
சுப்பு காரின் வேகத்தைக் குறைத்து, காரை சாலை ஓரமாக நிறுத்தினான்.
"என்னய்யா ஆச்சு?" என்றார் தாமோதரன், எரிச்சலுடன்.
"தெரியல சார். காத்து இறங்கின மாதிரி இருக்கு. பஞ்ச்சரா இருக்கும்னு நினைக்கறேன்" என்று கூறியபடியே கீழே இறங்கினான் சுப்பு.
பின் சக்கரத்தைப் பார்த்து விட்டு வந்து, "சார்! காத்து இறங்கி இருக்கு. பின் சக்கரம் பஞ்ச்சர் ஆகியிருக்கு" என்றான் தாமோதரனிடம்.
"என்னய்யா டிரைவர் நீ? அவசரமாப் போக வேண்டிய நேரத்தில வண்டி பஞ்ச்சர் ஆகுது? இதையெல்லாம் முன்னாடியே பாக்கறதில்ல?"
'பஞ்ச்சரை எப்படி முன்னாடியே பாக்க முடியும்?' என்ற சூடான பதிலை மனதுக்குள் அடக்கிக் கொண்டு, சுப்பு பேசாமல் இருந்தான்.
'சரி. பஞ்ச்சர் ஒட்டிட்டு ஆஃபீசுக்கு வந்துடு. நான் ஊபர்ல போய்க்கறேன்" என்று சொல்லி விட்டு, ஊபர் டாக்சியை அழைக்கக் கைபேசியை எடுத்தார் தாமோதரன்.
"பஞ்ச்சர் ஒட்டக் காசு..."
"எவ்வளவு ஆகும்?"
"இருநூத்தம்பதிலேந்து ஐநூறு ரூபாய்க்குள்ள ஆகலாம், பஞ்ச்சரைப் பொருத்து."
"சரி. பாத்துக்க. டயர் பழசாயிடுச்சு. புதுசா மாத்தணும்னாலும் மாத்திடு" என்ற தாமோதரன், பர்ஸிலிருந்து இரண்டு இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை எடுத்து சுப்புவிடம் கொடுத்தார்.
காரை மெல்ல ஓட்டிக் கொண்டு, அருகிலிருந்த ஒரு டயர் கடைக்குப் போனான் சுப்பு.
கடைக்காரன் ஜாக்கி போட்டு, டயரைக் கழற்றி, டயரில் காற்றடித்து, தண்ணீரில் வைத்துப் பார்த்து விட்டு "பஞ்ச்சர் பெரிசா இருக்கு. ஐநூறு ரூபாய் ஆகும்" என்றான்.
"நானூறு ரூபா வாங்கிக்கங்க" என்றான் சுப்பு.
"நீங்க டிரைவரா, ஓனரா?"
"டிரைவர்தான்! ஏன்?"
"டிரைவரா இருப்பேன்னுதான் நினச்சேன். ஆனா, பேரம் பேசினதைப் பாத்ததும் சந்தேகம் வந்தது!" என்றான் பஞ்ச்சர் கடைக்காரன்.
"ஏன், டிரைவர்னா ரேட்டைக் குறைச்சுக்கச் சொல்லிக் கேக்கக் கூடாதா?"
"முதலாளி மேல அவ்வளவு அக்கறை! சரி. நான் ஒண்ணு சொல்றேன். இப்ப இந்த பஞ்ச்சரை ஒட்டிக் கொடுத்துடுவேன். கொஞ்ச நாள் ஓடும். ஆனா, டயர் பழசாப் போச்சு. மாத்தினா நல்லது" என்றான் கடைக்காரன்.
"புது டயர் எவ்வளவு ஆகும்?"
பஞ்ச்சர் கடைக்காரன் ஒருமுறை அருகில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு, "ஒரிஜினல் டயர் மூவாயிரம் ரூபா ஆகும். ஆனா, எங்கிட்ட டியூப்ளிகேட் இருக்கு. ஆயிரத்து ஐநூறு ரூபாதான். நல்லாத்தான் இருக்கும். பாக்க ஒரு வித்தியாசமும் தெரியாது. ஓரளவுக்கு ஓடும். ரெண்டு வருஷம் கழிச்சு மாத்த வேண்டி இருக்கலாம். அப்ப, உன் முதலாளி ஞாபகம் வச்சுக்கிட்டா கேக்கப் போறாரு?" என்றான்.
"பரவாயில்ல. ஒரிஜினலையே போட்டுடு. எனக்கு பில் வேணும்" என்றான் சுப்பு.
"நான் இன்னும் சொல்லி முடிக்கல. டியூப்ளிகேட் டயருக்கும், ஒரிஜினல் டயர் வாங்கின மாதிரி பில் தரேன், ஜி எஸ் டியோட! டயர் வாங்கறவங்க நிறைய பேர் பில் கேக்க மாட்டாங்க. அதனால, உனக்கு பில் கொடுக்கறதில ஒண்ணும் பிரச்னை இல்ல. உனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு பில் கிடைக்கும். ஆனா, நீ ஆயிரத்தைந்நூறு ரூபா கொடுத்தா போதும். மீதி ஆயிரத்தைந்நூறு ரூபாயை நீயே வச்சுக்கலாம்."
"இதில உனக்கென்ன லாபம்?" என்றான் சுப்பு.
"ஒரிஜினல் டயரை விக்கறதில கிடைக்கிற கமிஷனை விட, டியூப்ளிகேட் டயர்ல அதிக கமிஷன் கிடைக்கும். நிறைய டிரைவர்களுக்கு இப்படி செஞ்சு கொடுத்திருக்கேன். ஒரு பிரச்னையும் வந்ததில்லை. முதலாளிகளுக்கு இதனால பெரிய நஷ்டமும் இல்ல. என்ன சொல்ற?" என்றான் டயர் கடைக்காரன்.
சுப்பு யோசித்தான். தாமோதரனிடம் அவன் எவ்வளவு உண்மையாக உழைத்தாலும், அவருக்கு அவன் மீது பரிவோ அக்கறையோ கிடையாது. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூடப் பெரிதாகக் குதிப்பார். சம்பளமும் சுமார்தான்.
'சுளையாக ஆயிரத்தைந்நூறு ரூபாய் கிடைத்தால் நல்லதுதானே! ஒருமுறைதானே இப்படிச் செய்யப் போகிறேன்! அதுவும், முதலாளியே 'டயர் மாற்ற வேண்டும் என்றால் மாற்றி விடு' என்று சொல்லிப் பணம் கொடுத்திருக்கிறார்!'
"சரி" என்றான் சுப்பு.
"இரு. டயர் எடுத்துட்டு வரேன்" என்று உள்ளே போனான் கடைக்காரன்.
அவன் திரும்பி வருவதற்குள், சுப்புவின் மனதில் பலவித எண்ணங்கள் ஓடின.
'இப்படிச் செய்யத்தான் வேண்டுமா? இத்தனை நாள் இல்லாமல், இப்போது ஏன் இந்தத் திருட்டு எண்ணம்?'
சற்று நேரம், சுப்பு குழம்பிய நிலையில் இருந்தான்.
கடைக்காரன் டயரை எடுத்துக்கொண்டு வந்தான். அதை சுப்புவிடம் காட்டியபடியே, "பாத்தியா, எப்படி இருக்கு? ஒரிஜினல் டயர் தயாரிக்கறவனே, இது தன் கம்பெனி டயர்னுதான் நினைப்பான்!" என்றான்
சுப்பு சட்டென்று, "வேண்டாம். பஞ்ச்சர் ஒட்டிடு. அப்புறம் பாத்துக்கலாம்" என்றான்.
"ஏன்? காசு இல்லையா?" என்றான் கடைக்காரன்.
"இல்ல, பஞ்ச்சர் ஒட்டினாப் போதும், நானூறு ரூபாதான் கொடுப்பேன்!" என்றான் சுப்பு.
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 282உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
பொருள்:
ஒரு தவறான செயலை மனதில் நினைப்பதும் தீதே. எனவே, பிறர் பொருளை வஞ்சனையால் அபகரிக்கலாம் என்று மனத்தால் கூட நினையாமல் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment