About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Saturday, July 18, 2015

37. பல்லக்குத் தூக்கிகள்!

"டிரைவர்! எங்கே போயிட்டே? கார் ரெடியா?"

"ரெடிம்மா. எங்கே போகணும்?"

"பியூட்டி பார்லருக்கு."

"போகலாம்மா."

ரம்யா பியூட்டி பார்லரில் இருந்த இரண்டு மணி நேரமும் டிரைவர் பாஸ்கர் சற்று நேரம் காரில் உட்கார்ந்து தினத்தந்தி படித்தும், சற்று நேரம் தூங்கியும், வெளியே சற்று உலாவியும், ஒரு சிங்கிள் டீ, இரண்டு சிகரெட் குடித்தும் பொழுதைக் கழித்தான்.

ஒரு வழியாக ஒப்பனைகள் முடிந்து ரம்யா வந்து காரில் ஏறினாள். சில ஆயிரம் ரூபாய்கள் செலவழித்திருப்பாள் என்று தோன்றியது.

"வீட்டுக்குத்தானே?"

"இல்லை. என் ஃபிரண்ட் காவ்யா வீட்டுக்குப் போ!" என்று உத்தரவிட்டாள் ரம்யா. 'ஒப்பனை செய்து கொண்ட முக லட்சணத்தைத் தோழியிடம் காட்ட வேண்டுமாக்கும்!' பாஸ்கர் எரிச்சலுடன் காரைக் கிளப்பினான்.

சென்ற மாதம் வரை பாஸ்கர் பிரதீப்புக்குத்தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தான். இந்த மாதத்திலிருந்து பிரதீப்பின்  நிறுவனத்தில் அவனுக்கென்று தனியே ஒரு காரும் அதை ஓட்ட கம்பெனி செலவில் ஒரு டிரைவரும் கொடுத்து விட்டார்கள்.

அதிலிருந்து பாஸ்கர் பிரதீப்பின் குடும்ப உறுப்பினர்களுக்குக் கார் ஓட்ட வேண்டியதாகி விட்டது. குடும்ப உறுப்பினர்களின் ஆடம்பரமும், அதிகாரமும் பாஸ்கருக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் வீட்டு நாயைக் காரில் அழைத்துச் செல்ல வேண்டிய கொடுமை!

அன்று இரவு அவன் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பிய  போது ரம்யா அவனிடம், "பாஸ்கர்! நாளைக்குக் காலையில் பொம்மிக்கு வெடெர்னரி டாக்டரிடம் அப்பாயின்ட்மெண்ட் இருக்கிறது. சீக்கிரமே வந்து விடு" என்றாள்.

அவன் மனைவியை டாக்டரிடம் அழைத்துச் செல்ல அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. பொம்மி என்ற நாயை மாதாந்தர மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அவன் சீக்கிரமே வேலைக்கு வர வேண்டுமாம்! கொடுமை இல்லையா இது?

வீட்டுக்குப் போனபோது மனைவி மிகவும் உற்சாகமாக இருந்தாள்.

"என்ன விஷயம். இவ்வளவு சந்தோஷமா இருக்கே?"

"கோவிலுக்குப் போயிருந்தேன்."

"எப்பவும் போறதுதானே?"

"இன்னிக்குக் கோவில்ல ஒத்தரு கதை சொன்னாரு. அதைக் கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது."

"என்ன சொன்னாரு அப்படி?"

"பாவ புண்ணியங்களைப் பத்திப் பேசினாரு. சில பேரு வசதியா வாழறதுக்கும் சில பேரு கஷ்டப் படறதுக்கும் அவங்க போன ஜென்மத்திலியேயும் இந்த ஜென்மத்திலேயும் செஞ்ச நல்லது கெட்டதுதான் காரணமாம். சில பேரு ரொம்ப அதிர்ஷ்டசாலிகளா இருக்காங்கன்னா அவங்க போன ஜென்மத்தில செஞ்ச நல்ல காரியங்கள்தான் காரணமாம். அது மாதிரி சில பேரு கஷ்டப்படறதுக்குக் காரணம் அவங்க போன ஜென்மத்தில செஞ்ச தீவினைகள்தான் காரணமாம்" என்றாள் மனைவி.

"அப்படீன்னா நாமெல்லாம் போன ஜென்மத்தில பாவம் பண்ணி இருக்கமா?" என்றான் பாஸ்கர் எரிச்சலுடன்.

"நாம என்ன அந்த அளவுக்குக் கஷ்டப்படறமா என்ன?" என்றாள் மனைவி.

'ஆனா பொம்மி மட்டும் போன ஜென்மத்தில நெறையப் புண்ணியம் பண்ணி இருக்கணும்!' என்று நினைத்துக் கொண்டான் பாஸ்கர்.
அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 4
அறன் வலியுறுத்தல்
குறள் 37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பொருள்:
அறம் செய்வதால் என்ன பலன் விளையும் என்று எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. பல்லக்கில் உட்கார்ந்து போகிறவனையும், அதைத் தூக்கிச் செல்பவனையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'Palnquin Bearers' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்











No comments:

Post a Comment