"இந்த வயசில எதுக்குப் புதுசா ஒரு தொழிலை ஆரம்பிக்கிறீங்க? ஏற்கெனவே இருக்கிற தொழில் போதாதா?" என்றாள் பார்வதி.
"அதைத்தான் நம்ம பையனைப் பாத்துக்கச் சொல்லிட்டேனே! நான் என்ன செய்யறது?"
"அதுக்காக இந்த வயசில 5 கோடி ரூபா முதலீடு பண்ணிப் புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்கணுமா?"
"ஏதாவது செய்யணும்ல? என்னால சும்மா உக்காந்திருக்க முடியாது."
"வேலையிலேந்து ரிடயர் ஆனவங்கள்ளாம் கோவில், குளம் போறது, தங்களுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கிலே ஈடுபடறது மாதிரி ஏதாவது செய்யலியா?"
"எனக்கு ரிடயர்மெண்ட் எல்லாம் கிடையாது. ஒண்ணு ஏதாவது உடம்புக்கு வந்து நான் படுத்துக்கணும், அல்லது இந்த உலகத்தை விட்டே போயிடணும்" என்றார் சபாபதி.
அதற்குப் பிறகு, பார்வதி விவாதத்தைத் தொடர விரும்பவில்லை.
தான் தொடங்கப் போகும் புதிய தொழிலுக்காக நிலம் வாங்குதல், அரசு அங்கீகாரம் பெறுதல் போன்றவற்றுக்காக 2 கோடி ரூபாய் பணமாக வேண்டும் என்பதும், அதற்காகச் சில சொத்துக்களை விற்று 2 கோடி ரூபாய் ஏற்பாடு செய்திருப்பதும் நல்ல வேளை மனைவிக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டார் சபாபதி.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, "ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்பு சரியில்லையா?" என்றாள் பார்வதி.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ சொன்னதைப் பத்தி யோசித்துப் பாத்தேன். இனிமே புது பிசினஸ் எல்லாம் வேண்டாம்னு தீர்மானிச்சுட்டேன். எப்படியும், இருக்கிற பிசினஸை நம்ப பையன் பாத்துக்கறான். நம்மகிட்ட இருக்கற பணம் நம்ம ரெண்டு பேரும் வாழ்க்கை நடத்த தாராளமாப் போதும். இனிமே வீட்டிலேயே ஓய்வா இருக்கப் போறேன். அப்பப்ப உன்னை அழைச்சுக்கிட்டுக் கோவில், குளம், வெளியூர்ப் பயணம்னு போகப் போறேன்!" என்றார் சபாபதி.
"நம்பவே முடியலியே! திடீர்னு இப்படி மனசு மாறிட்டீங்களே! ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றாள் பார்வதி, மகிழ்ச்சியுடன்.
தொடர்ந்து, "நீங்க ராத்திரி முழுக்கத் தூங்காம, புரண்டு புரண்டு படுத்துக்கிட்டிருந்ததைப் பாத்து, புது பிசினஸ் பத்தி யோசனை பண்ணிக்கிட்டுத்தான் தூக்கம் வராம புரண்டுக்கிட்டிருக்கீங்கன்னு நினைச்சேன். இதைப் பத்தித்தான் யோசிச்சீங்களா?" என்றாள்.
சபாபதி மௌனமாக இருந்தார்.
முதல் நாள் இரவு 8 மணிக்கு பிரதமர் வெளியிட்ட பண மதிப்பு இழப்பு அறிவிப்பால், தான் ரொக்கமாக வைத்திருந்த 2 கோடி ரூபாயில் மிகப் பெரும்பாலான பகுதியை வங்கியில் போட முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டதை உணர்ந்த அதிர்ச்சியால்தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதும், நீண்ட நேர யோசனைக்குப் பின், இந்த இழப்பை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, இனி பணம் தேடும் முயற்சிகளில் ஈடுபடாமல், மனைவி சொன்னது போல் மன அமைதி தரும் செயல்களில் ஈடுபடுவதென்று முடிவெடுத்ததையும் தன் மனைவியிடம் அவர் சொல்லப் போவதில்லை.
"என்னங்க, இனிமே 500 ரூபா, 1000 ரூபா நோட்டெல்லாம் செல்லாதாமே! எங்கிட்ட ஏழாயிரம் ரூபாய்க்கு 500 ரூபா, 1000 ரூபா நோட்டு இருக்கு. அதை பாங்க்கில போட்டுடுங்க. நல்ல வேளை! நாம கையில அதிகமாப் பணம் வச்சுக்கல!" என்றாள் பார்வதி.
"ம்..." என்றார் சபாபதி.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 36
மெய்யுணர்தல்
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
பொருள்:
மயக்கம் நீங்கிக் குற்றமற்ற மெய்யுணர்வைப் பெற்றவர்க்கு, அம்மெய்யுணர்வு அறியாமையை நீக்கி, இன்ப நிலையைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment