
மாலையைப் பெற்றுக் கொண்டு உடனேயே அதைக் கழற்றித் தன் உதவியாளன் மணியிடம் கொடுத்த அரசமாணிக்கத்தின் முகத்தில் ஒரு புன்னகை கூட இல்லை.
செந்திலும், அவனுடன் வந்த குணாவும் பேசாமல் நின்றார்கள்.
"மாலையைப் போட்டுட்டீங்க இல்ல, கிளம்புங்க!" என்றான் மணி.
செந்தில் பேசாமால் நின்றான்.
"உன் குப்பத்தில் ஒவ்வொரு ஓட்டுக்கும் கணக்குப் பண்ணிப் பணம் கொடுத்தேன் இல்ல? பணத்தை எல்லாருக்கும் கொடுத்தியா, இல்ல, நீயே அழுத்திட்டியா?" என்றான் அரசமாணிக்கம்.
"என்ன தலைவரே, இப்படிச் சொல்றீங்க? வரலாறு காணாத உங்க வெற்றியில எனக்கும் ஒரு சின்ன பங்கு இருக்குன்னு நான் பெருமையா நினைச்சுக்கிட்டிருக்கேன்!" என்றான் செந்தில்.
"தலைவர் ஜெயிச்சுட்டாரு, சரி. ஆனா, உன் ஏரியால இருக்கற ரெண்டு பூத்தில ஒண்ணுல அவருக்கு ஓட்டு ரொம்ப கம்மியா விழுந்திருக்கே, ஏன்? பெரிய வாக்கு வித்தியாசத்தில் தலைவர் ஜெயிச்சிருந்தாலும், எங்கே ஓட்டு விழுந்திருக்கு, எங்கே விழல, யாரெல்லாம் தனக்கு வேலை செஞ்சிருக்காங்க, யாரு வேலை செய்யலேன்னு தலைவர் பாப்பாரு இல்ல? நீ எல்லாருக்கும் பணம் கொடுத்திருந்தா, அவங்க ஏன் தலைவருக்கு ஓட்டுப் போடல?" என்றான் மணி.
செந்தில் மணியை அலட்சியம் செய்து, அரசமாணிக்கத்தைப் பார்த்து, "என்ன தலைவரே இது, உங்களுக்கு என்னைப் பத்தித் தெரியாதா? என் ஏரியால இருக்கிற ரெண்டு பூத்தில் ஒண்ணுல உங்களுக்குத்தான் நிறைய ஓட்டு விழுந்திருக்கு. இன்னொரு பூத்தில் கொஞ்சம் குறைஞ்சுடுச்சு. இதுக்குக் காரணம், கடைசி நிமிஷத்துல எதிர்க்கட்சிக்காரங்களும் பணம் கொடுத்துட்டாங்க. ரெண்டு பேர் கிட்டயும் பணம் வாங்கின சில பேர் ஓட்டை அந்தப் பக்கம் மாத்திப் போட்டிருக்காங்க" என்றான்.
அரசமாணிக்கம் கோபமாக செந்திலிடம் திரும்பினான். "இங்க பாரு, செந்தில். இந்த சால்ஜாப்பெல்லாம் எனக்கு வேண்டாம். காசு கொடுத்தா, வேலை நடக்கணும். நான் ஜெயிச்சுட்டேங்கறதால, உன்னை சும்மா விடறேன். இல்லேன்னா, நீ செய்யற கட்டப் பஞ்சாயத்து வேலைக்கு உன்னை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளக் கூட என்னால முடியும். ஒரு வருஷத்துக்கு, ஜாமீன்ல கூட வர முடியாது. வெளியில வந்தப்பறம், ஒரு தொழிலும் செய்ய முடியாது. ஜாக்கிரதை! போ" என்றான், கடுமையாக.
"தலைவரே! சத்தியமா சொல்றேன்..." என்று செந்தில் ஆரம்பித்தான்.
அரசமாணிக்கம் மணியிடம் திரும்பி, "அவனை வெளியில போகச் சொல்லு. இப்பவே போனா, முழுசாப் போகலாம். இன்னும் பேசி என் கோபத்தைக் கிளப்பினா, பாதி உடம்போடதான் வீட்டுக்குத் திரும்பணும்னு சொல்லிடு!" என்றான், கோபமாக.
செந்தில் மௌனமாக குணாவுடன் வெளியில் வந்தான். வெளியில் வந்ததும், குணா, "என்னண்ணே, இப்படி வியர்த்துப் போச்சு உங்களுக்கு?" என்றான்.
"ஒரு நிமிஷம் குலை நடுங்கிப் போச்சுடா! எத்தனையோ பேரைக் குத்துயிரும் குலையுயிருமா ஆக்கியிருக்காங்க இவங்க. எனக்கே இந்த நிலைமை வரும்னு நினைக்கல. நல்லவேளை, இதோட விட்டாங்களே!"
"என்னண்ணே இது? உண்மையா உழைச்ச உங்களுக்கே இந்த கதியா? நாம ரெண்டு பேரும் சேந்துதானே ரிஸ்க் எடுத்து, ராத்திரி நேரத்தில திருடன் மாதிரி வீடு வீடாப் போய்ப் பணம் கொடுத்துட்டு வந்தோம்? பணம் வாங்கினவங்க ஓட்டுப் போடலேன்னா நீங்க என்னங்க செய்ய முடியும்?"
செந்தில் பதில் சொல்லவில்லை.
"ஏன்யா கணபதி, வாடகைக்குக் குடி இருக்கறவன் நீ. வீட்டுச் சொந்தக்காரன் காலி பண்ணுன்னா, பண்ண மாட்டியா?" என்றான் குணா.
"காலி பண்ண மாட்டேன்னு சொல்லலைய்யா. வேற வீடு பாத்துக்கிட்டிருக்கேன். இன்னும் கிடைக்கல. வேற வீடு கிடைச்சதும், காலி பண்ணிடறேன்."
"நீ மாசக்கணக்கா வீடு பாத்துக்கிட்டிருப்ப. அதுவரையிலும், வீட்டுச் சொந்தக்காரன் காத்துக்கிட்டிருக்கணுமா? இங்க பாரு. வர ஞாயித்துக்கிழமைக்குள்ள நீ வீட்டைக் காலி பண்ற. இல்லேன்னா..."
"வேற வீடு கிடைக்காம எப்படிங்க காலி செய்ய முடியும்?"
"நான் இன்னும் சொல்லி முடிக்கலடா. கேளு. அப்படி நீ காலி பண்ணலேன்னா, திங்கக்கிழமை அன்னிக்கு, உன் வீட்டில எல்லாரும் ஆஸ்பத்திரிக்குத்தான் குடி போக வேண்டி இருக்கும். அப்ப, உன் வீடு தானே காலியாயிடும்!"
"எதுக்குங்க ஆஸ்பத்திரிக்குக் குடி போகணும்?" என்றான் கணபதி, புரியாமல்.
"பின்ன, கைகால் உடைஞ்சா, அதைச் சரி பண்ணிக்க ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டாமா?"
குணா சொன்னதன் பொருள் அப்போதுதான் புரிந்தவனாக, "வேண்டாம்யா. அப்படில்லாம் செஞ்சுடாதீங்க. இன்னும் ஒரு மாசம் டைம் குடுங்க. அதுக்குள்ள காலி பண்ணிடறேன்" என்றான் கணபதி.
"அதெல்லாம் முடியாது" என்றான் குணா.
அருகிலிருந்த செந்தில், குணாவை இடைமறித்து, கணபதியிடம், "சரி. ஒரு மாசம் இல்ல, ரெண்டு மாசம் எடுத்துக்க. ஆனா, ரெண்டு மாசம் முடியறதுக்குள்ள, வீட்டைக் காலி செஞ்சுடணும்" என்றான்.
"நிச்சயமா செஞ்சுடறேங்க. ரொம்ப நன்றிங்க" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் கணபதி.
"என்னண்ணே இது, இவனுக்கெல்லாம் போய் இரக்கம் காட்டிக்கிட்டு? இவன் ஆறு மாசமா வீட்டுக்காரனுக்குத் தண்ணி காட்டிக்கிட்டிருக்கான். அதனாலதானே, வீட்டுக்காரன் நம்மகிட்ட உதவி கேட்டு வந்திருக்கான்?" என்றான் குணா.
"இருக்கலாம். ஆனா, காலையில அரசமாணிக்கம் என்னைக் குத்துயிரும் குலையுயிருமா ஆக்கிடுவேன்னு மிரட்டச்சே, எனக்குள்ளே குப்னு ஒரு திகில் பரவிச்சு. அவர் சில பேரை அது மாதிரி ஆக்கினதை நான் பாத்திருக்கேன். நீ கணபதிகிட்ட அவன் வீட்டில எல்லாரையும் கையைக் காலை உடைச்சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிடுவேன்னு சொன்னப்ப, அவன் கண்ணில ஒரு பயத்தைப் பாத்தேன். அதைப் பாத்ததும், காலையில எனக்கு ஏற்பட்ட பயம் ஞாபகம் வந்துச்சு. அதான்..." என்றான் செந்தில்.
இதைச் சொன்னபோதே, செந்திலின் குரலில் பயம் வெளிப்பட்டதாக குணாவுக்குத் தோன்றியது.
துறவறவியல்
அதிகாரம் 25
அருளுடைமை
குறள் 250வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
அருள் இல்லாதவன் தன்னை விட வலுவில் குறைந்தவரைத் துன்புறுத்த நினைக்கும்போது, தன்னை விட வலியவர் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment