"காசிக்குப் போனா எதையாவது விடணும்பாங்களே, நீ எதை விட்ட?" என்று தன் நண்பர் நடராஜன் கேட்டபோது, "கத்தரிக்காயை விட்டேன்" என்றார் சுந்தரமூர்த்தி, சிரித்துக் கொண்டே.
"உனக்குத்தான் கத்தரிக்கா பிடிக்காதே? நீ எப்பவுமே அதை சாப்பிட மாட்டியே!"
"அதனாலதான் அதை விட்டேன்!"
"டேய்! காசிக்குப் போறப்ப எதையாவது விடணும்னா, நமக்குப் பிடிச்ச எதையாவது விடணும்னு அர்த்தம். பிடிக்காத விஷயத்தை விட்டுட்டேன்னு சொல்றது ஏமாத்து வேலை இல்லையா?" என்று நடராஜன் சொன்னபோது, சுந்தரமூர்த்திக்கு இலேசாகக் கோபம் வந்தது.
"ஏண்டா, முன்னெல்லாம் நிறைய டிவி பாப்ப? இப்பல்லாம் டிவி பாக்கறதை சுத்தமா விட்டுட்ட? நாங்க யாராவது டிவி போட்டா, உடனே எழுந்து உள்ள போயிடற? ஏன் திடீர்னு டிவி மேல உனக்கு இவ்வளவு வெறுப்பு?" என்றார் சுந்தரமூர்த்தி.
"வெறுப்பெல்லாம் ஒண்ணுமில்லப்பா. டிவி அதிகமாப் பாத்துக்கிட்டிருந்தேனா? அந்தப் பழக்கத்தைக் குறைச்சுக்கணும்னு தோணிச்சு. அப்புறம், குறைச்சுக்கறதை விட, ஒரேயடியா விட்டுடலாமேன்னு தோணிச்சு. அதான் விட்டுட்டேன்" என்றான் அவர் மகன் சோமு.
"இந்த வயசிலேயே சாமியாராப் போகப் போறியா என்ன?" என்றார் சுந்தரமூர்த்தி, கேலியாக.
"நல்லாக் கேளுங்க, மாமா! சாப்பாட்டில கூட இப்படித்தான் செய்யறாரு. முன்னேயெல்லாம் அவருக்கு ஸ்வீட்னா ரொம்பப் பிடிக்கும். இப்ப ஸ்வீட் சாப்பிடறதையே நிறுத்திட்டாரு. பிளாட் ஷுகர் எல்லாம் கம்மியாத்தான் இருக்கு. ஏன் இப்படிப் பண்றாருன்னே தெரியல! கேட்டா, 'சும்மாதான்னு' சொல்லிச் சிரிக்கறாரு. எனக்குக் கூட இவர் சாமியாராப் போயிடுவாரோன்னு கவலையா இருக்கு!" என்றாள் சோமுவின் மனைவி அபிராமி.
"என்னடா இதெல்லாம்?" என்றார் சுந்தரமூர்த்தி.
"ஒண்ணும் இல்லப்பா. நமக்குப் பிடிச்ச விஷயங்களை விட்டுட முடிஞ்சா எப்படி இருக்கும்னு முயற்சி செஞ்சு பாத்தேன். விட முடியுங்கறப்ப, நம்மால எல்லாத்தையும் கட்டுப்படுத்திக்க முடியும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஸ்வீட் சாப்பிடக் கூடாதுன்னு இல்ல. அது மேல ஆசையை விட்டப்பறம், எப்பவாவது சாப்பிடலாம். ஆனா, ஸ்வீட் சாப்பிடணும்னு ஆசை வராது. டிவி பாக்கறதும் அப்படித்தான். முன்னெல்லாம் வெறி பிடிச்ச மாதிரி பாத்துக்கிட்டு இருந்துட்டு, இப்ப பாக்கணும்ங்கற ஆர்வமே இல்லாம இருக்கறது சந்தோஷமா இருக்கு. எப்பவாவது வேணும்னா பாப்பேன். எப்ப வேணும்னாலும், பாக்கறதை நிறுத்திட்டு எழுந்து போயிடுவேன். நமக்குப் பிடிச்ச எல்லா விஷயங்களையும் இப்படிப் பழக்கிக்கலாங்கற நம்பிக்கை இப்ப எனக்கு வந்திருக்கு!"என்றான் சோமு.
தான் கத்தரிக்காயை விட்டது ஏமாற்று வேலை என்று நண்பர் சொன்னது சுந்தரமூர்த்திக்கு நினைவு வந்தது.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 35
துறவு
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
பொருள்:
ஐம்புலன்களுக்கான ஆசைகளை விட வேண்டும். அதற்காக, நாம் விரும்பிய பொருட்களை விட வேண்டும்.
No comments:
Post a Comment