact, in my first draft I wrote paradise-1. Then I felt a 3-digit number will be better. Thanks again.

      Delete
  4. PR, wonderful as always. इस there any special significance of No. 103 as in Paradise 103?

    ReplyDelete
  5. மிகவும் அருமையான கதைப் போக்கு. குறளுக்காகக் கச்சிதமாகப் பொருந்தும் கதை..

    ReplyDelete