"ஆமாம். எங்க கேரியர்ல இதெல்லாம் வழக்கமா நடக்கற விஷயங்கள்தானே?" என்றார் மணி, சிரித்துக் கொண்டே.
"உங்களை மாதிரி நேர்மையா இருக்கறவங்க மாற்றலாகிப் போனா எங்களுக்கு வருத்தமாத்தான் இருக்கும். ஆனா, இதில என்னோட சுயநலமும் இருக்கே!" என்றார் சரவணமுத்து, சிரித்தபடி.
"கவலைப்படாதீங்க. நான் ரிலீவ் ஆக இன்னும் பத்து நாள் ஆகும். அதுக்குள்ளே உங்க அப்ளிகேஷனை கிளியர் பண்ணிடறேன். நான் பார்த்தவரையில, உங்க அப்ளிகேஷன்ல எல்லாமே சரியாத்தான் இருக்கு. நான் ஃபார்வர்ட் பண்ணிடறேன்."
"தாங்க்ஸ், சார். நீங்க ஃபார்வர்ட் பண்ணினா, ஜிம் எம் சாங்ஷன் பண்ணிடுவாரு."
இரண்டு நாட்கள் கழித்து சரவணமுத்து வந்தபோது, மணியின் சீட்டில் புதிதாக ஒருவர் உட்கார்ந்திருக்க, மணி அவர் எதிரில் உட்கார்ந்திருந்தார்.
"இவர் மிஸ்டர் தயாளன். எனக்கு பதிலா வந்திருக்காரு. நான் என் பொறுப்புகளை இவர்கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிட்டேன். தயாளன், இவர் மிஸ்டர் சரவணமுத்து. இவர் அப்ளிகேஷன் ப்ராசஸ்ல இருக்கு. நான் கம்ப்ளீட் பண்றதுக்குள்ள உங்ககிட்ட சார்ஜ் ஹாண்ட் ஓவர் பண்ணச் சொல்லிட்டாங்க. அதைக் கொஞ்சம் பாத்துக்கங்க" என்றார் மணி.
"நிச்சயமா! நீங்க ரெண்டு நாள் கழிச்சு வாங்களேன். நான் உங்க அப்ளிகேஷனைப் பாத்து வைக்கறேன்" என்றார் தயாளன், சரவணைமுத்துவைப் பார்த்து.
மணி அந்த அலுவலகத்திலிருந்து மாற்றலாகிச் சென்று ஒரு மாதம் கழித்து விடுமுறையில் மீண்டும் அந்த ஊருக்கு வந்தபோது, தன் பழைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் தயாளனின் அறைக்குச் சென்றபோது அங்கே அவர் இல்லை. பார்வையாளர்கள் இருக்கையில், தயாளனுக்காகக் காத்திருப்பது போல் சரவணமுத்து உட்கார்ந்திருந்தார்.
இருவரும் வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்துக்கொண்ட பிறகு, "உங்க அப்ளிகேஷன் சாங்ஷன் ஆயிடுச்சு இல்ல?" என்றார் மணி.
சரவணமுத்து "ஆயிடுச்சு, ஒருவழியா! இன்னிக்கு ஆர்டர் கொடுக்கறதா சொன்னார். அதான் வந்தேன். அவர் ஜி எம் ரூமுக்குப் போயிருக்காரு" என்றவர் யாரும் உள்ளே வருகிறார்களா என்று அறைக்கதவைப் பார்த்தபடி, "நீங்க இருந்தப்பவே முடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்!" என்றார்.
"நான் ப்ராசஸ் பண்றதுக்குள்ள என் இடத்தில ஜாயின் பண்ண தயாளன் வந்துட்டாரு. அவர்கிட்ட எல்லாத்தையும் ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு என்னை உடனே ரிலீவ் ஆகச் சொல்லிட்டாங்க. நான் பாதி முடிச்சிருக்கற ரெண்டு மூணு அப்ளிகேஷனை முடிச்சுடறதா தயாளன்கிட்ட சொன்னேன். அவர் 'வேண்டாம் நானே பாத்துக்கறேன்'னு சொல்லிட்டாரு. அதான் உங்களோடது சாங்ஷன் ஆயிடுச்சே? கொஞ்சம் தாமதமாயிடுச்சு போலருக்கு!" என்றார் மணி.
"தாமதம் மட்டும் ஆயிருந்தா பரவாயில்லையே!..." என்ற சரவணமுத்து, சற்றுத் தயங்கிய பின், மீண்டும் ஒருமுறை அறைக்கு வெளியே பார்த்து விட்டு, "நீங்க நல்ல மனுஷன். நீங்க நல்லதை மட்டும்தான் நினைப்பீங்க. அதனாலதான், பெண்டிங் அப்ளிகேஷனை எல்லாம் முடிக்கணும்னு முயற்சி செஞ்சிருக்கீங்க. ஆனா, தயாளன் உங்களை மாதிரி இல்ல. எங்ககிட்டல்லாம் பணம் வசூல் பண்றதுக்காகத்தான், பெண்டிங் அப்ளிகேஷனையெல்லாம் நீங்க முடிக்க வேண்டாம்னு சொல்லி, தானே அதையெல்லாம் ப்ராசஸ் பண்ணி இருக்காரு!" என்றார் வெறுப்புடனும், கோபத்துடனும்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 288அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
பொருள்:
அளவறிந்து நெறியோடு வாழ்பவர் நெஞ்சில் அறம் இருக்கும். களவு செய்ய வேண்டும் என்று நினைப்பவர் நெஞ்சில் வஞ்சம் இருக்கும்.
No comments:
Post a Comment