
"சுவாமிஜி, உலகத்தில பாவம், புண்ணியம்னெல்லாம் இருக்கா என்ன?"
கேள்வி கேட்டவர் இருந்த திசையைப் பார்த்த அபேதானந்தர், "உங்க பேர் என்ன?" என்றார்.
"சம்பந்தம்."
"நீங்க என் பேச்சைக் கேட்டீங்களா?"
"கேட்டேனே!"
"பாவம், புண்ணியம் என்கிற வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லையே!" என்றார் அபேதானந்தர்.
கூட்டத்தில் இலேசான சிரிப்பலை எழுந்தது.
கேள்வி கேட்டவர் சற்று சங்கடப்பட்டவராக, "ஆனா, உயிர்களைக் கொல்லக் கூடாதுன்னு சொன்னீங்களே!" என்றார்.
"அப்படிச் சொல்லலியே நான்! உயிர்கள்கிட்ட அன்பா இருக்கணும். அது அருள். உயிர்களைக் கொல்றது அருள் இல்லாத செயல் அப்படின்னுதான் சொன்னேன்."
"அப்ப, அது பாவம்னுதானே அர்த்தம்?"
"பாவம், புண்ணியத்தைப் பத்தி நான் பேசல. அது வேற தலைப்பு. அதுக்குள்ளே நான் போகல. நீங்க அருள் உள்ளவரா இருந்தா என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாதுன்னு சொன்னேன். அருள் உள்ளவரா இருக்கணுமாங்கறதை நீங்கதான் முடிவு செய்யணும்."
"எனக்குப் புரியல, சுவாமிஜி. பொதுவா இதையெல்லாம் பாவம், புண்ணியம்னுதானே சொல்வாங்க?"
"பாவம், புண்ணியங்கறது விளைவுகள். நான் சொன்னது உங்க செயல்கள் உங்க எண்ணங்களின்படி இருக்கணும்னு. எல்லாரும் தங்களை அன்பு உள்ளவங்களாத்தான் நினைக்க விரும்புவாங்க. அன்பு உள்ளவர்கள் இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாதுன்னு சொன்னேன்."
"அதைப் பாவம், புண்ணியம்னு சொல்லி இருக்கலாமே!"
"சரி. உங்களை ஒண்ணு கேக்கறேன். நீங்க நேர்மையானவரா?"
சம்பந்தம் சற்றுத் தயங்கி விட்டு, "ஆமாம்" என்றார்.
"இந்தக் கேள்விக்கு கொஞ்சம் யோசனை செஞ்சுட்டு பதில் சொன்னதே உங்க நேர்மையைக் காட்டுது!" என்ற அபேதானந்தர், தொடர்ந்து, "நீங்க நேர்மையானவர்னா அடுத்தவங்க பொருளை அபகரிக்க மாட்டீங்க இல்ல?"
"மாட்டேன்."
"நேர்மையானவர்னா இதைச் செய்யலாம், இதைச் செய்யக் கூடாதுன்னு உங்களுக்கு ஒரு வரையறை இருக்கற மாதிரி, அருள் உள்ளவர்னா இதைச் செய்யலாம் செய்யக் கூடாதுன்னும் சில வரையறைகள் இருக்கு. அதுதான் நான் சொன்னது. புரியுதா?"
"புரியுது. ஆனா, ஏன் இதை நீங்க பாவ புண்ணியத்தோட தொடர்பு படுத்தலேன்னுதான் எனக்குப் புரியல."
"நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, பாவ புண்ணியங்கள் என்பவை விளைவுகள். மறுபடி நான் சொன்ன உதாரணத்துக்கு வரணும்னா, அடுத்தவங்க பொருளை ஒருவர் அபகரிச்சா சட்டம் அவரைத் தண்டிக்கலாம். அது போல ஒருவர் நேர்மையா நடந்துக்கிட்டா அவருக்குப் பாராட்டோ, பரிசா கிடைக்கலாம். ஆனா நாம நேர்மையா நடந்துக்கறது பரிசுக்கு ஆசைப்பட்டோ, தண்டனைக்கு பயந்தோ இல்லை. நேர்மையா நடக்கறது சரியான வழின்னு நாம நினைக்கறதாலதான், நாம நேர்மையா இருக்கோம். அது மாதிரி அருளோட இருக்கறதுதான் நம் இயல்புன்னு நினைச்சா, நாம உயிர்கள் கிட்ட அன்போட நடந்துக்கலாம். பாவ புண்ணியத்துக்காக பயந்து நடந்துக்கறது செயற்கையானது இல்லையா?"
"இப்ப புரியுது, சுவாமிஜி. பொதுவா எல்லாரும் இதைச் செஞ்சா புண்ணியம், இதைச் செஞ்சா பாவம்னுதான் சொல்லுவாங்க. நீங்க சொல்றது தெளிவா இருக்கு. எனக்கு இன்னொரு சந்தேகம். கேக்கலாமா?"
"கேளுங்க."
"அசைவ உணவு சாப்பிடறது அருளற்ற செயலா?"
"அதை அறம் இல்லாததுன்னுதான் சொல்லணும்."
"நாம உயிர்க்கொலை செய்யறதில்லையே. கடையில நாம புலால் வாங்கி சமைக்கிறோம், அல்லது ஓட்டல்ல புலால் உணவு சாப்பிடறோம். இதில அறத்துக்குப் புறம்பா என்ன இருக்கு?"
"உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னால, நீங்க வெளிப்படையா கேள்விகள் கேட்டு எல்லாருக்குமே பயன் அளிக்கிற வகையில நடந்துக்கிட்டதுக்காக உங்களைப் பாராட்டறேன். இங்கே வாங்க" என்று அவரை அழைத்தார் அபேதானந்தர்.
சம்பந்தம் அபேதானந்தர் அருகில் வந்து அவரை வங்கினார்.
அபேதானந்தர் அவர் தலையில் கையை வைத்து வாழ்த்தி விட்டு. "இந்தாங்க பிரசாதம்" என்று அவரிடம் சில மாம்பழத் துண்டுகளைக் கொடுத்தார்.
கொடுக்கும்போது அபேதானந்தரின் கை தவறிப் பழத் துண்டுகள் கீழே மண் தரையில் விழுந்தன.
சம்பந்தம் அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கைகளில் வைத்துக் கொண்டார்.
"சாப்பிடுங்க" என்றார் அபேதானந்தர்.
"மண்ணாயிடுச்சே!" என்றார் சம்பந்தம், தயங்கியபடி.
"அதனால் என்ன? நான்தானே பழத் துண்டுகளைத் தரையில் போட்டு மண்ணாக்கினேன்? நீங்க போடலியே? அதனால நீங்க சாப்பிடலாமே!" என்றார் அபேதானந்தர், சிரித்தபடியே.
தன் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதை சம்பந்தம் உணர்ந்தார்.
துறவறவியல்
அதிகாரம் 26
புலால் மறுத்தல்
குறள் 254அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
அருள் எதுவென்றால், எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தல். அருள் இல்லாதது எதுவென்றால், உயிர்களைக் கொல்லுதல். அறம் இல்லாதது எதுவென்றால், புலால் உண்ணுதல்.
Excellent Story Renga! Keep up the good work.
ReplyDeleteThank you. May I know your name? I guess you are my RECT friend.
Delete