சண்முகம் ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தபோது, சாலையோரம் விழுந்த கிடந்த மனிதனைப் பார்த்தார்.
"கொஞ்சம் நிறுத்துப்பா!" என்றார் சண்முகம்.
"எதுக்கு சார்? எவனோ குடிச்சுட்டு விழுந்து கிடப்பான். உங்களுக்கு ஏன் சார் வம்பு?" என்று முணுமுணுத்தபடியே, ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர்.
சண்முகம் கீழே விழுந்திருந்தவர் அருகில் சென்று பார்த்தார். "குடிச்சிருக்கிற மாதிரி தெரியல. ஏதோ காரணத்தால மயக்கம் போட்டு விழுந்திருக்காரு" என்றவர், அவரது சட்டைப்பையில் துருத்திக் கொண்டிருந்த அடையாள அட்டையை எடுத்துப் பார்த்தார்.
"யாரோ காலேஜ் புரொஃபஸர். பக்கத்தில இருக்கிற அரசாங்க மருத்துவமனையில சேர்த்துடலாம். ஒரு கை பிடிப்பா. தூக்கி ஆட்டோல வச்சு அழைச்சுக்கிட்டுப் போயிடலாம்" என்றார்.
அரை மனதுடன் வந்த ஆட்டோ ஓட்டுநர், "சார்! பேசினத்துக்கு மேல நூறு ரூபா கொடுத்துடுங்க" என்றார்.
சண்முகம் பதில் சொல்லவில்லை.
அரசு மருத்துவமனையில். முதலில் அவரைப் பரிசோதிக்கத் தயங்கினார்கள். பிறகு, பொறுப்பு மருத்துவர் வந்து பார்த்து விட்டு, "அட்மிட் பண்ண மாட்டோம். லோ பி.பியா இருக்கும்னு நினைக்கிறோம். ஓ.பியில வச்சு டிரிப்ஸ் ஏத்தறோம். நீங்க விசாரிச்சு, அவரை வீட்டில கொண்டு விட்டுடுங்க. உங்க பேரு, அட்ரஸ் ஃபோன் நம்பரை இதில எழுதுங்க" என்றார்.
சண்முகம் ஆட்டோ ஓட்டுனருக்குப் பணம் கொடுத்து அனுப்பி விட்டு, அடையாள அட்டையில் இருந்த கல்லூரியின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்துக் கல்லூரியைத் தொலைபேசியில் அழைத்தார். அவர்கள் பேராசிரியரின் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்தனர்.
பேராசிரியர் வீட்டைத் தொலைபேசியில் அழைத்ததும், அவருடைய மகன் மருத்துவமனைக்கு வருவதாகச் சொன்னான். சொன்னது போல், சற்று நேரத்தில் வந்து விட்டான். அதன் பிறகு, சண்முகம் விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார்.
சில நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு வந்த ஒரு போலீஸ்காரர், போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை ஸ்டேஷனுக்கு வரச் சொல்வதாகச் சொன்னார்.
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றதும், இன்ஸ்பெக்டர் அவரிடம், "தெருவில மயங்கிக் கிடந்த புரொஃபசர் சீனிவாசனை மருத்துவ மனையில் சேத்தது நீங்கதானே?" என்றார்.
"ஆமாம்."
"ஏன் அப்படிச் செஞ்சீங்க?"
"இது என்ன சார் கேள்வி? சாலையில ஒத்தர் மயங்கி விழுந்திருக்காரு. அவருக்கு உதவி செய்யணும்னு நினைச்சேன்."
"அவரை உங்களுக்கு முன்னமே தெரியுமா?"
"தெரியாது. அவர் சட்டைப் பையில இருந்த ஐடியைப் பாத்தப்பறம்தான், அவர் பேரு, வேலை செய்யற காலேஜ் பேரெல்லாம் தெரிஞ்சது. காலேஜுக்கு ஃபோன் பண்ணினேன். அவங்க அவர் வீட்டு நம்பர் கொடுத்தாங்க. அப்புறம், அவர் வீட்டுக்கு ஃபோன் பண்ணினேன்."
"சார்! அவர் ஒரு அர்பன் நக்ஸல்."
"அப்படின்னா?"
"என்ன சார், பேப்பர் படிக்கறதில்லையா? நியூஸ் சானல் கூடவா பாக்க மாட்டீங்க? பல நகரங்கள்ள, இவரை மாதிரி படிச்சவங்க சில பேரு அரசாங்கத்துக்கு எதிரா சதி பண்றங்க, இவங்களைத்தான் அர்பன் நக்ஸல்ன்னு சொல்றது. புரொஃபஸர் சீனிவாசனும் அந்த மாதிரி ஆள்தான். அவரைக் கைது பண்ணக் கூடாதுன்னு நீதிமன்றத்தில தடை உத்தரவு வாங்கியிருக்காரு. இல்லேன்னா, அவர் ஜாமீன் கூட அப்ளை பண்ண முடியாதபடி ஜெயில்ல இருக்க வேண்டியவரு. இப்படிப்பட்டவங்களுக்கு உதவறதே தப்பு. அப்படி உதவி செஞ்சா, அவங்களையும் ஜாமீன் பெற முடியாத செக்ஷன்ல கைது செஞ்சு உள்ள போடணும்னு எங்களுக்கு மேலிடத்திலேந்து உத்தரவு வந்திருக்கு. உங்களுக்கு அவரைத் தெரியாதுங்கறதால, உங்களை விடறேன். இனிமேலாவது ஜாக்கிரதையா இருங்க" என்றார் இன்ஸ்பெக்டர்.
'ஒத்தருக்கு உதவி செஞ்சதுக்காக சிறைக்குப் போகணும்னா, நான் சந்தோஷமாப் போவேன் சார்' என்று சொல்ல நினைத்து, அடக்கிக் கொண்டார் சண்முகம்.
அறத்துப்பால் இல்லறவியல்
அதிகாரம் 22
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 220ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
பொருள்:
பிறருக்கு உதவி செய்வதனால் தனக்கு ஒரு கேடு விளையும் என்றால், தன்னையே விலையாகக் கொடுத்தாவது, அந்தக் கேட்டை வாங்கிக் கொள்ளலாம்.