About Me

My photo
Everyone has an urge to share his or her thoughts, experiences, ideas and fantasies with others. If you like what I write, it serves the purpose of my writing. If you do not like what I write, I will be content with the satisfaction of giving expression to my thoughts.

Thursday, July 2, 2015

21. 'என்னை ஏன் ஒதுக்கினீர்கள்?’

"யாருங்க ஃபோன்ல? இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?" என்றாள் சிவகாமி

"ஸ்வாமிஜி நம்ம ஊருக்கு வரப்போறாராம்" என்றார் தர்மராஜ்

"நம்பவே முடியலியே! அவரு டில்லியை விட்டு  எங்கேயும் போக மாட்டாரே?"

"நம்ம ஊர்ல மத ஒற்றுமை மாநாடு நடக்கப் போகுது. அதுல கலந்துக்கறதுக்காகத்தான் வராறாம்."

"உங்களுக்கு யார் ஃபோன் பண்ணினாங்க?"

"ஸ்வாமிஜியோட பி.ஏ.தான் பண்ணினாரு. மூணு நாள் மாநாடு. மாநாட்டுக்கு முந்தின நாளே ஸ்வாமிஜி வந்துடுவாராம். மாநாடு முடிஞ்சு அடுத்த நாள் ஊருக்குக் கிளம்புவாராம். அஞ்சு நாள் நம்ம ஊர்லதான் இருக்கப் போறாரு."

"ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. நாம அடிக்கடி டில்லிக்குப் போயி அவரைப் பாத்துட்டு வரோம். அவரே நம்ம ஊருக்கு வந்து அஞ்சு நாள் தங்கறது நம்மளோட அதிர்ஷ்டம்தான். ஆமாம் நம்ம வீட்டிலதானே தங்கப் போறாரு?"

"அதைப் பத்தி பி.ஏ. ஒண்ணும் சொல்லலே. விவரங்களை அப்புறம் சொல்றேன்னு சொன்னாரு. அடுத்த மாசம்தானே நிகழ்ச்சி? அப்புறம் சொல்லலாம்னு நெனைச்சிருப்பாரு. இந்த ஊர்ல பெரிய வீடு நம்மளோடதுதானே? இங்கதான் தங்குவாரு."

"ஒரு வேளை  நிகழ்ச்சியை நடத்தறவங்க ஏதாவது ஏற்பாடு செஞ்சிருப்பாங்களோ?"

"இருக்கலாம். ஆனா ஸ்வாமிஜி நம்ம வீட்டுல தங்கத்தான் பிரியப்படுவாருன்னு நெனைக்கிறேன்" என்றார் தர்மராஜ்.

ஸ்வாமிஜி வருவதற்கு ஒரு வாரம் முன்பு தர்மராஜ் ஸ்வாமிஜியின்  பி.ஏக்கு ஃபோன் செய்து கேட்டார். "என்ன சார், ஸ்வாமிஜி நம்ம வீட்டுலதானே தங்கறாரு? உங்ககிட்டேயிருந்து தகவல் வரும்னு எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். ஒண்ணும் வராததாலதான் ஃபோன் பண்றேன்."

"ஓ, சாரி! போன தடவை ஃபோன் செஞ்சபோதே சொல்லி இருக்கணும். மறந்துட்டேன். ஸ்வாமிஜி உங்க ஊர்ல இருக்கிற வள்ளிமுத்துங்கற பக்தர் வீட்டிலதான் தங்கப் போறாரு."

"வள்ளிமுத்து வீட்டிலேயா? அவர் வீடு ரொம்ப சின்னது. ஏ.சி கூடக் கிடையாது. வசதி இருந்தும் கஞ்சத்தனமா வாழற மனுஷன்! அவர் வீட்டில போய் ஸ்வாமிஜி எப்படித் தங்குவாரு?"

"நீங்க கஞ்சத்தனம்னு சொல்றதை ஸ்வாமிஜி எளிமை என்று நினைக்கிறாரோ என்னவோ?" என்று சொல்லி பி.ஏ. ஃபோனை வைத்து விட்டார்.

மாநாடு முடிந்து ஸ்வாமிஜி ஊருக்குக் கிளம்புமுன், தர்மராஜ் வள்ளிமுத்து வீட்டில் போய் அவரைப் பார்த்தார். அவரிடம் தனிமையில் பேசச் சந்தர்ப்பம் கிடைத்தபோது, தனது ஆதங்கத்தை வெளியிட்டார். "ஸ்வாமிஜி. நான் உங்களோட நீண்ட நாள் பக்தன். என் வீட்டில நீங்க தங்காதது எனக்குக் குறைதான்" என்றார்.

ஸ்வாமிஜி சிரித்துக் கொண்டே, "தர்மராஜ்! நீ மகாபாரதம் படித்திருக்கிறாயா?" என்றார்.

"ஓரளவுக்குக் கதை தெரியும்."

"கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்துக்கு வந்தபோது பீஷ்மர், துரோணர், துரியோதனன் போன்றவர்கள் அவர் தன் வீட்டில்தான் தங்குவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் கிருஷ்ணர் விதுரரின் குடிலில்தான் போய்த் தங்கினார்."

"நான் என்ன துரியோதனன் மாதிரி மோசமானவனா?"

"பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் உயர்ந்தவர்கள்தான். அவர்களை விட்டு விட்டு விதுரரைக் கிருஷ்ணர் தேர்ந்தெடுத்தார் என்றால் அதற்குக் காரணம் விதுரரின் எளிமையும் பற்றற்ற தன்மையும்தான். நீ நல்லவன்தான். உன்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது. நீ உன் செல்வத்தைப் பல நல்ல காரியங்களுக்குச் செலவழிக்கிறாய். என் மீது உனக்கு உண்மையான ஈடுபாடு உண்டு. அதனால்தான் நானும் உன்னை மதிக்கிறேன். நான் இங்கே வரப் போவதை முன்பே உனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்ததும் உன் மேல் நான் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தினால்தான்."

"ஆனால் என் வீட்டில் தங்க உங்களுக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டதே ஸ்வாமிஜி?"

"விருப்பம் இல்லாமல் இல்லை. ஆனால் என் முதல் விருப்பம் வள்ளிமுத்துவின் வீடுதான். அவனும் உன் போல் வசதி படைத்தவன்தான். ஆனால் பணத்தினால் கிடைக்கக்கூடிய வசதிகளை ஒதுக்கி விட்டு எளிமையாக வாழ்கிறான். அவன் வீட்டில் ஏ.சி. இல்லைதான். டில்லியில் என் ஆசிரமத்தில் பல ஏ.சி அறைகள் இருந்தாலும் என் அறையில் ஏ.சி கிடையாது என்பதை நீ கவனித்திருப்பாய்.

"என் போன்ற துறவிகள் வள்ளிமுத்து போன்ற துறவு மனப்பான்மை உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுதானே இயல்பு? அடுத்த  முறை வரும்போது நிச்சயம் உன் வீட்டில் தங்கிக் கொள்கிறேன். நீயும் சில வசதிகளையாவது துறந்து சற்று எளிமையாக வாழப் பழகிக் கொள்.

"துறவு மனப்பான்மை நம்மை இறைவன் அருகில் கொண்டு சேர்க்கும். துறவு என்றால் குடும்பத்தைத் துறந்து விட்டுக் காஷாயம் அணிந்து கொள்வது என்று பொருள் அல்ல. இவ்வுலக வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் சுகங்கள் சிலவற்றையாவது துறக்க வேண்டும் என்றுதான் பொருள். உனக்கும் உன் குடும்பத்துக்கும் என் நல்லாசிகள்!" என்றார் ஸ்வாமிஜி.

அறத்துப்பால்
பாயிரவியல்
அதிகாரம் 3
நீத்தார் பெருமை
(நீத்தார் - புலன்களை அடக்கி, ஆசைகளைக் கட்டுப்படுத்தி
நெறியோடு வாழ்பவர்)
குறள் 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்:
ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, ஆசைகளைத் துறந்தவர்களின் பெருமையே உயர்ந்தது என்பது நூல்கள் கண்டு சொல்லும் உண்மை.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


Read 'The Saint's Choice' the English version of this story.
பொருட்பால்                                                                                                 காமத்துப்பால்

No comments:

Post a Comment