About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, February 28, 2018

136. வேண்டாம் மேனகை!

"நண்பர்களே! நாம இங்க என்ஜாய் பண்றதுக்காக வந்திருக்கோம். அதனால, எல்லாரும் ஃப்ரீயா இருங்க. இங்கே, எம்.டி, ஜி.எம், அஸிஸ்டன்ட்னு வித்தியாசம்லாம் கிடையாது" என்றார் நிர்வாக இயக்குனர் மணிபாரதி.

"ஆமாம். நாம ஃப்ரீயா இருக்கணும்னுதான், பெண் ஊழியர்கள் இல்லாம, ஆண்கள் மட்டும் வந்திருக்கோம்" என்றார் பொது மேலாளர் முருகன்.

அந்த நிறுவன ஊழியர்கள், ஆண்டுக்கு ஒருமுறை, பிக்னிக்குக்காக, மலைப்பகுதியில் இருக்கும் அந்த ரிஸார்ட்டுக்கு வருவது வழக்கம்.

மாதவன் அந்த நிறுவனத்தில் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்ததால், அவனுக்கு இதுதான் முதல் முறை. அலுவலகத்தில் பாம்பாகச் சீறும் ஜி.எம்-உம், அறையை விட்டு வெளியே வராத எம்.டி-யும், கீழ் மட்ட ஊழியர்கள் உட்பட அனைவரிடமும் கைகுலுக்கியும், தோளில் கை போட்டும் பழகியது, அவனுக்கு வியப்பாக இருந்தது.

பகல் முழுவதும் ஊர் சுற்றிப் பார்ப்பதில் கழிந்தது. மாலை தங்கள் அறைகளுக்கு வந்து வந்து சிறிது நேரம் இளைப்பாறியதும், அனைவரும் மைய அறையில் கூடினார்கள்.

அறையின் முகப்பில் இருந்த பெரிய மேஜைகளின் மீது பல்வகை மதுபானங்களும், கண்ணாடித் தம்ளர்களும் வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய பானத்தையோ, கலவையையோ ஊழியர்களிடம் கேட்டுப் பெற்று எடுத்து வந்து, நாற்காலிகளில் சிறு குழுக்களாக அமர்ந்து, பானங்களை அருந்தியபடி, அரட்டை அடிக்கத் தொடங்கினர்.

மாதவன் மட்டும் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தான். அவன் தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்து அவனிடம் வந்த முகேஷ், "என்னப்பா! டிரிங்க்ஸ் பழக்கம் இல்லியா? முதல்ல கொஞ்சம் பியர் அடிச்சுப்பாரு. அப்புறம் பழகிடும். நான் எடுத்துக்கிட்டு வரட்டுமா?" என்றான்.

முகேஷ் அவனுடைய சீனியர். அலுவலகத்தில் அவனுக்கு நெருக்கமானவனும் கூட.

"வேண்டாம். நான் குடிக்கிறதில்ல" என்றான் மாதவன்.

"நான் கூட, வந்த புதுசுல, உன்னை மாதிரிதான் இருந்தேன்! இன்னும் கொஞ்ச நேரத்தில, ஒரு ஆட்டம் பாக்கப் போறோம். அதைப் பாத்தப்பறம், உனக்கே குடிக்கணும்னு ஆசை வந்துடும்" என்றான் முகேஷ்.

"ஆட்டமா?"

"ஆமாம்ப்பா! காபரே டான்ஸ்!"

"காபரேயா?"

"ஆமாம்ப்பா! இந்த ரிஸார்ட்டோட ஸ்பெஷாலிட்டியே காபரேதான். இந்த மாதிரி ஒரு ஆட்டத்தை, சிட்டி ஹோட்டல்கள்ள கூடப் பாக்க முடியாது!"

"இல்ல. நான் அதைப் பாக்கப் போறதில்ல. நான் ரூமுக்குப் போயிடறேன்" என்றான் மாதவன்.

"முட்டாளாடா நீ? சிட்டியில, அவனவன் திருட்டுத்தனமா காபரே நடக்கற ஹோட்டல்கள்ள, ஏகப்பட்ட பணம் கொடுத்து டிக்கட் வாங்கிக்கிட்டு, எப்ப போலீஸ் வந்து எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்களோன்னு பயந்துகிட்டே பாக்கறான். இங்க, நம்ப கம்பெனியில, என்டர்டெயின்மென்ட் எக்ஸ்பென்ஸ் கணக்கில, இது மாதிரி சூப்பர் டான்ஸ் எல்லாம் நமக்கு ஃப்ரீயாவே ஏற்பாடு பண்ணியிருக்காங்க. இதைப் பாக்க மாட்டேன்னு கண்ணை மூடிக்கறேங்கறே!"

"வேண்டாம், முகேஷ். இது மாதிரி பழக்கம்லாம் ஆரம்பிச்சா, பின்னால அடிக்‌ஷனாப் போயி, வாழ்க்கையே வீணாயிடும். அதனாலதான், இந்த மாதிரி விஷயங்களிலிருந்து விலகி  இருக்கலாம்னு பாக்கறேன்!"

"ஸ்கூல்ல படிச்ச திருக்குறளை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டிருக்க போலருக்கு! குடிக்க மாட்டேன்னு சொன்னே. அது ஓகே. நான் உன்னை வற்புறுத்தல. ஒரு கவர்ச்சி நடனத்தைப் பாக்கறதால நீ கெட்டுப் போயிடுவியா என்ன? சினிமாவில எல்லாம் பாக்கலியா?"

"நான் பாக்கற சினிமாவில, இது மாதிரி டான்ஸ் அஞ்சு நிமிஷம் வரலாம். ஆனா, இது மாதிரி டான்ஸைப் பாக்கணும்கறதுக்காக நான் சினிமாவுக்குப் போறதில்லியே!"

"டேய் சந்நியாசி! நீ என்ன, டான்ஸ் ஆடறவங்களோட சல்லாபமா பண்ணப் போற? அவங்க கவர்ச்சியா ஆடறதை சும்மா பாக்கறதால என்ன ஆயிடப் போகுது? ஒரு டான்ஸைப் பார்த்து யாராவது கெட்டுப் போயிருக்காங்களா? சொல்லு."

"போயிருக்காங்களே, சந்நியாசிகளே கெட்டுப் போயிருக்காங்க!"

"எந்த சந்நியாசி? ஒத்தர் பேரைச் சொல்லு பாக்கலாம்!"

"விசுவாமித்திரர்!" என்றான் மாதவன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் 
ஏதம் படுபாக் கறிந்து
.

பொருள்:  
ஒழுக்கம் தவறுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை உணர்ந்தவர்கள், ஒழுக்கம் தவறாமல் இருப்பதில் கவனமாக இருப்பார்கள்.

Read 'An Evening of Pleasurethe English version of this story.
பொருட்பால்                                                                           காமத்துப்பால்

















Sunday, February 25, 2018

135. இலக்கை எட்டினாலும்...

ரு சேல்ஸ் மேனேஜர் என்ற முறையில், என் குழுவில் வேலை செய்யும் எல்லா சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்களின் வளர்ச்சியிலும், எனக்கு அக்கறை உண்டு.

என் குழுவில் இருக்கும் 15 சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்களில், இருவர் பற்றி எனக்குக் கொஞ்சம் கவலை உண்டு. இத்தனைக்கும், இருவருமே திறமைசாலிகள். திறமை இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருக்கிறார்களே என்பதுதான் என் கவலை.

இருவரில், நரேஷின் பிரச்னை என்னவென்று எனக்குத் தெரியும். ஏன், அவனைத் தவிர எல்லோருக்குமே இது தெரியும்! எப்போதும், மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் அவன் வேலை. யாராவது அவனை விட அதிகமாக விற்பனை செய்து விட்டால், அவர்கள் மீது ஏதாவது புகார் சொல்வான்.

அவனுடைய புகார்களில் அர்த்தமோ, வலுவோ இருக்காது. "மத்தவங்க என்ன பண்றாங்கன்னு நீ ஏன் பாக்கறே? உன்னோட டார்கெட்டை எப்படி அச்சீவ் பண்றதுன்னு பாரு" என்று நான் அவனிடம் பலமுறை சொல்லி விட்டேன். ஆனால், அவன் மாறவில்லை. 

அவனுடைய இந்த மனப்போக்கினால், அவனால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அத்துடன், மற்றவர்களுடன் அவனுக்கு நல்லுறவு இல்லாமல் போய் விட்டது. இனி, அவனே உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்டாலொழிய, அவனுக்கு எதிர்காலம் இல்லை.

இன்னொருவன் பிரசாத். அவனுடைய பிரச்னை என்னவென்று எனக்குப் புரியவில்லை.

ஒவ்வொரு சேல்ஸ் எக்ஸிக்யூடிவுக்கும் ஒரு மாதாந்திர இலக்கு உண்டு. இலக்குக்கு மேல் அவர்கள் விற்பனை செய்தால், ஊக்கத் தொகை உண்டு. பல சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்கள், தங்கள் இலக்கை அடையக் கஷ்டப்படுவார்கள். கடுமையாக உழைப்பார்கள். 

பிரசாத் மட்டும் பத்து அல்லது பதினைந்து தினங்களுக்குள், தன் மாதாந்திர இலக்கை எட்டி விடுவான். ஆனால், இலக்கை எட்டிய பிறகு, அதற்கு மேல் விற்பனை எதுவும் வராது. கேட்டால், 'முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்' என்பான்.

சில மாதங்களில், இருபது தேதி வரை ஒரு விற்பனை கூட இருக்காது. ஆனால், இருபது தேதிக்கு மேல், ஆர்டர்கள் வரும். மாத இறுதிக்குள், இலக்கை எட்டி விடுவான்!

ஒரு மாதத்தில், பத்து அல்லது பதினைந்து நாட்கள் மட்டும்தான் உழைக்கிறான். மற்ற நாட்களில், விற்பனையில் கவனம் செலுத்துவதில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மற்ற நாட்களிலும் நன்கு உழைத்தால், ஊக்கத் தொகையாகவே நிறைய சம்பாதிக்கலாம். ஆனால், அவன் ஏன் அப்படிச் செய்வதில்லை என்பது எனக்குப் புரியவில்லை.

பிரசாத்துக்குக் குடும்பப் பிரச்னை ஏதாவது இருக்குமோ என்று தோன்றியது. அதனால்தான், இலக்கை அடையும் வரை மட்டும் உழைத்து விட்டு, மற்ற நாட்களில் வேறு எதிலாவது கவனத்தைச் செலுத்துகிறானோ?

அவன் வீட்டிலேயே போய் விசாரித்து விட்டு வந்து விடலாம் என்று முடிவு செய்தேன். 

ரு நாள்,  பிரசாத் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, அவன் வீட்டுக்குப் போனேன். வீட்டில் பிரசாத்தின் தந்தை இருந்தார்.

நான் யார் என்று சொன்னதும், அவர் பதறிப் போய் விட்டார். 

"என்ன சார்! ஏதாவது பிரச்னையா?" என்றார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. பிரசாத்துக்கு நல்லது செய்யலாம்னு நெனைச்சுத்தான் வந்திருக்கேன். அவரைப் பத்தி சில விஷயங்கள் உங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்" என்றேன்.

"சார்! பிரசாத் ரொம்ப நல்ல பையன். தப்பு எதுவும் பண்ண மாட்டான். இந்தப் பாழாப் போன குடிப்பழக்கம்தான் அவனோட எதிரி..."

"என்ன சார் சொல்றீங்க?" என்றேன், அதிர்ச்சியுடன்.

"ஆமாம், சார். அவன் வாங்கற சம்பளத்தில பாதி, குடிக்கே போயிடுது. எனக்குக் கொஞ்சம் பென்ஷன் வருது. அதனால, குடும்பம் ஓடிக்கிட்டிருக்கு. ஆனா, 'ஆஃபீஸ் வேலையில கரெக்டா இருக்கேன், அங்க ஒண்ணும் பிரச்னை இல்லை'ன்னு எங்கிட்ட சொல்லியிருக்கானே! ஏதாவது தப்புப் பண்ணியிருந்தான்னா, அவசரப்பட்டு வேலையை விட்டுத் தூக்கிடாதீங்க, சார்!" என்றார் அவர், பதட்டம் தணியாதவராக.

பிரசாத்தின் பிரச்னை எனக்குப் புரிந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு, மாதத்தில் சில நாட்கள் கடுமையாக உழைத்து, விற்பனை இலக்கை எட்டி விடுகிறான். அதற்குப் பிறகு, வேலையில் கவனம் செலுத்தாமல், குடித்து விட்டு வீணே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறான்! ஒரு தவறான பழக்கம் எப்படி ஒருவனின் திறமையையே மழுங்க அடித்து விடுகிறது என்று நினைத்து வருந்தினேன்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு.


பொருள்:  
பொறாமை உள்ளவனிடம் செல்வம் சேராது. அதுபோல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு ஏற்படாது.

Read 'Reached the Target, But' the English version of this story.
        பொருட்பால்                                                                            காமத்துப்பால்






















Friday, February 23, 2018

134. இரண்டு தவறுகள்!

"மிஸ்டர் சேகர்! நீங்க செஞ்சிருக்கிற காரியத்துக்கு, உங்களை நாங்க இங்கே தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்க முடியாது. நீங்க ரிஸைன் பண்றதுதான் உங்களுக்கு கௌரவமா இருக்கும்" என்றார் கல்லூரி நிர்வாகக் குழுவின் தலைவர் பழனி.

"சார்! தயவு பண்ணி, எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. தப்பு பண்றது எல்லோருக்கும் சகஜம்" என்றான் சேகர்.

"முடியாத காரியம்."

"சார்! கடந்த காலத்தில, இது மாதிரி சந்தர்ப்பத்திலே, மத்தவங்களுக்கு, நீங்க இன்னொரு சான்ஸ் குடுத்திருக்கீங்க."

"யாரைச் சொல்றீங்க?"

"கோபாலைத்தான்."

"கோபாலா?" என்ற பழனி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மற்ற இரு உறுப்பினர்களான கல்லூரி முதல்வரையும், நிர்வாகக் குழுவின் செயலாளரையும் பார்த்தார். அவர்கள் இருவரும் மௌனமாகப் புன்னகைத்தனர்.

ந்து வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் அது. கோபால் என்ற விரிவுரையாளர் மீது, மாணவர்களிடமிருந்து புகார்கள் வரத் தொடங்கின.

"அவர் கிளாஸ் ஒழுங்கா நடத்தறதில்ல."

"நிறைய விஷயங்களை விட்டுடறாரு. அவர் நிறைய டாபிக்ஸை கவர் பண்ணலைங்கறது, புத்தகத்தைப் படிச்சுப் பாத்தப்பறம்தான் எங்களுக்குத் தெரிஞ்சது."

"சில சமயம், புத்தகத்தைப் பாத்து அப்படியே படிக்கிறாரு."

"ஒரு டாபிக்கை விளக்கிக்கிட்டிருக்கச்சே, பாதியில, அப்படியே நின்னுடறாரு. மேற்கொண்டு தெரியலையா, மறந்துட்டாரான்னே தெரியல. அப்புறம், அதை அப்படியே விட்டுட்டு, வேற டாபிக்குக்குப் போயிடறாரு."

முதல்வர் கோபாலைக் கூப்பிட்டு விசாரித்தார். குற்றச்சாட்டுகளை கோபால் மறுத்தார்.

கோபாலை இரண்டு மூத்த பேராசிரியர்கள் சோதிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.

கோபாலைச் சோதித்த பேராசிரியர்கள், கோபாலிடம் அவருடைய சப்ஜெக்ட் பற்றிக் கேட்ட பல கேள்விகளுக்கு, அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

கோபால் வகுப்பில் பாடம் நடத்துவதை, பக்கத்து வகுப்பில் நின்று, அவருக்குத் தெரியாமல் கேட்டார்கள். புகார்கள் உண்மைதான் என்று அறிக்கை கொடுத்தார்கள்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு, கோபாலை விசாரித்தது. கோபால் தனது பிரச்னையை ஒப்புக் கொண்டார். பல மாதங்களாக, அவர் புத்தகங்களைப் படித்துத் தயார் செய்து கொள்ளாமலேயே, வகுப்புகள் நடத்தி வந்திருக்கிறார்.

தனக்குத் தெரிந்த சப்ஜெக்ட்தானே என்ற அலட்சியத்தில், புத்தகங்களைப் படிக்காமல், மேலோட்டமாகப் பாடம் நடத்தி வந்ததில், அவர் படித்து அறிந்திருந்த பல விஷயங்கள், கொஞ்சம் கொஞ்சமாக அவர் நினைவிலிருந்து அகன்று விட்டன. அதை அவரால் உணர முடியவில்லை.

"ஏதோ ஒரு ஓவர்கான்ஃபிடன்ஸினால அப்படி நடந்துக்கிட்டேன். நான் செஞ்சது தப்புத்தான். இனிமே, படிச்சு, நல்லாத் தயார் பண்ணிக்கிட்டு வந்து வகுப்பு நடத்தறேன்" என்றார் கோபால்.

ஆனால், ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இதை ஏற்கவில்லை. அவரை வேலையில் தொடர அனுமதிக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

"எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க. நான் ஒரு வருஷம் லீவ் போட்டுட்டு, என் சப்ஜெக்ட் தொடர்பான எல்லாப் பாடங்களையும், மறுபடியும் முழுசாப் படிச்சுட்டு வரேன். இப்ப என்னை டெஸ்ட் பண்ணின மாதிரி, சீனியர் ப்ரொஃபஸர்கள் மறுபடியும் டெஸ்ட் பண்ணட்டும். அவங்க என்னை அப்ரூவ் பண்ணினா மட்டும், என்னை மறுபடியும் வேலையில சேந்துக்க அனுமதிங்க" என்றார் கோபால்.

அவர் வேண்டுகோளை ஏற்று, அவருக்கு ஒரு வருடம் சம்பளம் இல்லாத விடுப்பு கொடுக்கப்பட்டது. கோபால், தான் சொன்னபடியே, ஒரு வருடம் பாடங்களை மீண்டும் படித்துத் தன்னை நன்கு தயார் செய்து கொண்டு வந்து, பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சிறப்பாக பதில் சொன்னார். அதன் பிறகு, அவரை மீண்டும் வேலையில் தொடர அனுமதித்தார்கள்.

அதைத்தான் சேகர் குறிப்பிட்டுச் சொன்னார்.

ழனி வாய்விட்டுச் சிரித்து விட்டார். "மிஸ்டர் சேகர்! உங்ககிட்ட நாங்க இவ்வளவு தூரம் பேசிக்கிட்டிருக்கிறதே அதிகம். கோபால் பண்ணின தப்பு வேற, நீங்க பண்ணின குற்றம் வேற. 

"அவர் கொஞ்சம் சோம்பேறித்தனமா இருந்து, புத்தகங்களைப் படிக்காம, அரைகுறையா கிளாஸ் எடுத்து, தான் படிச்ச விஷயங்கள்ள நிறைய மறந்து போய், அவர் மேல மாணவர்களுக்கு இருந்த நல்ல அபிப்பிராயத்தைப் போக்கிக்கிட்டாரு. 

"நீங்க உங்க கிளாஸ்ல படிச்ச மாணவியை பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி செஞ்சிருக்கீங்க. காலேஜ் பியூன் பாத்துட்டு, ஒடி வந்து, உங்களை அடிச்சு விலக்கி விட்டு, அந்தப் பொண்ணைக் காப்பாத்தியிருக்காரு. 

"இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டாம்னு அந்தப் பொண்ணோட பெற்றோர்கள் கேட்டுக்கிட்டதால, உங்க மேல போலீஸ் புகார் குடுக்காம, உங்களை வேலையை விட்டு அனுப்பிட்டு அதோட பிரச்னையை முடிச்சு வைக்கலாம்னு பாக்கறோம். நீங்க என்னடான்னா..! சரி. சட்னு சொல்லுங்க. ரிஸைன் பண்ணப் போறீங்களா, இல்லை, உங்களை டிஸ்மிஸ் பண்ணணுமா?"

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்


பொருள்:  
ஒரு அந்தணன் வேதத்தை மறந்து விட்டால், அவனால் அதை மீண்டும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஒருவன் ஒழுக்கம் தவறி விட்டால், அவனுடைய உயர்ந்த குடிப்பிறப்பையே அவன் இழந்து விடுவான்.

(தற்போதைய காலத்துக்குப் பொருந்தும்படி, 'ஒருவன் தான் கற்ற கல்வியை மறந்து விட்டால், அதை மீண்டும் கற்க முடியும். ஆனால், அவன் ஒழுக்கம் தவறி விட்டால், அவனுடைய மதிப்பு போய் விடும்' என்று இந்தக் குறளுக்குப் பொருள் கொள்ளலாம்.)

Read 'The Precedent?' the English version of this story.
பொருட்பால்                                                                                             காமத்துப்பால்




















Thursday, February 22, 2018

133. நல்லதொரு குடும்பம்!

ள்ளியிலிருந்து தொலைபேசிச் செய்தி வந்ததும், மஞ்சுளா, அலுவலகத்திலிருந்த தன் கணவன் சாமிநாதனுக்குக் கைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டு, மகன் குணசீல் படிக்கும் பள்ளிக்கு விரைந்தாள். அவள் உள்ளே நுழையும்போதே, சாமிநாதனின் காரும் பள்ளி வாசலில் வந்து நின்றது.

இருவரும் பள்ளி முதல்வர் அறைக்குச் சென்றனர்.

"வாங்க" என்று இறுக்கமான முகத்துடன் அவர்களை வரவேற்ற முதல்வர், அவர்களை உட்காரச் சொன்னார்.

"குணசீல் எங்கே?" என்றான் சாமிநாதன்.

"ரூம்ல படுத்துக்கிட்டிருக்கான். கொஞ்ச நேரத்தில தெளிஞ்சுடுவான்னு நினைக்கறேன். அதுக்கு முன்னாடி, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உங்க பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா?" என்றார் முதல்வர்.

"என்ன சார் பேசறீங்க? குணசீல் தங்கமான பையன். நீங்க ஃபோன்ல சொன்னதை என்னால நம்பவே முடியல. முதல்ல, நாங்க அவனைப் பாக்கணும்" என்றாள் மஞ்சுளா.

"ஒன்பதாவது படிக்கிற பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது எனக்கே அதிர்ச்சியாத்தான் இருக்கு. ஆனா, அவனை டாஸ்மாக் கடையில ரெண்டு மூணு தடவை பாத்திருக்கறதா சில மாணவர்கள் சொல்றாங்க" என்றார் முதல்வர்.

"எங்க பையனை நாங்க அப்படி வளக்கல, சார். சகவாச தோஷம்தான் காரணமா இருக்கணும். சேரக் கூடாதவங்களோட சேர்ந்துதான், இந்தப் பழக்கம் அவனுக்கு வந்திருக்கும்" என்றான் சாமிநாதன்.

"நீங்க அவனுக்கு தாராளமா கொடுக்கற பாக்கெட் மணியும் காரணமா இருக்கலாம்!" என்று முதல்வர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, குணசீலை அழைத்துக் கொண்டு, ஒரு ஆசிரியர், முதல்வரின் அறைக்குள் வந்தார். கூடவே, இன்னொரு பையனும் வந்தான். பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்டவன் போல் நடந்து வந்த குணசீல், சோர்ந்திருந்த கண்களால், பெற்றோரைப் பார்த்தான்.

"எப்படிடா வந்தது உனக்கு இந்தப் பழக்கம்? நம்ப குடும்பத்தில யாருக்குமே இந்தப் பழக்கம் இருந்ததில்லையே?" என்றான் சாமிநாதன், கோபமாக.

குணசீல் பேசாமல் நின்றான்.

"அந்தப் பையன் யாரு?" என்றாள் மஞ்சுளா, குணசீலுடன் வந்த பையனைக் காட்டி.

"அவன்தான் ரோட்டில மயங்கி விழப் போன குணசீலை எழுப்பி, கையைப் பிடிச்சு இங்கே அழைச்சுக்கிட்டு வந்தான்" என்றார் முதல்வர்.

"இவனோட சேர்ந்து போய்தான் குடிச்சுட்டு வந்திருக்கானா? சகவாச தோஷம்னு நான் அப்பவே சொல்லல?" என்ற சாமிநாதன், முதல்வரிடம் திரும்பி, "உங்க ஸ்கூல்ல எப்படிப்பட்டவங்களை சேர்க்கறதுன்னு ஒரு தராதரம் வேண்டாம்?" என்றான், குற்றம் சாட்டும் தொனியில்.

"இந்தப் பையன் எங்க ஸ்கூல்ல படிக்கிற பையன் இல்லை!" என்றார் முதல்வர்.

"இவன்கிட்ட எப்படிடா உனக்கு சிநேகிதம்? தெருவில போற பையங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டு, அவங்களோட சேர்ந்து குடியைப் பழக்கிக்கற அளவுக்கு வந்துட்ட பாரு!" என்றாள் மஞ்சுளா, மகனிடம்.

"மேடம்! யூ ஆர் மிஸ்டேகன். இவனோட சேர்ந்து, உங்க பையன் குடிக்கல. லஞ்ச் இண்டர்வல்ல, உங்க பையன், பக்கத்தில இருக்கற டாஸ்மாக் கடைக்குப் போய், எதையோ வாங்கிக் குடிச்சுட்டு, தெருவில நடந்து வரப்ப, தள்ளாடிக் கீழே விழப் பாத்திருக்கான். அப்ப, ரோட்டில நடந்து போய்க்கிட்டிருந்த இந்தப் பையன், உங்க பையனைத் தாங்கிப் புடிச்சு, இந்த ஸ்கூல்ல படிக்கிற பையனாத்தான் இருக்கணும்னு நெனச்சு, இங்க கொண்டு விட்டிருக்கான். நான்தான், நீங்க வந்துட்டுப் போறவரையிலும், அவனை இங்க இருக்கச் சொன்னேன். உங்க பையன் பண்ணின தப்புக்கு, இந்த அப்பாவிப் பையன் மேல ஏன் பழி போடறீங்க? உங்க பையனைக் கீழே விழாம, தாங்கிப் புடிச்சு அழைச்சுக்கிட்டு வந்ததுக்கு, அவனுக்கு நீங்க கொடுக்கற பரிசா இது?" என்றார் முதல்வர், கடுமையான குரலில்.

அந்தப் பையன் சற்றுத் தயங்கி விட்டு, "சார்! எங்கப்பா குடிகாரர்தான். ஆனா, நான் குடிக்கறதில்ல!" என்றான்.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்


பொருள்:  
ஒழுக்கத்துடன் இருப்பதே ஒருவர் நல்ல குடியில் பிறந்தவர் என்பதற்கான அடையாளம். ஒழுக்கம் தவறுவது, ஒருவரை இழிந்த குடியில் பிறந்தவராகக் காட்டி விடும்.

Read 'Family Backgroundthe English version of this story.

      பொருட்பால்                                                                                           காமத்துப்பால்
















Friday, February 16, 2018

132. திருட்டும் 'புரட்டும்'

மெட்ரோ ரயிலில், என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரின் முகம், தெரிந்த முகமாகத் தோன்றியது. 

எங்கே பார்த்திருக்கிறோம் இவரை என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே, "நீங்க அருணாசலம்தானே?" என்று அவரே கேட்டு விட்டார்.

"ஆமாம். ஆனா, நீங்க யாருன்னு எனக்குத் தெரியலியே!" என்றேன் நான்.

"என் பேர் கணேசன். உங்களோட ஸ்கூல்ல படிச்சவன்" என்றார் அவர், தயக்கத்துடன்.

எனக்கு உடனே நினைவு வந்து விட்டது. கணேசனின் தயக்கத்துக்கான காரணமும் புரிந்தது.

"டேய் கணேசா! எப்படிரா இருக்கே?" என்றேன், பள்ளி நாட்களின் சுவாதீனத்துடன்.

"நல்லா இருக்கேன்" என்றான் கணேசன். இப்போதும், அவன் பேச்சில் ஒரு இறுக்கம் தெரிந்தது.

நான் போக வேண்டிய இடம் வேறு என்றாலும், அவன் இறங்கிய ஸ்டேஷனிலேயே நானும் இறங்கிக் கொண்டேன். எனக்கு வெட்டி முறிக்கிற வேலை எதுவும் இல்லையே!

ஒரு ஓட்டலில் சென்று அமர்ந்து கொண்டோம்.

ணேசனும், நானும் ஒரே வகுப்பில்தான் படித்தோம். அப்போது, நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் எட்டாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ரகு என்ற மாணவனுடைய பேனாவை கணேசன் திருடி விட்டான் என்று ஒரே பரபரப்பு. கணேசனைத் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துப் போனார்கள். அப்புறம், அவனை நான் பார்க்கவேயில்லை. அவன் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டதாகச் சொன்னார்கள்.

"திருட்டு புத்தி உள்ளவங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்காதே!' என்று என் அப்பா கண்டிப்பாகச் சொல்லி விட்டதால், கணேசன் வீட்டு விலாசத்தைக் கேட்டறிந்து, அவனைப் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்தை நான் கைவிட்டு விட்டேன்.

கணேசன் போன்ற ஒரு நெருங்கிய நண்பனைப் பிரிந்தது பற்றி, நான் பல நாட்கள் வருந்தி இருக்கிறேன். அவன் பேனாவைத் திருடி இருப்பான் என்று என்னால் நம்ப முடியவில்லை.

ட்டலில் அமர்ந்திருந்தபோதும், கணேசன் அதிகம் பேசவில்லை. பழையதை நினைத்து அவமானமாக உணர்வது போல் இருந்தான்.

"டேய் கணேசா! நீயும், நானும் எப்பவுமே ஃபிரண்ட்ஸ்தாண்டா! நீ பேனாவைத் திருடியிருப்பேன்னு நான் அப்பவும் நினைக்கல, இப்பவும் நினைக்கல. நீ எங்கிட்ட பழையபடி ஃப்ரீயா இருக்கலாம்" என்றேன்.

"இல்லடா! நான் திருடினது உண்மைதான்" என்றான் கணேசன்.

நான் சற்று வியப்புடன் அவனைப் பார்த்தேன். ஆனால், அவன் திடீரென்று உற்சாகமாக மாறி விட்டான்.

"நீ என்னை வெறுத்து ஒதுக்கியிருப்பியோன்னு பயந்துகிட்டே இருந்தேன். ஆனா, நீ என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கியே! அதனால, உங்கிட்ட உண்மையைச் சொன்னா, நீ புரிஞ்சுப்பேன்னு நினைக்கறேன். உனக்குத் தெரியும். அந்தக் காலத்துல, நாங்க கொஞ்சம் கஷ்டப்படற குடும்பமாத்தான் இருந்தோம்.

"அப்பல்லாம், நாம ஒரு பேனாவை ரெண்டு மூணு வருஷம் கூட வச்சுப்போம். இப்ப, தினம் நாலு பால்பாயிண்ட் பேனாவைத் தொலைக்கறோம். நெனச்சுப் பாத்தா ஆச்சரியமா இருக்கு. அப்பல்லாம், பேனாவைத் தொலைச்சா, ஏதோ சொத்தே போயிட்ட மாதிரி, பெரிய விஷயமா இருக்கும்!

"என் பேனா தொலைஞ்சு போச்சு. எங்கப்பாகிட்ட சொல்றதுக்கு பயமாவும் தயக்கமாவும் இருந்தது. இன்னொரு பேனா வாங்கிக் கொடுக்கறது, எங்கப்பாவுக்கு ஒரு சுமையாத்தான் இருந்திருக்கும். ரகு பணக்காரப் பையன். அடிக்கடி பேனாவை மாத்திக்கிட்டே இருப்பான். அவனோட பேனாவை அவன் பாக்காதபோது, எடுத்துட்டேன். அவன் அதைப் பெரிசா நெனைக்க மாட்டான்னு நெனச்சேன். ஆனா அவன், அவனோட பேனா எங்கிட்ட இருக்கறதைப் பாத்துட்டு, கிளாஸ் டீச்சர்கிட்ட கம்ப்ளெயின் பண்ணிட்டான்.

"கிளாஸ் டீச்சர் ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்ல, ஹெச்.எம், எங்கப்பாவைக் கூப்பிட்டு அனுப்பி, என்னையும் தன்னோட ரூமுக்குக் கூப்பிட்டு விசாரிச்சு, என்னையும், எங்கப்பாவையும் ரொம்ப இழிவாப் பேசி, அவமானப்படுத்திட்டாரு. வீட்டுக்குப் போனதும், எங்கப்பா எங்கிட்ட ஒண்ணுமே சொல்லல. நானேதான் வேற ஸ்கூல்ல படிக்கறேன்னு சொல்லி, ஸ்கூலை மாத்திக்கிட்டேன். அந்த ஸ்கூல், என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரம். தினம் ரெண்டு மைல் நடக்கணும். அப்படி தினம் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடந்து போறதுல, நான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்கற மாதிரி, ஒரு திருப்தி இருந்தது."

கணேசனின் கண்களின் ஓரத்தில் இலேசாக ஈரம் படர்ந்ததாக எனக்குத் தோன்றியது.

"விட்டுத் தள்ளுடா! சின்ன வயசில செஞ்ச தப்பு அது!" என்றேன்.

"சின்ன வயசில, யோசிக்காம அப்படி ஒரு காரியம் பண்ணி, எனக்கும் என் அப்பாவுக்கும் அவமானத்தைச் சம்பாதிச்சுக் கொடுத்தது என்னை ரொம்பவும் பாதிச்சுடுச்சு. இனிமே, வாழ்க்கையில ஒரு சின்னத் தப்பு கூடப் பண்ணாம, ஒழுக்கமா நேர்மையா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அது மாதிரியே வாழ்ந்துக்கிட்டிருக்கேன்."

"ஓ, ரொம்ப நல்ல விஷயம்" என்றேன், பாராட்டுமுகமாக.

"ஆமாண்டா. நான் இப்ப ஒரு கம்பெனியில பர்ச்சேஸ் மேனேஜரா இருக்கேன். வேடிக்கை என்னன்னா, மொதல்ல அட்மினிஸ்ட்ரேஷன்லதான் இருந்தேன். பர்ச்சேஸ் மானேஜரா இருந்தவர் நிறைய கமிஷன் வாங்கினார்னு கண்டு பிடிச்சு அவரை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. பர்ச்சேஸ்ல ஒரு நேர்மையான ஆளைப் போடணும்னுட்டு, என்னைப் போட்டிருக்காங்க!"

சொல்லும்போதே, கணேசனிடம் ஒரு பெருமிதம் தெரிந்தது. ஒரு தவறு செய்து விட்டு, அதைத் திருத்திக் கொண்டு, சரியான பாதையில், சிறிது கூட ஒழுங்கு தவறாமல், பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பெருமிதம்!

"எங்கப்பா என்னோடதான் இருக்காரு. என்னைப் பத்தி, அவருக்கு ரொம்பப் பெருமை. எனக்கு இது போதும். ஒரு விதத்தில, நான் பண்ணின தப்பே எனக்கு நல்லதா அமைஞ்சுடுச்சு. நான் பண்ணின திருட்டு, என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுடுச்சுன்னு சொல்லலாம். இங்கிலீஷில, 'பிளஸ்ஸிங் இன் டிஸ்கைஸ்'னு சொல்லுவாங்க."

"நீ உண்மையிலே ரொம்பப் பெரியவன்தாண்டா! ஒரு சின்ன சறுக்கலை, எஸ்கலேட்டர் மாதிரி பயன்படுத்தி, மேல போயிட்ட!" என்றேன் நான், மனப்பூர்வமான பாராட்டுணர்வுடன்.

"அது சரி. நீ என்ன பண்றே?" என்றான் கணேசன்.

"நான் ஒரு பாங்க்ல ஒர்க் பண்ணிட்டு வி ஆர் எஸ் வாங்கிட்டேன். இப்ப, சும்மாதான் இருக்கேன்" என்றேன்.

கணேசனுக்கு மாறாக, ஆரம்பத்தில் தவறு ஏதும் செய்யாமல் வளர்ந்த நான், ஒரு வங்கி அதிகாரியாகப் பணி  செய்தபோது, பேராசையாலும், யாரும் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்ற அசட்டு தைரியத்தாலும் உந்தப்பட்டுப் பண மோசடி செய்து, அது கண்டு பிடிக்கப்பட்டதால், வேலையை இழந்து, மூன்று வருடம் சிறைக்கும் சென்று வந்த விவரங்களை என் நண்பனிடம் பகிர்ந்து கொள்ள, எனக்கு தைரியம் இல்லை.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை.


பொருள்:  
ஒழுக்கத்தை கவனத்துடன் பேணிக் காக்க வேண்டும். வாழ்க்கையில் பலவற்றைக் கற்றறிந்த நிலையிலும், ஒழுக்கம்தான் நமக்குத் துணை நிற்கும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Turning A New Leafthe English version of this story.

பொருட்பால்                                                                                             காமத்துப்பால்





















Monday, February 12, 2018

131. நெருக்கம்

நிர்வாக இயக்குனரின் தனிச் செயலர் என்ற அந்த உயர் பதவிக்கான நேர்முகத்துக்கு வந்திருந்தவர்களிலேயே வயதில் குறைந்தவன் பத்மநாபன்தான். ஆயினும், அவன்தான் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.


நேர்முகத் தேர்வை நடத்திய பொது மேலாளர், "இப்ப நீங்க எம் டியைப் பாக்கணும். அவங்க உங்களை ஓகே பண்ணிட்டா, உங்க அப்பாயின்ட்மென்ட் கன்ஃபர்ம்ட்!" என்றார்.

நிர்வாக இயக்குனர் நர்மதா, அவனைவிட ஐந்தாறு வயது இளையவளாக இருப்பாள் என்று தோன்றியது. அவள் அவனை அதிகம் எதுவும் கேட்கவில்லை.

அவன் படிப்பு, அனுபவம் பற்றி ஓரிரு கேள்விகள் கேட்டு விட்டு, அருகிலிருந்த பொது மேலாளரைப் பார்த்துத் தலையசைத்தாள். பொது மேலாளர் "கங்கிராட்ஸ்!" என்று சொல்லி, அவன் கையைக் குலுக்க, நர்மதா மெலிதாக ஒரு புன்னகை செய்தாள்.

வேலையில் சேர்ந்த புதிதில், நர்மதா அவனிடம் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அலுவலகத்தில் அவளுடைய எல்லாப் பணிகளும் அவன் மூலமாகத்தான் நடக்க வேண்டும் என்ற நிலையிலும், அவள் தன்னைச் சற்று தூரத்திலேயே வைத்திருப்பதாக பத்மநாபனுக்குத் தோன்றியது.

ஆயினும், சில மாதங்களில் சில படிப்படியான மாறுதல்களை அவன் கவனித்தான். அவன் சிறப்பாகச் செயலாற்றும் முறையை நர்மதா கவனித்து அங்கீகரிக்கத் தொடங்கினாள். 

ஆரம்பத்தில், அவனை ஒரு கீழ்மட்ட உதவியாளன் போல் நடத்தி வந்த நர்மதா, நாளடைவில், பல விஷயங்களை முடிவெடுக்கும் அதிகாரத்தை அவனிடமே அளித்தாள். பொது மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம் கூட அவ்வப்போது "எதுவாயிருந்தாலும், பத்மநாபன் சார் கிட்டக் கேட்டுக்கங்க!" என்று றி, அவனுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் அளித்தாள்.

அவனை அடிக்கடி அழைத்து விவாதிப்பது, அவனிடம் கருத்துக் கேட்பது என்று தொடங்கி, பல முக்கியமான சந்திப்புகளுக்கு அவனையும் அழைத்துச் செல்லத் துவங்கினாள்.

தன் திறமையான செயல்பட்டாலும், உண்மையான ஈடுபாட்டாலும், கடுமையான உழைப்பாலும், நிர்வாக இயக்குனரிடம் நற்பெயரையும் மதிப்பையும், சம்பாதித்து விட்டதை நினைத்து பத்மநாபன் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தபோது, அந்தச் சம்பவம் நடந்தது.

ரு முக்கியமான வாடிக்கையாளரைச் சந்திப்பதற்காக, நர்மதாவும், பத்மநாபனும், வாடிக்கையாளர் தங்கி இருந்த, அவர்கள் நிறுவனத்தின் விருந்தினர் மாளிகைக்குச் சென்றிருந்தனர்.

வாடிக்கையாளர், தனக்கு ஒரு முக்கிய வேலை இருப்பதாகவும், அரை மணி நேரத்தில் வந்து விடுவதாகவும் சொல்லி, அவர்களைத் தன் அறையிலேயே காத்திருக்கச் சொல்லி விட்டு, வெளியே சென்றார்.

"நான் லாபியில வெயிட் பண்றேன். அவர் வந்ததும் வரேன்" என்று எழுந்த பத்மநாபனை, "உக்காருங்க, பத்மநாபன். அவர் வரதுக்குள்ள,, சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ண வேண்டி இருக்கு" என்று சொல்லி அங்கேயே உட்கார வைத்தாள் நர்மதா.

சில நிமிடங்கள் மௌனமாக இருந்த நர்மதா, "பத்மநாபன்! இந்த ஏழெட்டு மாசமா, உங்களோட பர்ஃபாமன்ஸைப் பாத்து நான் ஆச்சரியப்பட்டிருக்கேன். ஒரு எக்ஸிக்யூடிவ் அசிஸ்டன்ட் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணினபோது, பேப்பர் ஒர்க்கிலேருந்து எனக்குக் கொஞ்சம் விடுதலை கிடைக்கும்னுதான் நினச்சேன். ஆனா, நீங்க இவ்வளவு இனிஷியேடிவ் எடுத்து, எனக்கு பிராக்டிகலா வேலையே இல்லாம பண்ணிட்டீங்க. ஐ ஆம் வெரி ஹேப்பி" என்றாள் நர்மதா.

தாங்க்ஸ், மேடம்!" என்றான் பத்மநாபன். அதற்கு மேல் என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

"உங்ககிட்ட என்னோட பர்சனல் மேட்டர்ஸ் சிலதைப் பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். நான் எங்கப்பாவுக்கு ஒரே பொண்ணு. சின்ன வயசிலியே, அம்மா இறந்துட்டாங்க. டிகிரி முடிச்சதும், அப்பாவுக்கு உதவியா, கம்பெனியில சேர்ந்தேன். ஓரளவுக்கு வேலையைக் கத்துக்கிட்டேன். ஆனா, ரெண்டு வருஷத்திலியே அப்பா போயிட்டாரு. அதுக்கப்பறம், நானே எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு, இந்த கம்பெனியை மேனேஜ் பண்ணிக்கிட்டிருக்கேன்."

"மேடம்! உங்களைப் புகழறதா நினைக்காதீங்க. நீங்க ரொம்ப பிரில்லியண்ட். பிரமாதமா கம்பெனியை நடத்துறீங்கங்கறதுதான் உங்களைப் பத்தி மார்க்கெட்ல இருக்கற இம்ப்ரெஷன். நானே எட்டு மாசமாப் பாத்துக்கிட்டிருக்கேனே!" என்றான் பத்மநாபன்.

"தாங்க்ஸ்! எல்லாம் எங்கப்பாகிட்ட கத்துக்கிட்டதுதான். நீங்க புதுசா இந்த கம்பெனிக்கு வந்து, வேலை கத்துக்கிட்டு, என்னோட வேலையில பெரும் பகுதியை செஞ்சு முடிச்சுடறீங்களே! அதை விடவா?... ஓகே! நான் சொல்ல வந்த விஷயம்... எனக்குக் கல்யாணத்துல ஈடுபாடு இல்ல. கடைசி வரையிலே, தனியா இருந்துடலாம்னுதான் நெனச்சேன்..."

மேலே எப்படித் தொடர்வது என்று தயங்குவது போல், சற்று நிறுத்தி விட்டு, மீண்டும் தொடர்ந்தாள் நர்மதா. 

"நான் நேரா விஷயத்துக்கு வரேன். எனக்கு உங்க மேல ஒரு ஈடுபாடு ஏற்பட்டுடுச்சு. வெயிட்! நீங்க கல்யாணம் ஆனவர்னு எனக்குத் தெரியும். பட் ஐ வான்ட் யூ. இது காதல் எல்லாம் இல்ல. உங்களோட நெருக்கமா இருக்கணும்னு நினைக்கறேன்."

"மேடம்!" என்றான் பத்மநாபன், அதிர்ச்சியுடன்.

"சீரியஸ் ரிலேஷன்ஷிப் எல்லாம் எதுவும் இல்லை. ஒரு ஃபன் மாதிரி. அவ்வளவுதான். இது மாதிரி சில இடங்கள்ள, சில சமயங்கள்ள, நாம நெருக்கமா இருக்கலாம். இது யாருக்கும் தெரியாது. உங்க மனைவிக்கும் தெரியாது. இது நம்ப அஃபீஷியல் ரிலேஷன்ஷிப்பை பாதிக்காது. வாட் டூ யூ ஸே?"

"நான் போய் வெளியில வெயிட் பண்றேன்" என்று எழுந்தான் பத்மநாபன்.

"திங்க் அபவ்ட் இட்.  இதுல தப்பு எதுவும் இல்ல. இது வெளியில தெரிஞ்சா, எனக்குத்தான் பாதிப்பு அதிகம். அதனால, யாருக்கும் ஒரு சின்ன சந்தேகம் கூட வராம பாத்துக்கறது என் பொறுப்பு."

அவள் பேசிக் கொண்டிருந்தபோதே, பத்மநாபன் எழுந்து சென்று விட்டான்.

ரவு பத்மநாபன் தன் வீட்டில் இருந்தபோது, அவன் கைபேசி அடித்தது. அவன் மனைவி சாரதா, உள்ளே, அவர்களுடைய ஐந்து வயது மகன் விக்னேஷிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"சொல்லுங்க, மேடம்" என்றான் பத்மநாபன்.

"உங்க ரெஸிக்னேஷன் லெட்டரை ஈமெயில்ல அனுப்பியிருக்கீங்க. உங்களுக்கு இஷ்டம் இல்லேன்னா, ஓகே. நீங்க ஏன் ரிஸைன் பண்ணணும்? நான் உங்களை வற்புறுத்தலியே?" என்றாள் நர்மதா.

"இல்லை. இன்னிக்கு நடந்ததோட நிழல் எப்பவும் என் மேல விழுந்துக்கிட்டே இருக்கும். அந்தச் சூழ்நிலையில, என்னால சரியா வேலை செய்ய முடியாது. தயவு செஞ்சு, என்னோட ராஜினாமாவை ஏத்துக்கிட்டு, சீக்கிரம் என்னை ரிலீவ் பண்ணிடுங்க."

அவன் ஃபோனை வைத்தபோது, மனைவி அருகில் வந்திருந்தாள். "வேலையை ரிஸைன் பண்ணிட்டீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லியே!" என்றாள்.

"சாப்பாட்டுக்கு அப்புறம் சொல்லலாம்னு இருந்தேன். வேலை இல்லேன்னா, சாப்பாடு கிடையாதுன்னு சொல்லிட்டேன்னா?"

"ஜோக் அடிக்கிற நேரமா இது? நல்ல வேலையை விட்டுட்டீங்களே! ஏன்?"

"எனக்கும், என் பாஸுக்கும் ஒத்துப் போகல."

"என்னவோ நிழல்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க?"

"நான் என்ன வேலை செய்யறேன்னு நிழல் மாதிரி கூடவே நின்னு பாத்துக்கிட்டிருந்தா, என்னால எப்படி வேலை செய்ய முடியும்? அதைத்தான் சொல்லிக்கிட்டிருந்தேன்."

"உங்க பிரச்னை என்னன்னு எனக்குத் தெரியும்!"

"என்ன?"

"ஒரு பொண்ணு பாஸா இருக்கிறதை, உங்களால ஏத்துக்க முடியல. அதானே?"

"ஏம்மா! வீட்டில ஒரு பொண்ணை பாஸா ஏத்துக்கிட்டிருக்கிற என்னால, ஆஃபீஸ்ல ஒரு பொண்ணை பாஸா ஏத்துக்க முடியாதா?"

"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" என்று சிரித்தாள் சாரதா. அவள் சிரிப்பில் பத்மநாபனும் சேர்ந்து கொண்டபோது, வேறு வேலை தேட வேண்டுமே என்ற கவலை, அவனுக்கு ஒரு கணம் மறந்து போயிற்று.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 14             
ஒழுக்கமுடைமை      
குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.


பொருள்:  
ஒழுக்கம்தான் ஒருவனுக்கு உயர்வைத் தரும். அதனால், ஒழுக்கத்தை, உயிரை விட மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Intimacythe English version of this story.


குறள் 130 
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்





























Sunday, February 11, 2018

130. கற்றதும் பெற்றதும்

"ஏம்ப்பா, பி.ஈ. படிச்சிருக்கேங்கறே, அடிப்படை அறிவு கூட இல்லியே! உனக்கெல்லாம் இந்தக் கம்பெனியில வேலை கொடுத்திருக்காங்க பாரு, அவங்களைச் சொல்லணும்!"

ஃபோர்மேன் துரைசாமியின் பேச்சு கோபியைச் சுள்ளென்று தாக்கியது. ஆயினும், பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, 'ஒங்கிட்டல்லாம் நான் பேச்சுக் கேக்க வேண்டியிருக்கு பாரு!' என்று மனதுக்குள் நொந்து கொண்டான்.

துரைசாமி பொறியியலில் டிப்ளமா படித்தவர். பல ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு, ஃபோர்மேன் ஆகியிருந்தார். புதிதாக வேலைக்குச் சேர்ந்து, பயிற்சி நிலையில் இருக்கும் பொறியியல் பட்டதாரியான கோபியை அவ்வப்போது மட்டம் தட்டித் தன் அதிகாரத்தைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.

புதிதாக வேலைக்குச் சேர்ந்த கோபி போன்ற பொறியியல் பட்டதாரிகளுக்கு, அந்தத் தொழிற்சாலையின் செயல்முறைகளையும், தொழில் நுட்பத்தையும் புரிந்து கொள்ளச் சிறிது காலம் பிடிக்கும் என்பது துரைசாமிக்குத் தெரியும். 

ஆயினும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு 'பட்டம் வாங்கிய உன்னை விட, டிப்ளமா படித்த நான் அதிகம் அறிந்தவன்' என்று காட்டிக் கொள்வது போல் நடந்து கொண்டார்.

இதுபோல் பலமுறை நடந்து விட்டது. ஆயினும், கோபி அவருடைய விமரிசனங்களை மௌனமாகப் பொறுத்துக் கொண்டிருந்தான்.

துரைசாமி அகன்றதும், அருகில் இருந்த மூர்த்தி, "அவர் அப்படித்தான் சார் பேசுவாரு. நீங்க வருத்தப்படாதீங்க!" என்றான்.

கோபி மூர்த்தியை நன்றியுடன் பார்த்தான். 

மூர்த்தி ஒரு மெஷின் ஆபரேட்டர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு, அந்தத் தொழிற்சாலையில் ஒரு உதவியாளனாகச் சேர்ந்து, சிறிது சிறிதாக வேலை கற்றுக் கொண்டு, மெஷின் ஆபரேட்டர் என்ற நிலைக்கு வந்திருந்தான். அவனுக்கு இயல்பாக இருந்த தொழில்நுட்ப அறிவினாலும், ஆர்வத்தினாலும், அனுபவத்தினாலும், இயந்திரங்களின் செயல்முறை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தான். 

அந்தத் தொழிற்சாலையில் எந்த ஒரு இயந்திரக் கோளாறு ஏற்பட்டாலும், மூர்த்தியைத்தான் கூப்பிடுவார்கள். பெரும்பாலான பிரச்னைகளை, அவனே சரி செய்து விடுவான்.

மூர்த்தியைப் பார்த்ததும், கோபிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. "மூர்த்தி! மெஷின்களைப் பத்தி எனக்கு சில சந்தேகங்கள் எல்லாம் இருக்கு. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, சில விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுங்க" என்றான்.

"என்ன சார் இது? நீங்க எஞ்சினீரிங் காலேஜில படிச்சுட்டு வந்திருக்கீங்க. நான் படிக்காதவன். நான் சொல்லி, நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது என்ன இருக்கப் போகுது?" என்றான் மூர்த்தி, சங்கடத்துடன்.

"இல்லை, மூர்த்தி. உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு. மெஷின்ல வேலை செஞ்சு, மெஷின்களைப் பத்தி நிறைய விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. உங்ககிட்ட நான் நிறையக் கத்துக்கலாம்" என்றான் கோபி.

"அதுக்கென்ன, சார்? உங்களுக்கு என்ன தெரியணுமோ, கேளுங்க. எனக்குத் தெரிஞ்சதை, நான் சொல்லிட்டுப் போறேன்" என்றான் மூர்த்தி.

அதற்குப் பிறகு, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், கோபி, மூர்த்தியிடம் பேசிப் பல நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொண்டான். 

இயந்திரங்களின் செயல்பாடுகள் பற்றி மூர்த்தி சொன்ன பல விஷயங்களைக் கேட்ட பிறகு, கோபிக்குக் கல்லூரியில் தான் கற்றது கால்வாசிதான் இருக்கும் என்று தோன்றியது.

மூர்த்தி சொன்ன பல விஷயங்களைத் தன் கல்வி அறிவுடன்  பொருத்திப் பார்த்துப் பல விஷயங்களை ஆழமாக அறிந்து கொண்டான் கோபி. சில நாட்கள் கழித்து, மூர்த்திக்கே புதிதாகச் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு, அவனிடம் முன்னேற்றம் ஏற்பட்டது.

துரைசாமி அவ்வப்போது அவனை இளக்காரமாகப் பேசிக் கொண்டிருந்தார். கோபி அவர் பேச்சைப் பொருட்படுத்துவதையே விட்டு விட்டான். 

மூர்த்தியோடு அவன் அதிகம் பேசுவதைப் பற்றியும் துரைசாமி குறை கூறினார். "ஒர்க்கர்ஸ் கிட்டல்லாம் நெருக்கமாப் பழகாதே! அப்புறம் உன்னை மதிக்க மாட்டாங்க!" என்று எச்சரித்தார். 

கோபி அதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ல மாதங்கள் கழித்து, ஒருநாள், கோபி மூர்த்தியிடம், "மூர்த்தி, எனக்கு ஒரு ஐடியா. அது சரியா வருமான்னு சொல்லுங்களேன்" என்றான்.

அவனுடைய யோசனை பற்றி, அவனும் மூர்த்தியும் பல நாட்கள் விரிவாகப் பேசி விவாதித்தார்கள்.

கோபி புரொடக்‌ஷன் மானேஜரைச் சந்தித்து, "சார்! புரொடக்‌ஷன் லைன்ல ஒரு சின்ன மாற்றம் செஞ்சா, உற்பத்தியை அதிகரிக்க முடியும்னு நினைக்கறேன். நீங்க ஒரு அரைமணி நேரம் கொடுத்தா, அதை விளக்கமா சொல்றேன்" என்றான்.

"சொல்லுங்க" என்றார் புரொடக்‌ஷன் மானேஜர்.

தனது யோசனையை, வரைபடங்கள், கணக்குகள் ஆகியவற்றின் உதவியுடன், விளக்கினான் கோபி.

"நீங்க சொல்றது ஒர்க் அவுட் ஆகுமான்னு பார்க்கணும். குவாலிட்டி இம்ப்ரூவ்மென்ட் கமிட்டியில, இந்த புரோபோசலை ஸ்டடி பண்ணச் சொல்றேன்" என்றார் புரொடக்‌ஷன் மானேஜர்.

கமிட்டியில் விரிவாக விவாதிக்கப்பட்டு, கோபியின் யோசனை ஏற்கப்பட்டது.

புரொடக்‌ஷன் மானேஜர் கோபியைத் தன் அறைக்கு அழைத்தார்.

"கங்கிராட்ஸ், கோபி. உங்க புரொபோசலை கமிட்டியில கிளியர் பண்ணிட்டாங்க. எம்.டி-கிட்ட பேசிட்டேன். அவர் இதை இம்ப்ளிமென்ட் பண்ணலாம்னு சொல்லிட்டாரு. கம்பெனியில சேர்ந்து பயிற்சிக் காலம் முடியற ஒரு வருஷத்துக்குள்ள இது மாதிரி ஒரு இம்ப்ரூவ்மெண்ட்டை இதுவரை யாரும் புரொபோஸ் பண்ணினதில்ல. ஃபர்ஸ்ட் இயர் அசீவர் என்கிற அவார்டை உங்களுக்குக் கொடுக்கப் போறதா எம்.டி சொல்லியிருக்காரு. இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ள, அவர் உங்களைக் கூப்பிட்டுப் பேசுவாரு" என்றார் அவர். 

"தாங்க்ஸ், சார்!" என்றான் கோபி. "ஒரு வேண்டுகோள். நீங்க எந்த ரிவார்டு கொடுக்கறதா இருந்தாலும், மூர்த்திங்கற மெஷின் ஆப்ரேட்டருக்கும் சேர்த்துத்தான் கொடுக்கணும். டெக்னிகலா பல விஷயங்களை நான் புரிஞ்சுக்க உதவி பண்ணினவர் அவர்தான். அதோட, இந்தப் புது சிஸ்டத்தை டெவலப் பண்ணினதிலேயும், அவருக்குப் பங்கு இருக்கு. அவரோட யோசனைகளையெல்லாம் கணக்கில எடுத்துக்கிட்டுத்தான், நான் இந்த புரொபோசலைத் தயார் பண்ணினேன்" என்றான் கோபி.

அறத்துப்பால்
இல்லறவியல்
             அதிகாரம் 13             
அடக்கமுடைமை      
குறள் 130
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


பொருள்:  
கோபத்தைக் கட்டுப்படுத்தி, கற்க வேண்டியவற்றைக் கற்று, அடக்கமாகச் செயல்படுபவனை, அறம் தேடிச் சென்று சந்திக்கும்.

Read 'An Unlikely Collaborationthe English version of this story.

 குறள் 129 

   பொருட்பால்                                                                                            காமத்துப்பால்