"அரசாங்கத்தில உயர் அதிகாரியா இருந்திருக்காரு. நல்ல நிர்வாகி, ஸ்ட்ரிக்ட்டா இருக்கறவர்னு பேர் வாங்கி இருக்காரு. நம்ம கம்பெனியில ஜெனரல் மேனேஜர் (ஹெச்.ஆர்.) பதவிக்கு இவர் ரொம்பப் பொருத்தமா இருப்பார்னு நினைக்கிறேன். என்ன சொல்றீங்க?" என்றார் நிர்வாக இயக்குனர் கணபதி.
தலைமை நிர்வாக அதிகாரி கண்ணன் சற்றுத் தயங்கினார்.
"என்ன யோசிக்கிறீங்க? அரசாங்கத்தில் வேலை செஞ்சவரு நம்ம கம்பெனிக்கு சரியா வருவாரான்னு பாக்கறீங்களா?"
"அதில்லை, சார். அரசாங்கத்தில வேலை செஞ்சவரா இருந்தாலும். நம்ம கம்பெனி நடைமுறைகளுக்கு அவர் அட்ஜஸ்ட் பண்ணிக்கறதில ஒண்ணும் பிரச்னை இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா, அவரைப் பத்தி நான் கேள்விப்பட்ட சில விஷயங்கள்..."
"ஓ, லஞ்சம் வாங்கறவர்னு அவரைப் பத்தி இருக்கற இமேஜைப் பத்தி சொல்றீங்களா? இருக்கலாம். இங்கே அதுக்கெல்லாம் அவருக்கு வாய்ப்பே இல்லையே! பர்சேஸ் மாதிரி துறையா இருந்தா யோசிக்கணும். ஊழியர்கள் நிர்வாகத்தில அவரால என்ன செய்ய முடியும்? அவரோட ஸ்ட்ரிக்ட்டான அணுகுமுறையும், நிர்வாகத் திறமையும் நமக்கு உதவியா இருக்கும். நம்ம கம்பெனியில, யூனியனோட ஆட்டம் கொஞ்சம் அதிகமா இருக்கு. அதை அடக்க இவரை மாதிரி ஒருத்தர் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அவரையே அப்பாயின்ட் பண்ணிடுங்க" என்றார் கணபதி.
அதன்படி, ஒய்வு பெற்ற அரசு அதிகாரி சந்திரபோஸ் அந்த நிறுவனத்தில் பொது மேலாளர் (ஊழியர் நிர்வாகம்) என்ற பதவிக்கு அமர்த்தப்பட்டார்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், கண்ணன் நிர்வாக இயக்குனர் கணபதியின் அறைக்கு வந்தார். "சார்! யூனியன் லீடர் நாராயணன் உங்களைப் பாக்கணும்கறார்" என்றார்.
"என்னை எதுக்குப் பாக்கணும்? இப்ப சம்பள உயர்வு விஷயமா சந்திரபோஸோட பேச்சு நடத்திக்கிட்டிருக்காங்க இல்ல? பேச்சு வார்த்தை முடிஞ்சதும், ஃபைனலைஸ் பண்றதுக்கு முன்னால என்னைச் சந்திக்கறதுதானே வழக்கம்?" என்றார் கணபதி.
"பேச்சு வார்த்தையிலே ஏதோ பிரச்னையாம். அது விஷயமாத்தான் உங்ககிட்ட பேசணும்கறாரு."
"பாத்தீங்களா?" என்றார் கணபதி புன்னகையுடன். "நான் எதிர்பார்த்த மாதிரியே, சந்திரபோஸ் ஸ்ட்ரிக்ட்டா இருக்கறது யூனியன்காரங்களை அப்செட் பண்ணி இருக்கு. அதான் எங்கிட்ட ஓடி வராங்க. சரி, எதுவாயிருந்தாலும், உங்ககிட்ட பேசிக்கட்டுமே, எங்கிட்ட எதுக்கு வராரு?"
"இல்லை, சார். பிரச்னை கொஞ்சம் சீரியஸ். அவர் முதல்ல எங்கிட்டத்தான் வந்தாரு. நான்தான் இது உங்களுக்குத் தெரியணும்னு உங்களைச் சந்திக்க அவரை அழைச்சுக்கிட்டு வந்திருக்கேன். வெளியிலதான் இருக்காரு."
"சரி. பாக்கறேன்" என்ற கணபதி, மணியை அடித்து பியூனை அழைத்து, வெளியே காத்திருந்த யூனியன் தலைவர் நாராயணனை உள்ளே அனுப்பும்படி சொன்னார்.
நாராயணனும், இன்னொருவரும் உள்ளே வந்தனர்.
"உங்களை மட்டும்தானே வரச் சொன்னேன்? எதுக்கு இன்னொருத்தர்?" என்றார் கணபதி, கோபத்துடன்.
"சாரி சார்! உங்க ஜி.எம். அப்படி ஒரு நிலைமையை உருவாக்கிட்டாரு. நான் மட்டும் உங்ககிட்ட தனியா பேசினா, நான் உங்ககிட்ட டீல் போட்டுட்டதா தொழிலாளர்கள் நினைச்சுடக் கூடாதுங்கறதுக்காகத்தான், சாட்சிக்கு இன்னொருத்தரை வச்சுக்கிட்டு உங்ககிட்ட பேச விரும்பறேன்" என்றார் நாராயணன்.
"எதுக்கு சாட்சி? என்ன சொல்றீங்க?"
"சார்! எத்தனையோ வருஷமா நாங்க நிர்வாகத்துக்கிட்ட எத்தனையோ விஷயங்கள் பத்திப் பேசி இருக்கோம். சில சமயம் உடன்பாடு ஏற்பட்டிருக்கு. சில சமயம் உடன்பாடு ஏற்படாம கசப்பு உணர்வு மட்டும் மிஞ்சி இருக்கு. ஆனா, இந்த முறை புதுசா வந்திருக்கற உங்க ஜி.எம். பணம் கொடுத்து என்னை விலைக்கு வாங்கப் பாக்கறாரு!" என்றார் நாராயணன், கோபத்துடன்.
"என்ன சொல்றீங்க? உங்களை விலைக்கு வாங்கறதா?"
"ஆமாம் சார். உங்க ஜி.எம். எங்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா? 'நீங்க கேக்கற அளவு சம்பள உயர்வு கொடுக்க முடியாது. கொஞ்சம்தான் கொடுப்போம். உங்களுக்குத் தனியா ஒரு தொகை கொடுத்துடறோம். நீங்க ஊழியர்கள்கிட்டப் பேசி சம்மதிக்க வைங்க'ன்னு சொல்றாரு. உங்க சம்மதத்தோடதான் அவர் இப்படிச் சொன்னாரா?" என்றார் நாராயணன், கோபம் குறையாமல்.
கணபதி அதிர்ச்சியுடன் கண்ணனைப் பார்த்தார். 'நான் அப்பவே சொன்னேனே, சார்! நேர்மையில்லாதவரைப் போட வேண்டாம்னு!' என்று சொல்வது போல், அவர் நிர்வாக இயக்குனரை மௌனமாகப் பார்த்தார்.
"ஹௌ ப்ரிபாஸ்ட்ரஸ்!" என்ற கணபதி, கண்ணனிடம், "அவரை உடனே டிஸ்மிஸ் பண்ணுங்க!" என்றவர், நாராயணனைப் பார்த்து, "ஐ ஆம் சாரி! நடந்ததுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்!" என்றார்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
பொருள்:
களவு தவிர மற்ற வழிகளை அறியாதவர், முறையற்ற செயல்களைச் செய்து கெட்டு அழிவர்.
No comments:
Post a Comment