
"சரி. நம்ப ரெண்டு பேர் கிட்ட இந்த விசாரணையை ஒப்படைச்சதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?" என்றார் சேகர்.
"இருக்கு. நாம ரெண்டு பேரும் ரெண்டு விதமான பார்வையில இதை அணுகுவோம்னு அவங்களுக்குத் தெரியும். அதனால, ஒரு பாலன்ஸ்ட் அப்ரோச் இருக்கும்னு நினைக்கறாங்க!"
"ஆமாம். நீ சாட்சிகளையும், சான்றுகளையும் வச்சுப் பாப்ப. நான் மனிதர்களோட இயல்பை வச்சுப் பாப்பேன்."
"ஆமாம். அப்ப நீ உன் வழியில இன்வெஸ்டிகேட் பண்ணு. நான் என் வழியில பண்றேன். இதான் கேஸ் ஃபைல்" என்று ஃபைலை நீட்டினார் பாஸ்கர்.
ஃபைலை வாங்கிப் பார்த்த சேகர், அதில் இருந்த ஃபோட்டோவைப் பார்த்து விட்டு, "இந்த மூஞ்சியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!" என்றார்.
ஒரு வாரம் கழித்து இருவரும் மீண்டும் சந்தித்தபோது, "உன் முடிவு என்ன?" என்றார் பாஸ்கர்.
"இந்த ஆள் நிச்சயமா தப்பு செஞ்சிருக்க மாட்டாரு!" என்றார் சேகர்.
"செஞ்சிருக்க மாட்டார்னுதான் சொல்ல முடியுமா? செய்யலேன்னு சொல்ல முடியாதா?" என்று கேட்டார் பாஸ்கர்.
"நான் சாட்சியங்களை வச்சு சொல்லலியே! மனித நடத்தைகளையும், அவை மூலமா வெளிப்படற இயல்புகளையும் வச்சுதானே சொல்றேன்! சரி. சாட்சியங்கள் அடிப்படையில நீ நடத்தின விசாரணையோட முடிவு என்ன?"
"அதை நான் அப்புறம் சொல்றேன். நீ எப்படி இந்த முடிவுக்கு வந்தேன்னு முதல்ல சொல்லு."
"லஞ்சம் வாங்கினதா குற்றம் சாட்டப்பட்டிருக்கிற சபரியைப் பத்தி வெளியில பல இடங்கள்ள விசாரிச்சேன். அவர் ஒரு பெரிய அதிகாரி. சமூகத்தில அந்தஸ்து உள்ளவர். ஆனா, வெளியில எங்கியுமே அவர் தன்னோட பதவியையோ அந்தஸ்தையோ வெளிக் காட்டிக்கிட்டதில்ல. ஒரு தடவை பாங்க்ல டிராஃப்ட் வாங்கறதுக்காக அவர் வரிசையில நிக்கறதைப் பாத்துட்டு, பாங்க் மானேஜர் அவரைத் தன்னோட அறையில வந்து உக்காரச் சொல்லி இருக்காரு. டிராஃப்டை ரெடி பண்ணிக் கொண்டு வந்து கொடுப்பாங்கன்னு மானேஜர் சொன்னப்ப, சபரி அதை மறுத்துட்டு, வரிசையில நின்னு, கவுன்ட்டர்ல அப்ளிகேஷன் கொடுத்து டிராஃப்ட் வாங்கிக்கிட்டுப் போயிருக்காரு.
"அவர் பையனைப் பள்ளிக்கூடத்தில சேக்கப் போனப்ப, பள்ளிக்கூடத்தில நன்கொடை கேட்டிருக்காங்க. ஆனா அதுக்கு ரசீது கொடுக்க மாட்டோம்னு சொல்லியிருக்காங்க. நன்கொடை கொடுக்கறேன், ஆனா ரசீது இல்லாம கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, வேற பள்ளிக் கூடத்தில பையனைச் சேத்திருக்காரு."
"அவர் பையனைப் பள்ளிக்கூடத்தில சேக்கப் போனப்ப, பள்ளிக்கூடத்தில நன்கொடை கேட்டிருக்காங்க. ஆனா அதுக்கு ரசீது கொடுக்க மாட்டோம்னு சொல்லியிருக்காங்க. நன்கொடை கொடுக்கறேன், ஆனா ரசீது இல்லாம கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, வேற பள்ளிக் கூடத்தில பையனைச் சேத்திருக்காரு."
"அப்படியா? அப்புறம்?" என்றார் பாஸ்கர்.
"விதிகளையெல்லாம் கொஞ்சம் கூட மீறாம பின்பற்றற அவரோட இயல்பு பற்றி இன்னும் இது மாதிரி பல சம்பவங்களைப் பல பேர் சொன்னாங்க. பெரும்பாலானோர் பொதுவா வருமானத்தில் காட்டாத சின்னச் சின்ன வருமானங்களைக் கூட சபரி தன் வருமானத்தில் காட்டி அதுக்கு வரி கட்டுவார்னு அவரோட ஆடிட்டர் சொன்னாரு.
"ஃபைல்ல அவர் ஃபோட்டோவைப் பார்த்தப்ப, அவரை எங்கேயோ பாத்த மாதிரி இருக்குன்னு சொன்னேன் இல்ல? அப்புறம்தான் ஞாபகம் வந்தது. ஒரு கல்யாண வரவேற்பில அவரைப் பாத்திருக்கேன். மேடைக்குப் போய் மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்றதுக்காக நிறைய பேர் வரிசையில நின்னுக்கிட்டிருந்தாங்க. சபரியும் நின்னுக்கிட்டிருந்தாரு. அவரைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் அவரை முன்னால போகச் சொன்னாங்க. பெண்ணோட அப்பா வந்து அவரை மேடைக்கு அழைச்சுக்கிட்டுப் போறதுக்காகக் கூப்பிட்டாரு. அவர் போகல. வரிசையிலதான் வருவேன்னு பிடிவாதமா இருந்து, அரை மணி நேரத்துக்கு மேல வரிசையில நின்னு மேடைக்குப் போனாரு. தன்னோட தனிப்பட்ட வாழ்க்கையில இவ்வளவு ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நேர்மையான அணுகுமுறையையும் கடைப்பிடிக்கிற ஒரு மனுஷன் நிச்சயம் லஞ்சம் வாங்கியிருக்க மாட்டார்னு நான் நினைக்கிறேன்" என்று முடித்தார் சேகர்
"ஒருவேளை, சாட்சியங்கள் அவரைக் குற்றம் செஞ்சவர்னு காட்டினா?"
"எனக்கு ஏமாற்றமா இருக்கும். நான் வேற என்ன சொல்ல முடியும்?"
"கவலைப்படாதே! சாட்சியங்கள்ளேந்தும் அவர் குற்றம் செய்யலேங்கற முடிவுக்குத்தான் நானும் வந்திருக்கேன். அவரை மாட்ட வைக்க சில பேர் செஞ்ச ஏற்பாடு இதுங்கறதை நான் கண்டு பிடிச்சிருக்கேன். ஆனா, அவரோட நடத்தையையும், பொதுவான செயல்பாடுகளையும் வச்சே இந்த முடிவுக்கு வந்த உனக்கு என்னோட பாராட்டுக்கள்" என்றார் பாஸ்கர்.
துறவறவியல்
அதிகாரம் 29
கள்ளாமை
குறள் 287களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
பொருள்:
அளவறிந்து நெறியோடு வாழ்வதை விரும்புகிறவர்களிடம் களவு என்னும் தீய சிந்தனை இருக்காது.
ல்லர்ஜி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2019 தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Delete