கதிரேசன் அந்த நிறுவனத்தில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்தபோது, சுகவனம் என்ற மற்றொரு அதிகாரியின் கீழ் பணி செய்யும்படி நியமிக்கப்பட்டான்.
அலுவலகப் பதவிப் படிக்கட்டில் சுகவனமும், கதிரேசனும் ஒரே படியில் இருந்தாலும், சீனியர் என்ற அடிப்படையில் சுகவனம் கதிரேசனுக்கு மேலதிகாரி என்ற நிலையைப் பெற்றார். அத்துடன், வயதிலும் அவர் கதிரேசனை விடப் பதினைந்து வருடங்கள் மூத்தவர்.
கதிரவன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, சுகவனம் கதிரேசனிடம், "நான் இந்த கம்பெனியில ஒரு உதவியாளரா சேர்ந்து, 10 வருஷம் கழிச்சுத்தான் ஒரு அதிகாரி ஆனேன். நீ ஏதோ அதிகம் படிச்சவன்கறதால, உன்னை நேரடியா ஒரு அதிகாரியா ஆக்கிட்டாங்க. உனக்கு வேலை கத்துக் கொடுக்கற பொறுப்பை எங்கிட்ட கொடுத்திருக்காங்க. உழைப்புக்கும், சீனியாரிட்டிக்கும் கிடைக்கிற மரியாதை இதுதான்!" என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சுகவனம் சலித்துக் கொண்டது போல், கதிரேசனுக்கு வேலை கற்றுக் கொடுக்க அவர் அதிகம் கஷ்டப்பட வேண்டி இருக்கவில்லை. ஒரு சில வாரங்களிலேயே தன் வேலையைக் கற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டான் கதிரேசன். ஆயினும், அவனுக்கு மூத்த அதிகாரியான சுகவனத்தின் கீழ்தான் அவன் தொடர்ந்து செயல்பட வேண்டி இருந்தது
தன்னைப்போல் அல்லாமல், இளம் வயதிலேயே கதிரேசன் ஒரு அதிகாரியாகி விட்டதை சுகவனத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவன் வேலையில் குற்றம் கண்டு பிடிப்பதும், மற்றவர் முன் அவனைக் கடிந்து பேசுவதுமாக, அவன் மீது தனக்கிருந்த வெறுப்பை அவர் வெளிக்காட்டிக் கொண்டே இருந்தார்.
மற்ற ஊழியர்களில் சிலர் கதிரேசனிடம், "நீங்க ஏன் சார் இதையெல்லாம் சகிச்சுக்கிட்டிருக்கீங்க? மானேஜர்கிட்ட சொல்லி, சுகவனத்தின் கீழ் பணி செய்யாம உங்களுக்குன்னு தனிப் பொறுப்பு வாங்கிக்கங்க. மானேஜருக்கு சுகவனத்தைப் பத்தித் தெரியும் நீங்க உங்க நிலைமையைச் சொன்னா, அவர் புரிஞ்சுப்பாரு" என்று கூறினர்.
"பரவாயில்ல. அவங்களா எப்ப எனக்குத் தனிப் பொறுப்பு கொடுக்கறாங்களோ, அப்ப கொடுக்கட்டும்!" என்றான் கதிரேசன்.
ஆறு மாதங்கள் கழித்து, கதிரேசனுக்குத் தனிப் பொறுப்புக் கொடுக்கப்பட்டது. ஆயினும், இருவருக்கும் பொதுவாக இருந்த சில விஷயங்களில், சுகவனம் அவன் மீது குற்றம் கண்டு பிடிப்பதும், கிளை மேலாளரிடம் அவனைப் பற்றிப் புகார் செய்வதுமாக இருந்தார்.
ஓரிரு முறை கிளை மேலாளர் கதிரேசனைத் தனியாகக் கூப்பிட்டு விசாரித்து, அவன் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டார். ஆயினும், சுகவனம் ஒரு மூத்த அதிகாரி என்பதால், கிளை மேலாளர் அவரைக் கண்டிக்கவில்லை.
கதிரேசன் வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுடைய கிளை மேலாளர் பதவி உயர்வு பெற்றுத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்.
மற்ற அதிகாரிகளுள் ஒருவர் கிளை மேலாளராக நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. மூத்த அதிகாரி என்ற முறையில், கிளை மேலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று சுகவனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாகக் கதிரேசன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டான்.
முந்தைய கிளை மேலாளரின் பரிந்துரைதான் இதற்குக் காரணம் என்று அலுவலகத்தில் பரவலாக ஒரு கருத்து நிலவியது.
கதிரேசன் கிளை மேலாளராகப் பதவி ஏற்றுக் கொண்டதும், எல்லா ஊழியர்களும் அவன் அறைக்கு வந்து அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இறுதியாக, சுகவனம் அவன் அறைக்கு வந்தார்.
அவர் உள்ளே நுழைந்ததும், கதிரேசன் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று, "வாங்க சார்! உக்காருங்க" என்றான்.
சுகவனம் தயக்கத்துடன் அவன் எதிரே அமர்ந்தார்.
"சார் எதனாலோ உங்களுக்கு என்னைப் பிடிக்கல. எனக்கு நிறையத் தொந்தரவு கொடுத்தீங்க. இப்ப நான் உங்களுக்கு மேலதிகாரியா வந்துட்டதால, உங்களைப் பழி வாங்குவேன்னோ, பதிலுக்கு பதில் உங்களுக்குக் கஷ்டம் கொடுப்பேன்னோ நினைக்காதீங்க. பழைய மானேஜர் உங்களை எப்படி மரியாதையா நடத்தினாரோ, அதே மாதிரிதான் நானும் நடத்துவேன். நீங்க எப்பவும் போல உங்க வேலையைச் செய்யுங்க" என்றான் கதிரேசன்.
அறத்துப்பால்
துறவறவியல்
அதிகாரம் 32
இன்னா செய்யாமை
குறள் 312கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பொருள்:
ஆத்திரத்துடன் ஒருவர் நமக்குத் துன்பம் செய்தால் கூட, பதிலுக்கு அவருக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாக இருக்கும் .
No comments:
Post a Comment