About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, April 3, 2018

145. உடைந்த கண்ணாடி

"அந்த ஆளு தொந்தரவு ரொம்பத் தாங்கல மச்சான்" என்றாள் பார்வதி.

"என்ன பண்றாரு?" என்றான் சங்கரன்.

"அம்மா இருக்கறப்ப ரொம்ப யோக்கியன் மாதிரி ஒதுங்கி இருப்பான். அம்மா இல்லாதப்ப, நான் வீட்டைப் பெருக்கறப்ப என் பக்கத்தில வந்து இடிக்கிற மாதிரி நின்னுக்கிட்டு 'இங்க ஒரு பேப்பர் கெடக்கு பார்'னு எதையாவது காட்டுவான். நான் திரும்பறப்ப தற்செயலா இடிக்கிற மாதிரி என் மேல இடிப்பான். சமையக்கட்டுல நான் பாத்திரம் விளக்கிக்கிட்டிருக்கச்சே எதையோ எடுக்க வர மாதிரி வந்து கொஞ்ச நேரம் நின்னு என்னை உத்து உத்துப் பாப்பான். இன்னும் இது மாதிரி பல விஷயம். இதையெல்லாம் ஒரு பொம்பளை வெலாவாரியா சொல்ல முடியுமா என்ன?"

"அவரு வீட்டில இல்லாத நேரமாப் பாத்து நீ வேலைக்குப் போக வேண்டியதுதானே?"

"காலையில ஒரு தடவை சாயந்திரம் ஒரு தடவை போக வேண்டியிருக்கு. ஒரு தடவையாவது அவன் வீட்டில இருந்துடறானே!"

"இங்க பாரு பார்வதி. சம்பளம் கம்மியா இருந்தாலும் நான் பாக்கறது கவர்ன்மெண்ட் வேலை. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போனா இங்கியே குவார்ட்டர்ஸில நமக்கு வீடு கூடக் கிடைக்கும். அவரு என்னோட மேலதிகாரி. அவரை நாம பகைச்சுக்க முடியாது. அவரு மேல புகார் கொடுத்தாக் கூட எடுபடாது. எதையாவது சொல்லி என்னை வேலையை விட்டுத் தூக்கிடுவாங்க. அவரு ரொம்பத் தொந்தரவு கொடுத்தா வேலையிலிருந்து நின்னுடு. வேற எங்கியாவது வேலை பாத்துக்கலாம். அப்படி வேற வேலை கெடைக்காட்டாலும் பரவாயில்லை. என் சம்பளத்தை வச்சுக்கிட்டு நம்மளால குடும்பம் நடத்த முடியாதா என்ன?" என்றான் சங்கரன்.

பார்வதி பதில் சொல்லவில்லை.

த்திய அரசு நிறுவனம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணியாற்றுபவன் சங்கரன். அந்த நிறுவனத்தின் குடியிருப்பில் சில வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தாள் பார்வதி. அவற்றுள் உயர் அதிகாரியான ஆறுமுகத்தின் வீடும் ஒன்று. அங்கு தனக்கு ஏற்பட்டு வந்த தொந்தரவுகளைத்தான் அவள் தன் கணவன் சங்கரனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ன்று மாலை பார்வதி ஆறுமுகம் வீட்டுக்கு வேலைக்குப் போனபோது அங்கே ஆறுமுகம் மட்டும்தான் இருந்தார்.

"அம்மா இல்லீங்களா?" என்றாள் பார்வதி.

"அதான் நான் இருக்கேனே!" என்றார் ஆறுமுகம்.

பார்வதி பதில் பேசாமல் துடைப்பத்தை எடுத்துப் பெருக்க ஆரம்பித்தாள்.

குனிந்து பெருக்கிக் கொண்டிருந்தவள் தன் பின்னால் நிழலாடியதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

ஆறுமுகம் அவளுக்குப் பின்னே வந்து நின்று கொண்டிருந்தார்!

"என்னய்யா வேணும்?" என்றாள் பார்வதி.

ஆறுமுகம் பதில் பேசாமல் அவளை இழுத்து அணைக்க முற்பட்டார்.

"விடுங்க" என்றாள் பார்வதி.

"இன்னிக்கு ஒருநாள் மட்டும் என் இஷ்டப்படி நடந்துக்க. அப்புறம் நான் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன். இங்க பாரு" என்று கையைப் பிரித்துக் காட்டினார். கையில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்தது.

பார்வதி கீழே கிடந்த துடைப்பத்தை எடுத்து ஆறுமுகத்தின் தலை, முகம், உடல், கை, கால் என்று எல்லா இடங்களிலும் விளாசினாள். அவருடைய மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்து சிதறியது.

"நிறுத்து! என்ன பண்றே நீ? தொலைச்சுடுவேன் ஒன்னை. ஒன் புருஷனுக்கு வேலை போகணுமா?" என்று கத்தினார் ஆறுமுகம், அதிர்ச்சியிலும் வலியிலும் துள்ளிக்கொண்டே.

"ஏண்டா! ஏழைப்பட்டவங்கன்னா என்ன வேணா பண்ணலாம்னு நெனச்சுக்கிட்டிருக்கியா நீ? நான் ஒன்னை என்ன பண்ணப் போறேன் பாரு!" என்ற பார்வதி "டேய் செந்தில்!" என்றாள்.

"இங்கதான் இருக்கேன் அக்கா!" என்று சொல்லியபடி ஒரு இளைஞன் அருகில் வந்தான்.

"டேய் யார்ரா நீ? எதுக்குடா வந்தே நீ? போலீசைக் கூப்பிடட்டுமா?" என்றார் ஆறுமுகம்.

"கூப்பிடுங்க சார்!" என்றான் செந்தில் சிரித்துக்கொண்டே.

"ஏண்டா பேமானி! என்ன நெனச்சுக்கிட்டிருக்க நீ? போலீசைக்  கூப்பிட்டா நாங்க பயந்துடுவாமா? கூப்பிடு! போலீஸ் வரட்டும். செந்தில் அவங்ககிட்ட அவன் எடுத்த வீடீயோவைப் போட்டுக் காட்டுவான். அப்புறம் யாரை ஸ்டேஷனுக்கு அழைச்சுக்கிட்டுப் போகணும்னு அவங்களே முடிவு பண்ணுவாங்க!" என்றாள் பார்வதி சிரித்துக் கொண்டே.

"என்னது வீடியோவா?" என்றார் ஆறுமுகம் மிரண்டவராக.

"சாயந்தரம் இருக்க மாட்டேன்னு அம்மா காலையிலேயே எங்கிட்ட சொல்லிட்டாங்க. அம்மா இல்லாத நேரத்தில நீ எங்கிட்ட ஏதாவது விஷமம் பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். அதான் என் பக்கத்து வீட்டுப் பையன் செந்திலை என்னோட கூட்டிக்கிட்டு வந்தேன். வாசல்ல நின்னுக்கிட்டு அவன் கவனிச்சுக்கிட்டே இருந்தான். நீ என் பக்கத்தில வந்ததுமே அவன் உள்ளே வந்து அவனோட ஃபோன்ல வீடியோ எடுக்க ஆரம்பிச்சுட்டான்."

"இங்க பாரும்மா. வீடியோவெல்லாம் வேண்டாம். என்னை விட்டுடு. இனிமே இது மாதிரி நடக்காது" என்றார் ஆறுமுகம், கெஞ்சும் குரலில்.

"இனிமே நான் இங்க வேலை செய்ய முடியாது. அம்மாகிட்ட ஏதாவது காரணம் சொல்லிட்டு வேலையிலிருந்து நின்னுக்கறேன். என்னைப் பழி வாங்கணும்னு நெனைச்சு என் புருஷன் வேலைக்கு உலை வெக்க முயற்சி பண்ணினே, இந்த வீடியோ ஒன்னோட மேலதிகாரிக்குப் போயிடும்! என் புருஷனுக்கு நீ சின்னத் தொந்தரவு கொடுத்தாலும் போச்சு. ஜாக்கிரதை!" என்ற பார்வதி "வாடா போலாம்" என்று செந்திலை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.

கீழே சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பார்த்துக் கொண்டே நின்றார் ஆறுமுகம்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி.

பொருள்:  
இன்னொருவர் மனைவியை அடைவது எளிது என்று நினைத்துச் செயல்படுபவன் எப்போதும் அழியாத பழிக்கு ஆளாவான்.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





















No comments:

Post a Comment