"நம்ப ஏரியாவில ஒத்தரு புதுசா வீடு கட்டிக் குடி வந்திருக்காரு. அவரைப் போய்ப் பாத்துட்டு வரலாமா?" என்றான் முரளி
"சரி" என்றான் சபேஷ்.
இருவரும் சிவராமனின் வீட்டுக்குச் சென்றனர். அவரைப் பார்த்ததும், "சார்! எங்க காலனிக்கு உங்களை வரவேற்கிறோம்!" என்றனர்.
"நீங்க யாரு என்னை வரவேற்கறதுக்கு? இந்த காலனி உங்களுக்குச் சொந்தமா என்ன? நான் இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி, அதில வீடு கட்டியிருக்கேன்" என்றார் சிவராமன்.
முரளிக்கும், சபேஷுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. "இல்லை சார். நாங்க இந்தக் காலனிக்குள்ள நலவாழ்வு சங்கம்னு ஒண்ணு வச்சிருக்கோம். அதனாலதான், புதுசா வந்திருக்கிற உங்களை வரவேற்று, எங்க சங்கத்தைப் பத்தி சொல்லலாம்னு..." என்றான் சபேஷ்.
"சங்கத்தில சேரும்பீங்க. அப்புறம், சந்தா, நன்கொடைன்னு வசூல் பண்ணுவீங்க. நான் இதையெல்லாம் ஊக்குவிக்கறதல்ல!" என்றார் சிவராமன்.
"நாங்க சந்தா எதுவும் வாங்கறதில்ல சார். இங்க இருக்கறவங்களுக்குத் தேவையான சில நல்ல காரியங்களைச் செய்யறதுக்கும், பிரச்னைகளைத் தீக்கறதுக்கும் உதவறதுதான் எங்க நோக்கம். அவங்க அவங்க தங்களால் முடிஞ்ச அளவுக்குத் தங்களை ஈடுபடுத்திக்கலாம். நன்கொடை கூட, சில சமயம், சில காரியங்களுக்காக, அவங்களா விருப்பப்பட்டுக் கொடுக்கறதுதான்" என்றான் முரளி.
"என்ன உதவி செய்வீங்க? எங்க வீட்டு சாக்கடை அடைச்சுக்கிடுச்சுன்னு சொன்னா, வந்து சரி பண்ணுவீங்களா?"
"அந்த மாதிரி காரியங்களைக் கூட நாங்க செஞ்சிருக்கோம் சார்!" என்றான் சபேஷ்.
"சரி. எனக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா, உங்க கிட்ட கேக்கறேன்" என்றார் சிவராமன், கேலியான குரலில்.
முரளியும், சபேஷும் எழுந்து சென்று விட்டனர்.
அதற்குப் பிறகு, சிலமுறை சங்கத்தின் கூட்டங்களுக்கு சிவராமனை அழைத்தார்கள். அவர் வரவில்லை. சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற சில கொண்டாட்டங்களுக்கு அவரை அழைத்தார்கள். அவர் வரவில்லை.
அவர் அவர்களை அலட்சியம் செய்தாலும், இருவரும் தேவைப்பட்டபோதெல்லாம், அவரை அணுகத் தயங்கியதில்லை.
ஒருமுறை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, பணம், உணவுப் பொருட்கள், உடைகள் போன்றவற்றைக் கொடுத்து உதவும்படி அவரிடம் கேட்டார்கள். அவர் மறுத்து விட்டார். "இதெல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை. நான் ஏன் கொடுக்கணும்?" என்று சொல்லி விட்டார்.
இரண்டு மூன்று வருடங்கள், அவமானத்தைப் பொருட்படுத்தாமல், சந்தர்ப்பம் ஏற்பட்டபோதெல்லாம், அவரை அணுகினார்கள். அதற்குப் பிறகு, அவரைச் சென்று பார்ப்பதை விட்டு விட்டார்கள்.
பல வருடங்கள் ஒடி விட்டன.
ஒரு நாள், முரளியின் நண்பன் கண்ணன் அவனிடம் வந்து, "டேய், முரளி! சிவராமன் போயிட்டாராம்டா!" என்றான்.
"யார் சிவராமன்?" என்றான் முரளி.
"என்னடா, இப்படிக் கேக்கற? நீயும், சபேஷும் எத்தனை தடவை அவர் வீட்டுக்குப் போயிருப்பீங்க?"
"ஓ, அவரா? சாரி. அவர் எதிலேயும் பட்டுக்காம ஒதுங்கி இருந்ததால, அவர் இருக்கறதையே மறந்துட்டேன். இத்தனை நாள் அவர் இருந்தும், இல்லாத மாதிரிதானே இருந்தாரு? இருந்தாலும், அவர் இறந்ததைக் கேட்க வருத்தமாத்தான் இருக்கு. நாம அவர் வீட்டுக்குப் போய், அவர் உடலுக்கு மரியாதை செலுத்திட்டு, அவங்க குடும்பத்தினர்கிட்ட நம்ம துக்கத்தைத் தெரிவிச்சுட்டுத்தான் வரணும். வா போகலாம்" என்றான் முரளி.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 22
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 214ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
பொருள்:
பிறருக்கு உதவி செய்வது என்னும் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களே உயிர் வாழ்பவர்கள். மற்றவர்கள் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள்.
No comments:
Post a Comment