"நாம ரெண்டு பேரும் துறவிகள்தான். ஆனா, நமக்கு ஆசிரமம் இல்ல. என் பூர்வாசிரமப் பேரை நான் மாத்திக்கல. உன் பேரையும் நான் மாத்தி வைக்கல. ஏன் தெரியுமா?" என்றார் ருத்ரமூர்த்தி.
"எனக்கே இந்தக் கேள்வி உண்டு. ஆனா, உங்ககிட்ட கேக்கத் தயக்கமா இருந்தது" என்றார் வைரம்.
"சொல்றேன். என் உடையைப் பாத்துட்டு நான் துறவின்னு நினைச்சு வரவங்க, என் பேர் ருத்ரமூர்த்தின்னு தெரிஞ்சதும் பயந்து ஓடிடறாங்க!" என்று சொல்லிச் சிரித்தார் ருத்ரமூர்த்தி.
"எனக்குக் கூடத் துறவியா இருந்துக்கிட்டு வைரம்கற பேரோட இருக்கறது ஒரு மாதிரியா இருக்கு. துறவியானதும் எல்லாரும் பேரை மாத்திக்கற மாதிரி நாம ஏன் மாத்திக்கலன்னு உங்ககிட்ட நான் கேட்டிருக்கேன். ஆனா, நீங்க அதுக்கு பதில் சொல்லல."
"நான் துறவியானது மத்தவங்களுக்கு ஆத்ம ஞானத்தை போதிக்கறதுக்காக இல்ல. நான் அப்படிப்பட்ட ஒரு ஞானி இல்ல. துறவுங்கறது ஒரு வாழ்க்கை முறை. உலக சுகங்களை விட்டுட்டுத் தனியா, எளிமையா வாழறது. நான் துறவியானது அந்த அடிப்படையிலதான். நம்ம பெற்றோர் வச்ச பேரை மாத்திக்க வேண்டிய அவசியம் இல்ல. இன்னும் சொல்லப் போனா, ஒரு துறவிக்குப் பேரே அவசியம் இல்ல. அவரைக் குறிப்பிட மத்தவங்களுக்கு வேணும்னா அது தேவைப்படலாம். அவங்க எப்படி வேணும்னா கூப்பிட்டுட்டுப் போகட்டும். அது அவங்க விருப்பம்."
வைரம் மௌனமாக இருந்தார்.
"அதனாலதான், நான் ஆசிரமம் ஆரம்பிக்கல. வேற ஆசிரமத்தில் போய்ச சேரவும் இல்ல. ஊர் ஊராப் போவேன். கிடைச்ச இடத்தில தங்கிக்கிட்டு, கிடைச்ச உணவைக் கிடைச்ச நேரத்தில தின்னுட்டு, எந்தப் பற்றும் இல்லாம இருந்துக்கிட்டு, இந்தப் பிறவியை வாழ்ந்து முடிக்கணும்னு நினைச்சுத்தான் நான் துறவியானேன்."
"அப்படித்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கீங்க? நான் உங்ககிட்ட வந்து துறவியாகணும்னு சொன்னப்ப, இதையெல்லாம் எங்கிட்ட சொல்லிட்டுதானே என்னை சேத்துக்கிட்டீங்க?" என்றார் வைரம்.
"ஆனா, ஒரு தப்பு நடந்துடுச்சே!" என்றார் ருத்ரமூர்த்தி.
"மன்னிச்சுடுங்க" என்றார் வைரம்.
சில நாட்களுக்கு முன், தெருவில் அனாதையாகச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு எட்டு வயதுச் சிறுவன் மீது இரக்கம் காட்டி அவனுக்கு உணவளித்தார் வைரம். அவன் அவரிடம் ஒட்டிக் கொண்டு விட்டான். அவனைத் தங்களுடன் வைத்துக் கொள்ளலாம் என்று அவர் ருத்ரமூர்த்தியிடம் கூறினார். ருத்ரமூர்த்தி எதுவும் சொல்ல வில்லை.
அதற்குப் பிறகு, இரண்டு வாரங்கள் அந்தச் சிறுவன் அவர்களுடனேயே இருந்தான். அவனுடன் பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பதிலேயே வைரம் தன் நாளின் பெரும்பகுதியைக் கழித்தார். அவர்கள் வேறு இடத்துக்குச் சென்றபோது, அவனும் அவர்களுடன் வந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நபர் அவர்களைத் தேடி வந்தார். அந்தச் சிறுவன் அவருடைய மகன் என்றும், சில நாட்கள் முன்பு அவன் வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும், பல இடங்களில் அவனைத் தேடிய பிறகு, இரண்டு சாமியார்களுடன் ஒரு சிறுவன் இருப்பதாக யாரோ சொல்ல, அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே வந்திருப்பதாகவும் சொல்லி, அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்.
அந்தச் சிறுவன் சென்றதிலிருந்து, வைரம் எதையோ இழந்து விட்டது போல், சற்று மனச் சோர்வுடனேயே இருந்தார்.
"தப்புதான், சாமி! நான் அந்தப் பையன் மேல ஈடுபாடு வச்சிருக்கக் கூடாது. ஒரு வேளை அவனுக்கு சாப்பாடு கொடுத்ததோட விட்டிருக்கணும். அவனை வேற யாராவது பாத்துக்கிட்டிருந்திருப்பாங்க. அவனைக் கூட அழைச்சுக்கிட்டு வந்திருக்கக் கூடாது. தப்புப் பண்ணிட்டேன். இனிமே இது மாதிரி நடக்காது" என்றார் வைரம்.
"ஒரு துறவிக்கு அவனோட உடம்பே ஒரு சுமைதான். வேற வழியில்லாமதான் இதை சுமந்துக்கிட்டிருக்கோம். நம் உடம்பு மேலயே பற்று வைக்கக் கூடாதுன்னுதான், உயிர் வாழறதுக்கு வேண்டிய அளவுக்கு மட்டும் ஏதோ சாப்பிட்டுக்கிட்டு, எந்த ஒரு சுகத்துக்கும் இடம் கொடுக்காம வாழ்ந்துக்கிட்டிருக்கோம். அப்படி இருக்கறப்ப, இன்னொரு உடம்பை நம்மளோட சேத்துக்கறது எவ்வளவு பெரிய தப்பு!"
"மன்னிச்சுக்கங்க, சாமி. இப்படி ஒரு தப்பு இனிமே நடக்காம பாத்துக்கறேன்" என்றார் வைரம்.
"நான் சொல்றது நான் செஞ்ச தப்பைப் பத்தி!"
"நீங்க என்ன தப்பு செஞ்சீங்க?"
"நீ துறவியாகணும்னு சொல்லி எங்கிட்ட வந்ததும் உன்னை என் கூட வச்சுக்கிட்டது நான் செஞ்ச தப்புதான்! நீ அந்தப் பையனைக் கூட வச்சுக்கிட்ட மாதிரிதான் நான் உன்னை என் கூட வச்சுக்கிட்டதும்! உன் தப்பை நீ புரிஞ்சுக்கிட்டப்பறம்தான், என் தப்பு எனக்குப் புரிஞ்சிருக்கு. அவ்வளவு அறிவில்லாதவனா இருந்திருக்கேன் நான்! ஒரு துறவிக்குத் தன் உடம்பே சுமைங்கறப்ப, இன்னொரு உடம்பை என்னோட சேத்துக்கிட்டேனே! எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்!"
வைரம் என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்தார்.
"இனிமே, நீயும் நானும் தனித் தனியா இருந்து நம் துறவு வாழ்க்கையைத் தொடரலாம். அதுதான் துறவுக்கு உகந்ததாக இருக்கும். நான் வேற ஊருக்குக் கிளம்பறேன். நீ என்ன செய்யறதுன்னு நீயே முடிவு பண்ணிக்க!" என்று சொல்லி விட்டு எழுந்தார் ருத்ரமூர்த்தி.
துறவறவியல்
அதிகாரம் 35
துறவு
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
பொருள்:
பிறவித் துன்பத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு அவர்கள் உடலே ஒரு மிகையான பொருளாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்புகள் ஏன்?
No comments:
Post a Comment