"ஏங்க நீங்க பொறந்து வளர்ந்த ஊர் இது. இதை விட்டுப் போகத்தான் வேணுமா?" என்றாள் மல்லிகா.
"வேற வழி? வேலை எங்கே கிடைக்குதோ, அங்கேதானே போகணும்?" என்றான் பரமசிவம்.
"இங்கேயே நல்ல வேலையிலதானே இருந்தீங்க? அதைப் போய்க் கெடுத்துக்கிட்டீங்களே!"
பரமசிவம் பேசாமல் இருந்தான்.
பரமசிவம் அதிகம் படிக்காவிட்டாலும், ஒரு ஆடைகள் தைக்கும் தொழிற்சாலையில் தையற்கானாகச் சேர்ந்து, தன் உழைப்பாலும், ஆர்வத்தாலும் வேகமாக முன்னேறிப் பத்து ஆண்டுகளில் மானேஜர் என்ற நிலைக்கு வந்து விட்டான்.
நல்ல வேலை, சம்பளம், முதலாளிகளிடம் நற்பெயர், நூறு பேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதில் கிடைத்த பெருமை, சந்தோஷம் எல்லாம் ஒரே நாளில் பறி போய் விட்டன.
அவன் நிறுவனத்துக்குப் புதிதாக துணி சப்ளை செய்ய விரும்பிய ஒரு நபர், தன்னிடம் துணி வாங்கினால் அவனுக்கு 5 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை காட்ட, இதனால் மாதம் தனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு, ஒரு பலவீனமான மனநிலையில் பரமசிவம் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டான்.
முதல் முறை அவர் சப்ளை செய்த துணியே தரக்குறைவாக இருந்து பல பிரச்னைகள் வர, முதலாளிகள் தலையிட்டு என்ன பிரச்னை என்று ஆராய்ந்து பார்க்க, அவர்களுக்கு உண்மை தெரிந்து விட்டது.
போலீசுக்குப் போக விரும்பாமல், பரமசிவத்தை வேலையை விட்டு அனுப்பிப் பிரச்னையை முடித்து விட்டார்கள்.
இப்போது பரமசிவம் வேறு வேலை தேட வேண்டிய நிலைமை.
"ஏங்க, இந்த ஊர்லயே உங்களுக்கு வேலை கிடைக்காதா?" என்றாள் மல்லிகா.
"என் அனுபவத்தை வச்சுக்கிட்டு, என்னால இதே மாதிரி ஆடைகள் தயாரிக்கிற தொழிற்சாலைக்குத்தான் வேலைக்குப் போக முடியும். இது மாதிரி கம்பெனி இந்த ஊர்ல இது ஒண்ணுதான் இருக்கு. வேற ஏதாவது கம்பெனியில எனக்கு வேலை கிடைக்க ஏதாவது வாய்ப்பு இருந்தாலும், இந்த ஊர்ல எல்லாருக்கும் என் பின்னணி தெரிஞ்சிருக்கறதால, எனக்கு யாரும் வேலை கொடுக்க மாட்டாங்க. என் நண்பன் ஒத்தன் மூலமா சென்னையில வேலை தேடிக்கிட்டிருக்கேன். அங்கே கிடைக்கும் போல இருக்கு. கிடைச்சதும், நாம எல்லாரும் சென்னைக்குப் போயிட வேண்டியதுதான்" என்றான் பரமசிவம்.
இரண்டு நாட்கள் கழித்து, வெளியில் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த பரமசிவம், "இந்த ஊர்ல எனக்கு வேலை கிடைக்காதுன்னு நினைச்சேன். ஆனா, ஒத்தர் வேலை கொடுக்கறேங்கறாரு!" என்றான்.
"யாருங்க? என்ன வேலை?" என்றாள் மல்லிகா, வியப்புடனும், மகிழ்ச்சியுடனும்.
"என் அப்பாவோட நண்பர் ஒத்தரைத் தற்செயலா சந்திச்சேன். அவர் நம்ம ஊர்ல ஒரு ரெடிமேட் கார்மெண்ட் தொழிற்சாலை ஆரம்பிக்கப் போறாராம். எக்ஸ்போர்ட் ஆர்டர் எல்லாம் இருக்காம். கம்பெனியை நிர்வாகம் பண்ண ஒரு நல்ல ஆளைத் தேடிக்கிட்டிருந்தாராம். எனக்கு அனுபவம் இருக்கறதால, என்னை மானேஜராப் போடறேன்னு சொன்னாரு."
"அவருக்கு... தெரியுமா?" என்றாள் மல்லிகா, தயக்கத்துடன்.
"அவர்கிட்ட உண்மையைச் சொல்லிட்டேன். 'என்னப்பா இப்படிப் பண்ணிட்டியே!' அப்படின்னாரு. அப்புறம், 'பரவாயில்ல. இனிமே நீ தப்புப் பண்ண மாட்டேன்னு நினைக்கறேன். உனக்கு நான் வேலை கொடுக்கறேன்'னு சொன்னாரு."
"அப்பா! நல்ல வேளை, கடவுள் ஒரு வழி காட்டிட்டாரு!" என்றாள் மல்லிகா.
"இல்ல, மல்லிகா. இந்த வேலையை நான் ஏத்துக்ககறதா இல்ல. நான் இந்த ஊரை விட்டுப் போகறதுல உறுதியா இருக்கேன்" என்றான் பரமசிவம்.
"ஏங்க இப்படிச் சொல்றீங்க?" என்றாள் மல்லிகா, ஏமாற்றத்துடன்.
"நான் ரோட்டில நடந்து போறப்ப, மத்தவங்க என்னைப் பாக்கற பார்வையை என்னால தாங்கிக்க முடியல. மத்தவங்க முகத்தைப் பாத்தாலே அவமானமா இருக்கு. என்னால இந்த ஊர்ல இருந்துக்கிட்டு, இந்த ஊர்க்காரங்க முகத்தில முழிக்க முடியாது. அதனால, ஊரை விட்டுப் போறதுதான் நல்லது" என்றான் பரமசிவம்.
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 281எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பொருள்:
பிறரால் இகழப்பட விரும்பாதவன், பிறர் பொருளைக் களவாடும் எண்ணம் தோன்றாமல், தன் நெஞ்சைப் பாதுகாக்க வேண்டும்.
No comments:
Post a Comment