சுப்புவுக்கு அந்த மடத்துடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது அவனுக்குத் தெரியாது. சிறு வயதில் அவனை அங்கே யாரோ சேர்த்து விட்டுச் சென்றதாகச் சென்னார்கள்.
அந்த மடத்தின் தலைவர் அவனைத் தன் மகன் போல்தான் நடத்தி வந்தார்.
சாப்பாடு, தங்க இடம், மடத்தில் இருந்தவர்களின் அன்பு இவையெல்லாம் கிடைத்ததால், சுப்பு தனக்குப் பெற்றோர் இல்லை என்ற குறையையே உணரவில்லை.
சுப்புவுக்கு ஐந்து வயதானதும், அவனை அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தார்கள். மடத்தலைவரும், மடத்தில் பணி புரிந்த சிலரும் அவன் படிப்பில் அக்கறை காட்டி, பாடங்களைப் புரிந்து கொள்ளவும், வீட்டுப் பாடங்கள் செய்யவும் அவனுக்கு உதவினார்கள்.
சில வருடங்கள் கழித்து, மடத்தில் மாலையில் நடக்கும் ஆன்மீகம் குறித்த வகுப்புகளில் அமர்ந்து பாடம் கேட்கும்படி மடத்தலைவர் சுப்புவிடம் சொன்னார்.
அவர் சொன்னதற்காகத்தான் சுப்பு அந்த வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தான். ஆயினும், ஆன்மீகப் பாடங்களில் அவனுக்கு ஒரு ஈடுபாடு ஏற்படத் துவங்கியது. வகுப்புகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன், தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறும் அளவுக்கு அவன் ஆர்வம் வளர்ந்தது.
ஆறாம் வகுப்புக்கு மேல் பள்ளிப் பாடங்கள் அதிகம் இருந்ததால், ஆன்மீக வகுப்புகளில் அவனால் தினமும் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த வகுப்புகளில் கலந்து கொண்டு, தன் ஆன்மீக ஆர்வத்துக்குத் தீனி போட்டுக் கொண்டிருந்தான்.
"சுப்பு நம் மடத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு வருவான்" என்று சிலர் மடத்தலைவரிடம் சொன்னபோது, மடத்தலைவருக்குப் பெருமையாக இருந்தது.
சுப்பு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும், மடத்தலைவர் அவனைத் தனியே அழைத்தார்.
'உன் எதிர்காலத்தைப் பத்திப் பேசணும். என்ன செய்யப் போற?" என்றார் மடத்தலைவர்.
"நீங்க சொல்றபடி செய்யறேன் ஐயா!" என்றான் சுப்பு.
"நீ நல்லா படிக்கறே. பிளஸ் டூவில நிறைய மார்க் வாங்குவ. நீ விரும்பினா, எஞ்சினியரிங்கோ மெடிகலோ படிக்கலாம். நம் மடத்துக்கு வர சில பெரிய மனுஷங்க உன் படிப்புச் செலவைப் பாத்துப்பாங்க. படிப்பை முடிச்சுட்டு, நீ நல்ல வேலைக்குப் போய், உன் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்கலாம்."
சுப்பு மௌனமாக இருந்தான்.
"சொல்லு."
"வேண்டாம் ஐயா. நான் இந்த மடத்திலேயே இருந்து சேவை செய்ய விரும்பறேன்" என்றான் சுப்பு.
"நீ இப்படிச் சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன். எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா நீ படிக்கணும். பி ஏ, பி எஸ் சி, பி காம் ஏதாவது படிச்சுட்டு, அப்புறம் மடத்தில் நீ வேலை செய்ய ஆரம்பிக்கலாம். நீ விரும்பினா, போஸ்ட் கிராஜுவேஷனோ, பி எச் டியோ கூடப் பண்ணலாம். உன் படிப்பு மடத்துக்குப் பயனுள்ளதாத்தான் இருக்கும்."
"வேணாங்க. பி ஏ மட்டும் படிக்கிறேன். அதுக்கப்புறம் மேலே படிக்கணும்னு நீங்க விருப்பப்பட்டா படிக்கிறேன். ஆன்மீக விஷயங்களைத் தெரிஞ்சுக்கறதிலதான் எனக்கு ஆர்வம் இருக்கு" என்றான் சுப்பு.
"ரொம்ப நல்லது" என்றார் மடத்தலைவர்.
ஒரு நிமிடம் மௌனமாக அவனை உற்றுப் பார்த்து விட்டு, "உன் ஆர்வத்தைப் பாராட்டறேன். ஆனா, நீ இந்த மடத்தில சேவை செய்யணும்னா, ஒரு விஷயத்தில உன்னை மாத்திக்கணும்" என்றார் மடத்தலைவர்.
"சொல்லுங்க ஐயா!"
"நீ அசைவம் சாப்பிடறதை நிறுத்தணும்."
"ஐயா!" என்றான் சுப்பு, அதிர்ச்சியுடன்.
"எனக்குத் தெரியும், சுப்பு. மடத்தில சைவச் சாப்பாடுதான். அதுவும் உப்புச் சப்பு இல்லாமதான் இருக்கும். உன் பள்ளிக்கூட நண்பர்களோட சில சமயம் நீ ஓட்டலுக்குப் போய் அசைவம் சாப்பிடறது எனக்குத் தெரியும். உன் கைச்செலவுக்காக நான் கொடுக்கற பணத்தை இதுக்குச் செலவழிக்கறேன்னும் எனக்குத் தெரியும்."
"என்னை மன்னிச்சுடுங்க ஐயா. ஏதோ ஆசையில..."
"இதில மன்னிக்கறதுக்கு எதுவும் இல்ல. ஆன்மீகத்தில இருக்கறவங்களுக்கு அருள் ரொம்ப முக்கியம். அருள்னா கடவுளோட அருளை வேண்டறது மட்டும் இல்ல. நாம எல்லார்கிட்டயும் - மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், புழு பூச்சிகள், செடி கொடிகள் எல்லார்கிட்டயும் - கருணையோடு, அருளோடு இருக்கணும். இப்பவே நீ அப்படித்தான் இருக்கிறதா நீ நினைக்கலாம், நான் அதை இல்லேன்னு சொல்லல. ஆனா, அசைவம் சாப்பிடறது அருளோட இருக்கறதுக்கு முரண்பாடா இருக்கும். அஹிம்சை பேசறவன், கையில கத்தியோடு அலையக் கூடாது. அது மாதிரிதான் இதுவும்.
"பிளஸ் டூ ரிசல்ட் வர ஒரு மாசம் ஆகும். இப்ப, பள்ளிக்கூடமும் கிடையாது. நீ மடத்திலதான் இருக்கப் போற. இந்த ஒரு மாசத்துல, உன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டு, அசைவம் சாப்பிடாம இருந்து பாரு. அப்படி இருக்க முடியும்னா சொல்லு. அப்புறம், நீ பட்டப்படிப்பு படிச்சுட்டு, உன் விருப்பப்படி மடத்தில் சேரலாம்" என்றார் மடத்தலைவர்.
துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 253படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்..
கொலைக்கருவியைக் கையில் வைத்திருப்பவர் நெஞ்சில் அருள் இல்லாதது போல், பிற உயிர்களை உண்பவரின் மனம் அருளை நோக்காது.
No comments:
Post a Comment