நாங்கள் பெங்களூரில் ரயில் ஏறி, சென்னையில் இறங்கி, டாக்சி பிடித்து என் பெற்றோர் வீட்டுக்கு வரும் வரையில், அவன் தூக்கத்தில்தான் இருந்தான். அவ்வப்போது தூக்கத்திலேயே சற்று சிணுங்கியதைத் தவிர, இடையில் விழித்துக் கொள்ளவில்லை.
காலை எட்டு மணிக்கு அவன் கண் வழித்தபோது, பக்கத்தில் நாங்கள் யாரும் இல்லை. புதிய இடத்தில் இருப்பதை உணர்ந்தும், அருகில் நாங்கள் யாரும் இல்லாததாலும், பயந்து அழ ஆரம்பித்து விட்டான்.
நானும், என் மனைவியும் அறைக்குள் ஓடி, அவன் அருகில் அமர்ந்து அவனை ஆசுவாசப்படுத்திய பிறகுதான், அவன் அமைதியானான்.
"ஏம்மா, தூங்கறப்ப நம்ப வீட்டில இருந்தேன். எழுந்திருக்கச்சே, வேற வீட்டில இருக்கேனே!" என்றான் ரவி.
"ஆமாம். பெங்களூர்ல இருக்கற நம்ம வீட்டில தூங்கிட்ட. நீ தூங்கிக்கிட்டு இருக்கும்போதே, நாங்க உன்னைத் தூக்கிக்கிட்டு ரயில்ல சென்னைக்கு வந்துட்டோம். இது உன் தாத்தா வீடு" என்று விளக்கினாள் என் மனைவி.
பெங்களூரில் ஒரு வீட்டில் தூங்கி, சென்னையில் இன்னொரு வீட்டில் விழித்தது, ரவிக்கு வியப்பூட்டுவதாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது.
ஒரு இடத்தில் தூங்கி இன்னொரு இடத்தில் விழித்துக் கொள்ளும் அனுபவம் எனக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சினிமாக்களில் மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள், "நான் எங்கே இருக்கேன்? நீங்கள்ளாம் யாரு?" என்று சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கேட்பது போல் கேட்க வேண்டியதாக இருக்கும்!
அதுவும், விழித்துக் கொள்ளும்போது நான் வேறொரு மனிதனாக இருந்தால் எப்படி இருக்கும்? 'நான் யார்?' என்று இன்னொரு கேள்வியையும் சேர்த்துக் கேட்க வேண்டி இருக்கும்!
சென்னைக்கு வந்தாலே, மாலை நேரங்களில் ஏதாவது ஆன்மீக நிகழ்ச்சிக்குச் சென்று விடுவேன் நான். சென்னை இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம் என்று நேரு சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தை என்பது சென்னைக்கு வெளியே சென்று வசிப்பவர்களுக்கு நன்றாகவே புரியும்! அன்றும் ஒரு கூட்டத்துக்குச் சென்றேன். 'மறுபிறவி' என்ற தலைப்பில் ஒருவர் பேசினார்.
நமக்குப் பல பிறவிகள் உண்டு என்ற கருத்தைப் பல ஆதாரங்களுடன் நிலைநாட்டிப் பேசினார் அவர்.
அவர் பேசி முடித்ததும், அவரிடம் கேள்விகள் கேட்கச் சிறிது நேரம் ஒதுக்கப்பட்டது.
"நாம் இறந்த பிறகு நமக்கு எந்த நினைவும் இருக்காது. அப்படி இருக்கும்போது, நாம் மீண்டும் பிறக்கிறோம் என்பது வெறும் நம்பிக்கை அடிப்படையில்தானே?" என்று கேட்டார் ஒருவர்.
"எனக்கு வயதாகி விட்டது. உங்களுக்கு முன்னால் நான் இறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள். மீண்டும் பிறந்ததும், உங்களுடன் தொடர்பு கொண்டு பேசுகிறேன் - அதாவது நான் மனிதனாகப் பிறந்தால்!" என்று பேச்சாளர் சொன்னதும், அவையில் சிரிப்பொலி எழுந்தது.
"சரி. சீரியஸான பதிலுக்கு வருகிறேன். நீங்கள் தினமும் தூங்குகிறீர்களே, தூங்கும்போது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?" என்றார் அவர், சிரிப்பலை அடங்கியதும்.
"இல்லை. ஆனால்..."
"இருங்கள். தூங்கியதும் உங்களுக்கு எந்த நினைவும் இருப்பதில்லை. மறுபடி விழித்ததும்தான் எல்லாம் நினைவுக்கு வருகிறது. அதுபோல்தான் மறு பிறவியும். மரணம் ஒரு உறக்கம். மறுபிறவி என்பது தூக்கத்திலிருந்து விழிப்பது போல். ஆனால் தூங்கி எழுந்திருக்கும்போது முந்தைய நாள் நமக்கு நினைவிருப்பது போல், மறு பிறவி எடுக்கும்போது முந்தைய பிறவி நமக்கு நினைவு இருப்பதில்லை. அதுதான் வேறுபாடு" என்றார் அவர்.
சற்று நேரம் அங்கே மௌனம் நிலவியது.
"வேறு கேள்விகள் இல்லை என்று நினைக்கிறேன். தத்துவம் என்பது வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். இந்த மறு பிறவித் தத்துவம் நம் வாழ்க்கைக்கு எப்படி உதவியாக இருக்க முடியும் என்று பார்க்கலாம். நாம் வாழ்க்கையில் பல விஷயங்களைச் செய்ய நினைக்கிறோம். ஒருவேளை, நாம் இறந்து போவதற்குள், நாம் செய்ய நினைத்த சில விஷயங்களைச் செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவற்றை அடுத்த பிறவியில் செய்ய முடியுமா? முடியாது. ஒருவன் அடுத்த பிறவியில் தன் முன் பிறவி எதிரி ஒருவனை நினைவு வைத்துக் கொண்டு பழி வாங்குவது என்பது சினிமாவில் வேண்டுமானால் நடக்கலாம்!"
கூட்டத்தில் மெலிதாகச் சிரிப்பு எழுந்தது.
"இந்தப் பிறவியில் நாம் செய்ய வேண்டியவற்றை, அடுத்த பிறவியில் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட முடியாது, இந்தப் பிறவியிலேயேதான் செய்தாக வேண்டும் என்பது போல், நாம் இன்று செய்ய நினைக்கும், செய்ய வேண்டிய விஷயங்களை இன்றே செய்து முடிப்பது என்ற பழக்கத்தை வைத்துக் கொள்ளலாமே! தர்மபுத்திரரிடம் ஒருவர் உதவி கேட்டு வந்தபோது, தர்மபுத்திரர் அவரை 'நாளைக்கு வாருங்கள்' என்று சொன்னாராம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பீமன், அர்ஜுனனிடம், 'தம்பி! நம் அண்ணன் காலனையே வென்று விட்டார். தான் நாளைக்கு உயிரோடு இருப்போம் என்ற நிச்சயத்துடன், உதவி கேட்டவரை நாளைக்கு வரச் சொல்கிறார் பார்!' என்றானாம். எனவே, எதையுமே நாளைக்குச் செய்யலாம் என்று நினைக்காமல், நாளை என்பது வேறொரு நாள், இன்று செய்ய வேண்டியவற்றை இன்றே செய்ய வேண்டும், நாளைக்கு ஒத்திப் போடக் கூடாது என்ற மனநிலையை வளர்த்துக் கொள்வோம்" என்று முடித்தார் அவர்.
துறவறவியல்
அதிகாரம் 34
நிலையாமை
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
பொருள்:
இறப்பு என்பது உறங்குவதைப் போன்றது, பிறப்பு என்பது உறக்கத்துக்குப் பின் விழித்துக் கொள்வது போன்றது.
"இன்று புதிதாய்ப் பிறந்தோம்"... பாரதியின் தன்னம்பிக்கை ஊட்டும் வைர வரிகள்... kathai arumai....
ReplyDeletehttps://www.scientificjudgment.com