About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Friday, April 6, 2018

148. தேர்தல் முடிவு!

அக்கவுன்ட்ஸ் மானேஜர் அரவிந்தும் சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆஃபீஸர் ரேகாவும் பேசிக் கொள்ளும்போது, ரேகாதான் அரவிந்துக்கு மேலதிகாரியோ என்று தோன்றும்!

அரவிந்தை விட ரேகா இரண்டு வயது மூத்தவள் என்பதைத் தவிர இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

ஒரு வருடம் முன்பு, ரேகா அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த புதிதில், அவள் திருமணம் ஆனவள் என்று தெரிந்தும், ஒருமுறை இருவரும் தனிமையில் இருந்தபோது, அரவிந்த் அவளிடம் தவறான முறையில் பேச யத்தனித்தபோது, அவனைக் கடுமையாகப் பேசி, தனது முறையற்ற பேச்சுக்கு அவனை மன்னிப்புக் கேட்க வைத்தாள் ரேகா.

அரவிந்த் தன்னிடம் மன்னிப்புக் கேட்ட பிறகு, ரேகா அவனிடம் இயல்பாகவே நடந்து வந்தாள். ஆயினும் அவன் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பது போல், அவனிடம் சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.

ரேகா தன்னைப் பற்றி யாரிடமாவது தவறாகச் சொல்லி விடுவாளோ என்ற பயத்தில், அரவிந்தும் அவளை வயதில் மூத்தவள் என்று கருதி மரியாதையாக நடந்து கொள்வது போல் சற்று அடக்கியே வாசித்து வந்தான். 

அடிக்கடி அவளிடம் விளையாட்டாக ஏதாவது பேசித் தனக்கு அவள் மீது தவறான எண்ணம் ஏதும் இல்லை என்று காட்டிக் கொள்ள முயன்று வந்தான்.

"என்ன ரேகா மேடம்! எலக்‌ஷன்ல யாரு ஜெயிப்பாங்க?" என்றான் அரவிந்த்.

"என்ன எலக்‌ஷன்?" என்றாள் ரேகா.

"மறந்துட்டீங்களா? நாளைக்கு நம்ம கம்பெனி ஆண்டு விழாவிலே பெண் ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து ஆண் ஊழியர்கள்ள ஒத்தரை 'பெஸ்ட் மேன்'னு தேர்ந்தெடுக்கப் போறீங்களே, அந்த எலக்‌ஷனைப் பத்திக் கேட்டேன்!"

"ஓ! அதுவா? நிச்சயமா நீ ஜெயிக்கப் போறதில்ல!" என்றாள் ரேகா.

"என்ன ரேகா! இப்படிச் சொல்லிட்டீங்க? நான்தான் ஜெயிப்பேன்னு நம்ம ஆஃபீஸ்ல எல்லாரும் பேசிக்கிறாங்க!"

"பெண்கள் எதை வச்சு ஓட்டுப் போடுவாங்கன்னு ஆண்களுக்கு எப்படித் தெரியும்?"

"சரி. உங்க ஓட்டு யாருக்கு?"

"யாரு ஜெயிக்கப் போறாங்களோ அவங்களுக்குத்தான்!"

"அப்படின்னா நிச்சயமா எனக்கு இல்ல!"

"அடேயப்பா! என்ன ஷார்ப்! அதான் உன்னை மானேஜராப் போட்டிருக்காங்க!" என்றாள் ரேகா.

ண்டு விழா சனியன்று நடந்து முடிந்தது. திங்கட்கிழமையன்று அலுவலகம் வந்ததும், அரவிந்த் ரேகாவைப் பார்த்து, "ஹலோ!" என்றான்.

"ஹலோ பெஸ்ட் மேன்!" என்றாள் ரேகா.

"வெறுப்பேத்தாதீங்க!" என்றான் அரவிந்த். "எப்படிப் பெண்கள் எல்லாம் சேர்ந்து 'பெஸ்ட் மேனா' முரளியைத் தேர்ந்தெடுத்தாங்கன்னு ஆஃபீஸ்ல எல்லாருமே ஆச்சரியப்படறாங்க."

"ஆண்கள் எல்லாம் ஆச்சரியப்படறாங்கன்னு சொல்லு! நான்தான் அன்னிக்கே சொன்னேனே, பெண்கள் யாரைத் தேர்ந்தெடுப்பாங்கன்னு ஆண்களால ஊகிக்க முடியாதுன்னு!"

"இருக்கலாம். ஆனா, முரளியை எப்படித் தேர்ந்தெடுத்தாங்க? அவரு யார்கிட்டயும் சரியாப் பேசக் கூட மாட்டாரே!"

"அரவிந்த்! இப்ப, நம்ம ஆஃபீஸ்ல இருக்கிற ஆண்கள்கிட்ட பெண் ஊழியர்கள்ள 'பெஸ்ட் உமன்' யாருன்னு கேட்டா, யாரைத் தேர்ந்தெடுத்திருப்பீங்க?"

"நிச்சயமா உங்களை இல்ல!" என்றான் அரவிந்த்.

"என்ன, டிட் ஃபார் டேட்டா? அன்னிக்கு நான் சொன்னதுக்கு பதிலுக்கு சொல்லிக் காட்டறியா? என்னைத் தேர்ந்தெடுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். யாரைத் தேர்ந்தெடுப்பீங்கன்னும் எனக்குத் தெரியும்!"

"அது எப்படி? பெண்கள் மனசில என்ன இருக்குன்னு ஆண்களுக்குத் தெரியாது, ஆண்கள் மனசில என்ன இருக்குன்னு மட்டும் பெண்களுக்குத் தெரியுமா?"

"தெரியும். ஆண்கள்கிட்ட 'பெஸ்ட் உமன்' யாருன்னு கேட்டா அழகான பொண்ணைத் தேர்ந்தெடுப்பாங்க. ஆனா பெண்கள்கிட்ட 'பெஸ்ட் மேனை'த் தேர்ந்தெடுக்கச் சொன்னா யாரு நல்லவர்னு பார்த்து அவரைத் தேர்ந்தெடுப்பாங்க!"

"ஓ! முரளியை விட நல்லவங்க இந்த ஆஃபீஸ்ல இல்லியா? நான் கூட நல்லவன்தான்!"

"நான் நல்லவர்னு சொல்றது வேற அர்த்தத்தில. பெண்கள்கிட்ட கண்ணியமா நடந்துக்கறவங்களைத்தான் பெண்கள் 'நல்ல ஆண் மகன்'னு நினைப்பாங்க. இந்த ஆஃபீஸ்ல இருக்கற பெரும்பாலான ஆண்கள் பெண்களைப் பாத்துப் பல்லிளிக்கறவங்கதான். கல்யாணம் ஆன பொண்ணுன்னு கூடப் பாக்காம, அவளை வளைக்க முடியுமான்னு பாப்பாங்க! உங்க எல்லாருக்கும் நீங்க ரொம்ப ஸ்மார்ட், உங்க தோற்றத்திலயும், பேச்சுலயும் பெண்கள் மயங்கிடுவாங்கன்னு எண்ணம்! உங்க மத்தியில, பெண்கள்கிட்ட கண்ணியமா நடந்துக்கற, குறிப்பா கல்யாணம் ஆன பெண்களை மதிச்சு நடந்துக்கற முரளிக்குப் பெண்கள் ஓட்டுப் போட்டதில என்ன ஆச்சரியம் இருக்கு?" என்ற ரேகா, அவனைக் காயப்படுத்தி விட்டோமோ என்று நினைத்து, "நான் பொதுவா சொன்னேன். தப்பா எடுத்துக்காதே!" என்றாள்.

"அடுத்த எலக்‌ஷன் வரதுக்குள்ள என்னை மாத்திக்கிட்டு உங்க ஓட்டுக்களை வாங்க முடியுமான்னு பாக்கறேன். குறைஞ்சது உங்க ஒத்தரோட ஓட்டையாவது நான் வாங்கணும்!" என்றான் அரவிந்த்.

அறத்துப்பால் 
இல்லறவியல்
             அதிகாரம் 15             
பிறனில் விழையாமை      
குறள் 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

பொருள்:  
பிறர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்காத பேராண்மை நல்லவர்கள் பின்பற்ற வேண்டிய அறம். அது ஒரு சிறந்த ஒழுக்க நெறியும் ஆகும்.
      பொருட்பால்                                                                             காமத்துப்பால்


No comments:

Post a Comment