About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Wednesday, July 1, 2015

20. அரசனின் கவலை

மன்னன் சந்திரசூடன் மிகவும் கோபமாகக் காணப்பட்டான். 

"அமைச்சரே! கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் வழிப்பறிக் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை அடித்தல், அங்காடிகளில் சிறிதும் பெரிதுமாகத் திருட்டுக்கள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டனவே? இது உங்கள் கவனத்துக்கு வந்ததா?"

"வந்தது மன்னா! நானே இது பற்றித் தங்களிடம் எடுத்துக் கூற இருந்தேன். அதற்குள் தாங்களே கேட்டு விட்டீர்கள்" என்றார் அமைச்சர்.

"என்னிடம் எடுத்துக் கூற என்ன இருக்கிறது? காவல் தலைவரிடம் சொல்லிக் கடுமையான நடவடிக்கை எடுக்கச் சொல்ல வேண்டியதுதானே?"

"மன்னா! காவல் தலைவர் கடுமையான நடவடிக்கை எடுத்துத்தான் வருகிறார். பல திருடர்கள் பிடிபட்டு தண்டனை வழங்கப் பெற்றிருக்கின்றனர். ஆனால் இது மட்டும் போதாது என்று நான் நினைக்கிறேன்."

"தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்கிறீர்களா? அதற்குத்தான் உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதே?"

"மன்னிக்க வேண்டும் மன்னவா! இது போன்ற குற்றங்களைப் புரிபவர்களுக்குக்  கடுமையான தண்டனை கொடுப்பதே தவறு என்று நான் நினைக்கிறேன்?"

"குற்றம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படாவிட்டால் குற்றங்கள் எப்படிக் குறையும்?"

"பொதுவாக நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது நடைபெறும் இது போன்ற குற்றங்களை வேறு விதமாகப் பார்க்க வேண்டும் என்பது எனது பணிவான கருத்து."

"வேறு எப்படிப் பார்க்க வேண்டும் என்கிறீர்கள்?"

"மன்னா! கடந்த ஆண்டு நம் நாட்டில் மழை பெய்யவில்லை. பல பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவுகிறது. திருட்டுக்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதற்கு இதுதான் காரணம்."

"'வயிற்றுக்கு இல்லாததால்தான்தான் திருடுகிறார்கள்' என்பது திருட்டை நியாயப்படுத்த எப்போதுமே பயன்படுத்தப்படும் வாதம்தானே!"

"திருட்டு என்பது ஒழுக்கம் தவறிய செயல் என்பது உண்மைதான். வயிற்றுக்கு இல்லாதவர்கள் எல்லோருமே திருடுவதில்லை. ஒழுக்கத்தை மதிப்பவர்கள் எந்த நிலையிலும் திருட்டு போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். 

"அதுபோல் திருடுபவர்கள் எல்லோருமே வயிற்றுக்கு இல்லாததால்தான் திருடுகிறார்கள் என்பதும் சரியல்ல. உழைக்காமல் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் திருடர்களில் கணிசமான பகுதியினர்.

"ஆனால், நாட்டில் மழை பெய்யாமல் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, அதுவரை நேர்மையாக இருந்தவர்கள் பலரும் ஒழுக்கம் தவறி, திருட்டு  போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்குவார்கள். 

"இப்போது திருட்டுக்கள் அதிகரித்திருப்பது அதனால்தான். வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் திருடத் தலைப்பட்டவர்களை தண்டனை என்ற பெயரில் மேலும் துன்பத்துக்கு ஆளாக்குவது சரிதானா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது."

"வேடிக்கையாக இருக்கிறது அமைச்சரே! இவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்காமல் பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும் என்கிறீர்களா?" என்றான் அரசன் எகத்தாளத்துடன்.

"நான் அப்படிச் சொல்லவில்லை. நாட்டில் மழை பொய்த்தால் அது பல ஒழுக்கமானவர்களையும் தவறான செயல்களில் ஈடுபட வழி வகுக்கும் என்பதை உணர்ந்து,  ஒரு நல்ல அரசர் மக்களின் துன்பத்தைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்."

"உதாரணமாக?"

"அரசுப் பெட்டகத்தில் உள்ள பொக்கிஷத்தைப் பயன்படுத்திக் கோவில்களிலும் சத்திரங்களிலும் நடக்கும் அன்னதானத்தை அதிகப்படுத்தலாம். கிணறு, குளங்களை வெட்டுதல், ஆழப்படுத்துதல் போன்ற வேலைகளைத் துவங்கி, வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்குக் குறைந்த அளவு ஊதியமாவது கிடைக்க வகை செய்யலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். இவற்றைச் செய்வதால், மழை பொய்த்ததால் விளைந்த வறுமையினால் உந்தப்பட்டு, நல்ல மனிதர்கள் சிலர் கூடத் திருட்டு போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும். நாட்டில் குற்றங்களும் குறையும்."

அமைச்சர் தயக்கத்துடன் மன்னனின் முகத்தைப் பார்த்தார்.

சந்திரசூடன் முகத்தில் இருந்த கோபச் சிவப்பு மாறி, சிந்தனை ரேகைகள் படர்ந்திருந்தன.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 2
வான் சிறப்பு
குறள் 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

பொருள்:
நீர் இன்றி இவ்வுலகில் யாரும் வாழ முடியாது. மழை பெய்யாவிடில், மக்களிடம் ஒழுக்கம் இருக்காது. 

Read 'The King's Concern' the English version of this story.

No comments:

Post a Comment