தண்டபாணி அந்தக் கோவிலுக்குள் நுழைந்தபோது, மண்டபத்துக்கு வெளியே ஒரு இடத்தில் சற்று கூட்டமாக இருந்ததைக் கண்டு, அங்கு ஏதாவது விக்கிரகம் இருக்குமோ என்று நினைத்து, அருகில் சென்று பார்த்தார்.
அங்கு சாமியார் போன்று தோன்றிய ஒருவர் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றிச் சிலர் நின்று கொண்டிருக்க, அவர் அருகே ஒருவர் வாயைப் பொத்தியபடி நின்று கொண்டு, சாமியார் சொன்னதைப் பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்தார். சாமியாருக்கு அருகில், ஒருவர் ஒரு ஜிப் வைத்த பையுடன் அமர்ந்திருந்தார்.
கூட்டத்தில் இருந்த ஒருவரிடம் தண்டபாணி என்னவென்று ஜாடையில் விசாரிக்க, அவர் தண்டபாணியின் காதுக்குள், "சாமியார் பெரிய யோகி. கடவுள்கிட்டயே பேசறவரு. எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லுவார்!" என்றார்.
இதற்குள் சாமியாரிடம் ஆலோசனை கேட்டவர், அவர் உதவியாளரிடம் சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுக்க, அவர் அதை வாங்கி, ஜிப் வைத்த பையில் போட்டுக் கொண்டார்.
கோவிலுக்கு வருபவர்கள் இறைவனிடம் வேண்டாமல், கோவிலில் அமர்ந்திருக்கும் ஒரு சாமியாரிடம் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே, சந்நிதியை நோக்கி நடந்தார் தண்டபாணி.
கோவிலில் போடப்பட்டிருந்த குழல் விளக்குகள் பலவற்றில் "உபயம்: அப்பு" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. குருக்களிடம் இது பற்றி தண்டபாணி கேட்டபோது, "இந்த ஊர்ல எந்த நல்ல காரியம்னாலும் அப்பு ஐயா உதவாம இருக்க மாட்டாரு" என்றார் குருக்கள்.
தண்டபாணி கோவில்களை நாடி ஊர் ஊராகச் செல்பவர். அந்தச் சிறிய ஊரிலிருந்து அவர் திரும்புவதற்கான பஸ் இரண்டு மணி நேரம் கழித்துத்தான் வரும் என்பதால், அப்புவைப் பார்த்துச் செல்லலாம் என்று அவரைப் பற்றி விசாரித்தார் தண்டபாணி.
அப்பு அந்த ஊரில் ஒரு கடை வைத்திருப்பதாகச் சொன்னார்கள். அவர் கடைக்குச் சென்ற தண்டபாணி, தான் கோவிலுக்கு வந்ததாகவும், கோவிலுக்கு அவர் நிறையச் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க விரும்பியதாகவும் சொன்னார்.
அப்பு அவரை ஒரு ஸ்டூலில் உட்காரச் சொல்லி விட்டு, வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
கடையில் நிறைய வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருந்தனர். ஆனால், கடையில் இரண்டு ஊழியர்கள் மட்டுமே இருந்ததால், அவர்கள் வாடிக்கையாளர்களைச் சமாளிக்க முடியாமல், கஷ்டப்பட்டு ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர்.
"சீக்கிரம் சாமான்களை எடுத்துக் கொடுடா, சோம்பேறி" என்று ஒரு ஊழியரைப் பார்த்துக் கத்தினார் அப்பு. "வாங்கற சம்பளத்துக்குப் பாதி கூட வேலை செய்ய மாட்டாங்க" என்றார் தண்டபாணியைப் பார்த்து.
"பொருட்கள் வாங்க வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. ரெண்டு பேரால சமாளிக்க முடியல போலருக்கு" என்றார் தண்டபாணி.
"நீங்க வேற! இவங்க சோம்பேறிப் பசங்க. ஒழுங்கா வேலை செய்யறவங்களா இருந்தா, இன்னும் பத்து பேரைச் சமாளிக்க முடியும்" என்று அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு ஆள், அப்புவிடம் வந்து தயக்கத்துடன், "ஐயா சாப்பாட்டுக்குப் போயிட்டு வந்துடட்டுமா?" என்றான்.
"ஏண்டா, கடையில இவ்வளவு பேர் சாமான் வாங்கறதுக்காக நின்னுக்கிட்டிருக்காங்க, நீ பாட்டுக்கு எனக்கென்ன வந்ததுங்கற மாதிரி சாப்பாட்டுக்குப் போறேங்கற? கொஞ்சமாவது பொறுப்பு வேணாம்? ஜெயிலிலேயா இருக்க, மணி அடிச்சா சோறுங்கறதுக்கு? மணி ரெண்டுதானே ஆகுது? கூட்டம் கொஞ்சம் குறைஞ்சதும், ஒவ்வொத்தரா சாப்பாட்டுக்குப் போயிட்டு வாங்க" என்றார் அப்பு.
உடனே தண்டபாணியிடம் திரும்பி, "பாத்தீங்களா, எப்படிப் பொறுப்பு இல்லாம இருக்காங்க, பாருங்க! இவங்களுக்குச் சம்பளம் மட்டும் வேணும், ஆனா கடை வியாபாரத்தைப் பத்திக் கவலைப்பட மாட்டாங்க" என்று சொன்னவர், கடைப் பையனிடம் திரும்பி, "ஏண்டா நிக்கற? போய் வியாபாரத்தை கவனி. எல்லாரும் நிக்கறாங்க பாரு" என்றார்.
தண்டபாணி "வரேங்க" என்று விடைபெற்றார். அவர் கிளம்பிய சமயம், இரண்டு பேர் நன்கொடைப் புத்தகங்களுடன் அப்புவைப் பார்க்கச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது, தண்டபாணிக்கு அவரை அறியாமலேயே சிரிப்பு வந்தது.
துறவறவியல்
அதிகாரம் 25
அருளுடைமை
குறள் 249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
அருள் இல்லாதவன் செய்யும் அருளை ஆராய்ந்தால், அது தெளிந்த அறிவு இல்லாதவன் மெய்ப்பொருளைக் கண்டு பிடிக்க முயல்வது போல் இருக்கும்.
No comments:
Post a Comment