
"சார்! டிசம்பர் குவார்ட்டர் அக்கவுன்ட்ஸ் முடிஞ்சுடுச்சு. இப்பதான் அக்கவுன்ட்ஸ் மானேஜர் எங்கிட்ட விவரங்களைக் கொடுத்துட்டுப் போனார்."
"சொல்லுங்க!" என்றார் ரமணன், சண்முகம் என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்தவர் போல்.
"இந்த குவார்ட்டர்லயும் நமக்கு நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கு. போன குவார்ட்டரை விடக் கொஞ்சம் அதிகமாவே நஷ்டம்!"
"ம்..."
"நம்ம பத்திரிகைக்கு நல்ல பேர் இருந்தும், ஓரளவுக்கு நல்ல சர்க்குலேஷன் இருந்தும், நாம இப்படி நஷ்டத்தில் இயங்கறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு."
"என்ன செய்ய முடியும்? வாசகர்கள்கிட்ட நம்ம நிலைமையை விளக்கிச் சொல்லி, பத்திரிகையோட விலையைக் கொஞ்சம் உயர்த்த வேண்டியதுதான்! அதைத் தவிர, விளம்பர வருமானத்தை அதிகரிக்கவும் நாம முயற்சி பண்ணிக்கிட்டுத்தானே இருக்கோம்?" என்றார் ரமணன்.
"சார்! போன வருஷம்தான் விலையை உயர்த்தினோம். மறுபடி ஏத்தினா அது சர்க்குலேஷனை பாதிக்கலாம். நீங்க சொன்னபடி, விளம்பர வருமானத்தை அதிகரிக்கறதிலதான் நாம கவனம் செலுத்தணும்" என்று சொல்லி விட்டுச் சற்றுத் தயக்கத்துடன் நிறுத்தினார் சண்முகம்.
ரமணன் மௌனமாக இருந்தார்.
"சார்! நான் கணக்குப் போட்டுப் பாத்தேன். நம்ம விளம்பரக் கொள்கையில நாம கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டா, பத்திரிகை விலையை உயர்த்தாமலேயே வருமானத்தைக் கூட்டி லாபம் வர அளவுக்குப் பத்திரிகையை நடத்தலாம்" என்ற சண்முகம், தான் தயாரித்திருந்த கணக்குகள் அடங்கிய தாளை ரமணன் முன் நீட்டினார்.
"மிஸ்டர் சண்முகம்! இதுக்கு கணக்கெல்லாம் தேவையில்லை. அதிக விளம்பரங்கள் வந்தா, வருமானம் அதிகரிச்சு லாபம் வரும்கறது எனக்குத் தெரியும். அதனால, நாம பத்திரிகையை இன்னும் நல்லா நடத்தி, இன்னும் சர்க்குலேஷனை அதிகரிச்சு, நல்ல லாபத்தோடயும், மார்க்கெட்ல நல்ல பேரோடயும் இயங்கலாம்கறதும் எனக்குப் புரியுது. ஆனா, இந்த காம்ப்ரமைஸை என்னால பண்ண முடியாது. வேற வழியில முயற்சி செஞ்சுதான் நஷ்டத்தைத் தவிர்த்து லாபமா இயங்கற வழியைப் பாக்கணும்!" என்றார் ரமணன்.
"சார்! மது, சிகரெட் விளம்பரங்களை வெளியிடறதில்லைங்கற உங்க கொள்கை உயர்ந்ததுதான். ஆனா, இப்படி நினைச்சுப் பாருங்க. நாம இந்த விளம்பரங்களைப் போடாததால யாரும் சிகரெட், மது அருந்தறதை நிறுத்திடப் போறதில்ல. நமக்கு ஒரு நன்மை கிடைக்கறப்ப, அதை ஏன் நாம பயன்படுத்திக்கக் கூடாது? இதில சட்டத்துக்கோ, தர்மத்துக்கோ விரோதமா எதுவும் இல்லையே?" என்றார் சண்முகம்.
"மிஸ்டர் சண்முகம்! பத்திரிகையில சிகரெட் மது விளம்பரங்களைக் கொடுக்கறவங்க எதுக்காகக் கொடுக்கறாங்க? பத்திரிகைக்கு வருமானம் கிடைக்கணும்கறதுக்காகவா? பத்திரிகையில வர விளம்பரத்தைப் பாத்துட்டு, வாசகர்கள் அவங்களோட பொருட்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துவங்க, அதனால அவங்களோட விற்பனை அதிகமாகுங்கறதுக்காகத்தானே? நம்ம பத்திரிகையில வர விளம்பரத்தைப் பார்த்து ஒண்ணு ரெண்டு பேர் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாகி, அதனால அவங்க பாதிக்கப்பட்டாலும், அதில நமக்குப் பொறுப்பு இருக்கு இல்ல? வேண்டாம், மிஸ்டர் சண்முகம்! சிகரெட், மது விளம்பரங்களால் வரக் கூடிய வருமானம், வளர்ச்சி இதெல்லாம் நமக்கு வேண்டாம். நாம கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை!" என்றார் ரமணன், உறுதியாக.
இன்றைய வியாபார உலகில் இப்படி ஒரு மனிதரா என்று தன் நிர்வாக இயக்குனரை வியப்புடனும், பிரமிப்புடனும் பார்த்தார் சண்முகம்.
துறவறவியல்
அதிகாரம் 32
இன்னா செய்யாமை
குறள் 311சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பொருள்:
மிகுந்த சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாக இருக்கும்.
No comments:
Post a Comment