About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, October 29, 2017

103. நகைக்கடன்

"இது மாதிரி நிறுவனங்கள்ளல்லாம் கடனே வாங்கக் கூடாது. எங்கிட்ட சொல்லியிருந்தா ஏதாவது பாங்க்கில வாங்கச் சொல்லி யோசனை சொல்லி இருப்பேன். இப்ப வந்து சொல்றீங்களே!" என்றான் மணி.

"ஏதோ அவசரத்துக்கு வாங்கிட்டேன். பாங்க்கில எல்லாம் அலைக்கழிப்பாங்கன்னு நெனச்சேன். இந்த கம்பெனி சமீபத்திலதான் எங்க வீட்டுக்குப் பக்கத்தில பிராஞ்ச் ஓபன் பண்ணியிருந்தாங்க. 

"சும்மா விசாரிக்கலாம்னுதான் உள்ள போனேன். எங்கிட்ட ரொம்ப இனிமையாப் பேசினாங்க. நகையை எடுத்துக்கிட்டு வாங்க, இப்பவே கேஷ் கொடுத்துடறோம்னு சொன்னாங்க. 

"அவங்க சொன்ன வட்டி கூட அதிகமாத் தெரியல. ஆனா ரெண்டு மாசம் வட்டி கட்டலைங்கறதுக்காக நகையை ஏலம் போடப் போறோம்னு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. வட்டி வேற அதிகமாப் போட்டிருக்காங்க. 

"போய்க் கேட்டதுக்கு என்னென்னவோ கணக்கு சொல்றாங்க. டைம் கொடுக்கவும் மாட்டாங்களாம். நாளைக்குள்ள பணம் கட்டலைன்னா நகையை ஏலம் போட்டுடுவோம்னு திட்டவட்டமாச் சொல்லிட்டாங்க" என்றான் சபாபதி.

"எவ்வளவு கட்டணும்?"

"கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூவா வருது."

"அவ்வளவு பணத்தை உடனே புரட்ட முடியாதே!"

"நிறைய பேர்கிட்டக் கேட்டுப் பாத்துட்டேன். எல்லாரும் கை விரிச்சுட்டாங்க."

"சரி. நான் முயற்சி பண்ணிப் பாக்கறேன். சாயந்திரம் ஃபோன் பண்றேன்."

சபாபதி மணிக்கு உறவு முறைதான் என்றாலும், எப்போதாவது கல்யாணங்களில் சந்தித்துக்கொள்வதைத் தவிர, இருவரும் நெருங்கிப் பழகியது கிடையாது.

அன்று மாலை சபாபதிக்கு ஃபோன் செய்து "சாரி சார். பணம் கிடைக்கல" என்று சொல்லி விட்டான் மணி.

டுத்த நாள் காலை பயந்து கொண்டே அந்த நிதி நிறுவனத்துக்குப் போனான் சபாபதி- கடைசியாக ஒருமுறை கெஞ்சிக் கேட்டுப் பார்க்கலாம் என்று.

"உங்க நகையெல்லாம் ஏலம் போடறத்துக்கு எடுத்து வச்சாச்சு சார். 12 மணிக்கு ஏலம். ரெண்டு மணிக்கு வந்தீங்கன்னா உங்க நகைகள் எவ்வளவுக்குப் போச்சு, உங்க கடன் வட்டியெல்லாம் போக உங்களுக்கு மீதிப் பணம் ஏதாவது கிடைக்குமான்னு சொல்றோம்" என்றார்கள். கடைசி நம்பிக்கையும் போய் விட்டது.

அவர்கள் சொன்னபடி மதியம் 2 மணிக்குப் போனான் .

"ஏன் சார்? நேத்திக்கே பணம் கட்டியிருக்கலாம் இல்ல? நகையை எல்லாம் ஏலம் போடறத்துக்காக எடுத்து வச்சப்பறம் 11 மணிக்கு வந்து பணம் கட்டச் சொல்லியிருக்கீங்களே! நல்ல வேளை. இன்னும் 10 நிமிஷம் லேட்டாயிருந்தாக் கூட ஏலத்துக்குப் போக வேண்டியதைத் தடுத்திருக்க முடியாது" என்றார் நிறுவன ஊழியர்.

"யார் சார் பணம் கட்டினாங்க?" என்றான் சபாபதி, நம்ப முடியாத வியப்புடன்.

"நீங்க அனுப்பின ஆளு இல்லியா அவரு? இருங்க. வவுச்சரைப் பாத்துச் சொல்றேன்" என்றவர் "கையெழுத்துல மணின்னு இருக்கு. உங்களுக்குத் தெரிஞ்சவர்தானே?" என்றார்.

"ஆமாம்." என்றான் சபாபதி. உணர்ச்சிப் பெருக்கில் அவனுக்குக் குரலே எழும்பவில்லை.

"கொஞ்சம் இருங்க. நகையை எடுத்துக்கிட்டு வரேன். வாங்கிட்டுப் போயிடுங்க" என்று உள்ளே எழுந்து போனார் ஊழியர்.

பாபதி மணிக்கு ஃபோன் செய்தான். "சார்! இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. என்ன சொல்றதுன்னே தெரியல" என்றான்.

"காலையிலிருந்து உங்களுக்கு ஃபோன் பண்ணிக்கிட்டே இருக்கேன், நீங்க எடுக்கவே இல்லையே?" என்றான் மணி.

"ஆமாம், தவறுதலா ஃபோனை சைலன்ட் மோட்ல போட்டுட்டேன் போலிருக்கு. இப்பதான் பாக்கறேன்" என்ற சபாபதி, "நேரத்துக்கு உதவி பண்ணியிருக்கீங்க சார். இதை நான் மறக்கவே மாட்டேன்" என்றான்.

"நேத்திக்கு நீங்க வந்துட்டுப் போனப்பறம் விஷயத்தை என் மனைவிகிட்ட சொன்னேன். அவதான் சொன்னா 'நம்பகிட்ட பணம் இல்லாட்டா என்ன? என்னோட நகைகளை பாங்க்கில வச்சுக் கடன் வாங்கி அவங்களுக்கு உதவி செய்யாலாமே'ன்னு. 

"பணம் கிடைச்சப்புறம் உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். காலையில என் பாங்குக்குப் போய் நகைகளை வச்சுப் பணம் வாங்கிக்கிட்டு உங்களுக்கு ஃபோன் பண்ணினேன். நீங்க ஃபோனை எடுக்கவேயில்லை. 

"நேத்திக்கு நீங்க என் வீட்டுக்கு வந்திருந்தப்ப உங்களுக்கு வந்த நோட்டீஸை இங்கேயே விட்டுட்டுப் போயிட்டீங்க. அதை எடுத்துக்கிட்டுப் போய் உங்க பாங்க்கில பணம் கட்டிட்டு வந்துட்டேன். நகைகளை வாங்கிட்டீங்களா?" என்றான் மணி.

"சார்! என்னோட நகையை மீட்கறதுக்காக உங்க மனைவி அவங்க நகையைக் கொடுத்திருக்காங்க. அதை அடகு வச்சுப் பணம் வாங்கி, நீங்க என் கடனை அடைச்சிருக்கீங்க. நீங்க எனக்கு செஞ்சிருக்கிற உதவி ரொம்பப் பெரிசு. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள உங்க கடனை வட்டியோடு அடைச்சுடறேன் சார்" என்றான் சபாபதி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 11             
செய்ந்நன்றி அறிதல்    
குறள் 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

பொருள்:  
தனக்கு என்ன பயன் கிடைக்கும் என்று யோசிக்காமல் ஒருவர் செய்த உதவியை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்




















No comments:

Post a Comment