"வரச் சொன்னீங்களாமே?" என்றான் கந்தன்.
"உக்காரு. இதோ வந்துட்டேன்" என்று உள்ளே போனார் ராஜபார்ட் முருகப்பா.
முருகப்பாவின் பெயரோடு ராஜபார்ட் என்ற பட்டம் எப்போது ஒட்டிக் கொண்டது என்பது கந்தனுக்குத் தெரியாது. பத்து வயதுப் பையனாக அவன் அவருடைய நாடகக் குழுவில் சேர்ந்ததிலிருந்து அவருக்கு அந்தப் பெயர் இருந்து வந்திருக்கிறது.
ஒவ்வொரு நாடகக் குழுவிலும் கதாநாயக வேஷம் போடுபவரை ராஜபார்ட் என்றுதான் சொல்வார்கள். ஆனால், அந்த வட்டாரத்தில் ராஜபார்ட் என்றாலே அது முருகப்பாவைத்தான் குறிக்கும்.
ஒரு காலத்தில், ராஜபார்ட் முருகப்பாவை எங்கெங்கிருந்தோ வந்து நாடகம் போட அழைப்பார்கள். ஒரு ஊருக்குப் போய் விட்டுத் திரும்புவதற்குள், இன்னொரு அழைப்பு காத்திருக்கும்.
பத்து நடிகர்கள் அவர் குழுவில் நிரந்தரமாக இருந்தார்கள். அவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் முருகப்பா. சம்பளத்தைத் தவிர இன்னும் பல வசதிகளும், சலுகைகளும் இருந்ததால், அவர் குழுவை விட்டு யாரும் போக விரும்பியதில்லை.
ஆனால், கடந்த பத்து வருடங்களாக நிலைமை மாறி விட்டது. நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பத்து பேருக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல், முருகப்பாவே சிலரை வேறு தொழில் பார்த்துக் கொள்ளச் சொல்லி அனுப்பி விட்டார். இன்னும் சிலர் தாங்களாகவே போய் விட்டனர்.
எப்போதாவது நாடக வாய்ப்புகள் வந்தால், பக்கத்து ஊர்களுக்கெல்லாம் போய்த் தேடி அலைந்து, நடிப்புத் தெரிந்த சிலரை அழைத்து வந்து, நாடகம் நடத்தி வந்தார்.
கந்தன் மட்டும் அவரை விட்டுப் போகவில்லை. ஒருமுறை முருகப்பாவிடம் சென்று, "ஐயா! நான் வேற எங்கேயாவது போய் ஏதாவது செஞ்சு பொழைச்சுக்கறேன்யா. நீங்க ஏன் எனக்குக் கஷ்டப்பட்டு சம்பளம் கொடுக்கறீங்க?" என்றான்.
"என்னால உனக்குச் சம்பளம் கொடுக்க முடியலேங்கற நிலைமை வந்தா, அப்ப சொல்றேன். அதுவரையிலும் இங்கியே இரு. நாடகம் இருக்கற சமயத்தில நீ என்னோட இருந்தா போதும். மீதி நாட்கள்ள, நீ என்ன வேலை வேணா செஞ்சுக்க. நான் எதுவும் கேக்க மாட்டேன்" என்று சொல்லி விட்டார் முருகப்பா.
அதற்குப் பிறகு, ஏதாவது வேலை இருந்தால் சொல்லி அனுப்புவார். அவனே கூட இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை அவரைப் பார்த்துப் பேசி விட்டு வருவான்.
இப்போது வரச் சொல்லி இருக்கிறார். எதற்கென்று தெரியவில்லை. 'நாடக வாய்ப்பு ஏதாவது வந்திருக்கிறதா, அல்லது இனிமேல் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லப் போகிறாரா?'
உள்ளிருந்து ராஜபார்ட் வந்தபோது, அவர் கையில் ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இனிமேல் தன்னால் சம்பளம் கொடுக்க முடியாது என்று சொல்லிக் கணக்குத் தீர்க்கப் போகிறார் போலிருக்கிறது என்று நினைத்தான் கந்தன்.
"பையனுக்கு ஸ்கூல் திறந்துடுச்சா?" என்றார் ராஜபார்ட்.
"திறந்து ஒரு மாசமாச்சே!" என்றான் கந்தன்.
"அப்புறம் ஏன்...?" என்று அவர் இழுத்தபோதுதான், கந்தனுக்கு அவர் கேட்க நினைத்தது புரிந்தது.
ஆரம்பக் காலம் முதலே, தன் குழுவில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடச் செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்வது என்ற பழக்கத்தை வைத்துக் கொண்டிருந்தார் ராஜபார்ட்.
அவர் குழுவில் இருந்த கலைஞர்களின் குழந்தைகள் படித்து வந்த அரசுப் பள்ளிகளில் கல்வி இலவசம்தான் என்றாலும், சீருடை, புத்தகங்கள் ஆகியவற்றுக்கான பணத்தைக் கொடுத்து வந்தார் ராஜபார்ட். நாடக வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து, அவர் வருமானம் குறைந்த பின்பும், அவர் இதை நிறுத்தவில்லை.
சென்ற வருடம் கூடக் கொடுத்து விட்டார்.
ஆனால் இந்த வருடம் ராஜபார்ட் இருந்த நிலைமையில், அவரால் இந்த உதவியைச் செய்ய முடியாது என்று நினைத்து, கந்தன் அவரிடம் பணம் கேட்கவில்லை.
"ஏன் எங்கிட்ட பள்ளிக்கூடச் செலவுக்குப் பணம் கேட்டு வாங்கிக்கலை?" என்றார் ராஜபார்ட்.
"என்ன ஐயா இது? நீங்க இருக்கற நிலைமையில, நான் எப்படி இதை உங்ககிட்ட கேக்க முடியும்? நான் வேற வேலைகளைப் பாக்கலாம்னு சொல்லிட்டீங்க. அதோட, வேலை இருந்தாலும், இல்லாட்டாலும் எனக்குச் சம்பளம் கொடுக்கறீங்க. இதை வேற நான் எப்படிக் கேக்கறது?" என்றான் கந்தன்.
"அன்னிக்கு வசதி இருந்தது. பத்து பேரு என்னோட இருந்தாங்க. பத்து பேருக்கும் எல்லாம் செஞ்சேன். இன்னிக்கு நீ ஒத்தன்தான் இருக்கே. உனக்கு நான் செய்யறதாச் சொன்னதைச் செய்ய வேண்டாமா?" என்ற ராஜபார்ட், "போன வருஷம் கொடுத்த தொகையையே கொடுக்கறேன். கொஞ்சம் கூடக் குறைச்சலா இருந்தா, அட்ஜஸ்ட் பண்ணிக்க" என்றபடியே தன் கையிலிருந்த ரூபாய் நோட்டுகளை அவன் கையில் திணித்தார் ராஜபார்ட் முருகப்பா.
"ஐயா! ராஜபார்ட் வேஷம் போட்டாலும், போடாட்டாலும், என்னிக்குமே நீங்க ராஜாதான் ஐயா!" என்றான் கந்தன்.
இல்லறவியல்
அதிகாரம் 22
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 218இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
பொருள்:
பிறருக்கு உதவுவது தன் கடமை என்று நினைத்துச் செயல்படுபவர், பொருள் வளம் குறைந்த காலத்திலும், பிறருக்கு உதவுவதில் தளர மாட்டார்.
No comments:
Post a Comment