மடத்தின் தலைவரான பிறகும் பழையபடிதான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன்.
கிருஷ்ணன் அந்த மடத்தில் மூன்று தலைவர்களைப் பார்த்திருக்கிறான். மூன்று பேருமே தாங்கள் மடத்தலைவர் ஆனதும், எல்லோரையும் - தங்களை விட வயதில் மூத்தவர்களைக் கூட - ஒருமையில்தான் அழைப்பதுதான் வழக்கம்.
சில நாட்களில் இவரும் அந்த வழக்கத்துக்கு வந்து விடுவார் என்று நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன்.
அவர் முன் குனிந்து, தான் கொண்டு வந்த காகிதங்களை நீட்டினான் கிருஷ்ணன்.
"உக்காருங்க!" என்றார் சுவாமிஜி.
கிருஷ்ணன் சங்கடத்துடன் நெளிந்தான்.
மடத்தலைவரின் செயலரான அவன், மடத்தலைவர் முன்பு உட்கார்ந்து பேசுவது வழக்கம் இல்லை.
"பரவாயில்லை, சுவாமிஜி!" என்றான் கிருஷ்ணன்.
"சொல்லுங்க, என்ன இது?" என்றார் சுவாமிஜி, அவன் கொடுத்த காகிதங்களைப் பார்த்து.
"மடத்தோட பாங்க் கணக்கை ஆபரேட் பண்ண டிரஸ்ட்ல உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. நீங்க இந்த பேப்பர்கள்ள கையெழுத்துப் போட்டீங்கன்னா, இதை பாங்க்ல கொடுத்துடுவேன். அப்புறம்தான் நீங்க செக்ல கையெழுத்துப் போட முடியும்."
கிருஷ்ணன் நீட்டிய பேனாவை வாங்காமல், சுவாமிஜி ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தார்.
பிறகு, "போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ்ல நானும் ஒரு உறுப்பினர்தானே?" என்றார்.
"ஆமாம். நீங்க இப்ப மடத்தோட தலைவர் ஆயிட்டதால, சட்டப்படி நீங்கதான் டிரஸ்ட் போர்டுக்குத் தலைவர்."
"எக்ஸ் அஃபீஷியோ!" என்று சொல்லிச் சிரித்த சுவாமிஜி, "டிரஸ்ட் போர்டை எவ்வளவு சீக்கிரம் கூட்ட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கூட்டுங்க. நான் சில விஷயங்களை விவாதிக்கணும்" என்றார்.
'என்ன விவாதிக்கப் போகிறார்? டிரஸ்ட் உறுப்பினர்கள் யாரும் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று சொல்லப் போகிறாரா? அவர்கள்தான் எப்போதுமே தலையிடுவதில்லையே! ஒருவேளை, எனக்குத் தெரியாமல் தலையீடுகள் இருந்திருக்கலாம். பழைய சுவாமிஜி இவரிடம் சொல்லிப் புலம்பி இருப்பாரோ என்னவோ! அதுதான் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறாரோ?'
டிரஸ்ட் போர்டு கூட்டத்தில் சுவாமிஜியின் செயலர் என்ற முறையில் கிருஷ்ணனும் அமர்ந்திருக்க அனுமதி உண்டு.
கூட்டம் துவங்கியதும், சுவாமிஜி பேச ஆரம்பித்தார்.
"இந்த மடத்தை நிறுவிய மகானோட ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பறதுதான் நம்ப நோக்கம். இந்த மடத்தோட தலைவர்ங்கற முறையில என்னோட பொறுப்பு அதுதான். ஆனா நான் ஒரு துறவி. ஒரு துறவிக்குப் பற்று இருக்கக் கூடாது. எனக்குக் குடும்பம் இல்லை, தனிப்பட்ட முறையில சொத்துக்கள் இல்ல.
"இந்த மடத்தோட நிதியை நான் நிர்வகிச்சா, அது ஒரு பற்றை உருவாக்கிடும். நான் கையெழுத்துப் போட்டுத்தான் எந்தச் செலவையும் செய்யணுங்கறப்ப, எனக்கு வரவு செலவுகள்ள ஈடுபாடு வந்துடும். இது மாதிரி பற்று துறவுக்கு விரோதமான விஷயம்."
"நீங்க செலவு பண்ணப் போறதெல்லாம் மடத்துக்காகத்தானே?" என்றார் ஒரு உறுப்பினர்.
"மடத்துக்காகத்தான். ஆனாலும், இதுவும் ஒரு பற்றுதானே? நான் கண்ணை மூடிக்கிட்டுக் கையெழுத்துப் போட முடியுமா? ஏன், எதுக்குன்னு கேக்க வேண்டி இருக்கும், இப்படிச் செய்யலாமே, அப்படிச் செய்யலாமேன்னு மாற்று யோசனையெல்லாம் சொல்ல வேண்டி இருக்கும். இதெல்லாம் என்னைத் துறவிங்கற நிலையிலேந்து ஒரு குடும்பஸ்தன் அல்லது ஒரு வியாபாரிங்கற நிலைக்கு மாத்திடும்!
"எனக்கு முன்னால மடத்தோட தலைவரா இருந்த துறவிகள் இந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டு செஞ்சிருக்காங்கறது உண்மைதான். அவங்க இதை இயல்பா நினைச்சிருக்கலாம். தாமரை இலைத் தண்ணி மாதிரி பற்று இல்லாம அவங்களால இருக்க முடிஞ்சிருக்கலாம். ஆனா, நான் இந்தப் பற்றுகளை வச்சுக்க விரும்பல. உங்களுக்குள்ள ஒத்தரை நிர்வாகியா தேர்ந்தெடுத்துக்கணுங்கறது என்னோட விருப்பம்."
உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.
"அதோட, மடத்தோட நிர்வாகத்தையும் நான் பாக்க விரும்பல. ஆன்மீக விஷயங்கள்ள மட்டுமே நான் என்னை ஈடுபடுத்திக்க விரும்பறேன். அதனால, எனக்கு செயலாளர் யாரும் வேண்டாம். கிருஷ்ணன் எனக்கு முன்னால இருந்த சுவாமிஜிகளுக்கு செயலாளரா இருந்திருக்கார். நான் அவரை கவனிச்சிருக்கேன். அவர் ரொம்பத் திறமையானவர். உண்மையானவர். அவரை வேற ஏதாவது நிர்வாகப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கங்க. ஏன், அவரையே நிர்வாகியாப் போட்டு, அவர்கிட்ட எல்லாப் பொறுப்பையுமே ஒப்படைச்சாலும் சரி. ஆனா ஒரு நிபந்தனை. அவர் எங்கிட்ட வந்து எந்த யோசனையும் கேக்கக் கூடாது, எந்தப் பிரச்னையையும் எங்கிட்ட விவாதிக்கவும் கூடாது. யார் நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டாலும் அப்படித்தான்!" என்றார் சுவாமிஜி, முத்தாய்ப்பாக.
கிருஷ்ணன் சுவாமிஜியை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தான்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 35
துறவு
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
பொருள்:
ஒரு பற்றும் இல்லாமல் இருப்பதுதான் துறவுக்கு ஏற்ற இயல்பான நிலை. பற்று உடையவராக இருத்தல் மேலும் மேலும் ஆசைகள் உருவாக்க வழி வகுக்கும்.
No comments:
Post a Comment