"என்ன செய்யலாம் சொல்லுங்க?" என்று கேட்டான் பரத்.
"பத்தாயிரம் ரூபா களவாடி இருக்கான். வேலையை விட்டு அனுப்ப வேண்டியதுதான். உங்கப்பா அப்படித்தான் செஞ்சிருப்பாரு" என்றார் தட்சிணாமூர்த்தி. அவர் பரத்தின் தந்தையின் காலத்திலிருந்தே நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பவர்.
"அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். வீட்டிலே எங்ககிட்டல்லாம் கூட அப்படித்தான் இருப்பாரு."
"அடேயப்பா! எப்படிப்பட்ட ஆளு அவரு! அவர்கிட்ட நிலைச்சு வேலை செஞ்சவன் நான் ஒத்தன்தான். எனக்கு முன்னாடி இருந்த மூணு மானேஜர்கள் தாக்குப் பிடிக்காம ஓடிட்டாங்க. மத்த ஊழியர்களெல்லாம் கூட வேற வேலை கெடச்சுருந்தா போயிருப்பாங்க!"
"சின்னத் தப்புக்குக் கூட தண்டனை கொடுப்பாரா?"
"ஆமாம். அடிக்கடி லேட்டா வந்தாங்கங்கறதுக்காகவே ரெண்டு மூணு பேரை வேலையை விட்டு அனுப்பிச்சுட்டார்னா பாத்துக்கங்களேன்!"
பரத் மணியை அடித்து பியூனை வரவழைத்தான். "காஷியர் சுகுமாரைக் கொஞ்சம் வரச் சொல்லு!" என்றான்.
"நீங்க எதுக்கு சார் அந்தத் திருட்டுப் பயகிட்ட பேசணும்? நீங்க அவனை வேலையை விட்டு நீக்கிட்டீங்கன்னு நானே சொல்லிடறேன். போலீசுக்குப் போகணுமா, இல்ல, நாமளே அவன்கிட்ட பணத்தை வசூலிக்க வேண்டிய விதத்தில வசூலிச்சுடலாமான்னு மட்டும் சொல்லிடுங்க" என்று தட்சிணாமூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சுகுமார் உள்ளே வந்தான்.
"பணத்தை எடுத்தீங்களா?" என்றான் பரத், சுகுமாரைப் பார்த்து.
சுகுமார் தலையைக் குனிந்தபடியே நின்றான்.
"எதுக்கு எடுத்தீங்க?"
"ஒரு கடன்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. ரெண்டு நாள்ள எங்கேயாவது புரட்டிப் பணத்தைத் திரும்ப வச்சுடலாம்னு நெனச்சு ஒரு பதட்டத்தில எடுத்துட்டேன்" என்றான் சுகுமார், மெல்லிய குரலில்.
"இப்ப வேலையே போகப் போகுதே, என்ன செய்யப் போறீங்க?" என்றான் பரத்.
சுகுமார் பேசாமல் நின்றான்.
"சரி. ரெண்டு நாள்ள பணத்தைப் புரட்டிக் கொடுத்துடுவீங்களா?"
"சார்!" என்றான் சுகுமார்.
"எடுத்த பணத்தைத் திரும்பக் கொடுத்துட்டு வேலையில சேந்துக்கங்க!" என்றான் பரத்.
"சார்!" என்றான் சுகுமார், நம்ப முடியாமல்.
"இப்ப உங்களுக்கு வேலை கிடையாது. பணத்தைத் திருப்பிக் கொடுக்கறதுக்கு உங்களுக்கு மூணு நாள் டயம் தரேன். அதுக்குள்ளே பத்தாயிரம் ரூபாயை மானேஜர் கிட்ட கொண்டு வந்து கொடுத்துட்டு மறுபடியும் வேலையில சேந்துக்கங்க. ஆனா நீங்க இனிமே காஷியரா இருக்க முடியாது. மானேஜர் உங்களுக்கு வேற வேலை அலாட் பண்ணுவாரு."
"சார்! நான் இதை எதிர்பாக்கல. ரொம்ப நன்றி சார். இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டேன் சார்!" என்றான் சுகுமார், கை கூப்பியபடியே.
சுகுமார் சென்றதும், "என்ன சார்! இப்படிப் பண்ணிட்டீங்க?" என்றார் தட்சிணாமூர்த்தி.
பரத் பதில் சொல்லாமல் சிரித்தான்.
சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் பரத் அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, அலுவலகம் முழுவதும் தோரணங்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.
தன் அறைக்குச் சென்றதும், தட்சிணாமூர்த்தியை அழைத்து 'என்ன விசேஷம்?' என்று கேட்க நினைத்தான்.
அதற்குள் தட்சிணாமூர்த்தியே உள்ளே வந்து விட்டார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்!" என்றார் சிரித்தபடியே.
"உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் பிறந்த நாள் எல்லாம் கொண்டாடறது இல்லையே!" என்றான் பரத்.
"எனக்குத் தெரியாது சார். நம்ப ஊழியர்கள் எல்லாரும் எப்படியோ இன்னிக்கு உங்க பிறந்த நாள்னு தெரிஞ்சுக்கிட்டு, காலையில சீக்கிரமே ஆஃபீஸுக்கு வந்து, ஆயுத பூஜைக்குப் பண்ற மாதிரி தோரணம் எல்லாம் கட்டி, உங்க பிறந்த நாளைக் கொண்டாடறாங்க. ரெண்டு நாள் முன்னாடியே அவங்களுக்குள்ளேயே பணம் வசூலிச்சு, தோரணம், மாலை, இனிப்புகள் எல்லாம் வாங்கி இருக்காங்க."
"அப்பா இருந்தபோதும் இப்படியெல்லாம் கொண்டாடுவாங்களா?"
"இல்ல சார்! உங்கப்பாகிட்ட எல்லாருக்கும் பயம்தான் இருந்தது. உங்க மேல எல்லாருக்கும் மதிப்பு, மரியாதை, விசுவாசம் எல்லாம் இருக்கு. இந்த வித்தியாசத்தை என்னால பாக்க முடியுது!" என்றார் தட்சிணாமூர்த்தி
அறத்துப்பால்
இல்லறவியல்
அதிகாரம் 16
பொறையுடைமை
குறள் 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பொருள்:
தனக்குத் தீங்கு செய்தவரை தண்டித்தவரை உலகத்தார் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள். தனக்குத் தீங்கு செய்தவரைப் பொறுத்துக் கொண்டவரை உலகத்தார் பொன் போல் மதித்துப் போற்றுவர்.
Excellent !
ReplyDeleteThank you RR
Delete