About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, February 18, 2020

313. சிறையில் ஒரு கீதை!

"ஏம்ப்பா, நீ ஜெயிலுக்கு வந்து மூணு மாசம் ஆகப்போகுது. வந்ததிலேந்து ஒதுங்கியே இருக்கியே! என்ன தப்பு பண்ணிட்டு வந்திருக்க?"

நடுத்தர வயதைத் தாண்டி விட்ட அந்தக் கைதியை ஜகன் நிமிர்ந்து பார்த்தான்.

"நான் ஒரு தப்புமே பண்ணலீங்க!" என்றான் ஜகன்.

"அப்படிப் போடு அருவாளை! நானும் 20 வருஷமா பாத்துக்கிட்டிருக்கேன். இந்த ஜெயிலுக்கு வரவங்க எல்லாருமே பொதுவாப் பேசற ஒரே வசனம் இதுதான்!" என்றான் அந்தக் கைதி.

"20 வருஷமாவா? 20 வருஷமாவா ஜெயில்ல இருக்கீங்க?" என்றான் ஜகன் வியப்புடன்.

"பின்னே? ஆயுள் தண்டனையாச்சே!"

"ஆயுள் தண்டனைன்னா, அப்ப..." என்று இழுத்தான் ஜகன்.

"ஆமாம். கொலை பண்ணிட்டுத்தான் உள்ள வந்திருக்கேன். சாதாரண மனுஷனைக் கொலை செஞ்சிருந்தா ஆயுள் தண்டனைன்னா கூட ஏழெட்டு வருஷத்தில வெளியே விட்டிருப்பாங்க. ஆனா, நான் கொலை பண்ணினது ஒரு அரசியல் தலைவரையாச்சே! அதான் வெளியில விட மாட்டேங்கறாங்க. 25 வயசு வாலிபனா உள்ளே வந்தேன். இப்ப இளமையெல்லாம் போய் முதுமை வந்துக்கிட்டிருக்கு!" என்றான் அவன் சிரித்தபடி.

"ஓ! நீங்க... அண்ணாமலையா?" என்றான் ஜகன் அதிர்ச்சியுடன்.

"ஆமாம், பேப்பர்ல என்னைப் பத்திப் படிச்சிருப்பியே! இப்ப கூட என்னை விடுதலை செய்யச் சொல்லி யாரோ வழக்குப் போட்டு அது கோர்ட்ல இருக்கு. இதுல என்ன வேடிக்கைன்னா, யார் சொல்லி நான் இந்தக் கொலையைச் செஞ்சேனோ அவங்க பெரிய பதவிலல்லாம் இருந்து, சில பேரு செத்துக் கூடப் போயிட்டாங்க. ஆனா நான் இன்னும் ஜெயில்லயே இருக்கேன். அது இருக்கட்டும். உன் கதையைச் சொல்லு. நீ செய்யாத எந்தத் தப்புக்காக உன்னை உள்ளே போட்டிருக்காங்க?" என்றான் அண்ணாமலை கேலியுடன்.

சற்று நேரம் தயங்கிய பிறகு ஜகன் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

கன் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு விஷயம் அவன் வாழ்க்கையையே சீரழித்து விட்டது.

அவன் வேலை செய்து வந்த நிறுவனம் ஒரு சிறந்த நிறுவனம். அதில் வேலை செய்தவர்களுக்கு வேலை உறுதி, நல்ல சம்பளம், வேறு பல வசதிகள் எல்லாம் இருந்தன. ஒரு சாதாரண உதவியாளன் என்ற நிலையிலும் ஜகன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். 

ஒருமுறை அந்த நிறுவனத்தின் காஷியர் பத்தாயிரம் ரூபாய் காணாமல் போய் விட்டதாகப் புகார் செய்தார். உடனே நிறுவனத்தின் கதவுகள் மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரி ஒவ்வொரு ஊழியராக அழைத்து விசாரித்தார். ஜகனுடன் பணி புரியும் பாஸ்கர் விசாரிக்கப்பட்டதும், பாதுகாப்பு அதிகாரி நேரே ஜகனிடம் வந்து அவன் மேஜை இழுப்பறையைத் திறந்து பார்த்தார். 

காணாமல் போன பத்தாயிரம் ரூபாய் அங்கே இருந்தது!

ஜகனிடம் பாதுகாப்பு அதிகாரியும், மற்ற அதிகாரிகளும் விசாரித்தபோது அவன் அந்தப் பணம் எப்படித் தன் மேஜை இழுப்பறைக்குள் வந்தது என்று தனக்குத் தெரியாது என்று கதறினான். ஆனால் அவன் பேச்சு எடுபடவில்லை. 

ஜகனை உடனே வேலையை விட்டு நீக்கி விட்டார்கள். போலீசுக்குப் போக வேண்டாம் என்று நிறுவனம் முடிவு செய்ததால் ஜகன் சிறைக்குப் போகாமல் தப்பினான். 

ஆயினும் பல மாதங்களுக்கு வேறு வேலை கிடைக்காமல், மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை கொண்ட தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவன் பட்ட பாடு!

காணாமல் போன பணம் தன் மேஜை இழுப்பறைக்குள் எப்படி வந்தது என்பது அவனுக்கு விரைவிலேயே தெரிந்து விட்டது. காஷியர் தன் அறையைப் பூட்டாமல் சில நிமிடங்கள் தன் அறையை விட்டு வெளியே சென்றபோது ஜகன் காஷியர் அறைக்குள் சென்றதைத் தான் பார்த்ததாக பாஸ்கர் பாதுகாப்பு அதிகாரியிடம் கூறியதால்தான் அவர் வந்து ஜகனின் மேஜை இழுப்பறையைச் சோதனை செய்திருக்கிறார். 

தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்திய பாஸ்கர்தான் பணத்தைத் திருடித் தன் மேஜை இழுப்பறையில் வைத்திருப்பான் என்பதில் ஜகனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

பாஸ்கருக்குச் சூதாடும் பழக்கம் இருந்ததால் அவன்தான் பணத்தைத் திருடியிருக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தில் பணி செய்த அவன்  நண்பர்கள் சிலர் கூட அவனிடம் பிறகு சொன்னார்கள்.

பாஸ்கருக்கு ஒரு சிறிய தொந்தரவு கூடக் கொடுக்காத தனக்கு இவ்வளவு பெரிய தீங்கு செய்து விட்ட பாஸ்கரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஜகன் மனதில் அப்போதே தோன்றியது.

சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் இரவு ஒரு தியேட்டரில் இரண்டாவது காட்சி பார்த்து விட்டு ஜகன் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது தற்செயலாக பாஸ்கரை வழியில் சந்தித்தான். 

அந்த நேரத்தில் அந்த இடத்தில் வேறு எவரும் இல்லாத சூழ்நிலையில் பாஸ்கர் மீது அவனுக்கு இருந்த ஆத்திரத்தில், சாலையோரம் இருந்த ஒரு கட்டையை எடுத்து பாஸ்கரின் தோளில் ஓங்கி அடித்தான் ஜகன். 

ஆனால் எதிர்பாராதவிதமாக அந்தப் பக்கம் சைக்கிளில் வந்த ஒரு நபர் ஜகனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட, இன்னும் சிலர் அங்கே வந்து விட்டனர். 

ஜகனைப் பிடித்து அவர்கள் போலீசில் ஒப்படைக்க, அவன் மீது வழக்கு போடப்பட்டு அவனுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

"ஏம்ப்பா ஒரு ஆளைக் கட்டையால அடிச்சிருக்க. இன்னொத்தர் வந்து உன்னைத் தடுக்கலேன்னா நீ அவனை அடிச்சுக் கொலை கூடப் பண்ணி இருக்கலாம்! தப்பே பண்ணலேன்னு சொல்ற?" என்றான் அண்ணாமலை பெரிதாகச் சிரித்தபடி.

"என்னங்க நீங்க? இவ்வளவு தூரம் விவரமா சொன்னேனே! எனக்கும் அவனுக்கும் ஒரு பிரச்னையும் இல்லாதப்ப என் வாழ்க்கையையே அழிச்சவன் அவன்! அவன் மேல என் கோபத்தைக் காட்ட அவனை நான் ஒரு  அடி அடிச்சதுக்கு எனக்கு ஒரு வருஷம் ஜெயில் தண்டனையா? என்னங்க நியாயம் இது?" என்று குமுறினான் ஜகன்.

"தம்பி! நான் ஒரு கொலைகாரன்தான். ஆனா இந்த ஜெயில்ல 20 வருஷமா பல பேரைப் பாத்த அனுபவத்தில சொல்றேன். ஒத்தருக்குக் கெடுதல் செய்யறது தப்பு. நமக்குக் கெடுதல் செஞ்சவங்களுக்கு பதிலுக்கு கெடுதல் செய்யறது கூட தப்புதான். அப்படி செஞ்சா சட்டப்படி தண்டனை கிடைக்காட்டாலும், வேற விதத்தில தண்டனை கிடைக்கும். இதை நான் எத்தனையோ பேர் விஷயத்தில பாத்திருக்கேன்!" என்றான் அண்ணாமலை.

'கொலைகாரன்! ஆனா பெரிய ஞானி மாதிரி பேசறான்! ஆனா என் விஷயத்தில அவன் சொல்ற மாதிரிதானே நடந்திருக்கு? நான் அடிச்ச பாஸ்கர் ஒரு மாசம் ஆஸ்பத்திரியில இருந்துட்டு வெளியே வந்திருப்பான். ஆனா நான் ஒரு வருஷம் ஜெயில்ல இருக்கணுமே' என்று நினைத்துக் கொண்டான் ஜகன்.  

அறத்துப்பால் 
துறவறவியல் 
அதிகாரம் 32      
இன்னா செய்யாமை   
குறள் 313
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

பொருள்:
நாம் எதுவும் செய்யாதபோது நமக்குத் தீங்கு செய்தவருக்கு (பதிலுக்கு) நாம் தீங்கு செய்தால் கூட மீள முடியாத துன்பம் நமக்கு வந்து சேரும்.
பொருட்பால்                                                                                       காமத்துப்பால்


















No comments:

Post a Comment