"ஏன் காலையிலேந்து ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றாள் செண்பகம்.
"ஒண்ணுமில்லை" என்றார் கமலநாதன்.
"வாக்கிங் போறச்சே நல்லாதானே இருந்தீங்க? திரும்பி வரச்சே முகம் வாடி இருந்தது. ரொம்ப நடந்து சோர்வாயிட்டீங்களோன்னு நினைச்சேன். ஆனா, இவ்வளவு நேரம் ஆகியும் முகத்தில தெளிவு வரலே. அதுதான் கேட்டேன்"
கமலநாதன் பதில் சொல்லவில்லை. ஆனால், மனதுக்குள் மனைவியின் நுணுக்கமான கவனத்தை வியந்தார்.
வழக்கமாக ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பும் கமலநாதன், அன்று கிளம்பவில்லை.
"என்னங்க, ஆஃபீஸ் போகலையா? உடம்பு சரியில்லையா?" என்றாள் செண்பகம்.
"இல்ல. இன்னிக்குக் கொஞ்சம் லேட்டா போகப் போறேன்" என்றார் கமலநாதன்.
அதற்குப் பிறகு, செண்பகம் எதுவும் பேசவில்லை.
ஒன்பதே முக்கால் மணிக்கு வீட்டை வீட்டுக் கிளம்பிய கமலநாதன், "பாங்க்குக்குப் போயிட்டு வரேன். வந்ததும் ஆஃபீசுக்குக் கிளம்பிடுவேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.
பதினோரு மணிக்குக் கமலநாதன் வீட்டுக்குத் திரும்பியதும், செண்பகம் அவரிடம் கேட்டாள். "இப்ப உங்க முகம் பிரகாசமா இருக்கு. பாங்க்குக்கு ஒரு மைல் தூரம் நடந்து போயிட்டு வந்த களைப்பு கூட இல்லை."
கமலநாதன் சிரித்தார்.
"அப்பா! காலையிலேந்து முதல் தடவையா முகத்தில சிரிப்பு வந்திருக்கு! என்ன விஷயம்னு சொல்லுங்களேன்" என்றாள் செண்பகம்.
"காலையில வாக்கிங் போகச்சே, வழியில சீதாராமனைப் பாத்தேன். ரொம்ப சோர்வா இருந்தாரு. என்னன்னு கேட்டதுக்கு, அழுதுட்டாரு. அவர் மனைவியோட நகைகளை அடகு வச்சுக் கடன் வாங்கி இருக்காரு. அசலும், வட்டியும் கட்ட முடியாம, அவர் நகைகள் முழுகப் போற நிலையில இருக்காம். இன்னிக்குள்ள இருபதாயிரம் ரூபாய் கட்டணுமாம். நிறைய இடத்தில கேட்டும் அவருக்குப் பணம் கிடைக்கலியாம். அடகுக் கடைக்காரன் நகைகளை ஏலம் விட்டா, பாதி விலைக்குக் கூடப் போகாதாம். நகையெல்லாம் போயிடுச்சுன்னா, இப்ப இருக்கற விலையில, பொண்ணு கல்யாணத்துக்குப் புது நகை வாங்க முடியுமான்னு அழுதாரு."
"அதான் பாங்க்குக்குப் போய் பணம் எடுத்து அவருக்குக் கொடுத்துட்டு வந்தீங்களாக்கும்!" என்றாள் செண்பகம்.
"உனக்கு எப்படித் தெரியும்?"
"உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?"
"வெளிநாட்டில எல்லாம், எப்ப வேணும்னாலும் ஏ டி எம்ல போய்ப் பணம் எடுத்துக்கற வசதி இருக்கு. நம் நாட்டில அது வர, இன்னும் பத்து வருஷமாவது ஆகும்" என்றார் கமலநாதன்.
"அது சரி. அதுக்கு ஏன் இவ்வளவு நேரம் வருத்தமா இருந்தீங்க?"
"காலையில சீதாராமன் எங்கிட்ட அவர் கஷ்டத்தைச் சொல்லி அழுததும், அவருக்காக வருத்தப்பட்டேன். பாங்க்ல பணம் எடுத்து அவர் கிட்ட கொடுத்ததும், அவர் முகத்தில வந்த சந்தோஷத்தைப் பாத்ததும்தான் என்னோட வருத்தம் போச்சு. அது என் முகத்தில உனக்குத் தெரிஞ்சிருக்கு போலருக்கு" என்றார் கமலநாதன், சிரித்தபடி.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 23
ஈகை
குறள் 224இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
பொருள்:
நம்மிடம் உதவி கேட்பவரின் நிலை கண்டு நம் மனதில் ஏற்படும் வருத்தம், அவருக்கு நாம் உதவி செய்தபின் அவர் முகத்தில் தோன்றும் மலர்ச்சியைக் கண்டதும் நீங்கி விடும்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
No comments:
Post a Comment