
"வணக்கம். நான் 'சமூக சாளரம்' பத்திரிகையிலேந்து வரேன். ராமலிங்கம் இருக்காரா?" என்றான் சுரேஷ்.
"அவர் ஊர்ல இல்லையே. உள்ள வாங்க" என்றவள், சுரேஷும், அவனுடன் வந்த நம்பியும் உள்ளே வந்து அமர்ந்ததும், "நான் அவர் மனைவி கல்யாணி. என்ன விஷயம்?" என்றாள்.
"அவரை ஒரு பேட்டி எடுக்கணும்."
"அவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டாரே!"
"எங்க பத்திரிகையில, 'ஊருக்கு உழைப்பவர்'ங்கற தலைப்பில, ஒவ்வொரு இதழிலும், சமூக சேவை செய்யற ஒத்தரைப் பத்தி எழுதறோம். உங்க கணவரைப் பத்திக் கேள்விப்பட்டோம்."
"என்ன கேள்விப்பட்டீங்க? அதைச் சொல்லுங்க!" என்றாள் கல்யாணி.
சுரேஷ் நம்பியிடம் திரும்ப, அவன் தன் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து சுரேஷிடம் கொடுத்தான்.
சுரேஷ் அதை ஒரு முறை வேகமாகப் பார்த்து விட்டு, "ராமலிங்கத்தைப் பத்தி, அவருக்குத் தெரிஞ்ச ஒத்தர் எங்களுக்கு எழுதியிருக்கார். அதில இருக்கறதை சொல்றேன். ஏதாவது சரியில்லேன்னா சொல்லுங்க.
"ராமலிங்கம் ஒரு தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்பவே, தன் சக தொழிலாளிகளுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காரு. யார் வீட்டிலேயாவது கல்யாணம் போன்ற மங்கள காரியமா இருந்தாலும், யாருக்காவது உடம்பு சரியில்லை, மரணம் மாதிரி சோக நிகழ்வுகளா இருந்தாலும், ராமலிங்கம் உதவிக்கு அங்கே போயிடுவார். அதிகம் பழக்கம் இல்லாத சகதொழிலாளிகளுக்குக் கூட உதவுவார். பண உதவி செய்யற அளவுக்கு அப்ப அவருக்கு வசதி இல்லாட்டாலும், ஓடியாடி உதவி செய்வார்.
"அவரோட வேலை செஞ்சவங்க, அவரோட மேலதிகாரிகள் இவர்களுக்கெல்லாம் அவர் மேல ரொம்ப மதிப்பும் அன்பும் உண்டு. அதிகம் படிக்காததால, தொழிலாளியாகவே ரிடயர் ஆயிட்டார். ரிடயர் ஆனப்பறமும், காலையிலிருந்து இரவு வரை, யாருக்காவது உதவி செஞ்சுக்கிட்டேதான் இருப்பார். ஏதாவது வெளியூர்ல வெள்ளம், விபத்து மாதிரி ஏதாவது நடந்தா கூட, உடனே உதவி செய்ய அங்கே ஓடிடுவார். ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரிக்கெல்லாம் ஃபோன் வர மாதிரி, சில சமயம் இவருக்கும் ஃபோன் வரும். இதெல்லாம் சரிதானா?"
"கதை மாதிரி இருக்கு!" என்று சிரித்தாள் கல்யாணி.
"அப்ப, இதெல்லாம் உண்மை இல்லையா?" என்றான் சுரேஷ், அதிர்ச்சியுடன்.
"உண்மைதான். ஆனா, நீங்க கோர்வையா, கதை மாதிரி சொன்னப்ப, எனக்கு கேக்கறதுக்கு சுவாரசியமா இருந்தது. அதான் கதை மாதிரின்னு சொன்னேன். அவர் ரொம்ப அடக்கமானவரு. தான் செஞ்சதையெல்லாம் பத்திப் பேசவே மாட்டாரு. அதுக்கு அவருக்கு நேரமும் கிடையாது. ஏதோ அவசர வேலை மாதிரி எப்பவும் ஓடிக்கிட்டிருப்பாரு. ஆனா, எனக்கு அவரோட நல்ல காரியங்களைப் பத்தி யாராவது சொன்னா, கேக்கப் பெருமையா இருக்கும். நீங்க சொல்றதைக் கேக்கறப்ப, பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு. நீங்க கதை மாதிரி சொன்னது சுவாரஸ்யமாவும் இருக்கு. அதான் அப்படிச் சொன்னேன்!"
"உங்க குடும்ப வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க."
'எங்களுக்கு ஒரே பையன். கல்யாணம் ஆகி, மனைவியோட ஜெர்மனியில் இருக்கான். எங்களுக்கு அங்கே போக விருப்பமில்லை. அதனால இங்கேயே இருக்கோம்."
"தப்பா நினைக்காதீங்க. உங்க பையன் உங்களுக்குப் பணம் அனுப்பறாரா?"
"அவன் அனுப்பறதாச சொன்ன பணத்தை, ரெண்டு அனாதை இல்லத்துக்கு மாசாமாசம் அனுப்பச் சொல்லி, அவர் சொல்லிட்டாரு. அவன் அது மாதிரி அனுப்பிக்கிட்டிருக்கான்."
"ஓ! ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு. இப்ப அவர் எங்கே போயிருக்காருன்னு சொல்ல முடியுமா?"
"பொதுவா, அவருக்கு அவர் செய்யற உதவிகளைப் பத்திப் பேசறது பிடிக்காது. இப்ப கூட, நான் இதையெல்லாம் உங்க கிட்ட சொல்றது அவருக்குப் பிடிக்காது. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் இருக்கு. அங்கே இருக்கிற ஒரு பெரியவருக்கு டிப்ரஷன். அவர் தனிமையா இருக்கறதாலதான் இப்படி, கூட யாராவது இருந்தா சரியாயிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதனால, மாசத்துக்கு மூணு நாள் இவர் அங்கே போய், அவரோட இருந்துட்டு வருவாரு. மத்த நாட்கள்ள, வேற சில பேர் இப்படி வராங்க போலருக்கு."
"தப்பா நினைச்சுக்காதீங்க. இதுக்கு ஏதாவது பணம் கொடுப்பாங்களா?" என்றான் நம்பி, அவசரமாக. சுரேஷ் அவனை முறைத்தான்.
கல்யாணி சிரித்தபடியே, "இவர் போய் இருக்கற நாட்களுக்கு சாப்பாட்டுச் செலவு போன்ற விஷயங்களுக்கு, கெஸ்ட் சார்ஜுன்னு கொடுக்கணும். அந்தப் பெரியவருக்கு அவ்வளவு வசதி இல்லைன்னு, தான் இருக்கற நாட்களுக்கான கெஸ்ட் சார்ஜை இவரே கொடுக்கறாரு!" என்றாள்.
"சாரி!" என்றான் நம்பி.
பேட்டி முடிந்து வெளியே வந்ததும், "'ஊருக்கு உழைப்பவர்'ங்கற நம்ம தலைப்புக்கு, இவரை விடப் பொருத்தமா வேற யாரும் இருக்க மாட்டாங்க!" என்றான் சுரேஷ்.
"இவரை மாதிரி இன்னொருத்தரை இந்த உலகத்தில பாக்க முடியுமான்னு சந்தேகம்தான்!" என்றான் நம்பி.
"இந்த உலகத்தில மட்டும் இல்ல, தேவலோகம்னு சொல்றாங்களே, அங்கே போனா கூடப் பாக்க முடியாது!" என்றான் சுரேஷ் .
அறத்துப்பால்
இல்லறவியல்
இல்லறவியல்
அதிகாரம் 22
ஒப்புரவறிதல் (பிறருக்கு உதவுதல்)
குறள் 213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
பொருள்:
தேவர் உலகத்திலும், இந்த உலகத்திலும், பிறருக்கு உதவுவதை விடச் சிறந்த ஒன்றைக் காண முடியாது.
இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:
Fiting story for the Kural. Keep it up Ranga.
ReplyDeleteThank you Chellappa.
Delete