கண்ணனுக்கு மூன்று வயது ஆகியிருந்தபோதே அவள் கணவன் வேலுச்சாமி தண்ணீர் லாரியில் அடிபட்டு இறந்து விட்டான்.
அரசாங்கத்தில் இழப்பீடு என்று ஏதோ ஒரு சிறு தொகை கொடுத்தார்கள். அதை வங்கியில் போட்டு அதிலிருந்து வந்த வட்டியிலும் வீட்டு வேலை செய்து கிடைத்த வருமானத்திலும் மகனை வளர்த்து வந்தாள் அம்முலு.
ஒரு வழியாகக் கண்ணனின் பள்ளிப்படிப்பு முடிந்து அவனைப் பொறியியல் கல்லூரியிலும் சேர்த்து விட்டாள். கண்ணன் பெற்ற நல்ல மதிப்பெண்களால் அவனுக்கு அரசுக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது. அரசுக்கல்லூரி என்பதால் கட்டணம் குறைவுதான்.
எப்படியும் நான்கு வருடங்கள் சமாளித்து விடுவாள். அப்புறம் அவன் படிப்பு முடிந்து ஒரு நல்ல வேலையும் கிடைத்து விட்டால் அவள் பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்து விடும்.
கண்ணன் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு செய்தி சொன்னான். ஒரு அறக்கட்டளையில் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்களாம். முதல் ஆண்டுப் பரிட்சையில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவன் கல்லூரியிலிருந்து எட்டு பேருக்கு அந்த உதவித்தொகை கிடைக்குமாம்.
கண்ணன் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், அவன் எட்டாவது இடத்தில் இருப்பதால், அவனுக்கு அந்த உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னான். அந்த உதவித்தொகை கிடைத்து விட்டால், கல்லூரிக்குக் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தை அந்த அறக்கட்டளையே செலுத்தி விடும்.
இதைக் கேட்டதும் அம்முலுவுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டன. என்னதான் குறைவான கட்டணம் என்றாலும், அதைக் கட்டுவதும் அவளுக்கு சிரமம்தான். தான் வேலை செய்கிற இடங்களில் முன்பணம் கேட்டு வாங்கிக் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டி வந்தாள். பிறகு மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்வார்கள்.
முதல் செமிஸ்டர் கட்டணம் கட்டுவதற்காகக் கடன் வாங்கி அந்தக் கடன் தீரும் சமயத்தில் இரண்டாவது செமிஸ்டருக்கான கட்டணம் கட்டும் நேரம் வந்து விட்டது. இனி இந்த சிரமம் இருக்காது. வீட்டுச் செலவுக்குப் பணம் சற்று தாராளமாகவே இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
"சீக்கிரமே அதற்கு மனுப் போட்டு விடு" என்றாள் அம்முலு. "இன்றைக்கே அப்ளை பண்ணி விடுகிறேன்" என்றான் கண்ணன்.
ஆனால் ஒரு மாதம் கழித்து கண்ணன் "அம்மா, அந்த ஸ்காலர்ஷிப் எனக்குக் கிடைக்கவில்லை. ஒரு ரேங்க் தள்ளிப் போய் விட்டது. எட்டு பேருக்குத்தான் கொடுத்தார்கள். நான் ஒன்பதாவது இடத்தில்தான் இருக்கிறேன்!" என்றான்.
அம்முலுவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், "பரவாயில்லை விடு. இதை எதிர்பார்த்தா உன்னை நான் கல்லூரியில் சேர்த்தேன்? நீ கிடைக்கும் என்று சொன்னதால் கொஞ்சம் எதிர்பார்த்தேன். இல்லாவிட்டால் இந்த ஏமாற்றம் கூட இருந்திருக்காது" என்றாள்.
தாய் இந்த ஏமாற்றத்தை இயல்பாக எடுத்துக் கொண்டதைப் பார்த்த கண்ணனின் கண்களில் நீர் முட்டியது.
சில நாட்கள் கழித்து, கண்ணன் தன் தாயிடம் வந்து "அம்மா உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்" என்றான்.
"சொல்லு" என்றாள் அம்முலு, பையன் யாரையாவது காதலிப்பதாகச் சொல்லப் போகிறானோ என்ற கவலையுடன்.
"நான் உன்னிடம் பொய் சொல்லி விட்டேன்."
"பொய்யா? என்ன அது?"
"எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை என்று சொன்னேனே அது பொய். நான் அப்ளை பண்ணவே இல்லை."
"ஏன்? நம் குடும்பம் இருக்கும் நிலை உனக்குத் தெரியாதா? அது கிடைத்திருந்தால் நமக்குப் பெரிய உதவியாக இருந்திருக்குமே!"
"எனக்குத் தெரியும் அம்மா. நான் எட்டாவது இடத்தில்தான் இருந்தேன். நான் அப்ளை பண்ணியிருந்தால் எனக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். எனக்கு அடுத்தபடியாக ஒன்பதாவது இடத்தில் இருந்த பையனுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் விண்ணப்பம் போடாமல் இருந்து விட்டேன்.
"அவன் அப்பா ஒரு குடிகாரர். அவனுக்கு ஃபீஸ் கட்டுவதற்காக அவன் அம்மா யாரிடமாவது கடன் வாங்கி வைத்திருந்த பணத்தைக் கூட எடுத்துக் குடித்து விடுவார். நம்மை விட அவன் மிகவும் கஷ்டப்படுகிறவன். இப்போது இந்த ஸ்காலர்ஷிப் அவனுக்குக் கிடைத்து விட்டதால், ட்ரஸ்டே ஃபீஸ் கட்டி விடும். அவன் அப்பாவின் தொல்லையால் அவன் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்கும். உனக்கும் கஷ்டம்தான். நான் கல்லூரி விட்டு வந்ததும் ஏதாவது கடையில் வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கப் பார்க்கிறேன்" என்றான் கண்ணன்.
அம்முலு கோபமாகக் கத்துவாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவள் கண்களில் கண்ணீர் மல்க நின்றாள். சற்று நேரம் பேச்சு வரவில்லை.
விசும்பிக்கொண்டே, "ராஜா! ஒன்னை நெனச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. நாம கஷ்டத்துல இருக்கும்போதும் நம்மளை விட அதிகமா கஷ்டப்படறவங்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கியே, இந்த மனசு யாருக்குடா வரும்? எத்தனை படிப்புப் படிச்சாலும் இப்படிப்பட்ட சிந்தனை அந்தப் படிப்பினால் வராதுடா.
"நீ வேலையெல்லாம் ஒண்ணும் செய்ய வேண்டாம். இத்தனை நாள் பாத்துக்கிட்ட மாதிரி, இனிமேயும் நான் பாத்துக்கறேன். இன்னும் மூணு வருஷந்தானே? ஓடிடும்! நீ செஞ்சிருக்கிற காரியத்தை மனசில நெனச்சுக்கிட்டிருந்தாலே எனக்குப் பெரிய தெம்பு வந்துடும்" என்று சொல்லித் தன் மகனின் கன்னத்தை அழுந்தக் கிள்ளினாள் அம்முலு.
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 7
மக்கட்பேறு
குறள் 69ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
பொருள்:
ஒரு தாய் தன் மகன் ஒரு உயர்ந்த மனிதன் என்று அறியும்போது, அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை விட மிக அதிகமான மகிழ்ச்சியை அடைவாள்.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
அய்யோ, சென்டிமென்ட் தாங்க முடியலை சார்
ReplyDeleteThank you. I appreciate your sentiments!
ReplyDelete