"மொத்தம் எவ்வளவு முதலீடு பண்ணினே?" என்றார் ராகவன்.
"பத்து லட்சம்!" என்றார் ராமநாதன்.
"என்ன நடந்தது? விவரமாச் சொல்லு."
"சில வருஷங்களுக்கு முன்ன, கணேசன்னு ஒத்தன் எங்க கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டிருந்தான். அப்புறம், எங்க கம்பெனியை விட்டுட்டு, வேற எங்கயோ வேலைக்குப் போயிட்டான். ரெண்டு மாசம் முன்னாடி, தற்செயலா அவனைச் சந்திச்சேன். ஏதோ மெயில் ஆர்டர் பிசினஸ் பண்றதா சொன்னான். விசிட்டிங் கார்டெல்லாம் கொடுத்தான்.
"ஒரு நாளைக்கு அவன் ஆஃபீசுக்குப் போயிருந்தேன். நிறைய ஆர்டர், பில், எல்லாம் காட்டினான். ஒரு ரூம்ல நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்தது. அதையெல்லாம் தயாரிக்கறவங்ககிட்டேந்து மொத்த விலைக்கு வாங்கி, பேப்பர்ல விளம்பரம் கொடுத்து, தபால் மூலமா ஆர்டர்கள் வாங்கிப் பொருட்களை பார்சல்ல அனுப்பிடுவேன்னு சொன்னான்.
"அமெரிக்காவில எல்லாம் மெயில் ஆர்டர் பிசினஸ் ரொம்ப பிரபலம்னு சொன்னான். 100 சதவீதம் லாபம், பணத்தை முன்னால வாங்கிக்கிட்டு, அப்புறம்தான் பொருட்களை அனுப்பறதால, கலெக்ஷன் பிரச்னை இல்லைன்னு சொன்னான்.
"ரெண்டு மூணு தடவை என் வீட்டுக்கு வந்தான். பொதுவாத்தான் பேசினான். நான் இன்னொரு தடவை அவன் ஆஃபீசுக்குப் போனப்ப, 'ஆர்டர் நிறைய வருது, ஆனா, பொருட்களை சப்ளை பண்றவங்க முன்பணம் கேக்கறாங்க. இன்னும் கொஞ்சம் முதலீடு இருந்தா நல்லா இருக்கும்'னான்.
"எவ்வளவு பணம் வேண்டியிருக்கும்னு கேட்டேன். 'பத்து லட்சம் வேணும்'னு சொல்லிட்டு, 'நீங்க முதலீடு பண்றீங்களா?'ன்னு கேட்டான். எனக்குத் தொழில் பண்றதுல ஆர்வம் இல்லேன்னேன். 'நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம். பத்து லட்சம் முதலீடு செஞ்சீங்கன்னா, மாசம் ஐம்பதாயிரம் ரூபா வருமானம் வரும், காரன்ட்டி'ன்னான். என்னை பார்ட்னராப் போட்டு, பார்ட்னர்ஷிப் டீட் ரிஜிஸ்டர் பண்றதாச் சொன்னான்.
"ஏதோ ஒரு சபலத்தில ஒத்துக்கிட்டு, பத்து லட்சம் ரூபா கொடுத்தேன். கேஷ்தான் வேணும்னு சொன்னான். அதனால, பாங்க்கிலேந்து பணம் எடுத்து கேஷாவே கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கிட்டுப் போனவன் திரும்பி வரல. ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணினேன். ஃபோனை யாரும் எடுக்கல. ஆஃபீசுக்கு நேர்ல போனேன். ஆஃபீஸ் பூட்டி இருந்தது. பக்கத்தில விசாரிச்சதில, நாலு நாளைக்கு முன்னால காலி பண்ணிட்டுப் போயிட்டதா சொன்னாங்க. அவன் வீட்டு அட்ரஸ் கூட எங்கிட்ட இல்ல."
"போலீசுக்குப் போக வேண்டியதுதானே?" என்றார் ராகவன்.
"அதுக்கு முன்னால உன்கிட்ட கலந்து பேசலாம்னு நினைச்சேன். நீ ஏதாவது விசாரிக்க முடியுமா?"
"நான் போலீஸ்ல இருந்தவன்தான்னாலும், ரிடயர் ஆனப்பறம் எனக்கு ஒரு செல்வாக்கும் கிடையாது. என் போலீஸ் நண்பர்கள் யார்கிட்டயாவது விசாரிச்சு, அவங்ககிட்ட அவனைப் பத்தி ஏதாவது விவரம் கிடைக்குமான்னு பாக்கறேன்" என்றார் ராகவன்.
ஒரு வாரம் கழித்து, ராமநாதன் வீட்டுக்கு வந்தார் ராகவன் .
"அவன் பெரிய ஃபிராடுப்பா. மெயில் ஆர்டர் பிசினஸ்னு சொல்லி, நிறைய பேர்கிட்ட பொருட்களை அனுப்பறதா சொல்லிப் பணத்தை வாங்கிக்கிட்டுப் பொருட்களை அனுப்பாம ஏமாத்தி இருக்கான். சில பேருக்கு தரக்குறைவான பொருட்களை அனுப்பி இருக்கான். பொருட்களைத் தயாரிக்கறவங்க சில பேர்கிட்டேந்து கடனுக்குப் பொருட்களை வாங்கி, அவங்களுக்குப் பணம் கொடுக்காம ஏமாத்தி இருக்கான். அவன் பேர்ல நிறையப் புகார்கள் வந்திருக்கு. போலீஸ் விசாரிக்கறதுக்குள்ள, ஆஃபீசை மூடிட்டு எங்கேயோ தலைமறைவாயிட்டான். இந்த மாதிரி ஆட்கள் வேற எங்கேயாவது போய், இதே மாதிரி வேற ஏமாத்து வேலையை ஆரம்பிப்பாங்க. எதுக்கும், நீ போலீஸ்ல புகார் கொடு. ஒருவேளை அவன் கிடைச்சா, அவன்கிட்டேந்து பணம், பொருட்கள்னு ஏதாவது கைப்பற்றினா, உன் பணத்தில ஒரு பகுதியாவது திரும்பக் கிடைக்கலாம்" என்றார் ராகவன்.
"வேணாம்ப்பா. என் முட்டாள்தனத்துக்கு நான் கொடுத்த விலையா நினைச்சுக்கறேன். நீ இதைப் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேண்டாம், போலீஸ்கிட்டயும்தான்!" என்றார் ராமநாதன்.
ராகவன் சென்ற பிறகு, "ஏங்க, அவர் சொன்னபடி போலீஸ்ல புகார் கொடுக்க வேண்டியதுதானே?" என்றாள் ராமநாதனின் மனைவி.
"எப்படிப் புகார் கொடுக்க முடியும்? நான் கொடுத்த பத்து லட்சத்தில, அஞ்சு லட்சம்தான் பாங்க்கிலேந்து எடுத்தேன். மீதி அஞ்சு லட்சம் எங்கேந்து வந்ததுன்னு கேட்டா, நான் என்ன சொல்றது?"
"ஏன், அது எங்கேந்து வந்தது?"
தான் வேலை செய்த நிறுவனத்தில், பர்ச்சேஸ் டிப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்தபோது, கம்பெனிக்குப் பொருட்கள் வாங்குவதில் கமிஷன் வாங்கிச் சம்பாதித்த பணம் அது என்பதை மனைவியிடம் சொல்லலாமா என்று யோசித்தார் ராமநாதன்.
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 283களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
பொருள்:
களவினால் பெற்ற செல்வம் முதலில் அதிகரிப்பது போல் தோன்றினாலும், முன்பு இருந்த செல்வமும் குறையும் அளவுக்கு அழிந்து விடும்.
No comments:
Post a Comment