About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, April 14, 2018

151. கானகத்தைத் தேடி...

காட்டுக்குள் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது அந்த முதியவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

அயோத்தியிலிருந்து கிளம்பிப் பல நாட்கள் பயணம் செய்து, காட்டுக்குள் வழி கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் எங்கெங்கோ சுற்றி அலைந்து ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

சீதாப்பிராட்டியைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஆசிரமத்தின் வாயிலில் இருந்த ஒரு சீடரிடம் செய்தி சொல்லி அனுப்பிய சில நிமிடங்களில் சீதாப்பிராட்டி வெளியே வந்தார்.

முதியவரைப் பார்த்ததும், "மிகவும் களைப்படைந்திருக்கிறீர்களே! முதலில் உணவருந்துங்கள்" என்று சீதை சொல்லி முடிப்பதற்குள்ளேயே உள்ளிருந்து ஒரு சீடர் ஒரு பழத்தட்டுடன் வந்தார். அதை முதியவர் முன் வைத்தார்.

"நான் யார் என்று தெரிந்தால் நீங்கள் என்னை இப்படி உபசரிக்க மாட்டீர்கள் தாயே!" என்றார் முதியவர்.

"நீங்கள் யாராக இருந்தால் என்ன? இங்கே வருபவர்களுக்கு உணவளித்து உபசரிப்பது எங்கள் வழக்கம். அதுவும் உங்களைப் போன்ற முதியவர்களையும், அதிகக் களைப்புடன் வருபவர்களையும் முதலில் உணவருந்தச் செய்தபின்தான் அவர்கள் யார் என்றே கேட்போம்."

"இல்லை தாயே! நான் யார் என்று முதலில் சொல்லி விடுகிறேன். நான் ஒரு சலவைத் தொழிலாளி."

"அப்படியா? இந்த ஆசிரமத்தில் சலவை செய்து உடுத்தக் கூடிய உடைகளை யாரும் அணிவதில்லையே!"

"இல்லை தாயே! நான் சலவைக்குத் துணி கேட்டு வரவில்லை. நான்...நான்.. அயோத்தியிலிருந்து வருகிறேன்."

ஒருகணம் சீதையின் முகத்தில் ஒரு சோகச் சாயை படிந்தது. ஆனால் மறுகணமே முகமலர்ச்சியுடன், "அயோத்தியில் ராமபிரானும், அவரது சகோதரர்களும், மற்றவர்களும் நலம்தானே?" என்றார்.

அந்த முதியவர் விசும்பி அழத் தொடங்கினார். "நான் யார் என்பது இன்னும் தங்களுக்கு விளங்கவில்லை தாயே! தாங்கள் இந்தக் கானகத்தில் வந்து துன்பத்தை அனுபவிப்பதற்குக் காரணம் நான்தான். தங்களைப் பற்றி நான் அவதூறாகப் பேசியதைக் கேட்டுத்தான் ராமபிரான் தங்களைக் காட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தார்" என்றார் அழுகையினூடே.

சீதையின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. "பல வருடங்களுக்கு முன் நடந்த விஷயம் அது. அது பற்றி இப்போது என்ன?" என்றார்.

"இல்லை தாயே! ஏதோ ஒரு மனநிலையில் பொறுப்பற்று அப்படிப் பேசி விட்டேன். தீயில் குளித்தெழுந்து தங்கள் தூய்மையை உலகுக்கு உணர்த்தியவர் தாங்கள். அது தெரிந்தும் தங்களை இகழ்ந்து பேசியது நான் செய்த பெரிய கொடுமை."

சீதை பதில் பேசாமல் மௌனமாக இருந்தார்.

"நான் பேசிய பேச்சை எண்ணி எண்ணி இத்தனை ஆண்டுகளாக என்னையே நொந்து கொண்டிருக்கிறேன். தங்களை நேரில் பார்த்து என் தவறுக்கு வருந்தித் தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் தாங்கள் இருக்கும் இடத்தை விசாரித்தறிந்து, பல நாட்கள் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறேன்" என்றார் முதியவர்.

"பார்த்தீர்களா? உங்களை உணவருந்தச் சொல்லாமல் நான் பேசிக் கொண்டிருக்கிறேனே! முதலில் உணவருந்துங்கள்!" என்றார் சீதை.

"இல்லை தாயே! தாங்கள் எனக்கு ஏதாவது ஒரு தண்டனை அளிக்க வேண்டும். இந்த ஆசிரமத்தில் இருக்கும் மனிதர்களிடம் சொல்லி எனக்குப் பிரம்படியோ, கசையடியோ கொடுக்கச் சொல்லுங்கள்."

"சரி. தண்டனையை அனுபவிக்க உங்கள் உடலில் வலு இருக்க வேண்டும் அல்லவா? நீங்கள் பல நாட்கள் பயணம் செய்து வந்திருக்கிறீர்கள். வழியில் உங்களுக்குத் தேவையான அளவு உணவு கூடக் கிடைத்திருக்காது. எனவே முதலில் உணவருந்துங்கள்"

"உணவருந்தியபின் எனக்கு ஏதாவது தண்டனை அளிப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டபடியே பழங்களை அருந்தத் தொடங்கினார் அந்த முதியவர். சீதை உள்ளே சென்றார்.

சில நிமிடங்களுக்குப் பின் சீதை மீண்டும் வெளியே வந்தபோது, அவருடன் ஒரு சீடர் கையில் ஒரு மண்வெட்டியுடன் வந்தார்.

ஆசிரமத்துக்கு முன்பிருந்த மண் தரையில் மண்வெட்டியால் பள்ளம் தோண்டத் தொடங்கினார் அந்தச் சீடர்.

'இவர் ஏன் இப்போது பள்ளம் தோண்டுகிறார்? இந்தப் பள்ளத்தில் என்னை உயிரோடு புதைக்கப் போகிறார்களோ?' என்ற ஐயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் முதியவர்.

மண் ஈரப்பசையுடன் இருந்ததால் பள்ளம் தோண்டுவது கடினமாக இல்லை. சில நிமிடங்களுக்குள்ளேயே ஒரு சிறிய பள்ளம் உருவாக்கி விட்டது.

"போதும். இப்போது நீங்கள் தோண்டிய பள்ளத்தில் இறங்கி நில்லுங்கள்!" என்றார் சீதை.

 சீடர்  தோண்டுவதை நிறுத்தி விட்டு, மண்வெட்டியைக் கீழே போட்டு விட்டுப் பள்ளத்துக்குள் இறங்கி நின்றார்.

"பெரியவரே! பள்ளத்தில் இறங்கிய அவர் ஏன் பூமிக்குக் கீழே போகாமல் பள்ளத்துக்குள்ளேயே நிற்கிறார் என்று சொல்ல முடியுமா?" என்றார் சீதை.

"அவரைத் தான் பூமி தாங்கிக் கொண்டிருக்கிறதே!" என்றார் முதியவர்.

"பூமியின் மேற்பரப்பில் அவர்  நின்று கொண்டிருந்தபோது பூமி எப்படி அவரைத் தாங்கிக் கொண்டிருந்ததோ, அதேபோல்தான், அவர் பூமியைத் தோண்டித் தான் தோண்டிய பள்ளத்தில் நிற்கும் போதும் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது! 

"என் தந்தை ஜனகர் என்னை பூமியிலிருந்துதான் கண்டெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே நான் பூமியின் புதல்விதான். தன்னைத் தோண்டுபவர்களையும் தாங்கி நிற்கும் என் தாயின் பொறுமையில் சிறிதளவேனும் எனக்கும் இருக்காதா? 

"உங்களை நான் தண்டிக்க விரும்பவில்லை. என்னிடம் உங்கள் தவறைச் சொல்லி வருந்தி விட்ட திருப்தியுடன், நீங்கள் அயோத்திக்குத் திரும்பிப் போய் அங்கே மன நிம்மதியுடன் இருங்கள். 

"நீங்கள் வழியில் உண்பதற்காகக் கொஞ்சம் பழங்களை மூட்டையாகக் கட்டிக் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன். அதைப் பெற்றுக் கொண்டு கவனமாகப் பயணம் செய்யுங்கள். உங்களுக்கு வழி காட்டச் சற்று தூரம் வரை ஒரு சீடர் உங்களுடன் வருவார்" என்றார் சீதை.

அறத்துப்பால் 
இல்லறவியல் 
             அதிகாரம் 16             
பொறையுடைமை      
குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

பொருள்:  
தன்னைத் தோண்டுபவர்களையே இந்த பூமி தாங்கி நிற்பது போல், நம்மை இகழ்ச்சியாகப் பேசுபவர்களை  நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


 பொருட்பால்                                                                                         காமத்துப்பால்






















5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது நம்மில் பலருக்கும் உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது. ராமாயணக் கதை சொல்பவர்கள் கூட. உங்கள் வலைத்தளப் பதிவின் இணைப்பை எனக்கு அனுப்புங்கள். நன்றி.

      Delete
  2. தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது நம்மில் பலருக்கும் உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது. உங்கள் வலைத்தளப் பதிவின் இணைப்பை எனக்கு அனுப்புங்கள். நன்றி.

    ReplyDelete
  3. மிக்க நன்றி.
    //ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது நம்மில் பலருக்கும் உறுத்தலாகவே இருந்து வந்திருக்கிறது. //

    ஆம் உண்மைதான்...
    நான் எழுதிய கதை "எங்கள் ப்ளாக்" எனும் தளத்தில். அவர்கள் கேட்டு வாங்கிப் போடும் கதை என்று ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை தோறும் வெளியிடுவார்கள். அதே போன்று இடையில் சீதை ராமனை மன்னித்தாள் என்று எங்கள் ப்ளாக் தளத்தின் ஆசிரியர்களில் ஒருவரான நண்பர் ஸ்ரீராம் அவர்களின் அப்பா (அவர் எழுத்தாளர். இப்போதி இறைவனடி சேர்ந்துவிட்டார்.) இப்படி கதையின் முடிவு வரி இருக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தில் கொடுக்க நினைத்து முடியாமல் அதையே நண்பர் ஸ்ரீராம் அவர்கள் த்ளத்தில் போட்டு கதை எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். அங்கு பலரும் எழுதினார்கள். அங்கு எனதும் வந்தது. இதோ இதுதான் அந்தச் சுட்டி. https://engalblog.blogspot.com/2017/11/29.html

    எங்கள் தளம் https://thillaiakathuchronicles.blogspot.com இதில் நாங்கள் நண்பர்கள் இருவர் எழுதி வருகிறோம். நான் கீதா. நண்பர் துளசிதரன். கேரளத்தில் இருக்கிறார். நான் சென்னை. கல்லூரி நண்பர்கள். நண்பருக்கும் சுட்டி அனுப்பியுள்ளேன். கருத்திடுவார்

    கீதா

    ReplyDelete
  4. மிக்க நன்றி . சுட்டிக்கான தாங்கள் பதில் கண்டேன் மெயிலில்

    கீதா

    ReplyDelete