"அப்புறம், தாத்தா! புதுசா வேற ஏதாவது கதை சொல்லுங்க" என்றான் ஒரு குழுமியிருந்த சிறுவர்களில் ஒருவன்.
"அதான் நிறையக் கதை சொல்லிட்டேனே - ராமாயணம், மகாபாரதம், கிருஷ்ணர் கதை, முருகன் கதை, விநாயகர் கதைன்னு! இனிமே சொல்லணும்னா, நானா இட்டுக்கட்டித்தான் சொல்லணும்!" என்றார் செல்லமுத்து.
"தாத்தா, உங்க கதையைச் சொல்லுங்க. நீங்க வேட்டையாடுவீங்களா?" என்றான் இன்னொரு சிறுவன்.
"ஏன் அப்படிக் கேக்கற?"
"இல்ல, அங்கே ஒரு மான் தலை மாட்டி இருக்கே! அதான் கேட்டேன்"
"ரொம்ப நாள் முன்னே அஸ்ஸாம் காட்டில இருந்தப்ப வேட்டையாடி இருக்கேன்!"
"அப்படியா? அங்கே மாட்டி இருக்கற மான் தலை நீங்க வேட்டையாடின மானோடதா?"
"சேச்சே! அது மரத்தில செஞ்சது. மானையெல்லாம் நான் வேட்டையாட மாட்டேன். சிங்கம், புலி மாதிரி கொடிய மிருகங்களைத்தான் வேட்டையாடுவேன்."
"சிங்கம், புலி, தலையெல்லாம் சேத்து வச்சிருக்கீங்களா?" என்றான் இன்னொரு சிறுவன்.
"சேச்சே! அதெல்லாம் அழுகிப் போயிடும்டா, எப்படி வச்சிருக்க முடியும்?" என்றான் இன்னொருவன்.
"அதையெல்லாம் பாடம் பண்ணி வைப்பாங்கடா! உனக்குத் தெரியாது" என்றான் முதலில் பேசிய சிறுவன். "சொல்லுங்க, தாத்தா! தலைகள் எல்லாம் சேத்து வச்சிருக்கீங்களா?"
"சேத்து வச்சிருந்தேன். ஆனா அஸ்ஸாமை விட்டு வரச்சே, அங்கே இருந்த மியூசியத்துக்குக் கொடுத்துட்டேன்."
"ஏன் தாத்தா அப்படிப் பண்ணினீங்க?"
"அதையெல்லாம் ரயில்ல எடுத்துக்கிட்டு வர அனுமதிக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க!" என்றார் செல்லமுத்து.
"வேட்டையாடின துப்பாக்கியையாவது வச்சிருக்கீங்களா?"
"அதையும் மியூசியத்துக்கே கொடுத்துட்டேன்."
"ஏன் தாத்தா?"
"வேட்டையாடறதுக்கு நம்ப ஊர்ல காடே இல்லையே! துப்பாக்கியை வச்சுக்கிட்டு என்ன செய்யறது?"
"நீங்க வேட்டையாடினதுக்கு அடையாளமா எதுவுமே இல்லையா?'" என்றான் ஒரு சிறுவன், ஏமாற்றத்துடன்.
"ஏன் இல்லை? நான் வேட்டையாடின ஒரு புலியோட தோலைப் பாடம் பண்ணி வச்சிருக்கேன்."
"அதைக் காட்டுங்க, தாத்தா! நாங்க அதைப் பாக்கணும்" என்றனர் சிறுவர்கள் பலர், ஒன்று சேர்ந்த குரலில்.
"இருங்க" என்று உள்ளே போன செல்லமுத்து, கையில் 'புலித்தோலுடன்' வந்தார். "இதான். பாருங்க!" என்று அதை அவர்களிடம் காட்டினார்.
சிறுவர்கள் அதைத் தொட்டுப் பார்த்து விட்டு "வழவழன்னு இருக்கே! ஏன் தாத்தா புலியோட தோல் வழவழன்னா இருக்கும்?" என்றனர்.
"சொரசொரப்பாத்தான் இருந்தது. அதை கெமிக்கல் எல்லாம் போட்டு சுத்தம் செஞ்சு, பாடம் பண்ணி, பாலிஷ் பண்ணி வழவழன்னு ஆக்கிட்டாங்க" என்றார் செல்லமுத்து.
"இந்தப் புலித்தோலை வச்சுக்கிட்டு என்ன செய்வீங்க தாத்தா?"
"அதில உக்காந்து தவம் பண்ணுவேன்!"
"நீங்க தவம் பண்ணி இருக்கீங்களா? கடவுள் உங்க முன்னால வந்தாரா?" என்றான் ஒரு சிறுவன், உற்சாகத்துடன்.
"அந்தக் கதையை இன்னொரு நாளைக்குச் சொல்றேன். இன்னிக்கு நேரம் ஆச்சு, வீட்டுக்குப் போய் ஸ்கூல் பாடம்லாம் படிங்க" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் செல்லமுத்து.
சிறுவர்கள் போனதும், உள்ளிருந்து சிரித்துக் கொண்டே வந்த அவர் மனைவி, "ஏங்க, நீங்க எப்ப அஸ்ஸாம்ல இருந்தீங்க? எப்ப புலி வேட்டை ஆடினீங்க? தவம் வேற பண்ணினீங்களாம்! கடையில வாங்கின பிளாஸ்டிக் புலித்தோலைக் காட்டிப் பசங்களை நல்லா ஏமாத்தறீங்க! உள்ளே இருந்து கேட்டப்ப எனக்கு சிரிப்புத் தாங்கல. எதுக்குங்க இவ்வளவு பொய்?" என்றாள்.
"பையன்களை சந்தோஷப்படுத்தறதுக்காக அப்படிச் சொன்னேன். அவங்க சுவாரசியமாக் கேட்டுட்டு சந்தோஷமாப் போறாங்க பாரு. அவங்க இதை உண்மைன்னு நம்பறதால ஒண்ணும் கெட்டுப் போயிடப் போறதில்லையே!!" என்றார் செல்லமுத்து.
அறத்துப்பால்துறவறவியல்
அதிகாரம் 30
வாய்மை
குறள் 291வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
பொருள்:
உண்மை என்பது என்னவென்றால், அது யாருக்கும் எந்தத் தீங்கையும் விளைவிக்காத ஒரு சொல் ஆகும்.