About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Sunday, October 14, 2018

210. அனுபவம் பலவிதம்

அந்தப் பொழுதுபோக்கு சங்கத் கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சியாக சில உறுப்பினர்கள் தாங்கள் சந்தித்த பிரச்னைகளையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர்.

சொந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் தங்கள் போட்டியாளர்களை ஒழிக்கத் தாங்கள் செய்த சதிகள், குறுக்கு வழிகள், சட்ட விரோதச் செயல்கள் இவற்றையெல்லாம் கூடப் பகிர்ந்து கொண்டனர். 

மற்றவர்கள் தங்கள் அலுவலகங்கள், குடியிருக்கும் பகுதி இங்கெல்லாம் தங்களுக்கு எழுந்த பிரச்னைகளைத் தாங்கள் சமாளித்த விதம் பற்றிப் பேசினர்.

அது நெருக்கமான உறுப்பினர்களைக் கொண்ட சங்கம் என்பதால், தாங்கள் சொல்வது வெளியே செல்லாது என்ற நம்பிக்கையில் அனைவரும் மிகவும் வெளிப்படையாகவும், உற்சாகமாகவும் பேசினர். 

அங்கே ஒரு போலீஸ்காரர் இருந்திருந்தால், சிலரின் பேச்சை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொண்டு அவர்கள் மேல் வழக்குப் போடும் அளவுக்குக் கடுமையான குற்றங்களைப் பற்றிக் கூட பயமில்லாமல் பேசினர்.

ராஜவேலுவின் முறை வந்தது. ராஜவேலு ஒரு பெரிய வியாபாரி. சிறிய ஜவுளிக்கடை வைத்துத் தன் வியாபார வாழ்க்கையைத் தொடங்கியவர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பல்வகைப் பொருட்களையும் விற்கும் பெரிய சூப்பர் மார்க்கெட்டை உருவாக்கி நடத்திக் கொண்டிருந்தார்.

"உங்க பேச்சையெல்லாம் கேக்க பிரமிப்பா இருந்தது. எல்லாரும் எத்தனையோ சவால்களை அருமையா சமாளிச்சு முன்னேறி இருக்கீங்க. ஆனா நான் ஒரு எளிமையான மனுஷன். எனக்கு பிரச்னைன்னு பெரிசா எதுவும் வந்ததில்லை.

"சின்னச் சின்ன பிரச்னைகள் நிறைய வந்திருக்கு. ஆனா அவை வாழ்க்கையில இயல்பா நடக்கற விஷயங்கள்தான். வெற்றிகள், தோல்விகள் ரெண்டையும் நிறைய சந்திச்சிருக்கேன். எது வருதோ அதை ஏத்துக்கிட்டு அடுத்தாப்பல என்ன செய்யறதுன்னு யோசிச்சு செயல்படறதுதான் என் வழக்கம். 

"தொழில்ல போட்டி இருக்கும். ஆனா நான் அதைப் பெரிசா நினைக்கல. நான் முயற்சி செய்யற மாதிரி மத்தவங்களும் முயற்சி செய்யறாங்கன்னு எடுத்துப்பேன். சில சமயம் நான் ஜெயிப்பேன். சில சமயம் வேற யாராவது ஜெயிப்பாங்க. அதனால எனக்கு முன்னால பேசினவங்கள்லாம் சொன்ன மாதிரி பெரிசா சொல்லிக்க எங்கிட்ட எதுவும் இல்லை!" என்றார் அவர்.

"நீங்க ஒண்ணும் செய்யாட்டாலும் உங்க போட்டியாளர்கள் உங்களைக் கவிழ்க்க நிறைய சதி பண்ணியிருப்பாங்களே அதையெல்லாம் எப்படி முறியடிச்சீங்க?" என்று கேட்டார் ஒரு உறுப்பினர்.

"அப்படி யாரும் சதி செஞ்ச மாதிரி எனக்குத் தெரியல. வியாபாரத்தைப் பெருக்க நான் சிலதைச் செய்யற மாதிரி மத்தவங்க சிலது செய்யறாங்க. அப்படித்தான் நான் அதைப் பாக்கறேன்" என்றார் ராஜவேலு.

கூட்டம் முடிந்ததும், அவர் நண்பர் சிகாமணியின் கார் பழுதடைந்திருந்ததால் அவரை வீட்டில் விட்டு விடுவதாகச் சொல்லித் தன் காரில் அழைத்துச் சென்றார் ராஜவேலு.

"என்ன ராஜவேலு, ஏதாவது சுவாரசியமா சொல்லுவீங்கன்னு எதிர்பாத்தா, சப்புன்னு ஆயிடுச்சே!" என்றார் சிகாமணி, காரில் போகும்போது.

"சிகாமணி! நீங்க வியாபாரி இல்ல, வக்கீல். அதனால உங்ககிட்ட இதைச் சொல்றேன். இன்னிக்குப் பேசினவங்கள்ள நிறைய பேரு தாங்க ஜெயிக்கணும்கறதுக்காக அடுத்தவங்களுக்குக் கெடுதல் செஞ்சதா ஒத்துக்கிட்டாங்க. மத்தவங்க இவங்களோட போட்டிக்கு வந்ததால இவங்க அவங்களுக்கு எதிரா சில வேலைகளைச் செஞ்சதாச் சொன்னாலும், போட்டியாளர்களை விரோதிகளா நினைச்சு அவங்களை அழிக்கப் பல வேலைகளை செஞ்சிருக்காங்க. அதனால இவர்களுக்கும் பிரச்னைகள் வந்திருக்கு.

"என்னைப் பொருத்தவரையிலும் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. நான் வியாபாரம் பண்ற மாதிரி இன்னொத்தரும் பண்றாரு. அவரை ஏன் நான் என் எதிரியா நினைக்கணும்? அவரு என்னை முந்திப் போனாலும் நான் என்ன முயற்சி செய்யலாம்னு பாப்பேனே தவிர, அவங்களைக் கவுக்கறது எப்படின்னு பாக்க மாட்டேன். என்னை வியாபாரத்துக்கு லாயக்கு இல்லாதவன்னு கூட சில பேர் சொல்லி இருக்காங்க.

"நான் என்ன நினைக்கிறேன்னா, நான் யாருக்கும் கெடுதல் செய்யாததால, எனக்கும் கெடுதல் எதுவும் நடக்கலை. இன்னிக்கு மத்தவங்க பேசினதைக் கேட்டப்ப எனக்கு இது உறுதியாயிடுச்சு. ஏன்னா, அவங்க மத்தவங்களுக்குக் கெடுதல் செஞ்சதை ஒப்புக்கறாங்க. ஆனா, அதனால அவங்களுக்கு இன்னும் அதிகக் கெடுதல் வந்ததே தவிர அவங்க பிரச்னைகள் தீரல்ல. இது என் பார்வை.  நீங்க என்ன நினைக்கறீங்க?" என்றார் ராஜவேலு

"நீங்க வக்கீல் இல்ல. ஆனா உங்க பேச்சைக் கேக்கறப்ப, நீங்க வக்கீல் தொழிலுக்கு வந்திருந்தா என்னைத் தொழில்லேந்து விரட்டி இருப்பீங்கன்னு தோணுது!" என்றார் சிகாமணி சிரித்தபடி.

   அறத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்..

பொருள்:  
ஒருவன் தவறான வழியில் சென்று பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருந்தால் அவனுக்குக் கேடு வராது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்














No comments:

Post a Comment