ஒரு ஓட்டலில் நடந்த ஒரு திருமண வரவேற்பில், சம்பந்தம் மேடைக்குச் சென்று மணமக்களை வாழ்த்தி விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர் முகம் பரிச்சயமானது போல் இருந்தது.
இவரை எங்கே பார்த்திருக்கிறோம் என்று சம்பந்தம் யோசிப்பதற்குள், அந்த நபர் சட்டென்று எழுந்து, "சார் நீங்க சம்பந்தம்தானே?" என்றார்.
அதற்குள், சம்பந்தமும் அவரை நினைவுபடுத்திக் கொண்டு விட்டார். "சுந்தர்தானே நீங்க?" என்றார்.
இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.
சுந்தர் சம்பந்தத்தின் வீட்டில் குடி இருந்தவர்.
வீட்டுச் சொந்தக்காரருக்கும் குடியிருப்பவருக்கும் இடையே பொதுவாக இருக்கும் சந்தேகம், பயம், தற்காப்பு உணர்வு இவற்றைத் தாண்டி, இருவரும் நண்பர்களாகப் பழகி வந்தார்கள்.
"இங்கே சத்தமா இருக்கும், வெளியே போய்ப் பேசலாம்" என்றார் சுந்தர்.
இருவரும் ஓட்டல் வரவேற்பறையில் சென்று அமர்ந்தனர்.
"இருபது வருஷத்துக்கு மேலே இருக்குமே? எங்கே இருக்கீங்க, எப்படி இருக்கீங்க?" என்றார் சம்பந்தம்.
"நல்லா இருக்கேன்" என்ற சுந்தர், "நீங்க எப்படி இருக்கீங்க? அதே வீட்டிலதானே இருக்கீங்க? நான் இருந்த போர்ஷன்ல யார் இருக்காங்க?" என்றார், தொடர்ந்து.
"நீங்க இருந்த போர்ஷன்லாம் இப்ப இல்ல. வீட்டை இடிச்சு ஃபிளாட் கட்டியாச்சு. எனக்கு ரெண்டு ஃபிளாட்டும், கொஞ்சம் பணமும் கொடுத்தாங்க. ஒரு ஃபிளாட்டில நான் இருந்துக்கிட்டு, இன்னொரு ஃபிளாட்டை வாடகைக்கு விட்டிருக்கேன். குடியிருக்கறவர் உங்களை மாதிரி நல்ல மனுஷர்தான்!" என்றார் சம்பந்தம்.
"நீங்க தங்கமான மனுஷராச்சே! உங்களுக்கு எல்லாரும் நல்லவங்களாத்தான் தெரிவாங்க!" என்றார் சுந்தர்.
"அது சரி. நீங்க எங்க இருக்கீங்க இப்ப?"
"வேலை விஷயமா ஊர் ஊராப் போயிட்டு, மறுபடி சென்னைக்கு வந்திருக்கேன். இப்ப புரசைவாக்கத்தில் இருக்கேன்."
"உங்க வேலை எப்படி இருக்கு? உங்க கம்பெனி நல்லாப் போய்க்கிட்டிருக்கு போலருக்கே? அதே கம்பெனியிலதானே இருக்கீங்க?"
"ஆமாம். இன்னும் ரெண்டு வருஷத்திலே ரிடையர் ஆகணும்."
"அப்படியா? எங்கே செட்டில் ஆகப் போறீங்க? சொந்த வீடு எந்த ஊர்ல இருக்கு?"
"சொந்த வீடெல்லாம் எதுவும் இல்லை. நிறைய சம்பாதிச்சேன்னுதான் பேரு. ஆனா வீடு வாங்கல. சேமிப்பும் பெரிசா இல்ல. பையனைப் படிக்க வச்சு கல்யாணம் செஞ்சு வச்சதைத் தவிர உருப்படியா எதுவும் செய்யல. சம்பாதிச்ச பணமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல! ரிடையர் ஆனப்புறம் என்ன செய்யப் போறேன்னு தெரியல."
"கவலைப்படாதீங்க. எல்லாம் நல்லபடி நடக்கும்" என்றார் சம்பந்தம்.
"சரி, வாங்க. சாப்பிடப் போகலாமா?" என்றார் சுந்தர்.
வரிசையில் நின்று தட்டில் உணவுகளை வாங்கிக் கொண்டு, இருவரும் ஒரு மேஜையில் வந்து அமர்ந்தனர்.
"தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க நான்-வெஜ் சாப்பிடுவீங்களா என்ன?" என்றார் சுந்தர், சம்பந்தத்தின் தட்டைப் பார்த்து விட்டு.
"சாப்பிடுவேன். ஏன் கேக்கறீங்க?" என்றார் சம்பந்தம்.
"இல்லை. உங்க வீட்டில சுத்த சைவம்னு எனக்கு நினைவிருக்கு. என் மனைவி சொல்லியிருக்கா, உங்க வீட்டில முட்டை கூட சேத்துக்க மாட்டீங்கன்னு. அதான் கேட்டேன். சாரி. தப்பா நினைச்சுக்காதீங்க" என்றார் சுந்தர்.
"நீங்க கேட்டதில எதுவும் தப்பில்ல. எங்க குடும்பம் சுத்த சைவம்தான். ஆனா, எனக்கு மட்டும் நண்பர்களோட சேர்ந்து இந்தப் பழக்கம் வந்துடுச்சு!" என்றார் சம்பந்தம்.
"அதனால என்ன?" என்றார் சுந்தர்.
"இல்ல, சைவக் குடும்பத்தில பிறந்திருந்தாலும், என் நாக்கு ருசிக்காக அசைவத்தைப் பழக்கிக்கிட்டு, அதை விட முடியாம இருக்கறது எனக்கு வருத்தம்தான்" என்றார் சம்பந்தம், சற்றே சங்கடத்துடன்.
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 252பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்களுக்குப் பொருள் படைத்தவர் என்ற சிறப்பு இல்லை. புலால் உண்பவர்களுக்கு அருள் உடையவர் என்ற சிறப்பு இல்லை.
No comments:
Post a Comment