About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Tuesday, July 21, 2015

40. ஒரு முறை

ஒரு பெரிய நிறுவனத்தின் கிளை மேலாளராக இருந்த சந்திரசேகர் திறமையான நிர்வாகி என்பதுடன் நேர்மையானவர், ஊழியர்களிடம் கண்டிப்போடு கனிவையும் காட்டுபவர் என்றும் பெயர் பெற்றவர். எந்த ஊழியரும் அவரை அணுகித் தனது பிரச்னை பற்றிப் பேசலாம். அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதைத் தயங்காமல் ஏற்றுக் கொள்வார்.

ஒய்வு பெற இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில் அவருக்கு ஒரு சறுக்கல் ஏற்பட்டது.

அவருக்குக் கீழ் பணி புரியும்  பெண் அதிகாரி சரளா அவர் அறையில் அமர்ந்து அவருடன் அலுவலக விஷயமாகப் பேசி விட்டு அவர் அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது, சந்திரசேகர் சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவளைப் பின்புறத்திலிருந்து கட்டித் தழுவினார். அதிர்ச்சி அடைந்த சரளா தன்னை விடுவித்துக் கொண்டு, "என்ன சார் இது?" என்றாள்.

"ஐ ஆம் சாரி. ஏதோ உணர்ச்சி வேகத்தில் செய்து விட்டேன்!" என்றார் சந்திரசேகர். அவருக்கே தான் ஏன் இப்படி நடந்து கொண்டோம் என்று புரியவில்லை. பல காலமாக அவள் மீது தன் அடிமனதில் இருந்த சபலம்தான் இப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

"ஒரு பெண் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அவளிடம் தவறாக நடந்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்து விடுகிறது போலிருக்கிறது உங்களுக்கெல்லாம்!" என்றாள் சரளா அதிர்ச்சியும் கோபமும் அடங்காமல்.

"அப்படி இல்லை. என்னை அறியாமல் இப்படி நடந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கள்."

"அது அவ்வளவு சுலபம் இல்லை. இதற்கு நீங்கள் நிச்சயம் பதில்  சொல்ல வேண்டி இருக்கும். நாளை எம்.டி. வருகிறார் இல்லையா? அவரிடம் முறையிடப் போகிறேன்."

சந்திரசேகர் செய்வதறியாமல் நின்றார்.

ன்று இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை. 'இத்தனை வருடங்களாக நல்லவர், நேர்மையானவர், நியாயமாக நடப்பவர், பண்பாளர் என்றெல்லாம் பெயர் எடுத்தது இதற்குத்தானா? நாளை உண்மை தெரிந்தால் என்ன ஆகும்?

'எம்.டியின் முகத்தில் எப்படி விழிப்பது? மற்ற ஊழியர்களை எப்படி எதிர்கொள்வது? மனைவி, மகன், மகளுக்கெல்லாம் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?

'கடவுளே! ஏன் இப்படி ஒரு காரியத்தைச் செய்தேன்? உடலில் ஏதோ ஒரு ஹார்மோன் சட்டென்று அளவுக்கு அதிகமாக ஊறியதால் இப்படிச் செய்து விட்டேனா?'

தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தார். ஆனால் எப்படிச் செய்து கொள்வதென்று தெரியவில்லை.  நேரம் கழித்துக் களைப்படைந்து கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. எல்லா ஊழியர்களும் கூடி நிற்க, எம்.டி. பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க, சரளா அவரைச் செருப்பால் அடிக்கிறாள். அதைப் பார்த்து எம்.டியும் மற்றவர்களும் கை தட்டுகிறார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்தார். அதற்குப் பிறகு தூக்கம் வரவில்லை.

றுநாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கினார் சந்திரசேகர். எம்.டி.யுடனான கலந்துரையாடல், மற்ற அலுவல்கள் எல்லாவற்றிலும் ஈடுபட்டிருந்தபோது மனம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. 'எப்போது குண்டு வெடிக்கப் போகிறதோ?'

எம்.டி. கூடக் கேட்டார். "என்ன மிஸ்டர் சந்திரசேகர், உடம்பு சரியில்லையா? டல்லாக இருக்கிறீர்களே?"

"ஆமாம்" என்றார் சந்திரசேகர் சுருக்கமாக.

பொதுவாக எம்.டி. அந்தக் கிளை அலுவலகத்துக்கு வரும்போது சில ஊழியர்களைத் தனியே சந்தித்துப் பேசுவார். சந்திரசேகர் அப்போது அறைக்குள் இருப்பதில்லை.

"நீங்களும் இருங்கள்" என்று எம்.டி. பலமுறை சொன்னபோதும், "இல்லை. நான் இல்லாதபோதுதான் அவர்கள் உங்களிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். என் மீது அவர்களுக்கு ஏதாவது குறை இருக்கலாம். அதை உங்களிடம் அவர்கள் சொல்லட்டும். கம்பெனியின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது" என்று சொல்லி இருக்கிறார்.

அவருடைய இந்தப் பண்பான அணுகுமுறை அவர் மீது எம்.டி.க்கும் , ஊழியர்களுக்கும் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தி இருக்கிறது. ஆயினும் இதுவரை அவர் மீது எந்த ஊழியரும் குறை கூறியதில்லை.

ஏன் இப்படி ஒரு நடைமுறையை உருவாக்கினோம் என்று இப்போது அவர் நொந்து கொண்டார். 'இதனால் சரளாவுக்கு எம்.டி.யிடம் தனியே பேசும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொடுத்து விட்டேனே! நான் எம்.டியின் பக்கத்தில் இருந்தால் என் மீது புகார் சொல்ல சரளாவுக்கு தைரியம் வராது!'

அன்றும் சில ஊழியர்கள் எம்.டி.யிடம் தனியாகப் பேசி விட்டு வந்தனர். பெரும்பாலானோர் இந்த சந்தர்ப்பத்தை எம்.டி.யுடன் தங்களை நெருக்கமாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்.

அவர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அவற்றை அவரிடமே சொல்லி விடுவார்கள். எம்.டி.யிடம் சொல்ல அவர்களுக்குக் குறை இருக்காது. இன்றுதான் முதல் முதலாக ஒரு ஊழியர் அவர் மீது குறை சொல்லப் போகிறார்!

சரளா எம்.டி. அமர்ந்திருந்த அறைக்குள் நுழைவதை வெளியே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர். குண்டு வெடிக்க இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றன! சில மணித் துளிகளைப்  பல மணிகளாக அவர் கழித்தபின் சரளா வெளியே வந்தாள்.

தனக்கு அழைப்பு வரும் என்று சந்திரசேகர் காத்திருந்தார். மேலும் சில ஊழியர்கள் எம்.டி.யைப் பார்த்துப் பேசி விட்டு வந்தனர். 'எல்லோரையும் பார்த்து முடித்து விட்டு அப்புறம் என்னிடம் பேசப் போகிறாரோ?'

ஒரு வழியாக ஊழியர்கள் சந்திப்பு முடிந்தது.

"சார் எம்.டி. உங்களை வரச் சொல்கிறார்" என்று அறிவித்தான் பியூன்.

அடுத்த சில நிமிடங்களில் தன் கௌரவம், தன்மானம், பதவி, அதிகாரம், வாழ்க்கை எல்லாம் என்ன கதிக்கு ஆளாகப் போகின்றனவோ என்று பதைபதைத்தபடி உள்ளே போனார் சந்திரசேகர். 

எம்.டி. அவரிடம் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினார். 'கிளம்புவதற்கு முன் குண்டை வீசி விட்டுப் போகலாம் என்று இருக்கிறாரோ?'

ஆனால் எம்.டி. ஊருக்குக் கிளம்பும் வரை அவரிடம் இது பற்றி  எதுவும்  பேசவில்லை.

எம்.டி. கிளம்பிச் சென்று சில நிமிடங்கள் கழித்து சரளா அவர் அறைக்குள் வந்தாள்.

'உட்காருங்கள்" என்றார் சந்திரசேகர் தீனமான குரலில்.

ஆனால் சரளா உட்காரவில்லை.

"சார். உங்கள் மீது நான் மிகவும் மதிப்பு வைத்திருந்தேன். இந்த அலுவலகத்தில் எல்லோருமே உங்களைக் கடவுள் மாதிரி நினைத்துப் போற்றுகிறார்கள். இந்த அளவுக்கு ஊழியர்களிடம் மதிப்பு, மரியாதை, எல்லாவற்றிற்கும் மேல் அன்பு இவற்றைச் சம்பாதித்து வைத்திருக்கும் வேறு யாராவது எந்த நிறுவனத்திலாவது இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

"ஆனால் என் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருந்த நீங்கள், நேற்று என்னிடம் நடந்து கொண்ட விதத்தால், என் கால் செருப்புக்கும் கீழே போய் விட்டீர்கள் (சந்திரசேகருக்குத் தான் கண்ட கனவு நினைவுக்கு வந்தது!) எம்.டி.யிடம் உங்களைப் பற்றிப் புகார் செய்யலாம் என்றுதான் நினைத்தேன்.

"நான் அப்படிச் செய்திருந்தால், இத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் நேர்மை, பண்பு ஆகியவற்றால் ஒவ்வொரு கல்லாக அடுக்கிக் கட்டி உருவாக்கிய உங்கள் நற்பெயர், கௌரவம் எல்லாம் ஒரு நொடியில் தரை மட்டமாகி இருக்கும். அடிப்படையில் நல்ல மனிதரான உங்களுக்கு இப்படி ஒரு நிலையை உருவாக்க நான் விரும்பவில்லை.

"ஆனால் உங்களிடம் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஒவ்வொரு முறை உங்கள் அறைக்கு வரும்போதும் அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து என் மனதைப் படபடக்கச் செய்யும். உங்களுக்கும் மனச் சங்கடம் இருந்து கொண்டே இருக்கும்.

"அதனால் என்னை பெங்களூர் கிளைக்கு மாற்றும்படி எம்.டி.யிடம் கேட்டிருக்கிறேன். காரணம் எதுவும் சொல்லவில்லை. என் மாற்றல் உத்தரவு வரும் வரை உங்களிடம் இது பற்றிப் பேச வேண்டாம் என்றும் அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்று நடந்ததை மறந்து விட்டுப் பார்த்தால், நீங்கள் என்னிடம் பண்போடும், கனிவோடும், கருணையோடும் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்காக என் நன்றி."

சரளா அவர் பதிலை எதிர்பார்க்காமல் அவர் அறையை விட்டு வெளியேறினாள். சந்திரசேகருக்கு அவள் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் போல் இருந்தது.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

பொருள்:
ஒருவர் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது அறவழியில் நடப்பது மட்டுமே. செய்யக் கூடாதது கெட்ட பெயரை உண்டாக்கும் செயல்களையே.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்






No comments:

Post a Comment