About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, June 5, 2018

172. செலவு ஐநூறு - வரவு இரண்டு லட்சம்!

வெங்கடாசலம் தன் நண்பன் பாலுவிடம் புதிய வியாபார யோசனைகளைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பான். 

ஆனால் முதலீடு செய்யப் பணம் இல்லையென்ற காரணத்தால் எந்த யோசனையையும் அவன் செயல்படுத்தியதில்லை. 

"எங்கிட்ட மட்டும் ஒரு லட்ச ரூபாய் இருந்தாப் போதும். மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிச்சுக் காட்டுவேன்!" என்று பாலுவிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். 

சில சமயம் பாலுவைக் கூட முதலீடு செய்யும்படி கேட்டிருக்கிறான். ஆனால் பாலுவிடம் பணமும் இருந்ததில்லை, பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் இருந்ததில்லை.

ஆனால் இந்த முறை வெங்கடாசலம் சொன்ன யோசனை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததாகத் தோன்றியது.

"ஐநூறு ரூபாய் இருந்தால் போதும். வீட்டிலிருந்தபடியே மாசம் ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கலாம்" என்றான் வெங்கடாசலம்.

"எப்படி?" என்றான் பாலு. வெங்கடாசலத்தின் வியாபார யோசனைகளில் பொதுவாக அவனுக்கு அதிகம் ஆர்வம் இருந்ததில்லை என்றாலும், ஐநூறு ரூபாய்தான் முதலீடு என்றதும் அவனுக்குக் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது.

"உங்கிட்ட ஐநூறு ரூபாய் இருக்கா?" என்றான் வெங்கடாசலம்.

"இல்லை. ஆனா புரட்டலாம்!" என்றான் பாலு.

"அது போதும். நீ என்ன செய்யற - ஐநூறு ரூபா கொடுத்து எங்கிட்ட ஒரு புத்தகம் வாங்கற!"

"என்ன புத்தகம் அது?"

"'ஐநூறு ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?' ங்கற புத்தகம்."

"அவ்வளவுதானா?" என்றான் பாலு, ஆர்வம் குறைந்தவனாக.

"என்ன அப்படிச் சொல்லிட்ட? நீ வாங்கப் போறது புத்தகம் இல்ல. நோட்டு அடிக்கற மெஷின்!"

"எப்படி?"

"சொல்றேன் கேட்டுக்க. இந்த ஃபாரத்தைப் பாத்தியா?" என்று ஒரு படிவத்தைக் காட்டினான் வெங்கடாசலம்.

அதில் நான்கு பெயர்களும், அவர்களுடைய முகவரிகளும் இருந்தன. மூன்றாவது இடத்தில் வெங்கடாசலத்தின் பெயர் இருந்தது. நான்காவதாக ஒரு நிறுவனத்தின் பெயர் இருந்தது. 

"ஐநூறு ரூபா கொடுத்து ஒரு புத்தகம் வாங்கணும்னு சொன்னேன் இல்ல? அந்த ஐநூறு ரூபாயை நீ நாலு பேருக்குப் பிரிச்சு அனுப்பணும். முதல்ல பேர் இருக்கறவருக்கு 200 ரூபா, ரெண்டாவது நபருக்கு 120 ரூபா, மூணாவது நபருக்கு 100 ரூபா, கம்பெனிக்கு 80 ரூபான்னு, கம்பெனியிலிருந்து உனக்கு ஒரு புத்தகமும், இது மாதிரி ஒரு ஃபாரமும் வரும். அந்த ஃபாரத்தில மூணாவது இடத்தில உன் பேர் இருக்கும்! என் பேர் இரண்டாவது இடத்துக்குப் போயிடும்! ரெண்டாவதா இருக்கறவரு முதல் இடத்துக்குப் போயிடுவாரு. முதல் இடத்தில இருக்கறவரு பேரை எடுத்துடுவாங்க. (அவருதான் அதுக்குள்ளே நிறைய சம்பாதிச்சிருப்பாரே!) நீ இந்த ஃபாரத்தை ஜிராக்ஸ் எடுத்து உனக்குத் தெரிஞ்சவங்ககிட்ட காட்டி அவங்களை இதில சேத்து விட்டா போதும். உனக்குப் பணம் வந்துக்கிட்டே இருக்கும்!"

"ரெண்டு லட்ச ரூபா எப்படி வரும்?"  

"அதுக்கு மேலயே கூட வரலாம். நீ எத்தனை பேரை சேத்து விடறேங்கறதைப் பொருத்தது அது. நீ 10 பேரை சேக்கற. அவங்க ஒவ்வொத்தரும் 10 பேரை சேக்கறாங்க, அப்புறம் அவங்களும் பத்து பத்து பேரை சேக்கறாங்கன்னு வச்சுக்க! உன் பேர் ஆயிரம் ஃபார்ம்ல முதல் இடத்தில வரும். அப்ப உனக்கு ஆயிரம் இன்டு இருநூறுன்னு ரெண்டு லட்ச ரூபா வருமே! அப்புறம் ரெண்டாவது மூணாவது இடத்து வருமானத்தை எல்லாம் சேத்தா இன்னும் அதிகமாகவே வரும்!"

"இது மணி சர்க்குலேஷன் மாதிரி இருக்கே! இது சட்ட விரோதம்னு சொல்லுவாங்களே?" என்றான் பாலு.

"சட்ட விரோதமா இருந்தா, இதை நடத்த முடியுமா? இது மணி சர்க்குலேஷன் இல்ல. புத்தக விற்பனையில வர பணத்தில ஒரு பகுதியை கமிஷனா மூணு பேருக்குப் பிரிச்சுக் கொடுக்கறாங்க. அவ்வளவுதான்!"

"எனக்கு இது ஒத்து வராதுப்பா. என்னால யாரையும் சேக்க முடியாது!"

"நீ யாரையும் சேக்க வேண்டாம். நான் உங்கிட்ட இதைப்பத்தி விளக்கிச் சொன்ன மாதிரி, நீ நாலு பேருகிட்ட சொல்லு. நிச்சயமா சில பேராவது சேந்துப்பாங்க. இந்த ஃபார்ம்லேயே, பின்பக்கத்தில இந்தத் திட்டத்தை விளக்கியிருக்காங்க. நீ இதை போஸ்ட்ல அனுப்பிச்சா கூடப் போதும். அதிலேயே கொஞ்சம் பேரு சேந்துப்பாங்க. நாலு பேரு சேர்ந்தாலே உனக்கு நானூறு ரூபா வந்துடும். அந்த நாலு பேர்ல ஒத்தர் இன்னொருத்தரை சேத்து விட்டாக் கூடப் போதும். அதுல உனக்கு நூத்தி இருவது ரூபா வரும். அவ்வளவுதான். நீ போட்ட பணம் வந்தாச்சு. அப்புறம் வரதெல்லாம் லாபம்தானே?" என்றான் வெங்கடாசலம்.

'ஐநூறு ரூபாய்தானே, சேர்ந்துதான் பாக்கலாமே!' என்று நினைத்து, பாலு அந்தத் திட்டத்தில் சேர்ந்தான்.

இரண்டு நாட்களில் பாலுவுக்கு 'ஐநூறு ரூபாய் முதலீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?' என்ற புத்தகமும், அவன் பெயர் சேர்க்கப்பட்ட படிவமும் தபாலில் வந்த. படிவத்தில் தன் பெயரைப் பார்த்ததுமே, பலரிடமிருந்து பணம் வந்து விட்டது போல் ஒரு உற்சாகம் அவனுக்கு ஏற்பட்டது. ஆனால் புத்தகத்தைப் பார்த்ததும்தான் ஏமாற்றம் ஏற்பட்டது.

அந்தத் திட்டத்தைப் பற்றிய விளக்கமும், எப்படியெல்லாம் மற்றவர்களை இதில் சேர்க்கலாம் என்ற யோசனைகளுமாக மொத்தம் இருபதே புக்கங்கள் கொண்ட புத்தகம் அது! விலை ரூ 500 என்று அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது.

வெங்கடாசலம் சொல்லியிருந்தான், 'உன் கல்யாணத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவதற்கு எப்படி லிஸ்ட் போடுவாயோ அது மாதிரி போடு' என்று.

பாலு பட்டியல் போட ஆரம்பித்தான். முதலில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பிறகு தூரத்து உறவினர்கள், ஓரளவுக்கே பரிச்சயமானவர்கள் என்று ஐம்பது பெயர்களை எழுதினான்.

முதலில் இந்த 50 பேரிடம் முயற்சி செய்வோம். இவர்களில் 5 பேர் சேர்ந்தால் கூட வெங்கடாசலம் சொன்ன கணக்கின்படி தன் முதலீட்டை எடுத்து விடலாம்!

ஒவ்வொருவரிடமும் எப்படி அணுகி, எப்படிப் பேசுவது என்று நினைத்துப் பார்த்தான். 

மனதில் ஏதோ ஒரு சங்கடம் இருந்து கொண்டே இருந்தது. மற்றவர்களைப் போய்க் கேட்க வேண்டுமே என்ற தயக்கம் என்று முதலில் நினைத்தான். அதற்கும் மேலே ஏதோ என்று தோன்றியது.

வெங்கடாசலம் சொல்லியிருந்தான்- யாரிடமும் போய் உதவி கேட்பது போல் கேட்கக் கூடாதாம். அவர்களுக்கு நன்மை செய்வது போல் பேச வேண்டுமாம்! 

'ஐநூறு ரூபாய் முதலீட்டில் நீங்கள் நிறையப் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு. இதைத் தவற விட்டால் உங்களுக்குத்தான் நஷ்டம்!' என்ற ரீதியில் பேச வேண்டுமாம்!

'உண்மையிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் என் நோக்கமா?' என்று தன்னையே கேட்டுக் கொண்டான் பாலு. 'இல்லவே இல்லை' என்ற பதில் உள்ளிருந்து வந்தது. மனதில் இருந்த தயக்கத்துக்குக் காரணமும் புரிந்தது!

'நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் என்று பலரிடமும் பணத்தைப் பிடுங்கி என்னை வளப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்! நான் சொல்வதை ஏற்று இந்த பிஸினஸில் சேருபவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் என்னைப் போல் மற்றவர்களின் பணத்தைப் பிடுங்க முயற்சி செய்வார்கள். அதிலும் ஒரு பகுதி எனக்கு வரும்! எத்தகைய தகாத செயல் இது! இந்த வகையான வருமானம் எனக்கு வேண்டாம்.

'வெங்கடாசலத்தின் பேச்சில் மயங்கி சபலப்பட்டு நான் ஐநூறு ரூபாயை இழந்தது என்னோடு போகட்டும். மற்றவர்களுக்கும் இது போன்ற இழப்பை ஏற்படுத்தி அவர்கள் பணத்தைப் பறித்து நான் பயன் பெற வேண்டாம்.'

படிவத்தையும் புத்தகத்தையும் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்தான் பாலு. பணத்தை இழந்த நிலையிலும், அவன் மனதில் ஒரு நிம்மதி தோன்றியது.

   அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை   (பிறர் பொருளை விரும்பாமை) 

குறள் 172
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவன்மை நாணு பவர்.


பொருள்:  
நியாயமில்லாத செயல்களைச் செய்வது குறித்து வெட்கப்படுபவர்கள் தமக்குப் பயன் கிடைக்கும் என்பதற்காகத் தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

Read 'Invest Five Hundred, Harvest Two Lakh' the English version of this story by the same author.
                                                                                குறள் 173 
            குறள் 171
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்







































Sunday, June 3, 2018

171. தப்புக்கணக்கு!

புழுதியை வாரி இறைத்து விட்டு நின்ற பஸ்ஸிலிருந்து கோபி மட்டும் இறங்கினான்.

விலாசம் விசாரித்துக் கொண்டு சக்திவேலின் வீட்டை அடைந்தான்.

வாசற்கதவு திறந்திருந்தது. ரேழி, முற்றம், பின்கட்டு என்று கொல்லைப்புறக் கதவு வரை தெரிந்தது. ஆனால் மனிதர்கள் யாரும் தென்படவில்லை.

 "சார்!" என்றான் கோபி. 

பலவீனமாக எழுந்த அவன் குரல் உள்ளே இருந்தவர்களுக்குக் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, உள்ளிருந்து ஒரு பெண்மணியின் முகம் வெளிப்பட்டது.

"யாரு வேணும்?"

கோபி பதில் சொல்வதற்குள், உள்ளிருந்து ஒரு நபர் வேகமாக வெளியே வந்தார். அவர்தான் சக்திவேலாக இருக்க வேண்டும். 

"வாங்க, வாங்க! கோபி சார்தானே? உள்ளே வாங்க. ஏன் அங்கேயே நிக்கறீங்க?" என்றபடியே வெளியே வந்து, அவனை உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.

"கல்யாண விஷயமா வந்திருக்காரு, நான் சொல்லியிருந்தேனே?" என்றார் சக்திவேல், தன் மனைவியிடம்.

"வாங்க. உக்காருங்க. எனக்கு முதல்ல நீங்க யாருன்னு தெரியல!" என்றாள் அந்தப் பெண்மணி, மன்னிப்புக் கேட்கும் தொனியில்.

கோபி உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும், சம்பிரதாயமாகச் சில வார்த்தைகளைப் பேசி விட்டு, "கல்யாண விஷயமாப் பேச நீங்க இவ்வளவு தூரம் வந்தது பெரிய விஷயம்!" என்றார் சக்திவேல்.

"மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை நேர்ல பாத்துப் பேசறதுதானே மரியாதை?" என்றான் கோபி. தொடர்ந்து, "நீங்க இந்த ஊர்க்காரர் இல்லேன்னு நினைக்கறேன்?" என்றான்.

"ஆமாம். நான் தஞ்சாவூர். இந்த வி ஏ ஓ வேலை கிடைச்சதனால இந்த கிராமத்துக்கு வந்திருக்கேன்."

"ஓ! முன்னெல்லாம் கணக்குப்பிள்ளை, பட்டாமணியம்னு இருப்பாங்க."

"ஆமாம். அதெல்லாம்தான் எம் ஜி ஆர் காலத்திலேயே போயிடுச்சே. இப்பல்லாம் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீஸர்தான்!"

"இந்த ஊர்ல கடைசியா கணக்குப்பிள்ளையா இருந்தவரை உங்களுக்குத் தெரியுமா?"

"எனக்குத் தெரியாது. எனக்கு முன்னால இருந்த வி ஏ ஓ அவரைப் பத்தி சொல்லியிருக்காரு. ஏன் கேக்கறீங்க?"

"இல்லை. பஸ்லேருந்து இறங்கினதும் உங்க வீட்டைப் பத்தி விசாரிச்சேன். பழைய கணக்குப்பிள்ளை வீட்டுலதான் நீங்க குடியிருக்கிறதாச் சொன்னாங்க. அதுதான் கேட்டேன்!"

"ஓ! இது அவரோட வீடுதான். ஆனா அவர் போனப்பறம் அவங்க மனைவி அதை வித்துட்டாங்களே! வேற ஒத்தரு வாங்கிட்டாரு."

"அந்தக் கணக்குப்பிள்ளைக்கு ஊர்ல அவ்வளவு நல்ல பேரு இல்லேன்னு கேள்விப்பட்டேனே!" என்றான் கோபி. 

"ஏது, இந்த ஊருக்கு வரத்துக்கு முன்னாடியே, ஊரைப் பத்தி நிறைய தகவல் திரட்டிக்கிட்டு வந்திருக்கீங்க போல இருக்கே! அது ஒரு பெரிய கதை. நீங்க பாம்பே, டெல்லியில எல்லாம் இருந்திருக்கீங்க. உங்களுக்கு கிராமத்து விஷயங்கள்ளாம் புரியுமோ என்னவோ! 

"முன்னெல்லாம் கிராமங்கள்ள இருக்கிற நிலங்களுக்கெல்லாம் ரிக்கார்டு கணக்குப்பிள்ளை கிட்டத்தான் இருக்கும். படிக்காத கிராமத்து ஜனங்க பல பேர்கிட்ட அவங்க சொத்துக்கான பத்திரமெல்லாம் சரியா இருக்காது. இதைப் பயன்படுத்திக்கிட்டு அந்தக் கணக்குப்பிள்ளை நிறைய பேரை ஏமாத்தியிருக்காரு. 

"சிலரோட நிலத்தையெல்லாம் புறம்போக்கு நிலம்னு சொல்லி அவங்க பேர்ல இருந்த பட்டாக்களை மாத்தறது, சில பட்டாக்களைத் தன் பேர்ல மாத்தி எழுதிக்கறதுன்னு நிறைய ஏமாத்து வேலையெல்லாம் பண்ணியிருக்காரு."

"அப்படியெல்லாம் பண்ண முடியுமா என்ன?"

"நான் சொல்றது நாப்பது அம்பது வருஷத்துக்கு முந்தின நடப்பு. நீங்களும் நானும் அப்ப பள்ளிக்கூடத்தில் படிச்சுக்கிட்டிருந்திருப்போம். பாதிக்கப்பட்டவங்களைக் கேட்டா கதை கதையாச் சொல்லுவாங்க. தாலுக்கா ஆஃபீஸ்லியே அவருக்கு வேண்டியவங்க இருப்பாங்க. அவங்க மூலமா தாலுக்கா ஆஃபீஸ்லேயே ரிகார்டையெல்லாம் மாத்திடுவாரு. 

"தனியார் நிலத்தைப் புறம்போக்கு நிலம்னு சொல்லுவாரு. அதை அவங்ககிட்டேருந்து பிடுங்கிக்கிட்டு, முதல்ல புறம்போக்கு நிலம்னு மாத்திட்டு, அப்புறமா புறம்போக்கு நிலத்தை அவர் மேல பட்டா போட்டுப்பாரு!"

"ம்!"

"திடீர்னு ஒருநாள் கணக்குப்பிள்ளைகளை ஒழிச்சுட்டு வி ஏ ஓக்களைக் கொண்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் அந்தக் கணக்குப்பிள்ளை மேல நிறைய புகார் வந்து, அதையெல்லாம் விசாரிச்சதில, ரெண்டு மூணு கேசில வசமா மாட்டிக்கிட்டாரு."

"கைது பண்ணிட்டாங்களா?"

"இல்ல. போலீஸ் வந்து விசாரிச்சாங்க. கைது பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சதும், அன்னிக்கு ராத்திரியே விஷத்தைக் குடிச்சுட்டாரு."

"ஐயையோ!"

"நீங்க ஏன் பரிதாபப்படறீங்க? மத்தவங்க சொத்துக்கு ஆசைப்பட்டு அவங்களை ஏமாத்தினவருக்கு வேற என்ன நடக்கும்?"

"அவரோட குடும்பம்?"

"அவங்கதான் பாவம். அவருக்கு ஒரு பையன், ரெண்டு பொண்ணுங்க. பையன் சின்ன வயசிலேயே வீட்டை விட்டு ஓடிட்டான். அப்பா பண்ணின அக்கிரமங்களைப் பத்தி மத்தவங்க பேசறதைக் கேட்டுட்டு. அதையெல்லாம் பொறுக்க முடியாமத்தான் ஓடிட்டான்னு பேசிக்கிட்டாங்க."

"அது எப்படி மத்தவங்களுக்குத் தெரியும்?"

"அவனோட அம்மாவே சொன்னாங்களாம்! வீட்டை விட்டுப் போறதுக்கு முன்னாடியே, நிறைய தடவை தன் அம்மாகிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கான் அவன். அவங்க அதைச் சொல்லிப் புலம்பிக்கிட்டே இருந்திருக்காங்க."

"அந்த அம்மா என்ன ஆனாங்க?"

"அவங்க பாவம்! அவங்களுக்கு இருந்த சொத்தை வச்சுக்கிட்டு, அவங்க இந்த ஊரிலயே இருந்திருக்கலாம். ஆனா கணக்குப் பிள்ளை செத்தப்பறம் கூட, ஊர் ஜனங்க அவரைப் பத்திப் பேசின பேச்சைக் கேட்டுக்கிட்டு, அவங்களால இந்த ஊர்ல இருக்க முடியல. வீடு, நிலம் எல்லாத்தையும் வித்துட்டு, அவங்க அம்மா ஊருக்குப் போயிட்டாங்க. அதை விடுங்க. சம்பந்தம் பேச வந்தவர்கிட்ட ஏதோ பழங்கதையெல்லாம் பேசிக்கிட்டிருக்கேனே!"

அதற்குப் பிறகு, தன் குடும்பம் பற்றியும், சென்னையில் வேலை பார்க்கும் தன் மகன் பற்றியும் சக்திவேல் பேசி விட்டு, "உங்களைப் பத்தி சொல்லுங்க!" என்றார்.

"அதான் லெட்டரிலே சொல்லியிருந்தேனே. நான் பம்பாய், டெல்லின்னு இருந்துட்டு இப்பதான் சென்னைக்கு வந்திருக்கேன். நான் தஞ்சாவூருக்கு ஒரு வேலையா வந்ததால, உங்களைப் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். என்  மனைவியையும் அழைச்சுக்கிட்டு இன்னொரு தடவை வரேன். இப்ப நான் உடனே கிளம்பணும்" என்று எழுந்தான் கோபி.

"பலகாரம் பண்ணிட்டுப் போகலாமே!" என்றாள் உள்ளிருந்து வந்த சக்திவேலின் மனைவி.

"இல்ல. அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா சாப்பிடறேன். வரேன்" என்று கிளம்பினான் கோபி.

'அப்பா மீதிருந்த கோபத்தில் நாற்பது வருஷமாகக் குடும்பத்திலிருந்து ஒதுங்கி இருந்தது பெரிய தவறு! பாட்டியின் ஊரான பந்தநல்லூருக்குப் போய் அம்மாவைப் பார்க்க வேண்டும்! தங்கைகள் கல்யாணமாகி எந்த ஊரில் இருக்கிறார்களோ?'

கோபி பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்தான்.   

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 18         
வெஃகாமை (பிறர் பொருளை விரும்பாமை)    
குறள் 171
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும்.


பொருள்:  
நியாய உணர்வு இன்றிப் பிறர் பொருளை விரும்புபவர்களின் குடி கெடும். அவர்களுக்குப் பெரும் பழியும் வந்து சேரும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'A Visit to the Village' the English version of this story by the same author.

                                                                                 குறள் 172
              குறள் 170
பொருட்பால்                                                                                        காமத்துப்பால்














Saturday, June 2, 2018

170. கிடைத்ததும், கிடைக்காததும்

சதர்ன் என்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகளின் மாதாந்தரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

"போன மாசம் அதிகமான தொகைக்கு விற்பனை செய்தவரின் பெயரை இப்போது அறிவிக்கப் போகிறேன்" என்ற விற்பனை மேலாளர், சில வினாடிகள் சஸ்பென்ஸ் கொடுத்து விட்டு, "ஆர். சேகர்" என்றார்.

"இருக்க முடியாது சார். 31ஆம் தேதி நான் அக்கவுண்ட்ஸில கேட்டப்ப நான்தான் அதிகமா விற்பனை பண்ணி இருப்பதாகச் சொன்னாங்களே!" என்றான் மூர்த்தி.

"சேகர் சாயந்திரம் கொஞ்சம் லேட்டா அவரோட சேல்ஸ் இன்வாய்ஸ்களைக் கொண்டு கொடுத்திருக்கார். அதை என்ட்டர் பண்ணினப்பறம் அவர் முதல் இடத்துக்குப் போயிட்டார்" என்றார் விற்பனை மேலாளர் 

கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுப்பான குரலில் பேசிக் கொண்டனர்.

"கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்!" என்றார் விற்பனை மேலாளர்.

கைதட்டல் மெலிதாக எழுந்து, சில வினாடிகளிலேயே அடங்கியது.

கூட்டம் முடிந்ததும், விற்பனைப் பிரதிநிதிகள் குழுக்களாகப் பிரிந்து, தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 

"இந்த சேகர் எப்பவுமே இது மாதிரி ஏதாவது தில்லுமுல்லு பண்ணிக்கிட்டிருக்கான். அவனை யாராவது மிஞ்சிட்டா, அவனுக்குப் பொறுக்காது. போன மாசம் சந்துரு டாப் பர்ஃபாமரா வந்தபோது சேகரோட மூஞ்சியைப் பாக்கணுமே!"

"ஆனா, இன்னிக்கு நாம எல்லோருமே சேகர் மேலே வெறுப்பா இருந்தப்ப, மீட்டிங் முடிஞ்சப்புறம் சேகரைக் கை கொடுத்துப் பாராட்டினது சந்துரு மட்டும்தான்!"

"சந்துரு ஒரு ஜெம் ஆச்சே! மத்தவங்களை என்கரேஜ் பண்ணி, ஹெல்ப் பண்றவன் ஆச்சே அவன்! சந்துருவும் சேகரும் ரெண்டு துருவங்கள்!"

இரண்டு ஆண்டுகள் கழித்து, விற்பனை மேலாளர் பதவி காலியானபோது, சேகர் அந்தப் பதவிக்கு உயர்த்தப்பட்டான். 

"என்னப்பா இது அக்கிரமமா இருக்கு! நாம இவ்வளவு பேர் இருக்கோம். சேகருக்கு சேல்ஸ் மானேஜர் புரொமோஷன் கொடுத்திருக்காங்களே! அவன விட நல்லா பர்ஃபாம் பண்ணினவங்க நிறைய பேர் இருக்காங்க. சீனியாரிட்டியை வச்சுப் பாத்தாக் கூட, அவனை விட சீனியர்கள் இருக்காங்களே! சந்துரு கூட அவனுக்கு சீனியர்தான்!"

"யாருக்கு புரொமோஷன் கொடுக்கறதுங்கறது கம்பெனியோட இஷ்டம். ஒருவேளை சேகர் ஜி எம்முக்கு வேண்டியவனா இருக்கலாம்!"

"சந்துருவுக்குக் கொடுத்திருந்தா, எல்லோரும் சந்தோஷப்பட்டிருப்போம். அவனுக்குக் கீழே வேலை செய்யறதில, எல்லோருக்குமே சந்தோஷமா இருந்திருக்கும்! மத்தவங்களோட முன்னேற்றத்தைப் பொறுக்க முடியாத சேகர் மாதிரி ஆளுங்ககிட்ட எப்படி ஒர்க் பண்றது?"

சில வருடங்களுக்குப் பிறகு, சேகருக்கு இன்னொரு பதவி உயர்வு கிடைத்து, பொது மேலாளர் ஆகி விட்டான். சந்துருவால் சீனியர் சேல்ஸ் எக்சிக்யூட்டிவ் என்ற நிலைக்கு மேல் உயர முடியவில்லை. நிறுவனத்தின் நியாயமற்ற போக்கு பிடிக்காமல், சில விற்பனைப் பிரதிநிதிகள் வேறு நிறுவனங்களுக்கு மாறி விட்டார்கள்.

காலம் ஓடியது.

சந்துரு ஒய்வு பெறும் நாள் வந்தது. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விடை கொடுக்கும் விழா'வில் நிறுவனத்தின் எல்லா நிலைகளிலும் இருந்த அத்தனை ஊழியர்களும் கலந்து கொண்டனர். சேகர் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒய்வு பெற்று விட்டான்.

விழா முடிந்ததும், சந்துருவின் நண்பன் கார்த்திக் "இன்னிக்கு நானே உன்னை வீட்டில கொண்டு விட்டுடறேன்" என்றான்.

காரில் போகும்போது, கார்த்திக், "பொதுவா நான் கார் ஓட்டும்போது பேசறதில்ல. ஆனா என் மனசில தோணின ஒரு எண்ணத்தை உங்கிட்ட உடனே சொல்லணும் போல இருக்கு!" என்றான்.

"சொல்லுடா!" என்றான் சந்துரு.

"30 வருஷமா நான் உன்னோட இந்த கம்பெனியில வேலை செய்யறேன். உன்னோட நல்ல மனசைப் பத்தி எல்லாருக்கும் தெரியும். அது மாதிரி சேகரோட பொறாமை, அல்பத்தனம் இதையெல்லாம் பற்றியும் எல்லாருக்கும் தெரியும். ஆனா சேகர் மேல போயிட்டான். நீ அதிக உயரத்துக்குப் போக முடியல. இதைப் பத்தி நம்ப கம்பெனியில எல்லாருக்குமே வருத்தம் உண்டு. ஏன் இப்படி நடக்கணும்னு இத்தனை வருஷமா யோசிச்சிருக்கேன். இன்னிக்குத்தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது" என்றான் கார்த்திக்.

"என்ன புரிஞ்சுது?"

"உன் மேல இத்தனை பேருக்கும் இருக்கற அன்பையும், மதிப்பையும், நல்லெண்ணத்தையும் இன்னிக்கு விழாவிலே பார்த்தேன். ரெண்டு மாசம் முன்னாடி, சேகருக்கு இதே மாதிரி ஒரு விழா நடந்தபோது, பத்து பேர்தான் வந்திருந்தாங்க. எல்லாருமே ஒப்புக்கு வந்து, உக்காந்துட்டுப் போனாங்க. ஆனா, இன்னிக்கு உனக்காக அத்தனை பேரும் எப்படி ஃபீல் பண்ணினாங்கன்னு பாத்தப்பதான் எனக்குப் புரிஞ்சது. வாழ்க்கையில உயர்வதுங்கறது பெரிய பதவிக்கு வரதோ, பணம் சம்பாதிக்கறதோ மட்டும்தானா? மத்தவங்களோட அன்பு, நல்லெண்ணம் இதையெல்லாம் சம்பாதிச்சு வச்சிருக்கறது பெரிய விஷயம் இல்லையா? இன் ஃபேக்ட், நம்மைச் சுத்தி இருக்கறவங்க மனசில ஒரு உயர்வான இடத்தைப் பிடிக்கிறதை விட உயர்வு வேற என்ன இருக்க முடியும்?"

"நீ சொல்றது எந்த அளவுக்கு சரின்னு எனக்குத் தெரியாது. ஆனா உங்க எல்லாரோட அன்பு எனக்குக் கிடைச்சது வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச பெரிய ரிவார்டுன்னுதான் நான் எப்பவுமே நினைச்சிருக்கேன்" என்றான் சந்துரு.
  
இல்லறவியல் 
         அதிகாரம் 17          
  அழுக்காறாமை      
குறள் 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் 
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.

பொருள்:  
பொறாமை கொண்டவர்கள் உயர்ந்த நிலை அடைவதில்லை. பொறாமை குணம் இல்லாதவர்கள் உயர்வை அடையாமல் போவதும் இல்லை.

Read 'Missing the Recognitions' the English version of this story by the same author.
                                                                          குறள் 171 
பொருட்பால்                                                                                      காமத்துப்பால்
















Friday, June 1, 2018

169. உயர்ந்த உள்ளம்

கவிஞர் காசிலிங்கம் ஸ்டூடியோவுக்கு வந்தபோது, தன்னுடன் ஒரு இளைஞனை அழைத்து வந்தார்.

"யாருங்க? உங்க உதவியாளரா?" என்றார் தயாரிப்பாளர்.

"இந்தப் பையன் பேர் இளவரசன். பாட்டெல்லாம் அருமையா எழுதுவான்" என்றார் காசிலிங்கம்.

"எங்க புடிச்சீங்க இவனை?"

"இவன் தன்னோட கவிதையை எல்லாம் எனக்குத் தபால்ல அனுப்பிக்கிட்டிருந்தான். இது மாதிரி எனக்கு நிறைய பேர்கிட்டேருந்து வரும். பெரும்பாலும், அதையெல்லாம் நான் படிக்கிறதில்ல. அப்பப்ப ஒண்ணு ரெண்டைப் பிரிச்சுப் படிப்பேன். அது மாதிரி படிச்சதுதான் இவனோட கவிதைகள். ரொம்ப அருமையா இருந்தது. பாராட்டிக் கடிதம் எழுதினேன். கடிதத்தை எடுத்துக்கிட்டு, ஊர்லேருந்து என்னைப் பாக்க வந்துட்டான்! 'சினிமா சான்ஸ் கேட்டு ஆயிரம் கவிஞர்கள் அலைஞ்சுக்கிட்டிருக்காங்க. சான்ஸ் கிடைக்கிறது அவ்வளவு சுலபம் இல்லே'ன்னு சொன்னேன். ஆனா, விடாம ஆறு மாசமா தினம் காலையில என் வீட்டு வாசல்ல வந்து நின்னுக்கிட்டிருக்கான். சரி, உங்க படத்தில ஒரு வாய்ப்பு வாங்கித் தரலாம்னு அழைச்சுக்கிட்டு வந்தேன்" என்றார் காசிலிங்கம்.

"தம்பி! கொஞ்சம் வெளியில போய் உக்காந்திரு. கூப்பிடறேன்" என்றார் தயாரிப்பாளர்.

இளவரசன் வெளியில் சென்றதும், "என்னங்க இது? இந்த சினிமா உலகத்தில ஒத்தரை ஒத்தர் முழுங்கலாமான்னு பாத்துக்கிட்டிருக்காங்க. ஆனா நீங்க என்னன்னா, உங்களுக்குப் போட்டியா ஒரு ஆளைக் கூட்டிக்கிட்டு வந்து, அவனுக்கு வாய்ப்புக் கேக்கறீங்க!" என்றார் தயாரிப்பாளர்.

"திறமை இருக்கற ஒருத்தனுக்கு உதவி செய்யலாம்னு கூட்டிக்கிட்டு வந்தேன். அவன் முன்னுக்கு வந்து, நாளைக்கு என்னை விட மேலே போனா, எனக்கு சந்தோஷம்தான்!" என்றார் காசிலிங்கம்.

"உங்க மனசு யாருக்கும் வராது, கவிஞரே! நீங்க சொன்னதுக்காக, இந்தப் படத்தில ஒரு பாட்டு அவனுக்குக் கொடுக்கறேன்" என்றார் தயாரிப்பாளர்.

இளவரசன் எழுதிய முதல் பாடலே அவனுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்து விட்டது. அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து, விரைவிலேயே பிரபலமானான். முன்னணிக் கதாநாயகர்கள், தங்கள் படங்களுக்கு இளவரசன்தான் பாட்டு எழுத வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்ததும், இளவரசன் யாரும் நெருங்க முடியாத உயரத்துக்குப் போய் விட்டான்.

"அண்ணே! இந்தப் படத்தில மூணு பாட்டு நீங்க எழுதறீங்க. ரெண்டு பாட்டு மணி எழுதறாரு" என்றான் இளவரசனின் உதவியாளன்.

"அதெல்லாம் கிடையாது. இனிமே நான் பாட்டு எழுதற படத்தில, எல்லாப் பாட்டும் நான்தான் எழுதுவேன். இதுக்கு ஒத்துக்கிட்டாத்தான் நான் பாட்டு எழுதுவேன்னு, புக் பண்ண வரும்போதே தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லிடு" என்றான் இளவரசன்.

"ஏங்க அப்படி?"

"ஒரு படத்தில என் பாட்டை விட இன்னொரு கவிஞன் எழுதின பாட்டு நல்லா அமைஞ்சு போச்சுன்னு வச்சுக்க, அப்புறம், என்னை விட அவன் நல்லா எழுதறான்னு ரெண்டு பேரு சொல்லுவாங்க. இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டு இருக்கணுமா?"

'கவிஞர் காசிலிங்கம் இப்படி நினைச்சிருந்தா, உன்னால சினிமாவிலேயே நுழைஞ்சிருக்க முடியாதே!' என்று நினைத்துக் கொண்டான் உதவியாளன்.

இளவரசன் போட்ட நிபந்தனை பல தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், முன்னணி நடிகர்கள், இளவரசன்தான் தங்கள் படங்களுக்குப் பாடல் எழுத வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியின்றி இதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

இதனால், மற்ற பாடலாசிரியர்களுக்கு வாய்ப்புக்கள் குறைந்தன.

காசிலிங்கம் ஸ்டூடியோவிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது, அவருடைய நீண்ட நாள் நண்பர், டைரக்டர் கிட்டு, எதிரே வந்தார்.

"என்ன, கவிஞரே! எப்படி இருக்கீங்க? உங்களைப் பாத்து ரொம்ப நாளாச்சு. நானும் படம் டைரக்ட் பண்ணிப் பல வருஷங்கள் ஆயிடுச்சே!" என்றார் கிட்டு.

இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்ட பிறகு, காசிலிங்கம் விடைபெற்றார்.

"காரை எங்கே நிறுத்தி இருக்கீங்க? டிரைவர் காரை எடுத்துக்கிட்டு வரப் போயிருக்காரா?" என்றார் கிட்டு.

"காரும் இல்லை, காரோட்டியும் இல்லை, காசும் இல்லை, காசி மட்டும்தான் இருக்கிறேன்!" என்றார் காசிலிங்கம்.

"என்னங்க இப்படிச் சொல்றீங்க?"

"இளவரசன் வந்ததும், மத்த எல்லாப் பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்புக் குறைஞ்ச மாதிரி, எனக்கும் குறைஞ்சுடுச்சு. இப்ப எனக்கு வர வருமானத்தில, என்னால கார் வச்சுக்க முடியாது. அதனால, காரை வித்துட்டேன். பஸ்லதான் போறேன். பஸ் கிடைக்கலேன்னா, ஆட்டோ!" என்றார் காசிலிங்கம்.

அப்போது, ஒரு ஆடி கார் அவர்களைத் தாண்டிச் சென்றது.

"இளவரசன் போறான்!" என்றார் கிட்டு.

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
    அழுக்காறாமை      
குறள் 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் 
கேடும் நினைக்கப் படும்.


பொருள்:  
பொறாமை நிறைந்தவன் செல்வச் செழிப்போடு இருப்பதும், நல்ல மனம் கொண்டவன் துன்பப்படுவதும், ஆராயப்பட வேண்டிய விஷயங்கள் (வியப்புக்குரியவை.)

குறிப்பு: முந்தைய குறள்களில், பொறாமை உள்ளவன் செல்வத்தை இழப்பான் என்று கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆனால், உலகில் இதற்கு மாறான நிலை நிலவுவதை, நாம் பல சமயங்களில் பார்க்கிறோம். நியாயப்படி இப்படி இருக்கக் கூடாதே, ஆனால் ஏன் இப்படி இருக்கிறது என்று ஆராய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இப்படி ஆராய்ந்துதான், விதி, முன்வினைப் பயன் போன்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று கொள்ளலாம்.

Read 'A Man of Noble Heart' the English version of this story by the same author.
பொருட்பால்                                                                                         காமத்துப்பால்





























Thursday, May 31, 2018

168. எப்படி இருந்தவர்!

வள்ளியப்பனின் ஓட்டலில் மானேஜராக முத்து சேர்ந்தபோது அவன் பார்த்த வள்ளியப்பன் ஒரு அற்புதமான மனிதர். வாடிக்கையாளர்கள், தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும், அக்கறையுடனும் இருந்தவர். 

இப்படி ஒரு மனிதர் இருப்பாரா என்று முத்து அடிக்கடி வியந்திருக்கிறான். வள்ளியப்பன் மீது அவனுக்கு இருந்த மதிப்பினாலேயே, வேறு சில வேலை வாய்ப்புகள் வந்தும் அவன் அவற்றில் ஆர்வம் காட்டவில்லை. 

அப்படிப்பட்ட மனிதரிடம் சில வருடங்களாக ஏற்பட்டிருந்த மாற்றம் முத்துவுக்கு வியப்பாக இருந்தது.

'மீனாட்சி பவன்' என்ற பெயரில் இயங்கி வந்த அவர்களுடைய ஓட்டல் பல வருடங்களாக அந்த ஊரின் சிறந்த ஓட்டலாக இருந்து வந்தது. எத்தனையோ புதிய ஓட்டல்கள் வந்தாலும், அவை எதுவுமே 'மீனாட்சி பவனு'க்குப் போட்டியாக விளங்கும் அளவுக்கு வளரவில்லை. 

ஆனால் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல் வந்ததும், நிலைமை மாறி விட்டது. 'மீனாட்சி பவனை' விட 'லட்சுமி விலாஸி'ல் அதிகக் கூட்டம் சேர்ந்தது. 

"அப்படி என்னய்யா இருக்கு அந்த ஓட்டல்ல? அயிட்டம்லாம் நம்மளோடதை விட நல்லா இருக்காமா?" என்றார் வள்ளியப்பன்.

"அப்படி இருக்கிற மாதிரி தெரியலீங்க. பளபளப்பான தரை, புது விதமான மேஜை நாற்காலி, அலங்காரமான போர்டு இந்த மாதிரி விஷயங்களைப் பாத்துட்டுத்தான் நிறைய பேரு அங்கே போயிருக்காங்க. ஆனா நம்ப வியாபாரம் குறையல. நம்ப கஸ்டமர்ஸ் யாரும் அங்கே போகல. மத்த ஓட்டல் கஸ்டமர்ஸ் வேணும்னா போயிருக்கலாம். நமக்கு பாதிப்பு இல்லாதபோது நாம எதுக்கு கவலைப்படணும்?" என்றான் முத்து.

"நேத்திக்கு வந்த ஒரு பய நமக்கு மேல போயிக்கிட்டிருக்கான். அதைப் பாத்துட்டு நாம சும்மா இருக்க முடியுமா?" என்றார் வள்ளியப்பன்.

முதன்முறையாக முத்து வள்ளியப்பனின் ஒரு புதிய முகத்தைப் பார்த்தான். 'எல்லோரிடமும் அன்பும், கருணையும் உள்ள இவர் ஏன் 'லட்சுமி விலாஸ்' மீது ஆத்திரப்படுகிறார் - அதுவும் இவருடைய வியாபாரத்துக்கு பாதிப்பு இல்லாதபோது?' என்று குழம்பினான்.

அதற்குப் பிறகு அவன் பார்த்த வள்ளியப்பன் வேறு. அவர் குணமே அடியோடு மாறி விட்டது போல் இருந்தது. எப்போதும் 'லட்சுமி விலாஸ்' ஓட்டலை எப்படி ஒழித்துக் கட்டுவது என்ற சிந்தனையிலேயே இருந்தார். இது பற்றி அடிக்கடி அவனிடம் ஆலோசித்தார். அத்தகைய எதிர்மறைச் சிந்தனை வேண்டாம் என்று முத்து சொன்னபோதும் அவர் கேட்கவில்லை.

'லட்சுமி விலாஸ்' ஓட்டலுக்கு சில சங்கடங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அந்த ஓட்டல் பற்றிச் சில வதந்திகள் பரவின. அழுகிய காய்கறிகளைக் குறைந்த விலைக்கு வாங்கி வந்து சமைக்கிறார்கள் என்று ஒரு வதந்தி. அங்கே சாப்பிட்டவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர்கள் இதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக லட்சுமி விலாஸ் ஓட்டலின் அதிபர் கண்ணன் அவர்கள் மருத்துவச் சிகிச்சைக்கான எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டார் என்றும் ஒரு வதந்தி.

இது போல் இன்னும் பல வதந்திகள். இவற்றினால் அவ்வப்போது லட்சுமி விலாஸ் ஓட்டலுக்குச் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், அவர்கள் வியாபாரத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இவற்றுக்கெல்லாம் பின்னால் வள்ளியப்பன் இருப்பாரோ என்ற சந்தேகம் முத்துவுக்கு இருந்தது. 'லட்சுமி விலாஸ்' ஓட்டலுக்குப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வந்தபோதெல்லாம், வள்ளியப்பன் முத்துவைப் பார்த்து ரகசியமாகச் சிரிப்பது போல் சிரிப்பார்.

'லட்சுமி விலாஸ்' ஓட்டல் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் வள்ளியப்பன்தான் என்ற எண்ணம் ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. இதனால் 'லட்சுமி விலாஸ்' மீது அனுதாபமும், 'மீனாட்சி பவன்' மீது வெறுப்பும் வளர, 'லட்சுமி விலாஸி'ன் வியாபாரம் வேகமாக வளர்ந்தது. முதல் முறையாக 'மீனாட்சி பவனி'ன் வியாபாரம் சரியத் தொடங்கியது.

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க! நீங்க 'லட்சுமி விலாஸை'ப் பத்திக் கவலைப்படறதை விட்டுட்டு நம்ப ஓட்டல் மேல கவனம் செலுத்தணும். நம்ப வியாபாரம் குறைஞ்சுக்கிட்டே வருது!" என்றான் முத்து.

"நம்ப ஓட்டலை இழுத்து மூட வேண்டி வந்தாலும் பரவாயில்லை. 'லட்சுமி விலாஸை' ஒழிச்சுக்கட்டாம விட மாட்டேன்" என்றார் வள்ளியப்பன் ஆங்காரத்துடன்.

சில மாதங்களில் 'மீனாட்சி பவன்' மூடப்பட வேண்டிய நிலை வந்தது. முத்து வள்ளியப்பனிடம் சொல்லி விட்டு வேறொரு ஊரில் வேலை தேடிக் கொண்டு போய் விட்டான்.

சில மாதங்கள் கழித்து, ஊரிலிருந்து வந்த ஒரு நபரை முத்து தற்செயலாகச் சந்தித்தான். "வள்ளியப்பன் எப்படி இருக்காரு?" என்றான்.

"உங்களுக்கு விஷயம் தெரியாதா? ஒரு நாள் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல்ல சாப்பிட்டவங்க நிறைய பேருக்கு ஃபுட் பாய்சன் ஆகி ஆஸ்பத்திரியில சேர்க்க வேண்டிய நிலைமை வந்துட்டுது. இது போலீஸ் கேஸ் ஆகி, அவங்க வந்து விசாரிச்சதில, வள்ளியப்பன்தான் 'லட்சுமி விலாஸ்' ஓட்டல்ல வேலை செஞ்ச ஒரு ஆளுக்குப் பணம் கொடுத்து சாப்பாட்டில் எதையோ கலக்கச் சொன்னாருன்னு கண்டு பிடிச்சு அவரைக் கைது பண்ணிட்டாங்க. இப்ப ஜாமீன்ல இருக்காரு. ஆனா வக்கீல் வச்சு கேஸ் நடத்தப் பணம் இல்லாம தவிக்கிறாருன்னு பேசிக்கிறாங்க" என்றார் அவர்.

'எப்படி இருந்தவர் இப்படி ஆகி விட்டாரே!' என்று நினைத்து வருந்தினான் முத்து.

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
     அழுக்காறாமை      
குறள் 168
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும்.


பொருள்:  
 பொறாமை என்ற பாவி ஒருவனது செல்வத்தை அழித்து அவனுக்குத் தீமை விளைத்து விடும். ('தீயுழி உய்த்து விடும்' என்ற  சொற்றொடருக்கு 'நரகத்தில் தள்ளி விடும்' என்று பொருள் கூறியிருக்கிறார் பரிமேலழகர்.)

Read 'Valliappan's Fall' the English version of this story by the same author.
பொருட்பால்                                                                                    காமத்துப்பால்














Wednesday, May 30, 2018

167. சரோஜாவின் கவலை

"என்னங்க, வனஜா பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம்!" என்றாள் சரோஜா, உற்சாகத்துடன்.

அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருந்த சுபாஷ், "அப்படியா?" என்றான், சுவாரஸ்யம் இல்லாமல்.

"பையன் அமெரிக்காவில வேலை பாக்கறானாம்!" என்றாள் சரோஜா, பெருமிதத்துடன்.

சுபாஷின் முகம் கடுகடுவென்று ஆகியது.

"நான் லட்சக்கணக்கில சம்பாதிக்கிற ஒரு பிசினஸ்மேன். நம்ப பொண்ணையே இந்தியாவில வேலை பாக்கற பையனுக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கோம். ஒரு சின்ன கம்பெனியில வேலை செஞ்சுக்கிட்டு, மாசச் சம்பளம் வாங்கிக்கிட்டிருக்கற உன் அக்கா புருஷனுக்கு எப்படி அமெரிக்க மாப்பிள்ளை கிடைச்சான்?" என்றான் சுபாஷ்.

"இது என்னங்க பேச்சு? நாம அமெரிக்க மாப்பிள்ளை வேணும்னு பாக்கலியே? நல்ல இடம்னுதானே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கோம்? அவங்களும் அமெரிக்க மாப்பிள்ளைதான் வேணும்னு பாக்கல. அதுவா அமைஞ்சிருக்கு."

"அல்பங்களுக்குத்தான் வாழ்வு வருது!" என்றான் சுபாஷ்.

"என் அக்கா குடும்பத்தைப் பத்திப் பேசறீங்க. அதை ஞாபகம் வச்சுக்கிட்டுப் பேசுங்க!" என்றாள் சரோஜா.

"நான் உண்மையைத்தானே சொல்றேன்? ஒரு சாதாரண மனுஷனான என் சகலைக்கு இப்படி ஒரு சம்பந்தமான்னு நினைச்சுப் பாக்கறதில என்ன தப்பு?"

"நாங்க அக்கா தங்கைங்க மூணு பேர்ல நான்தான் வசதியானவ. மத்த ரெண்டு பேரும் சாதாரணமானவங்கதான். என்னோட ரெண்டு அண்ணங்க கூட சுமாரான வசதியோடதான் இருக்காங்க. நியாயமா, அவங்கதான் நம்மளை பாத்துப் பொறாமைப் படணும். ஆனா, நீங்க என் அக்கா குடும்பத்தைப் பாத்துப் பொறாமைப் படறீங்க! நாளைக்கு என் அண்ணன்களுக்கோ, தங்கைக்கோ ஏதாவது நல்லது நடந்தா, அதைப் பாத்தும் பொறாமைப் படுவீங்க. வேடிக்கையா இருக்கு!" என்று வெறுப்புடன் சொல்லி விட்டு, உள்ளே சென்று விட்டாள் சரோஜா.

இன்னொரு சமயம், சுபாஷின் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் தன் மகனை மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பப் போவதைப் பற்றி இப்படித்தான் சரோஜாவிடம் பொரிந்து தள்ளினான் சுபாஷ்.

"எங்கிட்ட சம்பளம் வாங்கற ஒரு குமாஸ்தா அவன். அவன் பையனை லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறானாம்! எப்படி இருக்கு பாரு?" என்றான் சுபாஷ்.

"இதில என்னங்க இருக்கு? இப்பதான் வெளிநாட்டுல போய்ப் படிக்கறதுக்கு பாங்க்கில கடன் கொடுக்கறாங்க. வசதி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த எத்தனையோ பிள்ளைங்க வெளிநாட்டுக்குப் போய்ப் படிச்சுட்டு அங்கேயே வேலை தேடிக்கிட்டு செட்டில் ஆயிடறாங்களே!"

"நாம செய்ய முடியாததை நம்மளை விடக் கீழ இருக்கறவங்க செய்யறதைப் பார்த்தா ஆத்திரம் வருமா, வராதா?"

"எதுக்கு வரணும்? அவங்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பை அவங்க அனுபவிக்கறாங்க. அதோட, நமக்கு ஒரே பொண்ணு, அவளை நாம எந்த நாட்டுக்கு வேணும்னாலும் அனுப்பி, எந்தப் படிப்பு வேணும்னாலும் படிக்க வச்சிருக்கலாம். ஆனா அவளுக்குப் படிப்பிலே ஆர்வம் இல்ல. பி ஏ வோட நிறுத்திக்கிட்டா. நாமும் அவளுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். மத்தவங்க என்ன வேணும்னா பண்ணிட்டுப் போறாங்க. நீங்க ஏன் அதுக்காக ஆத்திரப்படறீங்க?"

பிறருக்கு நன்மை நடந்தால் அதைப் பொறுக்காத சுபாஷின் குணத்தை மாற்ற முடியாது என்று அறிந்த சரோஜா, அவன் அவ்வப்போது இப்படிப் பொருமுவதை வேறு வழியின்றி சகித்துக் கொண்டாள்.

ஒருநாள் சுபாஷ், "சரோஜா! நாம இந்த வீட்டை விட்டு வேற வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும். உனக்கு ஒண்ணும் வருத்தம் இருக்காதே அதில?" என்றான்.

"ஏங்க? இது நம்ப சொந்த வீடு. வசதியா இருக்கு. ஏன் இதை விட்டுட்டு இன்னொரு வீட்டுக்குப் போகணும்?" என்றாள் சரோஜா.

"இல்லை சரோஜா. கம்பெனியில கொஞ்சம் பிரச்னை. இந்த வீட்டை அடமானம் வச்சுதான் பேங்க்ல கடன் வாங்கி பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"அது சரி. பிசினஸ் நல்லாத்தானே நடந்துக்கிட்டிருக்கு?"

"இல்ல சரோஜா. ரெண்டு மூணு வருஷமாவே பிசினஸ் சரியாப் போகல. நீ கவலைப்படுவேன்னு உங்கிட்ட சொல்லலே! பிசினஸை சரி பண்றதுக்காக, பாங்க் கடனைத் தவிர, வெளியிலேயும் நிறையக் கடன் வாங்கிட்டேன். ஆனா நஷ்டம் அதிகமாத்தான் ஆகிக்கிட்டிருக்கு. கடன், வட்டி எல்லாம் சேர்ந்து பெரிய தொகையாயிடுச்சு. இந்த வீட்டை வித்துத்தான் கடனையெல்லாம் அடைக்கணும்!"

"அப்ப பிசினஸ்?" என்றாள் சரோஜா, அதிர்ச்சியுடன்.

"பிசினஸை இனிமே நடத்த முடியாது. வீட்டை வித்து வர பணத்தில் கடனையெல்லாம் அடைச்சப்பறம், மீதி இருக்கிற பணத்தை பாங்க்கில போட்டு, அதுல வர வட்டியை வச்சுத்தான் நம்ப மீதிக் காலத்தை ஓட்டணும்."

சுபாஷுக்குத் தொண்டையை அடைத்தது.

மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ்ந்தபோதே, மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த சுபாஷ், இனிமேல் எல்லோரையுமே பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய நிலை வந்து விட்டதே என்று நினைத்தாள் சரோஜா.   

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
      அழுக்காறாமை      
குறள் 167
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் 
தவ்வையைக் காட்டி விடும்.


பொருள்:  
பொறாமை உள்ளவனைத் திருமகள் பொறுக்க மாட்டாள். அவனைத் தன் அக்கா மூதேவியிடம் ஒப்படைத்து விட்டு, அவனிடமிருந்து விலகி விடுவாள்.

Read 'The Jealous Husband' the English version of this story by the same author.
பொருட்பால்                                                                                           காமத்துப்பால்












Saturday, May 26, 2018

166. பிரியாவின் குறை!

"ஏம்மா, வேற சட்டையே இல்லியா?" என்றாள் பிரியா.

"இருக்கறத்துக்குள்ள நல்லதா ஒண்ணை எடுத்துக் போட்டுக்கடி!" என்றாள் தங்கம்.

"புதுசா ஒண்ணு கூட இல்லியேம்மா!" என்றாள் பிரியா, அழும் தொனியில்.

"ஆஃபீஸ்ல அட்வான்ஸ் வாங்கி, நாளைக்கே உனக்குப் புது டிரஸ் வாங்கித் தரேன்!" என்றாள் தங்கம்.

"ஸ்கூல்ல இன்னிக்கு ஃபங்ஷன். நாளைக்கு வாங்கிக் கொடுத்து என்ன பிரயோசனம்?" என்றாள் பிரியா, சிணுங்கிக் கொண்டே.

தங்கத்துக்குத் தொண்டையை அடைத்தது. இப்படியா ரகுராமன் தன்னையும் பிரியாவையும் தவிக்க விட்டு விட்டுப் போக வேண்டும்?

"ஏம்மா! நாம ஏழைங்களா, பணக்காரங்களா?" என்றாள் பிரியா.

"ரெண்டும் இல்லை. ரெண்டுங்கெட்டான்!" என்றாள் தங்கம்.  தங்களை ஏழை என்று ஒத்துக் கொள்ள முடியாதவர்கள் நடுத்தர வர்க்கம் என்று சொல்லிக் கொண்டு தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களோ என்று அவளுக்குத் தோன்றியது.

"அப்பா இருந்திருந்தா, நாம பணக்காரங்களா இருந்திருப்போமா?"

தங்கம் பதில் சொல்லவில்லை. அவள் மனம் பழைய நினைவுகளைப் புரட்டிப் போடத் தொடங்கியது.

ரகுராமன் அவன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை. அவனுடைய ஒரே தம்பி கேசவன். கேசவன் சிறுவனாக இருந்தபோது, அவர்களுடைய தூரத்து உறவினர் ஒருவர் அவனை சுவீகாரம் கேட்டார். அவருக்கு மனைவி இல்லை. அருகிலிருந்த ஒரு ஊரில் அவர் தனியே வசித்து வந்தார். ஓரளவுக்கு வசதியானவர். 

கேசவன் அவன் பெற்றோருடனேயே இருக்கலாம். ஆனால் அவன் படிப்பு, திருமணம், வேலை எல்லாம் அவன் சுவீகாரத் தந்தையின் பொறுப்பு. அவன் சுவீகாரத் தந்தை அவ்வப்போது அவனை வந்து பார்த்து விட்டுப் போவார். அவர் இறந்ததும் கேசவன் கொள்ளி போட வேண்டும். அதன் பிறகு அவருடைய சொத்துக்கள் கேசவனுக்கு வந்து சேரும்.

இவைதான் அவர் விவரித்த ஏற்பாடுகள்.

மகனைப் பிரிய வேண்டியதில்லை என்பதாலும், பிற்காலத்தில் அவனுக்கு வசதியான வாழ்க்கை அமையும் என்பதாலும் கேசவனின் தந்தை இதற்கு ஒப்புக்கொண்டார்.

ரகுராமனின் படிப்பு பள்ளி இறுதித் தேர்வுடன் முடிந்து விட்டது. அவர்கள் ஊரில் கல்லூரி எதுவும் இல்லை. வெளியூரில் ஒரு கல்லூரியில் அவனைச் சேர்த்து, விடுதியில் தங்க வைத்துப் படிக்க வைக்கும் அளவுக்கு ரகுராமனின் பெற்றோருக்கு வசதி இல்லை.

ஆனால் அடுத்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வை முடித்த கேசவனை அவன் சுவீகாரத் தந்தை ஒரு நல்ல கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார்.

தான் மேலே படிக்க இயலாதபோது தம்பிக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது ரகுராமனுக்கு உறுத்தலாக இருந்தது.

"ஏம்ப்பா! கேசவனோட அப்பா கிட்டதான் நிறையப் பணம் இருக்கே, அவரு என்னையும் படிக்க வச்சிருக்கலாம் இல்ல?" என்றான் ரகுராமன், தன் தந்தையிடம்.

"அதையெல்லாம் நாம எப்படி எதிர்பார்க்க முடியும்?" என்றார் அவன் அப்பா.

ரகுராமனுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை. 

அடுத்த சில ஆண்டுகளில் கேசவன் படிப்பை முடித்து சென்னையில் ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டான். ரகுராமனும் சென்னையில் அவன் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையில் சேர்ந்து விட்டான். 

ரகுராமனுக்கும் தங்கத்துக்கும் திருமணம் முடித்த சில மாதங்களில் அவன் பெற்றோர் இருவரும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து விட்டனர். அதற்குப் பிறகு கேசவன் அவன் சுவீகாரத் தந்தையுடன் அவர் அவனுக்காக சென்னையில் வாங்கிய வீட்டுக்குப் போய் விட்டான். அவன் சுவீகாரத் தந்தை அவனுக்கு ஒரு வசதியான இடத்தில் திருமணமும் செய்து வைத்து விட்டார்.

ரகுராமனுக்கும், கேசவனுக்கும் தொடர்பு கிட்டத்தட்ட அடியோடு விட்டுப் போய் விட்டது. கேசவனின் சுவீகாரத் தந்தை இறந்ததற்குக் கூட ரகுராமன் போகவில்லை.

கேசவனோடு தொடர்பைத் துண்டித்து விட்டாலும், கேசவனையும் அவன் வளர்ப்புத் தந்தையையும் நாள் தவறாமல் தங்கத்திடம் வசைபாடிக் கொண்டிருப்பான் ரகுராமன்.

"இப்படி ஒரு அநியாயம் உலகத்தில நடக்குமா? அண்ணன்  தம்பின்னு நாங்க ரெண்டு பேரு இருந்தோம். என் தம்பியை சுவீகாரம் எடுத்து, அவனுக்கு மட்டும் எல்லா உதவியையும் செஞ்சாரே அந்தப் பெரிய மனுஷன், இது அடுக்குமா?" என்பான் ஒருநாள்.

"யாரோ ஒருத்தர் வந்து உதவி செஞ்சா, அதை இவன் எப்படி ஏத்துக்கலாம்? எனக்கு என் அப்பா அம்மாதான் முக்கியம்னு இருக்க வேண்டியதுதானே?" என்பான் இன்னொரு நாள்.

"என் தம்பி என்னை விட நல்லா படிச்சு, சொந்த முயற்சியில முன்னுக்கு வந்திருந்தா நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். யாரோ போட்ட பிச்சையில பெருமையா வாழ்ந்துக்கிட்டிருக்கான்! இதெல்லாம் ஒரு பொழப்பா?" என்று சில நாள் புலம்புவான்.

"இப்படியெல்லாம் மத்தவங்களைப் பத்திப் பேசாதீங்க. நாம முன்னேற என்ன வழின்னு யோசிங்க" என்று தங்கம் பலமுறை சொல்லியும் அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

திடீரென்று ஒருநாள் மாரடைப்பு ஏற்பட்டு ரகுராமனின் உயிர் பிரிந்து விட்டது. கேசவன் வந்து பார்த்து விட்டுப் போனான். அதோடு சரி.

அதற்குப் பிறகு தங்கம் ஒரு வேலையைத் தேடிக் கொண்டு, தன்னையும் தன் மகள் பிரியாவையும் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

"சாப்பிட வாடி!" என்றாள் தங்கம்.

"வீட்டுச் சாப்பாடு போரடிக்குதும்மா. ஓட்டலுக்குப் போகலாம்மா!" என்றாள் பிரியா.

"உனக்குத்தான் தெரியுமே! மாசத்துல ஒரு நாள் - சம்பளம் வாங்கினப்பறம் ஒரு தடவைதான் - என்னால உன்னை ஓட்டலுக்கு அழைச்சுக்கிட்டுப் போக முடியும்"

"போம்மா! என் ஃபிரண்ட்ஸ்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஓட்டலுக்குப் போய் சாப்பிடறாங்க. ஸ்கூலுக்குப் போட்டுக்கிட்டுப் போக நல்ல டிரஸ் இல்ல, ஜாலியா ஓட்டலுக்குப் போய் சாப்பிட முடியல. ஏம்மா இப்படி?" என்றாள் பிரியா.

"தெரியலியே!" என்றாள் தங்கம்.  

அறத்துப்பால்
இல்லறவியல் 
             அதிகாரம் 17          
     அழுக்காறாமை      
குறள் 166
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் 
உண்பதூஉம் இன்றிக் கெடும்.


பொருள்:  
பிறருக்குக் கிடைக்கும் உதவி குறித்துப் பொறாமை கொள்பவனின் குடும்பம் உணவு, உடை கூடக் கிடைக்காத நிலைக்கு ஆளாகும்.

Read 'Priya's Wishes' the English version of this story by the same author.
                                                                          குறள் 167
பொருட்பால்                                                                                     காமத்துப்பால்