
"ஏம்ப்பா, உன் தம்பிதானே? அவன் கஷ்டப்படறப்ப, நீ அவனுக்கு உதவலாமே!" என்றார் செல்வமுத்து.
"என்னங்க நீங்க சொல்றது? அவன் என்னைக் கேட்டுக்கிட்டா எல்லாம் செஞ்சான்? வியாபாரம் ஆரம்பிச்சான். உனக்கெல்லாம் வியாபாரம் ஒத்து வராதுன்னேன். கேக்கலே."
"நீ சொன்னது சரிதான். கணேசன் மாதிரி இரக்க குணம் படைச்சவங்களுக்கெல்லாம் வியாபாரம் ஒத்து வராதுதான்" என்றார் செல்வமுத்து.
"அது என்னங்க இரக்க குணம்? ஏமாளித்தனம்னு சொல்லுங்க. உங்களை மாதிரி ஆளுங்கள்ளாம் அவனுக்கு இரக்க குணம்னு சொல்லிச் சொல்லி, அவனை நல்லா ஏத்தி விட்டுட்டீங்க. அவன் என்னவோ தான் பெரிய பரோபகாரின்னு நெனச்சுக்கிட்டு, இருந்த பணத்தையெல்லாம் அடுத்தவங்களுக்கு அள்ளிக் கொடுத்துக்கிட்டும், வியாபாரத்தைப் பாக்காம, அடுத்தவங்களுக்கு உதவி செய்யறேன்னு நேரத்தை வீணாக்கிக்கிட்டும், வியாபாரத்தைக் கோட்டை விட்டுட்டு, நடுத்தெருவில் நிக்கறான். நீங்க கொடுத்த இரக்க குணம்கற பட்டம்தான் இப்ப அவனுக்கு மிச்சம். இப்ப, நான் அவனுக்கு உதவி செய்யணுங்கறீங்க! ஏன், நீங்க உதவ வேண்டியதுதானே? பட்டம் மட்டும்தான் கொடுப்பீங்களாக்கோம்?" என்று பொரிந்து தள்ளினான் முருகன்.
"நீ சொல்றது சரிதான். ஆனா, நாங்க அவன்கிட்ட உதவி வாங்கி இருக்கோமே தவிர, அவனுக்கு உதவி செய்யற நிலையில இல்ல. வயசில பெரியவன்கறதால, உன் தம்பிக்கு உதவச் சொல்லி உன்கிட்ட கேட்டுப் பாத்தேன். தப்பா இருந்தா, மன்னிச்சுடுப்பா" என்று சொல்லி விட்டு எழுந்தார் செல்வமுத்து.
செல்வமுத்து போனபின், முருகன் தன் மனைவி தங்கத்திடம், "பிச்சைக்காரப் பசங்களையெல்லாம் ஊர்ல பெரிய மனுஷன்னு சொல்லித் தலையில வச்சு ஆடினா, இப்படித்தான் பேசுவாங்க!" என்றான்.
"நீங்க உங்க தம்பிக்கு உதவி செய்யாட்டா பரவாயில்ல. எல்லாரையும் இப்படிக் கடுமையாப் பேசாதீங்க. நீங்க யாருக்கும் உதவாத மாதிரி, என்னையும் உதவக் கூடாதுன்னு சொல்றீங்க. இதனால ஊர்ல யாருக்கும் நம்ம மேல நல்ல அபிப்பிராயம் இல்ல" என்றாள் தங்கம்.
"ஊர்ல நல்ல பேரு வாங்கி என்ன பிரயோசனம்? ஊர்ல நல்ல பேரு வாங்கின என் தம்பி, நடுரோட்டிலதானே நிக்கறான்? இதைப் பாத்தே நீ தெரிஞ்சுக்க வேண்டாம்?"
தங்கம் பதில் பேசவில்லை.
"எனக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு. இந்தப் பய கணேசன் வியாபாரத்தில எல்லாம் போய் நடுத்தெருவுக்கு வந்தான். மறுபடி, புதுசா வேற வியாபாரம் ஆரம்பிச்சு, அஞ்சாறு வருஷத்திலே நல்ல நிலைமைக்கு வந்துட்டான்!" என்றான் முருகன். உடனேயே, "சரி விடு. உலகத்தில நல்ல நிலைமையில இருக்கறவன் நொடிச்சுப் போறதும், நொடிச்சுப் போனவன் மறுபடி மேல வரதும் நடக்கற விஷயங்கள்தானே?" என்றான்.
'ஆனா, உங்களுக்கு அன்னிக்கு இருந்த கெட்ட பேரு அப்படியேதான் இருக்கு? நீங்க மாறப் போறதில்ல. ஊர்ல உங்களைப் பத்தின அபிப்பிராயமும் மாறப்போறதில்ல' என்று நினைத்துக் கொண்டாள் தங்கம்.
துறவறவியல்
அதிகாரம் 25
அருளுடைமை
குறள் 248பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
பொருள் இல்லாதவர் ஒருநாள் செல்வந்தர் ஆகலாம். ஆனால் அருள் இல்லாதவர் பயனற்றவராகவே விளங்குவார். அவர் எப்போதும் சிறந்து விளங்க மாட்டார்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment