About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, July 15, 2020

346. கைக்கடிகாரம்

"உங்களில் பல பேருக்கு சொந்த வீடு இருக்கும். இப்போது நீங்கள் உங்கள் வீட்டில் இல்லை. உங்களுக்குச் சொந்தமான ஒரு பொருள் உங்கள் கைவசம் இல்லை - சில மணி நேரங்களுக்காவது!

"நீங்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த இடம் உங்களுக்குச் சொந்தமா? நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி, உங்களுக்குக் காற்றை வழங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறி எதுவுமே உங்களுக்குத் சொந்தம் இல்லை. ஆனால் இவற்றை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

" நாம் அனுபவிப்பது எதுவும் நமக்குச் சொந்தம் இல்லை. நமக்குச் சொந்தம் என்று நாம் நினைக்கும் எல்லாம் நிரந்தரமாக நம் வசம் இருப்பதும் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் பொருட்களின் மீது நமக்கு இருக்கும் பற்றை ஓரளவாவது குறைத்துக் கொள்ள முடியும்."

ஞானானந்தர் பேசி முடித்ததும் கூட்டம் மௌனமாக எழுந்து வெளியேறத்  தொடங்கியது. சிலர் தாம் அமர்ந்திருந்த இருக்கைகளை உற்றுப் பார்த்து ஞானானந்தர் சொன்னதை நினைத்துப் பார்த்தனர். 

மேடைக்கு ஏறி சிலர் ஞானானந்தரைப் பார்த்து வணங்கி விட்டு ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டுச் சென்றனர். ஞானானந்தர் புன்னகையுடன் அனைவரையும் பார்த்து மௌனமாகத் தலையசைத்தபடியே அவர்கள் வணக்கங்கள், பாராட்டுக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார்.

மேடை ஓரத்தில் நின்ற பரஞ்சோதி எல்லோரும் சென்ற பிறகு ஞானானந்தர் அருகில் சென்று "சுவாமி! உங்களிடம் சில விளக்கங்கள் கேட்க வேண்டும்" என்றான் பணிவுடன். 

"உள்ளே வாருங்கள்" என்று அவனை உள்ளே அழைத்துச் சென்ற ஞானானந்தர் அவனுக்கு ஒரு நாற்காலியைக் காட்டி அதில் அமரச் சொன்னார். "இன்னும் சிறிது நேரத்துக்கு இந்த நாற்காலி உங்களுடையதுதான்!" என்று சிரித்துக் கொண்டே கூறியவர், தான் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, "எனக்கும் அப்படித்தான்!" என்றார்.

"சுவாமி! எனக்குத் துறவி ஆக வேண்டும் என்று விருப்பம். ஆனால் என் குடும்பத்தை விட்டு என்னால் வர முடியாது" என்றான்.

"விருப்பமே துறவுக்கு எதிரான விஷயம்தான். துறவு என்ற மனநிலை தானாக ஏற்படுவது. விருப்பத்தினால் ஏற்படுத்திக் கொண்டால் அது துறவாக இருக்காது" என்றார் ஞானானந்தர்.   

"நீங்கள் உங்கள் பேச்சில் பற்றுக்களை விட வேண்டும் என்கிறீர்களே!"

"எதுவும் நம்முடையது இல்லை என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் பற்றுக்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்று சொன்னேன். நான் என் ஆசிரமத்துக்கு துறவிகளை ரெக்ரூட் செய்வதற்காகப் பேசவில்லை! இல்லறத்தில் இருப்பவர்கள் பற்று வைப்பதால் ஏற்படும் மன வருத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் பேசினேன்."

"எனக்குச் சொந்தமானதை என்னுடையதில்லை என்று எப்படி நினைக்க முடியும் சுவாமி?" என்றான் பரஞ்சோதி.

"உங்கள் கைக்கடிகாரத்தைக் கழற்றிக் கொடுங்கள்!" 

பரஞ்சோதி சற்றுத் தயங்கி விட்டுப் பிறகு கைக்கடிகாரத்தைக் கழற்றி அவரிடம் கொடுத்தான்.

கைக்கடிகாரத்தை வாங்கித் தன் கையில் கட்டிக் கொண்ட ஞானானந்தர், "கையில் கட்டிக் கொண்டால் அழகாகத்தான் இருக்கிறது" என்றார் சிரித்தபடி. பிறகு, "இத்தனை நேரம் உங்கள் கையில் இருந்த கைக்கடிகாரம் இப்போது என் கையில் இருக்கிறது. இது எனக்குச் சொந்தம் என்று ஆகி விடுமா?" என்றார்.

பரஞ்சோதி மௌனமாக இருந்தான்.

"கடையில் ஒரு புத்தகம் வாங்குகிறீர்கள். அதை உங்கள் வீட்டு அலமாரியில் வைக்கிறீர்கள். அது உங்களுக்குச் சொந்தமானது என்று நினைக்கிறீர்கள். நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் வாங்கி வருகிறீர்கள். அதையும் உங்கள் புத்தக அலமாரியில் வைக்கிறீர்கள். ஆனால் அதை உங்களுக்குத் சொந்தம் என்று நினைப்பதில்லை - அதை நூலகத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதால்!  நீங்கள் கடையில் வாங்கிய புத்தகத்தையும் உங்களுக்குத் சொந்தமில்லை என்று நினைக்கப் பழகிக் கொள்ளலாம். 

" நூலகத்தில் வாங்கிய புத்தகம் உங்களிடம் 15 நாள் இருக்கும் என்றால், கடையில் நீங்கள் வாங்கிய புத்தகம் உங்களிடம் 15 வருடம் இருக்கலாம். அதற்குப் பிறகு அது கிழிந்து போகலாம், அல்லது நீங்களே தூக்கிப் போட்டு விடலாம். இடையில் அது தொலைந்து போகலாம். அல்லது உங்களிடம் யாராவது அதை இரவில் வாங்கிக் கொண்டு போய்த் திருப்பித் தராமல் இருக்கலாம் - உங்கள் கைக்கடிகாரத்தை நான் இன்னும் திருப்பிக் கொடுக்காத மாதிரி! அப்படியானால், அந்தப் புத்தகம் இரவல் வாங்கிச் சென்றவருக்குச் சொந்தம் என்று ஆகி விடுகிறது!"

"எனவே ஒரு பொருள் நமக்குச் சொந்தம் என்று நினைக்கும்போது அது ஒரு கால எல்லைக்கு உட்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் கால எல்லை குறுகியதாக இருக்கலாம், நீண்டதாக இருக்கலாம். பெரும்பாலும் அந்தக் கால எல்லை எவ்வளவு என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரியாது.

"கால எல்லைக்குட்பட்ட ஒரு விஷயத்தில் பற்று வைப்பது அறிவுள்ள செயல் இல்லை என்பதை உணர்ந்து நம் பற்றின் அளவைக் குறைத்துக் கொள்ள முயல வேண்டும். இதுதான் துறவு மனநிலையை அடைவதற்கான முதல் படி" என்றார் ஞானானந்தர். 

"இந்த உடம்பே நமக்குச் சொந்தம் இல்லை என்று சொல்கிறார்களே சுவாமிஜி?" என்றான் பரஞ்சோதி.

"என் பேச்சில் நான் அப்படிச் சொல்லவில்லையே!" என்று சிரித்தார் ஞானானந்தர். "நான் இன்று பேசியது துறவு மனப்பான்மையின் ஆரம்ப நிலையைப் பற்றி. நீங்கள் சொல்வது துறவிகளுக்கே கடினமான ஒரு உயர்ந்த நிலை. ஆனாலும் இதைப் புரிந்து கொள்வது சுலபம்."

"எப்படி சுவாமி?"

ஞானானந்தர் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, "நான் என்னுடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அது இன்னொருவருடைய சிறுநீரகமாகி விடுகிறது. அது எனக்குச் சொந்தமானதும் இல்லை. என்னால் அதைப் பயன்படுத்தவும் முடியாது. நூலகத்திலிருந்து இரவல் வாங்கி என் வீட்டில் வைத்திருந்த புத்தகம் இன்னொருவருக்கு இரவல் கொடுக்கப்பட்டு அவர் வீட்டில் இருப்பது போல்தான் இது!

"இப்போது இறந்து போனவரின் பல உடல் உறுப்புகளை எடுத்து மற்றவர்கள் உடலில் வைக்க முடிகிறது. நேற்று ஒருவருடைய உடலின் ஒரு பகுதியாக இருந்த ஒரு உறுப்பு  இன்று இன்னொருவரின் உடலின் ஒரு பகுதியாக இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி சில ஆன்மீக விஷயங்களை எளிதாகப் புரிந்து கொள்ள உதவுகிறது, பார்த்தீர்களா?"

"மிகவும் தெளிவாக விளக்கினீர்கள் சுவாமி. நீங்கள் கூறியவற்றை மனதில் வைத்துக் கொண்டு பொருட்களின் மீது எனக்கிருக்கும் பற்றுக்களைக் குறைத்துக் கொள்ளப் பார்க்கிறேன்" என்று சொல்லி எழுந்தான் பரஞ்சோதி.

"இருங்கள்!" என்று சொல்லித் தன் மணிக்கட்டிலிருந்து கைக்கடிகாரத்தைக் கழற்றி அவனிடம் நீட்டிய ஞானானந்தர், "அப்போதிலிருந்து நீங்கள் அடிக்கடி என் மணிக்கட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை நானே வைத்துக் கொண்டு விடுவேனோ என்ற கவலை உங்களுக்கு, பாவம்! என் கைக்கு அழகாக இருக்கிறது என்று வேறு சொல்லி விட்டேனா!" என்று சொல்லிச் சிரித்தார். 

"இல்லை சுவாமி. இதை நான் திரும்ப வாங்கிக் கொள்ளக் கூடாது. உங்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்றான் பரஞ்சோதி.

சுவாமிஜி தலையைப் பக்கவாட்டில் ஆட்டி விட்டு கைக்கடிகாரத்தை அவனிடம் கொடுத்தார். 

கைக்கடிகாரத்தை வாங்கிக் கொண்டு எழுந்த பரஞ்சோதி அருகில் இருந்த உண்டியலின் அருகில் சென்று கைக்கடிகாரத்தை அதற்குள் போடப் போனான். ஆனால் உண்டியலின் துவாரம் சிறிதாக இருந்ததால் அவனால் அதை அதற்குள் போட முடியவில்லை.

ஞானானந்தர் சிரித்துக் கொண்டே, "இது திருப்பதி உண்டியல் இல்லை. அதற்குள் இதை உங்களால் போட முடியாது. அப்படி நீங்கள் போட்டாலும் அது வெறும் அடையாளத் துறவாகத்தான் இருக்கும். ஆங்கிலத்தில் டோக்கனிஸம் என்று சொல்வார்கள். பற்றற்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது உங்களுக்கே புரியும். அதுதான் துறவு மன நிலையை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் நீங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளம்" என்றார்.

அறத்துப்பால் 
  துறவறவியல் 
  அதிகாரம் 35    
  துறவு  
குறள் 346
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.

பொருள்:
உடம்பை:ஃ 'தான்' என்றும், பொருட்களைத் 'தனது' என்றும் நினைக்கும் ஆணவ எண்ணத்தை அழிப்பவன் தேவர்களால் கூட அடைய முடியாத உயர்ந்த நிலையை அடைவான்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்













No comments:

Post a Comment