கனகசபை பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது, அந்த இளைஞனைப் பார்த்தார்.
அவர் அமர்ந்திருந்த அதே பெஞ்சில் அமர்ந்து, ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான் அவன்.
"ஏம்ப்பா இங்கே உக்காந்து படிக்கற? இங்கே ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கும். வீட்டில உக்காந்து படிக்கலாம் இல்ல?' என்றார் கனகசபை, அவனிடம்.
"இல்லை சார். வீட்டில படிக்கறதை விட, இங்கே படிக்கறதுதான் வசதியா இருக்கும்" என்றான் அவன்.
அவனுடன் பேசியதில், அவன் ஒரு குடிசைப் பகுதியில் வசிப்பதாகவும், அவன் வீட்டுக்கு அருகே எப்போதும் சத்தமும், சந்தடியும் மிகுந்திருக்கும் என்பதால், பெரும்பாலும் வெளியிடங்களில் அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் என்றும் தெரிந்தது.
அவன் பொறியியல் கல்லூரியில் படிப்பதாகக் கூறினான். அவன் பெயர், கல்லூரி விவரங்கள் ஆகியவற்றைக் கேட்டறிந்தார் கனகசபை.
அவன் தந்தை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பபவர் என்றும், அவர்கள் குடும்பம் வறுமையான குடும்பம் என்றும், அவன் கல்லூரிக் கட்டணத்தை எப்படியோ கஷ்டப்பட்டுதான் அவன் தந்தை சமாளிக்கிறார் என்றும் அறிந்து கொண்டார்.
அவருடைய பேரன் சதீஷ் கூட அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து விடுவான்.
அவருடைய பேரன் சதீஷ் கூட அடுத்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்து விடுவான்.
அந்த மாணவனுக்கு உதவி செய்யத் தீர்மானித்தார் கனகசபை. அவன் கல்லூரிக்குச் சென்று, கல்லூரி முதல்வரைச் சந்தித்து, அவனுடைய படிப்புச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்து விட்டு, உடனே கட்ட வேண்டிய கட்டணம் ஏதாவது இருந்தால், அதைச் செலுத்தி விடுவது என்றும் முடிவு செய்தார்.
ஆனால், அவனிடம் இதை அவர் சொல்லவில்லை. கல்லூரிக்குச் செல்லும்போது, அங்கே கல்லூரி முதல்வரின் அறைக்கு அவனை அழைத்து, தான் செய்யப் போகும் உதவியைச் சொல்லி, அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டார் கனகசபை .
அடுத்த நாளே அவன் படிக்கும் கல்லூரிக்குச் செல்வது என்று முடிவு செய்தார் கனகசபை. ஆனால், அடுத்த நாள் அவர் செல்லவில்லை. ஏதோ ஒரு சோம்பல். 'நாளைக்கு கண்டிப்பாகப் போய் விடலாம்' என்று நினைத்துக் கொண்டார்.
மறுநாள் அதிகாலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மனைவியை அழைத்தார். மனைவி, மகன், மருமகள், பேரன் எல்லோரும் ஓடி வந்தார்கள். அவரைப் படுக்க வைத்து ஆசுவாசப்படுத்த முயன்றனர். மகனை அருகில் அழைத்து அவனிடம் ஏதோ சொல்ல முயன்றார் கனகசபை.
"என்னடா சொல்றாரு?" என்றார் அவர் மனைவி, விசும்பிக் கொண்டே.
அவர் வாய்க்கு அருகே தன் காதை வைத்து அவர் சொன்னதைக் கேட்க முயன்ற அவர் மகன், "சரியாப் புரியல. என்னவோ காலேஜ்னு சொல்ற மாதிரி இருக்கு. சரி. நான் ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்றேன்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றான்.
"சதீஷ் காலேஜில சேர்ந்து படிக்கறதை பாக்காமயே போயிடப் போறேனேன்னு சொல்றாரோ என்னவோ?" என்றாள் மருமகள்.
"உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. சதீஷ் படிச்சு முடிச்சு, கல்யாணம் ஆகி அவனுக்குக் குழந்தை பிறக்கறதையெல்லாம் நீங்க இருந்து பாக்த்த்தான் போறீங்க" என்று அவர் மனைவி சொல்லிக் கொண்டிருந்தபோதே, கனகசபையின் உயிர் பிரிந்தது.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
பொருள்:
நாக்கு அடைத்துக்கொண்டு விக்கல் மேலெழுவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment