About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, October 13, 2018

209. இனிப்பும் கசப்பும்

"உனக்கு இனிப்பு பிடிக்குமே அம்மா, அப்புறம் ஏன் வேண்டாம்னுட்டே?" என்று கேட்டாள் சுமதி.

"எனக்கு இனிப்பு பிடிக்கும்தான். ஆனா, அதைவிட எனக்கு என்னை அதிகம் பிடிக்குமே, அதான் சாப்பிடல!" என்றாள் சாரதா.

"அப்படின்னா?"

"உன்னை மாதிரி சின்னப் பொண்ணா இருந்தப்ப நான் நிறைய இனிப்பு சாப்பிடுவேன். இப்ப எனக்கு வயசாயிடுச்சு. அதிகமா இனிப்பு சாப்பிட்டா என் உடம்புக்கு ஒத்துக்காது. அதனாலதான் இனிப்பு சாப்பிடறதைக் குறைச்சுக்கறேன். இனிப்பு சாப்பிட்டா நல்லா இருக்கும்தான். ஆனா என் உடம்பு நல்லா இருக்கறது எனக்கு முக்கியம் இல்லையா, அதான் அப்படிச் சொன்னேன். புரிஞ்சுதா?"

"புரியற மாதிரி இருக்கு!" என்றாள் சுமதி.

தொலைக்காட்சியில் சாரதா சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது சுமதி வந்தாள்.

தொலைக்காட்சியை சில வினாடிகள் பார்த்து விட்டு, "அந்த ஆன்ட்டி ஏம்மா அழறாங்க?" என்றாள்.

"அது பெரிய கதைடி. உனக்குப் புரியாது. பெரியவங்களுக்குத்தான் புரியும். நீ போய்ப் படி!" என்றாள் சாரதா.

"இல்லம்மா. இதை மட்டும் சொல்லேன்."

"அந்தப் பொண்ணு மத்தவங்களுக்கு நிறையக் கெடுதல் பண்ணினா. இப்ப எல்லாரும் அவளை விட்டுப் போயிட்டாங்க. அவ குழந்தை கூட 'நீ கெட்ட அம்மா. நான் உன்கிட்ட இருக்க மாட்டேன்'னு சொல்லிட்டுப் போயிடுச்சு. அதான் அவ அழறா"

"அந்த ஆன்ட்டிக்குத் தன்னையே பிடிக்காதா?" என்றாள் சுமதி.

"என்னடி சொல்ற?" என்றாள் சாரதா, மகள் சொல்வது புரியாமல்.

"அன்னிக்கு நீ சொன்ன இல்ல. உனக்கு உன்னைப் பிடிக்கும், அதனாலதான்  இனிப்பு சாப்பிட்டா உடம்புக்குக் கெடுதல் வரும்னுட்டு சாப்பிடாம இருக்கேன்னு?"

"ஆமாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"

"அந்த ஆன்ட்டிக்கு தன்னைப் பிடிச்சிருந்தா தனக்குக் கஷ்டம் வரக் கூடாதுன்னு நினைச்சிருப்பாங்க இல்ல? அதனால மத்தவங்களுக்குக் கெடுதல் பண்ணாம இருந்திருப்பாங்களே! அப்புறம் அவங்க இப்படி கஷ்டப்பட வேண்டி இருந்திருக்காது இல்ல?" என்றாள் சுமதி.

தான் சாதாரணமாகச் சொன்ன ஒரு விஷயத்தை வேறொரு சம்பவத்துடன் தொடர்புபடுத்தித் தன் பெண் எத்தனை அருமையாகச் சிந்தித்திருக்கிறாள் என்று பெருமையாக இருந்தது சாரதாவுக்கு.

"இங்க வாடி!" என்று மகளை அருகில் அழைத்து அவளைத் தழுவிக் கொண்டாள் சாரதா.

றத்துப்பால்     
இல்லறவியல் 
     அதிகாரம் 21       
தீவினையச்சம் 
குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்.

பொருள்:  
ஒருவன் தன்னை நேசிப்பவனாக இருந்தால், சிறிதளவு கூட மற்றவர்களுக்குத் தீமை செய்யக் கூடாது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

2 comments:

  1. மிகவும் உண்மை. ஒருவன் தன்னை நேசித்தால் சிறிதளவும் பிறர்க்கு தீங்கு செய்யக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டதற்கு நன்றி நண்பரே.

      Delete